
“பொண்ணு பணக்காரியா இருந்தால், பணக்காரன் கல்யாணம் பண்ண வருவான். இல்லாவிட்டால் கூலி வேலை பார்க்குறவன்தான் வருவான்.”
“அவள் பேரழகியாம்... அழகைப் பார்த்துப் பணக்காரன் வருவான்னு அவர் சொல்றாரு.
“பணமில்லாத பொண்ணுகிட்ட அழகு இருந்தால் பணக்காரன் வருவான். கல்யாணம் பண்ணுவதற்கு இல்லை. அப்போதைய காரியத்தை நிறைவேத்திக்கிறதுக்கு... நாணி அக்கா, நீங்க அவர்கிட்ட சொல்லுங்க.”
“நான் சொன்னால் அவர் கேக்குறது இல்லடி பாரு.”
வேலாயுதன் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்தான். அவன் கேட்டான்:
“அவள் எங்கேடீ?”
“அவள் அந்தப் பக்கம் போயிட்டா” - நாணி சொன்னாள்.
“அவளுக்கு கூலி வேலைக்காரன் தேவையில்லைன்னு அவள்கிட்ட சொல்லு." "ஓ! வருவான்... பணக்காரன் வருவான்!” - நாணி கடுமையான வெறுப்புடன் சொன்னாள்.
“வருவாங்கடீ... அவளுக்குப் பணக்காரர்கள் வருவாங்க... அவளைப் பார்த்தால் குபேரனே வருவான்.”
“ம்... குபேரன் வருவான்! இன்னைக்கு பட்டினி... நான் போய் பாருக்கிட்ட இரண்டு நாழி அரிசி வாங்கிட்டு வர்றேன்... வா பாரு!”
நாணியும் பாருவும் நடந்தார்கள். வேலாயுதன் நாணியைத் தடுத்தான்.
“அங்கேயே நில்லுடி! பாருவின் இரண்டு நாழி அரிசி வேண்டாம். அரிசி வேற இடத்துல இருக்கும்.”
“எங்கே இருக்கும்?”
“இருக்கும்டி... இருக்கும்.”
“அப்படின்னா நான் போறேன் நாணி அக்கா.” - பாரு போனாள்.
“அவளோட அரிசி நமக்கு வேண்டாம்டி நாணி. நம்முடைய பட்டினி, கஷ்டங்கள் எல்லாம் இல்லாமல் போகும். என் மகள் அதிர்ஷ்டம் உள்ளவள். நீ அங்கே கொஞ்சம் பாரு.”
ஒரு பெரிய கூடையைச் சுமந்து கொண்டு ஒரு ஆள் வந்து கொண்டிருந்தான். நாணி கேட்டாள்:
“அது என்ன?”
“வா.... காட்டுறேன்” எல்லாரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
வீட்டின் முன் பக்கத்தில் இருந்த வராந்தாவில் வந்த மனிதன் சுமையை இறக்கி வைத்தான். வேலாயுதன் சுமையைத் தூக்கி வந்தவனிடம் கேட்டான்:
“ஏதாவது சொல்லி விட்டாரா?”
“இல்லை.”
“அப்படின்னா நீ போ.”
சுமையைத் தூக்கிக் கொண்டு வந்தவன் அங்கிருந்து கிளம்பினான். நாணி கூடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தான். அரிசி இருந்தது. உப்பு, மிளகாய் என்று பல பொருட்களும் இருந்தன. காய்கறிகள் இருந்தன. நாணி ஆச்சரியத்துடன் கேட்டாள்:
“இது எங்கேயிருந்து வந்தது?”
“அந்த விஷயத்தைப் பிறகு சொல்றேன். இனிமேல் இந்த வீட்டில் பட்டினியும் கஷ்டங்களும் இருக்காது.”
பல வருடங்களாக இருக்கும் ஒரு மண்ணாலான வீடு அது. இரண்டு அறைகளும் சமையலறையும் முன் பக்கத்தில் ஒரு வராந்தாவும் இருந்தன. முப்பத்தைந்து சென்ட் பரப்பளவு கொண்ட ஒரு தென்னந்தோப்பில் அந்த வீடு இருந்தது.
ஒரு செட்டிதான் அந்த வீட்டுக்கும் நிலத்திற்கும் உரிமையாளர். செட்டிக்கு கொஞ்சம் கடன் இருந்தது. கடனைத் தீர்ப்பதற்காக அவர் சீட்டு பிடிக்கும் பைலி முதலாளியின் சீட்டில் ஒரு ஆளாகச் சேர்ந்து ஏலம் எடுத்தார். நிலத்தையும் வீட்டையும் அடமானம் வைத்துப் பணம் வாங்கிக் கடனை அடைத்தார். ஆனால், பிறகு தவணைப் பணத்தை முறைப்படி கட்டாமல் பாக்கி வைத்தார். பைலி முதலாளி வழக்கு தொடுத்து தீர்ப்பும் சொல்லப்பட்டது. நிலத்தையும் வீட்டையும் அவர் ஏலத்தில் எடுத்தார். செட்டியும் குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
அதற்குப் பிறகுதான் வாடகைக்கு இருப்பவர்கள் என்ற முறையில் வேலாயுதனும் குடும்பமும் அங்கு வந்து வசிக்க ஆரம்பித்தார்கள். பைலி முதலாளி நிலத்தைப் பார்ப்பதற்காக வருவது வழக்கமில்லை. முதலாளியின் கணக்குப் பிள்ளைதான் தேங்காய்களை வெட்ட வருவான். இரண்டு மாமரங்களும் ஒரு பலா மரமும் அங்கு இருந்தன. அதில் உண்டாகக் கூடிய மாங்காய்களையும் பலாப்பழத்தையும் வேலாயுதனே பொதுவாக எடுத்துக் கொள்வான்.
வேலாயுதன் மிகவும் நல்ல நிலைமையில் வாழ்ந்த ஒரு மனிதன். அவனுடைய தந்தை குஞ்ஞுராமன் நிலங்களையும் வீடுகளையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் ஆளாக இருந்தான். அவனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் மட்டுமே இருந்தார்கள். மகள்மீது அவனுக்கு அளவற்ற அன்பு இருந்தது.
குஞ்ஞுராமன் வரவைத் தாண்டி செலவு செய்யக்கூடிய மனிதனாக இருந்தான். அதனால் குத்தகைப் பணம் கொடுக்காமல் பாக்கி நின்றது. நிலங்கள், வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் குஞ்ஞுராமனிடமிருந்து குத்தகையை மீட்டு விட்டார்கள். அதற்குப் பிறகு தனக்கு சொந்தமாக இருந்த இரண்டு சிறிய வீடுகளில் கிடைத்த பணத்தைக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை அவனுக்கு உண்டானது.
மகன் வேலாயுதனுக்கும் மகள் அம்மிணிக்கும் திருமணம் முடிந்து விட்டிருந்தது. மகளுடைய கணவன் கஷ்டப்பட்டு உழைக்கக் கூடிய ஒரு கொப்பரை வியாபாரியாக இருந்ததால், அவர்கள் பொருளாதார ரீதியாக எந்தவிதப் பிரச்சினையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். மகன் விஷயத்தை எடுத்துக் கொண்டால், அவனுக்கு ஒரு தொழிலும் தெரியாது. அவனும் எந்தவிதத் தொழில் செய்யவும் ஆர்வம் இல்லாதவனாக இருந்தான். அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய சுமை குஞ்ஞுராமன்மீது வந்து விழுந்தது. அந்த வகையில் தன்னுடைய வயதான காலத்தில் அவன் மிகவும் சிரமப்பட்டான்.
இறுதியில் குஞ்ஞுராமனுக்கு குடல் சம்பந்தப்பட்ட நோய் வந்து சேர்ந்தது. சிகிச்சை செய்வதற்காக இரண்டு வீடுகளில் ஒன்றை விற்று சிகிச்சை செய்தும் குஞ்ஞுராமன் மரணத்தைத் தழுவிவிட்டான்.
வேலாயுதனும் குடும்பமும் அனாதைகள் ஆனார்கள். பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக வாழ்ந்து கொண்டிருந்த வீட்டையும் நிலத்தையும் விற்றுவிடலாம் என்று அவன் முடிவெடுத்தான். ஆனால் அவனுடைய சகோதரியும் வீட்டிற்கும் நிலத்திற்கும் உரிமை உள்ளவளாக இருந்தாள். தன் சகோதரியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு, அவளுடைய உரிமையை வேலாயுதன் எழுதி வாங்கினான். பிறகு அந்த நிலத்தை விற்றுப் பணத்தை வாங்கினான்.
அதற்குப் பிறகுதான் வேலாயுதனும் குடும்பமும் சீட்டு நடத்தும் பைலி முதலாளியின் வீட்டில் வசிக்க வந்தார்கள். வீட்டை விற்ற பணத்தைக் கொண்டு கொஞ்ச காலம் வாழ்க்கையை ஓட்டினார்கள். அதற்குப் பிறகு வாழ முடியாது என்ற சூழ்நிலை உண்டானபோது, வேலாயுதன் சகோதரியிடம் போய் நின்றான். சகோதரிக்கு நான்கு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. எனினும், தன்னுடைய சகோதரனுக்கு அவ்வப்போது அவள் உதவிகளைச் செய்து கொண்டுதான் இருந்தாள்.
தந்தையின் வழியிலும் தாயின் வழியிலும் நிறைய உறவினர்கள் இருந்தார்கள். வேலாயுதன் அந்த உறவினர்களிடம் உதவி கேட்பான். சிலர் எப்போதாவது முடிந்த உதவிகளைச் செய்வார்கள். அடுத்த நேரத்திற்கான உணவு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி தீர்மானிக்க முடியாத நிலையில் நாட்களை அவன் ஓட்டிக்கொண்டிருந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook