தங்கம்மா - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7402
“மகளே, நீ வாழ்ந்தால் நாங்களும் வாழ்வோம்.”
“இல்லம்மா... நான் நாசமாயிடுவேன்... நான் சாக முயற்சித்தப்போ என்னை நீங்க விடல. இனிமேல் நீங்க என்னைச் சாகடிப்பீங்க...” தங்கம்மாவின் தொண்டை இடறியது.
“அப்படிச் சொல்லாதே மகளே. நீ இல்லை என்றால் நாங்களும் இல்லை.”
தங்கம்மா திரும்பி நடந்தாள். நாணி சொன்னாள்:
“பைலி முதலாளி வர்றப்போ நீ உன்னை அழகுபடுத்திக் கொண்டு தயாராக இருக்கணும் மகளே.”
“ம்... வரட்டும்... நான் அழகு படுத்திக்கிறேன்.”
மாலை நேரம் கடந்ததும் வாசலில் கட்டப்பட்டிருந்த நாய் குறைத்தது. வேலாயுதன் ஓடிப்போய்ப் பார்த்தான். ஒரு பையுடன் ஒருவன் அங்கு வந்தான். பையை வேலாயுதனின் கையில் கொடுத்துவிட்டு அவன் சொன்னான்:
“பைலி முதலாளி கொடுத்து அனுப்பினார். முதலாளி பிறகு வர்றாராம்” - அவன் போய்விட்டான்.
வேலாயுதன் பையை எடுத்துக் கொண்டு நாணியிடம் சென்றான்.
“பைலி முதலாளி கொடுத்து விட்டிருக்காரு.” அவன் பையில் இருந்து ஒரு புட்டியையும் ஒரு பொட்டலத்தையும் வெளியே எடுத்தான்.
“புட்டியில என்ன இருக்கு?” நாணி கேட்டாள்.
“அது பிராந்திடீ... பெரிய முதலாளிமார்கள் குடிக்கிறது.”
“இங்கே கொண்டு வந்தால்...”
“முதலாளி இங்கே இருந்துகொண்டு குடிக்கிறதுக்காக இருக்கும்” - வேலாயுதன் பொட்டலத்தை அவிழ்த்துப் பார்த்தான்.
“இது கறி வறுவல்... உள்ளே கொண்டு போய் வை.”
நாணி புட்டியையும் பொட்டலத்தையும் பைக்குள் வைத்து உள்ளே போனாள்.
நாய் குறைத்தது. வேலாயுதன் ஓடிச்சென்று பார்த்தான். பைலி முதலாளி வந்து கொண்டிருந்தார். முதலாளியை மரியாதையுடன் அவன் வரவேற்று அழைத்துக் கொண்டு வந்தான்.
“மகளே, இங்கே வந்திருக்கிறது யாருன்னு பாரு” - வேலாயுதன் அங்கிருந்து நகர்ந்தான்.
முதலாளி வாசலில் நின்றிருந்தார். தங்கம்மா அறைக்குள்ளிருந்து வாசலுக்கு வந்தாள். முதலாளி கேட்டார்:
“என்னைத் தெரியுமா?”
“தெரியும்... இங்கே வந்து கட்டிலில் உட்காருங்க.”
முதலாளி அறைக்குள் நுழைந்தார். தங்கம்மா கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டாள். முதலாளி கட்டிலில் உட்கார்ந்தார். தங்கம்மாவைப் பிடித்து உட்கார வைத்த அவர் கேட்டார்:
“என்னைப் பிடிச்சிருக்கா?”
“என்னைப் பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்குறதுனாலதானே நான் வந்திருக்கேன்.”
“நான் கெட்டவள்.”
“எனக்கு நல்லவள் வேண்டாம்.”
அவர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். தங்கம்மா கேட்டாள்.
“அந்தப் பையை யாருக்கு கொடுத்து விட்டீங்க?”
“உனக்கு...”
“நான் குடிக்க மாட்டேனே?”
“இன்னைக்கு நீயும் நானும் சேர்ந்து குடிக்கணும். அதை எடு.”
தங்கம்மா கட்டிலில் ஒரு பாயை விரித்தாள். புட்டியையும் பொட்டலத்தையும் ஒரு குவளையையும் கொண்டு வந்து வைத்தாள். முதலாளி பாயில் உட்கார்ந்தார்.
“ரெண்டு குவளைகள் வேணும்.”
“இங்கே ஒண்ணுதான் இருக்கு.”
“அப்படின்னா இதுவே போதும்.”
முதலாளி புட்டியைத் திறந்து குவளையில் ஊற்றிக் குடித்தார். மீண்டும் குவளையில் ஊற்றித் தங்கம்மாவிடம் நீட்டினார்.
“எனக்கு வேண்டாம்.”
“குடி...” முதலாளி வற்புறுத்தினார்.
தங்கம்மா குடிக்கவில்லை. முதலாளி அவளுடைய வாயில் குவளையை வைத்தார். அவள் கூச்சத்துடன் குடித்தாள்.
வெளியே நாய் குரைத்தது. வேலாயுதன் ஓடிச் சென்றான்.
“யார் அது? முதலாளியா?”
முதலாளி வீட்டிற்குள் நுழைய முயன்றார். வேலாயுதன் சொன்னான்:
“அங்கே போக வேண்டாம் முதலாளி. அவளுக்குக் காய்ச்சல்.. அவள் தூங்கிட்டா...”
“தூங்கட்டும்... எழுப்ப வேண்டாம்...” - மிடுக்கான குரலில் அவ்வாறு கூறிய முதலாளி திரும்பி நடந்தார்.
“முதலாளி, கோபப்பட்டு போறீங்களா?” வேலாயுதன் பதைபதைப்புடன் கேட்டான்.
முதலாளி அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. திரும்பி பார்க்கவும் இல்லை.
வேலாயுதன் நாணியிடம் வந்து சொன்னான்:
“முதலாளி கோவிச்சுக்கிட்டு போயிட்டாரு.”
“உள்ளே ஆள் இருக்குற விஷயம் அவருக்குத் தெரிஞ்சிருக்குமா?”
“பைலி முதலாளி குடிச்சிட்டுப் பேசிக்கொண்டு இருந்தார்.”
“அப்படின்னா சங்கரன் முதலாளி கோவிச்சுக்கிட்டுத்தான் போயிருப்பாரு. இனி அனேகமா அவர் வரமாட்டார்.”
“இதெல்லாம் இப்படித்தான்டீ நடக்கும்... கொஞ்ச நாட்கள் பழகுவாங்க. பிறகு... தேவையில்லைன்னு தோணும். அதற்குப் பிறகு நமக்கு புதுசா யாராவது வருவாங்க..”
“அதேதான்... போறவங்க போகட்டும்...”
பைலி முதலாளி பத்து மணி ஆனபோது அங்கிருந்து புறப்பட்டார். அவர் வேலாயுதனை அழைத்துச் சொன்னார்:
“நீ என் கூட வா... என்னை வீட்டில் கொண்டுபோய் விடணும்.”
“போகலாம் முதலாளி.”
அவர்கள் புறப்பட்டார்கள். தங்கம்மா நாணியிடம் கேட்டாள்:
“இங்கே யாரும்மா வந்தது?”
“சங்கரன் முதலாளி...”
“பிறகு?”
“உள்ளே இருக்குற விஷயம் அவருக்குத் தெரிஞ்சிடுச்சு...”
“பிறகு?”
“கோபப்பட்டு போயிட்டாரு...”
“ம்... போகட்டும்...”
9
தங்கம்மாவின் வீட்டின் மேற்குப் பகுதியில் ஒரு ஒற்றையடிப் பாதை இருக்கிறது. தெற்கு திசையிலிருந்து வரும் அந்தப்பாதை சுடுகாட்டுக்கு முன்னால் கிழக்கு மேற்காகக் கிடக்கும் பெரிய பாதையில் போய்ச் சேரும்.
தெற்கு திசையிலிருந்து அந்த ஒற்றையடிப்பாதை வழியாக ராமகிருஷ்ணன் வருவதையும் பெரிய பாதையில் இறங்கி கிழக்கு நோக்கிப் போவதையும் தங்கம்மா பார்த்துக் கொண்டிருப்பாள். ஏழு அல்லது எட்டு வருடங்களாகப் பார்க்காமல் இருந்த ராமகிருஷ்ணனை மீண்டும் அவள் பார்க்கிறாள். வீட்டிற்குப் பின்னாலிருக்கும் முற்றத்தில் தங்கம்மா நின்று கொண்டிருப்பதை ராமகிருஷ்ணனும் பார்ப்பதுண்டு. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள்.
ராமகிருஷ்ணனின் வீட்டில் பால், மோர் ஆகியவற்றின் வியாபாரம் நடக்கும். அன்றும் - தங்கம்மா மோர் வாங்குவதற்காக அங்கு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது தங்கம்மாவிற்கு பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கும்.
தங்கம்மா மோர் வாங்குவதற்காகச் செல்லும் போது ராமகிருஷ்ணனைப் பார்ப்பதுண்டு. வாசலில் ஒரு கேன்வாஸ் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு ராமகிருஷ்ணன் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பான். தங்கம்மாவும் ராமகிருஷ்ணனும் சிரித்துக் கொள்வதும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதும் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.
ஒருநாள் ராமகிருஷ்ணன் அங்கு இல்லை. தங்கம்மா வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டாள். ராமகிருஷ்ணன் எங்கு போனான் என்ற விஷயம் வீட்டில் இருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அதற்குப் பிறகு ஏழு வருடங்கள் கடந்தோடிய பிறகு, தங்கம்மா ராமகிருஷ்ணனைப் பார்க்கிறாள்.