தங்கம்மா - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
“திரும்பிப் போங்க... என்னை மன்னிச்சிடுங்க...”
ராமகிருஷ்ணன் திரும்பி நடந்தான்.
தங்கம்மா வீட்டிற்குள் போனாள். நாணி சொன்னாள் :
“அடிக்க கை ஓங்கியது...”
“அப்போத்தான் அவள் அடங்கினாள். இல்லாவிட்டால் அவள் அவனைப் பிடிச்சிக்கிட்டு உள்ளே போயிருப்பா... அவனுக்கு எங்கே அடி விழுந்துடப் போகுதோன்னுதான் அப்போ அவள் அடங்கிட்டா...”
“இனிமேல் அவன் வரமாட்டான்.”
“இனி வந்தால் அடி விழும். இன்னைக்குத்தான் அவள் என்னோட தனி நிறத்தைப் பார்த்திருக்கா.”
அவர்கள் வாசலில் போய் நின்றார்கள். வேலாயுதன் நாணியிடம் சொன்னான்:
“வறீது குட்டி வருவார். அழகுபடுத்திக் கொண்டு தயாரா இருக்கும்படி நீ அவள்கிட்ட போய்ச் சொல்லு.”
எல்லோரும் வீட்டிற்குள் சென்றார்கள். தங்கம்மாவின் அறை அடைக்கப்பட்டிருந்தது. உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நாணி கதவைத் தட்டி அழைத்தாள். கதவு திறந்தது. நாணி உள்ளே போனாள்.
சிறிது நேரம் கழித்து நாணி வெளியே வந்து வேலாயுதனிடம் சொன்னாள்:
“இது என்ன இப்படி..?”
“எப்படி?”
“அவளுக்கு ஒரே சந்தோஷம்! புதையல் கிடைத்ததைப்போல சந்தோஷம்?”
“அப்படின்னா... அப்படின்னா... இதுல ஏதோ ரகசியம் இருக்குடீ நாணி. வறீது குட்டி இன்னைக்கு வருவார்ன்னு நீ அவள்கிட்ட சொன்னியா?”
“சொன்னேன். எப்போ வருவாருன்னு அவள் கேட்டாள். கொஞ்ச நேரம் கடந்த பிறகு அவர் வருவார்னு நான் சொன்னேன். பணம் தந்துட்டாரான்னு அவள் அப்போ கேட்டாள். நான் சொன்னேன். வர்றப்போ தருவாருன்னு.”
“அப்போதும் அவளுக்கு சந்தோஷம்தானா?”
“சந்தோஷம்தான்... அவள் அழகுபடுத்திக் கொண்டு இருக்கா...”
“அப்படின்னா அவளுக்கு சந்தோஷம்தான்டீ... ரகசியம் எதுவும் இல்லை.”
“என் மகளுடைய கண்கள் தெளிவாயிடுச்சு...”
“நம்மளை தெய்வம் காப்பாத்திடுச்சு.”
நாய் குரைத்தது. வேலாயுதன் ஓடிச் சென்றான். வறீது குட்டியையும் அழைத்துக் கொண்டு அவன் வாசலுக்கு வந்தபோது, தங்கம்மா அங்கு எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் வறீது குட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். கதவு அடைக்கப்பட்டது.
வேலாயுதன் நாணியிடம் சொன்னான்:
“வறீது குட்டியுடன் நான் அங்கே போனப்போ, அவள் எதிர்பார்த்து நின்னுக்கிட்டு இருக்கா. அவரைக் கையைப் பிடிச்சு உள்ளே அழைச்சிட்டு போனாள்.”
“தெய்வம் கண்களைத் திறக்க வச்சிடுச்சு... பணம் தந்தாரா?”
“ம்...”
அவள் விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள்.
நள்ளிரவு தாண்டியபோது வறீது குட்டி அங்கிருந்து கிளம்பினார். தங்கம்மாவின் அறையில் இருந்த விளக்கும் அணைந்தது.
காக்கை கத்தியது. பொழுது விடிய ஆரம்பித்தது. வெளியேயிருந்து பக்கத்து வீட்டுக்காரி பாரு அழைத்தாள்:
“நாணி அக்கா... நாணி அக்கா!”
நாணியும் வேலாயுதனும் பங்கியும் எழுந்து வெளியே வந்தார்கள். நாணி கேட்டாள்:
“என்ன பாரு... இந்தப் பொழுது விடியிற நேரத்துல...?”
“எனக்கு ஐந்து ரூபாய் தர முடியுமா? நாளையோ நாளை மறுநாளோ திருப்பித் தந்துடுறேன்.”
“எதுக்கு இப்போ ஐந்து ரூபாய்?”
“நான் ஒரு கல்யாணத்துக்குப் போகணும்.”
நாணி வேலாயுதனிடம் சொன்னாள்.
“பாருவுக்கு ஐந்து ரூபாய் கொடுங்க. வாங்கினால், அவள் திருப்பித் தர்றவள்தான்.”
வேலாயுதன் உள்ளே போய் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தான். பாரு கிளம்பினாள்.
“அக்கா எழுந்திரிக்கல...” - பங்கி சொன்னாள்.
“அவள் உறங்கட்டும்...” வேலாயுதன் சொன்னான்.
பாருவின் உரத்த சத்தம்:
"நாணி அக்கா! ஓடிவாங்க... ஓடி வாங்க..." எல்லோரும் ஓடிச் சொன்றார்கள். பலா மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு பாரு சொன்னாள்:
“தூக்குல தொங்கிக் கிடக்குறது யாரு?”
எல்லோரும் பலா மரத்தின் அடியை நோக்கி ஓடினார்கள்.
தங்கம்மாவின் இறந்த உடல் பலா மரத்தின் கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது.
“மோசம் பண்ணிட்டியே மகளே!” - நாணி இறந்த உடலின் காலை இறுகப் பிடித்துப் கொண்டாள்.
“நம்மளைப் பட்டினி கிடக்க விட்டுட்டு அவ போயிட்டாடீ... போயிட்டா...!” வேலாயுதன் நெஞ்சில் அடித்துக் கொண்டான்.