தங்கம்மா - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7403
“கிருஷ்ணா, உன்னை இங்கே அழைச்சிக்கிட்டு வரணும்னு நான் நினைச்சிருந்தேன்.”
“இங்கே ஒரு தடவை வரவேண்டும் என்று கொஞ்ச நாட்களாகவே நானும் நினைச்சிக்கிட்டுத்தான் இருக்கேன். பல வேலைகளும் இருந்ததால் நேரம் கிடைக்கல. நேற்று இரவு நேரத்துல வந்தப்போ...”
“எனக்கு ஆளை அடையாளம் தெரியல. ஓடிப் போறதைப் பார்த்தேன்.”
“நான்தான் வந்தேன் என்ற விஷயம் சங்கரன் முதலாளிக்குத் தெரியக்கூடாது. அதனால்தான் ஓடிப்போயிட்டேன்.”
எங்கேயோ போயிருந்த நாணி வந்தாள். வேலாயுதனுக்குப் பின்னால் நின்றுகொண்டு கேட்டாள்:
“இங்கே வர்றதுக்கு வழி தெரியுமா?”
“தெரியாத வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வரணும். அப்படித்தான் வந்தேன்.”
“தங்கம்மாவை இங்கே வரச்சொல்லுடீ நாணி. கிருஷ்ணன் வந்திருக்கப்போ, அவள் ஏன் மறைஞ்சு நிக்கணும்?”
“மகளே... தங்கம்மா! இங்கே வந்திருக்குறது யாருன்னு தெரியுதா? இங்கே வா மகளே!”
தங்கம்மா வாசலுக்கு வந்தாள். வேலாயுதன் சொன்னான்:
“இங்கே உட்கார்நதிருக்குறது யாருன்னு தெரியுதா மகளே? சேலிக்கரை கிருஷ்ணன்... பெரிய பணக்காரன்... குபேரன். நம்மளைப் போன்ற ஏழைகளின் வீட்டில் வந்து உட்காரக் கூடிய ஆள் இல்லை சேலிக்கரை கிருஷண்ணன்.”
“இங்கே வரணும்னு தோணினது நம்முடைய அதிர்ஷ்டம்... ” நாணி சொன்னாள்.
“நான் வந்ததே தங்கம்மாவைப் பார்ப்பதற்குத்தான்”- கிருஷ்ணன் தங்கம்மாவை வேட்கையுடன் பார்த்தவாறு சொன்னான்.
“என்னை எதற்காக பார்க்கணும்?”
“அப்படி கேட்காதே மகளே” - வேலாயுதன் சிறிது திட்டுகிற மாதிரியான குரலில் சொன்னான்.
“மகளே, உன்மீது விருப்பம் உண்டானதுனாலதான் உன்னைப் பார்க்கவே கிருஷ்ணன் வந்திருக்கு... உன்மேல பிரியம் உண்டானால் பதிலுக்கு உனக்கும் உண்டாகணும்” - நாணி பயமுறுத்தினாள்.
“ம்...” தங்கம்மா முனகினாள்.
“பிறகு நான் வர்றேன் வேலாயுதன் அண்ணே” - கிருஷ்ணன் எழுந்தான். “நான் ராத்திரி வரட்டுமா?”
“ராத்திரி வரணும்...”
“வேறு யாராவது...”
“யாரும் இருக்க மாட்டாங்க. நீ வா கிருஷ்ணா..”
கிருஷ்ணன் பர்ஸைத் திறந்து கொஞ்சம் நோட்டுக்களை எடுத்து வேலாயுதனின் கையில் கொடுத்தான்.
“இப்போதைக்கு இது இருக்கட்டும் வேலாயுதன் அண்ணே. நான் ராத்திரி எட்டு மணிக்கு வர்றேன்” - கிருஷ்ணன் வெளியேறி நடந்தான்.
தங்கம்மா கேட்டாள்:
“சங்கரன் முதலாளி வந்துட்டார்னா?”
“நேற்றுதானே வந்தார்? இன்னைக்கு வரமாட்டார்” - வேலாயுதன் உறுதியான குரலில் சொன்னான்.
8
சீட்டு நடத்தும் முதலாளியின் கணக்குப் பிள்ளை வந்தான். வீட்டுப் பக்கம் நடந்து சோதித்துப் பார்த்தான். வேலாயுதனும் கணக்குப் பிள்ளையுடன் சேர்ந்து நடந்தான். இறுதியில் கணக்குப் பிள்ளை கேட்டான்:
“சில அசிங்கமான விஷயங்கள் காதுல விழுந்துச்சே வேலாயுதா?’
“என்ன கேள்விப்பட்டீங்க? யார் அசிங்கமா நடந்தது?”
“இரவு நேரங்களில் இங்கே பலரும் வந்து கொண்டு இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்க மரியாதையனவங்கன்னு நினைச்சுத்தான் இங்கே தங்கிக் கொள்ளவே உங்களை முதலாளி அனுமதிச்சாரு. முதலாளி இங்கே வரப்போறதா சொன்னாரு.”
“அப்படின்னா உண்மையான விஷயத்தை நான் சொல்றேன். இங்கே ஒரு நொண்டி குஞ்ஞுண்ணி இருக்கான். பிச்சை எடுத்துத் திரியிறவன். அவன் ஒருநாள் இரவு நேரத்துல இங்கே வந்தான். இரவு வேளையில இங்கே தங்கலாம்னு அவன் வந்தான். நான் அவனை வெளியே போகச் சொல்லிட்டேன். அவன் சொன்ன பொய்யான செய்திதான் இது - இரவு நேரங்களில் இங்கே ஆட்கள் வர்றாங்கன்றது... நாங்க மோசமானவங்கன்னு...”
“சொல்ல வேண்டிய எல்லாத்தையும் முதலாளிகிட்ட சொன்னால் போதும்.”
“முதலாளி எப்போ வருவார்?”
“இன்னைக்கோ நாளைக்கோ வருவார்.”
“வரட்டும்... நான் சொல்லிக்கிறேன்.”
பைலி முதலாளியைப் பற்றி வேலாயுதன் பல வகைகளிலும் கேள்விப்பட்டிருக்கிறான். பெண் விஷயத்தில் பைலி முதலாளி மிகவும் பலவீனமானவர். சீட்டுப் பணத்தை வாங்குவதற்கென்றே ஆட்களை வேலைக்கு வைத்திருந்தாலும், சில வீடுகளில் சீட்டுப் பணத்தை வாங்குவதற்குத் தானே போக வேண்டும் என்பதில் முதலாளி பிடிவாதமாக இருப்பார். அப்படிப் பணம் வாங்குவதற்காகச் சென்றிருந்த ஒரு வீட்டில் முதலாளிக்கு அடி கிடைக்கவும் செய்திருக்கிறது.
இந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்திருந்த வேலாயுதன் நாணியிடம் சொன்னான்:
“பைலி முதலாளி இங்கே வரப் போகிறாராம்.”
“எதற்கு?”
“நம்ம மோசமானவங்களாம்... இங்கே இரவு நேரங்கள்ல ஆட்கள் வர்றாங்களாம்... நம்மை இங்கே தங்க வைக்கப் போறதில்லையாம்...”
“அப்படின்னா நாம எங்கே போறது?”
“நீ பயப்பட வேண்டாம்டீ நாணு. அவர் எதற்காக வர்றாருன்னு உனக்குத் தெரியுமா?”
“எதற்கு?”
“வர்றப்போ தெரிஞ்சிக்கோ அவர் எதற்காக வர்றாருன்னு. முதலாளி வர்றப்போ பக்கத்துல இருந்துக்கிட்டு பேசணும்னு நீ தங்கம்மாக்கிட்ட சொல்லிடு.”
“அப்படின்னா... நாம மோசமானவங்கன்னு சொன்ன பைலி முதலாளியும் மோசமானவர்தான்... அப்படித்தானே?”
“மோசமா இல்லாதவங்க யாருடீ? எல்லாரும் மோசமானவங்கதான். எல்லாம் திருடிப் பிழைக்க நடந்து திரிபவர்கள்தான். தயாராக இருக்கும்படி நீ போய் அவளிடம் சொல்லு.”
நாணி தங்கம்மாவிடம் போய் சொன்னாள்:
“மகளே, நாம இங்கே இருந்து போகணும்னு பைலி முதலாளி சொல்றாரு.”
“எதற்காக அவர் அப்படிச் சொல்றாரு அம்மா? நாம அவருக்கு என்ன கெடுதல் செய்தோம்?”
“நாம மோசமானவர்களாம்.”
“அதனால் அவருக்கு என்ன கேடு வந்துச்சு?”
“அவருடைய வீட்டில் மோசமான ஆளுங்க இருக்கக்கூடாதாம். இன்னைக்கு அவர் வரப் போறாராம்.”
“நம்மை இங்கே இருந்து வெளியே போகணும்ன்றதை சொல்றதுக்கா வர்றாரு?”
“அப்படித்தான் தகவல். ஆனால் மகளே... நீ அவர்கூட பேசினா, அவர் நம்மை வெளியே போகச் சொல்ல மாட்டாரு.”
“நான் கெட்ட பெண்ணாச்சே! நான் அவர்கிட்ட போய் ஏதாவது பேசினால், அவருக்குக் கோபம் வராதா?”
“இல்ல மகளே... நீ பக்கத்துல போய் ஏதாவது பேசுறதைத்தான் அவர் விரும்புவாரு.”
“அப்படின்னா...”
“அவரும் கெட்டவர்தான் மகளே.”
“அப்படின்னா... நான் அவருடன்...”
“அவரை சந்தோஷப்படுத்தணும் மகளே.”
“ஒரு ஆள்... இரண்டாவது ஆள்... இனி மூணாவது ஆள் வந்தால்...”
“நாம வாழ வேண்டாமா மகளே?”
“நீங்க வாழறதுக்கு நான் அழியணும்னுல்ல சொல்றீங்க?”