தங்கம்மா - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
“உட்கார வேண்டாம்... எழுந்து போ என்று நான் சொல்றேன்ல...”
“ம்...” - குஞ்ஞுண்ணி ஊன்றுகோலை ஊன்றியவாறு மிகவும் சிரமப்பட்டு எழுந்தான்.
“அப்படின்னா நான் போறேன்” - குஞ்ஞுண்ணி இன்னொருமுறை உரத்த குரலில் முனகினான். ஊன்றுகோலை ஊன்றியவாறு நொண்டி நொண்டி அவன் நடந்தான்.
குஞ்ஞுண்ணி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருந்தவன். வாதம் உண்டாகி ஒரு கால் பலம் இல்லாமல் போய்விட்டது. ஒரு கையும் சுய உணர்வு இல்லாமல் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு அவன் ஊன்றுகோலை ஊன்றியவாறு நொண்டி நொண்டி பிச்சை எடுக்க ஆரம்பித்தான். சில நேரங்களில் வேலாயுதனின் வீட்டிற்கு இரவு வேளைகளில் வருவான். இருப்பதில் ஒரு பகுதியைக் கொடுப்பார்கள். அங்கேயே அவன் படுத்து உறங்குவான். மறுநாள் காலையில் அங்கிருந்து அவன் கிளம்பிப் போய்விடுவான்.
அன்று அங்கிருந்து போகச்சொன்ன விஷயம் குஞ்ஞுண்ணியை மிகவும் வேதனை கொள்ளச் செய்தது. அவனை அந்தச் செயல் கோபப்பட வைத்தது.
இரவு ஒன்பது மணி தாண்டிவிட்டது. எல்லோரும் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு டார்ச் விளக்கின் ஒளி தெரிந்தது. நடக்கும் ஓசையும் கேட்டது.
“முதலாளி வர்றாரு” - வேலாயுதன் சொன்னான்.
எல்லோரும் எழுந்து நின்றார்கள். வேலாயுதனும் நாணியும் பங்கியும் வடக்குப் பக்கத்தில் இருந்த அறைக்குள் போனார்கள். தங்கம்மா அங்கேயே நின்றிருந்தாள்.
சங்கரன் முதலாளி சிரித்துக்கொண்டே வராந்தாவிற்கு வந்தார். தங்கம்மா முகத்தைக் குனிந்துகொண்டு நின்றிருந்தாள். முதலாளி தங்கம்மாவைப் பிடித்தார். தன்னுடன் அவளை நெருக்கமாக இருக்கும்படிச் செய்தார். தங்கம்மா ஓரக் கண்களால் பார்த்தாள். முதலாளி கேட்டார்:
“எனக்காகக் காத்துக் கொண்டு நின்றிருந்தாயா?”
“ஆமா...”
சங்கரன் முதலாளி தங்கம்மாவைப் பிடித்து அறைக்குள் கொண்டு சென்றார். படுக்கையில் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தபோது, முதலாளி கேட்டார்:
“நான் யார்?”
“யாருன்னா கேட்கிறீங்க? இது என்ன கேள்வி?”
“நான் யார்? எனக்கு நீ யார்? புரியுதா? நீ என்னுடைய எல்லாமும். நீ என்னுடைய எல்லாமும்...”
“மனைவியா?”
“ஆமா...”
“மனைவின்னா கழுத்துல தாலி கட்ட வேண்டாமா?”
“தாலி கட்டவில்லையென்றால்கூட மனைவிதான்.”
“அப்படியா?”
“ஆமா...”
“என் கணவர்...” - அவள் இறுக அணைத்துக் கொண்டாள்.
பதினொரு மணி தாண்டியது. முதலாளி சொன்னார் :
“விளக்கை எரிய வை.”
தங்கம்மா எழுந்து விளக்கை எரிய வைத்தாள். முதலாளி எழுந்து சென்று சட்டையை எடுத்து அணிந்தார். தங்கம்மா கேட்டாள்:
“இப்போ எதற்காக ஆடையை எடுத்து அணியிறீங்க?”
“நான் போகணும்...”
“இப்போவா? பொழுது விடிஞ்ச பிறகு போனால் போதாதா?”
“இப்போ போய் ஆகணும். இன்னைக்கு வந்த நேரத்தில் நான் நாளைக்கு வர்றேன்.”
அதற்குப் பிறகு தங்கம்மா எதுவும் சொல்லவில்லை. சங்கரன் முதலாளி அங்கிருந்து கிளம்பினார்.
பொழுது புலர்ந்த நேரத்தில் தங்கம்மா நாணியிடம் சென்றாள்.
“அம்மா, முதலாளி பாதி இரவு வர்றதுக்கு முன்னாடியே போயிட்டாரு.”
“பொழுது விடிஞ்ச பிறகு போனால் போதும்னு நீ சொன்னியா மகளே?”
“நான் சொன்னேன். அப்பவே போய் ஆகணும்னு அவர் சொல்லிட்டாரு.”
“முதலாளி இங்கே வர்றதும் போறதும் யாருக்கும் தெரியக் கூடாதுடீ...” - வேலாயுதன் சொன்னான்.
“யாருக்கும் தெரியாமல் வந்தும் பார்த்துட்டாங்களே!” - தங்கம்மா சொன்னாள்.
“யார் பார்த்தது?”
“முதலாளி இங்கே நுழைஞ்சப்போ, ஒரு முனகல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தப்போ ஒரு ஆளு அங்கே உட்கார்ந்திருந்தாரு. முதலாளி இந்த அறைக்குள் வந்தப்போ, அந்த முனகல் சத்தம் திரும்பவும் கேட்டது.”
“அது யார்?”
பக்கத்து வீட்டுக்காரி பாரு வேகமாக வந்து நாணியிடம் கேட்டாள்:
“நேற்று இரவு நொண்டி குஞ்ஞுண்ணி இங்கே வந்திருந்தானா நாணி அக்கா?”
“வந்திருந்தான்.”
“அவனுக்கு எதுவும் கொடுக்கலையா?”
“இல்ல...”
“அதற்குப் பிறகு அவன் வழியில போய் உட்கார்ந்துட்டான். சங்கரன் முதலாளி இங்கே வந்ததை அவன் பார்த்துட்டான்.”
“சங்கரன் முதலாளி இங்கே வரவே இல்லையே! பிறகு எப்படி அவன் பார்க்க முடியும்?” - வேலாயுதன் உரத்த குரலில் சொன்னான்.
“பொழுது விடியிற நேரத்துல அவன் எங்க வீட்டுப் பக்கம் வந்தான். சங்கரன் முதலாளி ராத்திரி இங்கே யாருக்கும் தெரியாமல் ரகசியமா வந்ததைத் தான் பார்த்ததா அவன் சொன்னான்.”
“பொய்... பொய்... பச்சைப் பொய்” - வேலாயுதன் உறுதியான குரலில் சொன்னான்.
7
சங்கரன் முதலாளி ஒன்பது மணி கடந்த பிறகு வருவார். பதினொரு மணி தாண்டியதும் அங்கிருந்து கிளம்பிவிடுவார். அந்த வருகைக்கும் போவதற்கும் ஒரு வாரம் கடந்த பிறகு மாறுதல் வந்தது. தினந்தோறும் அவர் வரமாட்டார். ஒருநாள் விட்டு ஒருநாள் வருவார். தங்கம்மா கவலை கலந்த குரலில் கேட்டாள்:
“நேற்று ஏன் வரல?”
“சில நேரங்களில் நள்ளிரவு நேரம்வரை வேலை இருக்கும். அது முடிஞ்சவுடனே வீட்டுக்குப் போயிடுவேன்.”
“வேலை முடிஞ்சதும் இங்கே வந்தால் என்ன? இதுவும் வீடுதானே?”
“சாப்பிட வேண்டாமா?”
“இங்கே சாப்பிடலாமே!”
“அங்கே போய் சாப்பிடலைன்னா பெரிய பிரச்சினை ஆயிடும்.”
“இங்கேயும் பிரச்சினையாகும்...” அவள் சிரித்தாள்.
“பிரச்சினை உண்டாக்காமல் இருப்பதுதான் உனக்கும் எனக்கும் நல்லது...” அவரும் சிரித்தார்.
சங்கரன் முதலாளி இரவு வேளையில் வேலாயுதனின் வீட்டிற்குச் செல்கிறார் என்பதையும் முதலாளியின் வைப்பாட்டியாக தங்கம்மா ஆகிவிட்டாள் என்பதையும் ஊரில் உள்ள பலரும் தெரிந்து கொண்டார்கள். தங்கம்மாவால்தான் குமாரன் தூக்கில் தொங்கி இறந்தான் என்பதையும் எல்லோரும் தெரிந்து கொண்டார்கள். தங்கம்மா ஊரில் எல்லோராலும் பேசப்பட்டாள். ஒரு பல சரக்குக் கடையில் உட்கார்ந்துகொண்டு ஒருவன் சொன்னான்:
“குமாரனுக்கும் தங்கம்மாவுக்கும் இடையில் இருந்த காதல் உண்மையான காதலாகவே இருந்தது.”
“தங்கம்மாவின் காதல் விற்பதற்காக வைத்திருந்த காதல்டா. அதனால்தானே சங்கரன் முதலாளி கிடைத்தவுடன் குமாரனை வீசி எறிஞ்சிட்டா?”
“சங்கரன் முதலாளி கொடுப்பார். வாரிவாரிக் கொடுப்பார்.”
அதைக்கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு ஆள் சொன்னான்: