தங்கம்மா - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
“அடிக்கவெல்லாம் வேண்டாம். நான் அவளுக்கு இன்னும் கொஞ்சம் புத்திமதி சொல்றேன்.”
தங்கம்மா படுத்த இடத்தைவிட்டு சிறிதும் அசையவில்லை. இரவு உணவு சாப்பிட பங்கி வந்து அழைத்தாள். தங்கம்மா பேசவே இல்லை. பங்கி வற்புறுத்தி அழைத்ததற்கு தங்கம்மா சொன்னாள்:
“எனக்கு வேண்டாம். எனக்குப் பசி இல்ல...”
நாணியும் வேலாயுதனும் வந்து அவளை அழைத்தார்கள். தங்கம்மா அசையவே இல்லை. பேசவில்லை. நாணி சொன்னாள்:
“அவள் சரியான பிடிவாதக்காரின்னு நான் சொன்னேன்ல?”
“அவளுடைய பிடிவாதம் அவளுக்கே கெடுதலா அமையப் போகுதுடீ...”
“புத்திமதி சொல்லணும். கோபப்பட்டால் அவளுடைய பிடிவாதம் மேலும் அதிகமாகும்.”
“நீ புத்திமதி சொன்னேல்ல? அதற்குப் பிறகு என்ன ஆச்சு?”
“நாம பொறுமையா இருக்கணும். திரும்பத் திரும்ப புத்திமதி சொல்லணும்...”
“நீ புத்திமதி சொல்லு.”
இரவு உணவு சாப்பிட்டு முடித்து எல்லோரும் படுத்தார்கள். நேரம் நள்ளிரவு ஆனது.
“அம்மா... அம்மா!...” பங்கி அழைத்தாள்.
“என்னடீ?” - நாணி கேட்டாள்.
“அக்காவைக் காணோம்.”
“அப்படின்னா அவன் வந்திருப்பான்” - வேலாயுதன் எழுந்தான்.
நாணி விளக்கைப் பற்ற வைத்தாள். வேலாயுதனும் நாணியும் பக்கத்து அறைக்குச் சென்றார்கள். வெளியே செல்லும் வாசல் கதவு சாத்தப்பட்டிருந்தது. வேலாயுதன் ஒரு அரிவாளை எடுத்தான்.
“இப்போ நான் அவனை...” - வேலாயுதன் வெளியே ஓடினான்.
நாணியும் பங்கியும் அவனுடன் சேர்ந்து ஓடினார்கள். நிலவு காய்ந்து கொண்டிருந்த இரவு நேரமது. வேலாயுதன் வீட்டில் பின்பக்கத்தில் போய்ப் பார்த்தான். அங்கு எந்த இடத்திலும் தங்கம்மா இல்லை. தெற்குப் பக்கமாக போய் பார்த்தான். அங்கு இருந்த பலா மரத்திற்கு கீழே ஒரு சிறிய முனகல் சத்தம் கேட்டது. வேலாயுதன் அருகில் சென்று பார்த்தான்.
தங்கம்மா ஒரு கூடையைக் கவிழ்த்துப் போட்டுவிட்டு அதன் மீது ஏறி நின்று கொண்டிருந்தாள். பலா மரத்தின் கிளையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. கயிறின் நுனியில் ஒரு முடிச்சு போடப்பட்டிருந்தது.
“மகளே... மோசம் பண்ணடிடாதே மகளே!” - வேலாயுதன் வடைக்கு மேலே இருந்து தங்கம்மாவை பிடித்து இறக்கினான்.
நாணியும் பங்கியும் தங்கம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார்கள். வேலாயுதன் பலா மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த கயிறை அரிவாளால் அறுத்தெறிந்தான்.
நாணி தங்கம்மாவைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டு போனாள். தங்கம்மா படுத்துக் கொண்டாள். மற்றவர்கள் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். நாணி சொன்னாள் :
“இவளுக்கு அவனே போதும் என்றால், அவனே இருந்துட்டு போகட்டும்.”
“இதுதான் இவளோட விதின்னா, பிறகு நாம தடுத்தா அதை நிறுத்த முடியும்?”
“அவனைக் கூப்பிட்டு சொல்லிடுங்க - இவளைக் கல்யாணம் பண்ணி அழைச்சிட்டுப் போகச் சொல்லி...”
“நான் சொல்றேன். அவனிடமும் அவனோட அப்பாக்கிட்டயும் சொல்றேன்.”
5
அந்தச் செய்தி பொழுது புலர்ந்த வேளையில் ஊர் முழுவதும் பரவியது - மர வள்ளிக்கிழங்கு வியாபாரி கொச்சுக் குட்டனின் மகன் குமாரன் தூக்கில் தொங்கிவிட்டான் என்பதுதான். அந்தச் செய்தியை வேலாயுதனின் வீட்டிற்குக் கொண்டு வந்தவள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாரு. பாரு போனபோது நாணி தூக்கத்திலிருந்து எழுந்து வராந்தாவில் வந்து உட்கார்ந்திருந்தாள். பாரு கேட்டாள் :
“நாணி அக்கா, விஷயம் தெரியுமா?”
“என்ன?”
“குமாரன் தூக்குல தொங்கி செத்த விஷயம்..”
“தூக்குல தொங்கி செத்துட்டானா? எப்போ?”
“நேற்று இரவு...”
“யார் தொங்கிச் செத்தது?” என்று கேட்டவாறு வேலாயுதன் வராந்தாவிற்கு வந்தான்.
“குமாரன்தான் தூக்குல தொங்கிச் செத்துட்டான்... நேற்று இரவு...” - நாணி சொன்னாள். நாணி கூறியதில் அவள் கூறியதைவிட அர்த்தம் இருந்தது. அது வேலாயுதனுக்குப் புரிந்தது. வேலாயுதன் தலையைக் குனிந்து கொண்டு மவுனமாக நின்றிருந்தான்.
“போலீஸ்காரர்களை அழைச்சிட்டு வர்றதுக்கு ஆளுங்க போயிருக்காங்க.” - பாரு சொன்னாள்.
“போலீஸ்காரர்களை எதற்காக அழைச்சிட்டு வரணும்?”
“அது அப்படித்தான். தூக்குல தொங்கிச் செத்தா போலீஸ்காரர்கள் வரணும்?”
“தூக்குல தொங்கிச் செத்தது குமாரன் அண்ணனா?” - பங்கியும் வராந்தாவிற்கு வந்தாள்.
“அவன் எதற்காகத் தூக்குல தொங்கி இறந்தான் பாரு?” வேலாயுதன் கேட்டான்.
“எதற்கு என்று கேட்டால்... வேலாயுதன் அண்ணே, உங்களுக்குத் தெரியலைன்னா எனக்கும் தெரியாது” - பாரு தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
"அவன் எதற்காக தூக்குல தொங்கி இறந்தான்னு எனக்கு எப்படித் தெரியும்?" "அப்படின்னா எனக்கு எப்படித் தெரியும் வேலாயுதன் அண்ணே?" “அவன் எதற்காக தூக்குல தொங்கி இறந்தான்னு அவனுக்குத் தெரியும். நமக்கு எப்படித் தெரியும்?” நாம ஏன் தெரிஞ்சிக்கணும்? நீ போ பாரு...” - நாணி எழுந்தாள்.
பாரு அங்கிருந்து கிளம்பினாள். நாணி பங்கியிடம் கேட்டாள்:
“அவள் எழுந்திருக்கவில்லையாடீ?”
“இங்கே பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக்கிட்டே படுத்திருக்காங்க.”
“அவன் தூக்குல தொங்கி இறந்துட்டான்றதைக் கேள்விப்பட்டு...”
“முகத்துல எந்தவொரு மாறுதலும் இல்லை. முகம் கல்லைப் போல இருக்கு...”
“நீ அவளுக்கு அருகில் போய் இரு...”
பங்கி எழுந்து சொன்றாள்.
வேலாயுதன் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்:
“குமாரனும் தங்கம்மாவும் ஒருத்தரையொருத்தல் விரும்பினாங்கன்ற விஷயம் பாருவுக்குத் தெரியுமா?”
“எல்லா விஷயங்களும் பாருவிற்குத் தெரியும். இங்கே நடக்ககுற எல்லா விஷயங்களையும் அவள் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருக்குறா...”
“இவள் தனக்குக் கிடைக்கலைன்ற காரணத்தாலதான் அவன் தூக்குல தொங்கி இறந்துட்டான்னு பாரு எல்லா இடங்களிலும் சொல்லிக்கிட்டுத் திரிவாள்.”
“நான் அவள்கிட்ட யாரிடமும் சொல்லக்கூடாதுன்னு சொல்றேன்.”
“எனக்கு இன்னொரு சந்தேகம்...”
“என்ன?”
“அவனும் அவளும் ஒருத்தர்கிட்ட ஒருத்தர் சொல்லிக் கொண்டுதானே தூக்குல சாக முயற்சி பண்ணினாங்க?”
“அதுல என்ன சந்தேகம் இருக்கு? பாதையில் நின்று கொண்டு அவர்கள் பேசிக் கொண்டது அதுதான்.”
“இது நமக்கு நல்லதுடி நாணி!”
“நமக்கு எந்த வகையில் நல்லது?”
“அவன் செத்துட்டான்ல... அந்தத் தொல்லை ஒழிஞ்சதுல்ல...”
“இனிமேலும் அவள்...”
“இல்லைடீ... ஒரு தடவை பிழைச்சாச்சுன்னா, அதற்குப் பிறகு தூக்குல தொங்கி சாக முடியாது. நீ போய் அவள்கிட்ட பேசிக்கிட்டு இரு.”