தங்கம்மா - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
நாணி அமைதியாக இருந்தாள்.
“என்ன? யாரும் எதுவும் பேசாம இருக்கீங்க?”
“சொல்ல வேண்டியது நான் இல்லையே! சொல்ல வேண்டியவங்க சொல்லட்டும்” - நாணி சொன்னாள்.
“வேலாயுதன் அண்ணன் சம்மதம் சொல்லிட்டாரு. நாணி அக்கா, இனி உங்க சம்மதம்தான் வேணும்.”
நாணி ஆச்சரியத்துடன் கேட்டாள்:
“அப்படின்னா கல்யாண விஷயத்துக்கு சம்மதம் எல்லாம் கொடுத்து முடிச்சாச்சா? எனக்கு இந்த விஷயமே தெரியாதே!”
“நாணு வந்து சொல்லட்டுமேன்னுதான் நான் சொல்லாமல் இருந்தேன். உனக்கு சம்மதமான்னு நாணுக்கிட்ட சொன்னால் போதும்.”
“அவளுக்கு சம்மதமான்னு தங்கம்மாவிடம் கேட்க வேண்டாமா?”
“தந்தையும் தாயும் சம்மதிச்ச பிறகு அவள்கிட்ட எதுக்கு கேட்கணும்?”
“கல்யாணம் பண்ணப்போறது அவள்தானே?”
“கல்யாணம் பண்ணுற நேரம் வர்றப்போ சொல்லிக்கலாம். அதற்கு முன்னால சொல்ல வேண்டாம். உனக்கு சம்மதமான்னு சொல்லு.”
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு நாணி சொன்னாள்:
“ம்... சம்மதம்தான்.”
“நாணு, நீ போய் முதலாளிகிட்ட சொல்லு... நல்ல நேரம் பார்த்து கல்யாணத்தை நடத்தலாம்னு...”
“அப்படின்னா நான் புறப்படட்டுமா? வேலாயுதன் அண்ணே... நாளைக்கு அந்தப் பக்கமா வர்றீங்களா?”
“வர்றேன்...”
நாணு அங்கிருந்து கிளம்பினான்.
3
வேலாயுதனுக்கும் கணக்குப் பிள்ளை நாணுவுக்கும் இடையில் நல்ல அறிமுகம் இருந்தது. நாணு சங்கரன் முதலாளியின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்ததால் யாருக்கும் தெரியாத முதலாளியின் கவலைகள் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தன.
வேலாயுதன் சில நேரங்களில் நாணுவின் வீட்டிற்குச் செல்வான். நாணு வேலாயுதனுக்குச் சிறு சிறு உதவிகளைச் செய்வது வழக்கம். அவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருக்கும்போது, நாணு சங்கரன் முதலாளியின் திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதும் வழக்கம். வேலாயுதன் அந்த விஷயத்தைப் பரிதாப உணர்ச்சி உண்டாக கேட்டுக் கொண்டிருப்பான்.
அப்படி இருக்கும்போதுதான் வேலாயுதன் ஒரு நாள் நகரத்திலிருந்த வெற்றிலைப் பாக்குக் கடையைத் தேடிச் சென்றான். தன் மனைவியைக் கூட்டிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும் கணவனை அங்கு அவன் பார்த்தான். வெற்றிலைப் பாக்குக் கடையில் இருந்தவர்கள் அந்தக் கணவனைப் பற்றிப் பேசிய உரையாடல் வேலாயுதனுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்தது!
‘பார்க்குறதுக்கு அழகா இருக்குற பெண் இருந்தால் எந்த காரியத்தையும் சாதிக்கலாம்’ - அதுதான் வேலாயுதனுக்குக் கிடைத்த புதிய வெளிச்சம். மகள் தங்கம்மா பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பெண்தான். அந்த விஷயத்தில் வேலாயுதனுக்கு சந்தேகமே இல்லை. அவளை வைத்துக் காரியங்களைச் சாதிக்க வேண்டும். வறுமைக்கும், பட்டினிக்கும் அவளை வைத்துப் பரிகாரம் காண வேண்டும். வேலாயுதன் முடிவெடுத்தான்.
அடுத்த நாள் வேலாயுதன் நாணுவின் வீட்டுக்குச் சென்றான். பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதற்கு இடையில் வேலாயுதன் கேட்டான்:
“நான் ஒரு விஷயத்தைக் கேட்கட்டுமா நாணு?”
“என்ன விஷயம்?”
“சங்கரன் முதலாளி பெரிய பணக்காரர். இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டா என்ன?”
நாணு சிரித்து கொண்டே கேட்டான்:
“வேலாயுதன் அண்ணே, உங்க மகளைக் கொடுப்பீங்களா?”
“என் மகள் முதலாளிக்கு வேணும்னா கல்யாணம் பண்ணிக் கொண்டு போகட்டும்.”
“அப்படின்னா, வேலாயுதன் அண்ணே... உங்கக்கிட்ட மனம் திறந்து பேசலாம். நான் இந்த விஷயத்தை உங்கக்கிட்ட கேட்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.”
“நாணு, முதலாளி என்கிட்ட கேட்கச் சொல்லி உன்னிடம் சொன்னாரா?”
“சொல்லலைன்னாலும் முதலாளிக்கு விருப்பம் இருக்கும்னு எனக்குத் தெரியும்.”
“நாணு, அப்படின்னா முதலாளிக்கிட்ட விஷயத்தைச் சொல்லு.”
“நான் சொல்றேன். பிறகு... வேலாயுதன் அண்ணே, நாளைக்கு இங்கே வாங்க...”
“நான் வர்றேன்” - வேலாயுதன் அங்கிருந்து புறப்பட்டான்.
அடுத்த நாள் வேலாயுதன் நாணுவின் வீட்டுக்குச் சென்றான். அன்று நாணு வேலாயுதனுக்கு தேநீர் கொடுத்தான். எப்போதும் இல்லாத மரியாதையைக் காட்டினான்.
“முதலாளிக்கிட்ட சொன்னியா?”
“சொன்னேன்.”
“அதற்கு முதலாளி என்ன சொன்னாரு?”
“முதலாளி ரொம்பவும் சந்தோஷப்பட்டாரு. வேலாயுதன் அண்ணே, இது முதலாளி ஆசைப்பட்டதுதான். அப்படி இருக்குறப்போ சந்தோஷப்படாமல் இருப்பாரா? வேலாயுதன் அண்ணே, நீங்க ஒரு தடவை தன்னை வந்து பார்க்கணும்னு முதலாளி சொன்னாரு. என்ன விஷயம்னா... நான் சொல்லல. முதலாளியே சொல்வாரு.”
“சொல்லு நாணு... என்ன விஷயம்னு சொல்லு.”
நாணு தயங்கித் தயங்கி சொன்னான்:
“என்ன விஷயம் என்றால்... முதலாளி கல்யாணம் ஆன பிறகுதான் முதலாளியா ஆனார். பார்க்குறதுக்கு அழகா இல்லை என்றாலும் அந்த அம்மா ஐஸ்வர்யம் உள்ளவங்க. அதிர்ஷ்டம் உள்ளவங்க. இனி ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி அங்கே கொண்டுபோய் குடித்தனம் நடத்த முடியுமா? அதுனால என்ன விஷயம்னா...”
“சொல்லு நாணு.... சொல்லு.”
“நான்கு பேர்களுக்குத் தெரிந்து இனியொரு கல்யாணம் பண்ண அவரோட மனைவி சம்மதிப்பாங்களா? மனைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் சம்மதிப்பார்களா? நிலைமை அப்படி இருக்குறப்போ என்ன செய்யலாம்னா..”
“சொல்லு நாணு... சொல்லு.”
“யாருக்கும் தெரிய வேண்டாம். வேலாயுதன் அண்ணே, தினமும் இரவு நேரத்துல முதலாளி அங்கே வருவார். அவளுக்குத் தேவையான அனைத்தையும் முதலாளி தருவார். உங்களுக்கும் உதவுவார். அது போதாதா வேலாயுதன் அண்ணே?”
“அதற்கு நான் சம்மதிக்கலாம் நாணு. ஆனால் தாயும் மகளும் சம்மதிக்க வேண்டாமா?”
“நீங்க சொன்னா அவங்க ஒத்துக்குவாங்க.”
“அந்தப் பெண் ஒரு பிடிவாதக்காரிடா நாணு.”
“ஓ! பெண் பிள்ளைகளின் பிடிவாதம் எவ்வளவு நேரத்துக்கு இருக்கும் வேலாயுதன் அண்ணே? பெண் பிள்ளைகளின் பிடிவாதம் ஊதினா பறந்துவிடக் கூடியது!”
“நான் கொஞ்சம் சொல்லிப் பார்க்குறேன்.”
“வேலாயுதன் அண்ணே. நீங்க முதலாளியை ஒரு தடடிவை வந்து பார்க்கணும். சாயங்காலம் ஆயிட்டா கணக்கு எழுதுறவங்க எல்லாரும் போயிடுவாங்க. பிறகு முதலாளி தனியா உட்கார்ந்து கொஞ்சம் குடிப்பாரு. முதலாளியைப் பார்க்குறதுக்கு அதுதான் நல்ல நேரம்.”
“நான் நாளைக்கு சாயங்காலம் வர்றேன்” - வேலாயுதன் அங்கிருந்து கிளம்பினான்.
இரவு நீண்ட நேரம் ஆன பிறகுதான் வேலாயுதன் வீட்டிற்கு வந்தான். நாணி மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக்கொண்டு வராந்தாவில் காத்திருந்தாள். நாணி எழுந்து நின்று கொண்டு கேட்டாள்:
“இவ்வளவு நேரமா எங்கே போயிருந்தீங்க?”
“ஆண்கள் பல இடங்களுக்கும் போவார்கள்.”