தங்கம்மா - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7402
“முதலாளியின் வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு. வீட்டுக்காரி வரைஞ்ச கோட்டுல சங்கரன் முதலாளி நிற்பாரு. முதலாளின்னு பேரு மட்டும்தான். சம்பாதித்தவை எல்லாம் பொண்டாட்டியின் பேர்லதான் இருக்கு.”
“குட்டன் முதலாளி தன் மகளின் பெயரில்தான் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். சங்கரன் முதலாளியின் பெயரில் கூட அவர் எதையும் கொடுக்கவிலலை.”
“சங்கரன் முதலாளி வேலாயுதன் வீட்டுக்குப் போகிறார் என்ற விஷயத்தை முதலாளியின் வீட்டில் போய் சொன்னது நொண்டி குஞ்ஞுண்ணிதான்.”
“பிச்சை எடுத்துத் திரியிறவன் எதற்கு கண்டதையும் கேட்டதையும் தேவையில்லாமல் போய் சொல்லணும்?”
“முதலாளி அவனுக்கு எதுவும் கொடுக்காமல் இருந்திருப்பாரு.”
அந்த உரையாடல் அதற்குப் பிறகும் நீண்டு கொண்டிருந்தது. அதே மாதிரியான உரையாடல் வேறு பல இடங்களிலும் நடந்து கொண்டிருந்தது.
ஒரு இரவு நேரத்தில் சங்கர் முதலளியும் தங்கம்மாவும் படுத்திருந்தபோது, வெளியே யாரோ நடக்கும் சத்தம் கேட்டது. தங்கம்மா எழுந்து அருகில் இருந்த அறையை நோக்கி அழைத்தாள்.
“அம்மா... அம்மா...”
“என்ன மகளே?” - நாணி கேட்டாள்.
“வெளியே யார் வந்தது?”
நாணி விளக்கை எரிய வைத்தாள். வேலாயுதனும் நாணியும் சேர்ந்து வெளியே வந்தார்கள். யாரோ ஒரு ஆள் முற்றத்திலிருந்து ஓடினான். வேலாயுதன் அவனுக்குப் பின்னால் ஓடினான் என்றாலும் ஓடிய ஆளை நெருங்கவும் அவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளவும் அவனால் முடியவில்லை. நாணி சொன்னாள்:
“நமக்கு ஒரு நாய் வேண்டும் என்று நான் சொன்னேன்ல?”
“நாளைக்கே நாயைக் கொண்டு வரன்டீ. கடிக்கிற நாயையே கொண்டு வர்றேன்.”
வெளியே ஆள் வந்ததையும் ஓடிப் போனதையும் தெரிந்து கொண்ட சங்கரன் முதலாளி தங்கம்மாவிடம் கேட்டார்:
“இரவு நேரத்தில் இங்கே எதற்காக ஆள் வரவேண்டும தங்கம்மா?”
“எதற்கு என்று எனக்கு எப்படித் தெரியும்? திருடுவதற்காக இருக்கலாம்.”
“திருடுவதற்காகவா? வேறு காரணத்துக்காக...” - முதலாளி தான் கூற வந்ததை முழுமையாகக் கூறவில்லை.
“சொல்லுங்க... வேறு எதற்காக?”
“உன்னை பார்ப்பதற்காக வந்திருக்கலாமோ?”
“என்னைப் பார்ப்பதற்கா? என்னை எதற்காகப் பார்க்க வேண்டும்?” - தங்கம்மா மூச்சு அடைக்கக் கேட்டாள்.
“எதற்கு? நீயே சொல்...”
“அப்படியென்றால்... எனக்கு வேறு ஆட்களும் இருக்கிறாங்கன்னு நீங்க சொல்றீங்க.”
“இருக்கிறாங்களான்னு நான் கேட்கிறேன்...”
அதற்குப் பிறகு தங்கம்மா எதுவும் பேசவில்லை.
மறுநாள் காலையில் தங்கம்மா நாணியிடம் சொன்னாள்:
“நேற்று இரவு யாரோ இங்கே வந்துட்டு ஓடிப் போனாங்கல்ல அம்மா?”
“நாங்க விளக்கை எடுத்துக் கொண்டு போனதும் ஆள் ஓடியாச்சு...”
“அப்போ முதலாளி என்கிட்ட கேட்டாரு...”
“என்ன கேட்டார் மகளே?”
“அந்த ஆள் என்னைப் பார்க்குறதுக்காகத்தானே வந்திருக்கான் என்று அவர் கேட்டார். நான் கேட்டேன் - என்னை எதற்குப் பார்க்கணும்னு. அப்போ முதலாளி சொன்னாரு - நானே சொல்லணுமாம்.”
“நீ என்ன சொன்னே மகளே?”
“நான் எதுவும சொல்லல...”
அதைக் கேட்டுக் கொண்டிருந்த வேலாயுதன் சொன்னான்:
“மகளே, நீ என்ன சொன்னாலும் முதலாளி நம்ப மாட்டாரு. என்ன காரணம்னா...”
“என்ன காரணம்?”
“அவர் பார்த்தும் பதுங்கியும்தான் உன்னைப் பார்ப்பதற்காக வருகிறார்? வர்றவங்களெல்லாம் உன்னைப் பார்க்குறதுக்குத்தான் வர்றாங்கன்றது அவரோட நினைப்பு.”
“முதலாளி பார்த்தும் பதுங்கியும் வந்தால் போதும் என்று சொன்னது யாரு? நீங்கதானே அப்பா?”
“இல்லாட்டி அவர் வரமாட்டார்.”
“வரவேண்டாம்.”
“வரவில்லையென்றால் நாம எல்லாரும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.”
“இனிமேலும் ஒவ்வொருத்தரா பார்த்தும் பதுங்கியும் வந்தால்...”
“வரட்டும் மகளே.”
“அப்படி ஒவ்வொருத்தரும் வந்தால், அதற்கு பிறகு முதலாளி வருவாரா?”
“அவர் வரமாட்டார் மகளே. கொஞ்ச நாட்கள் கடந்தால் அவர் வரமாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியும். அவர் வரலைன்னா வேண்டாம். வேறு ஆட்கள் வருவாங்க.”
“வேறு ஆட்கள் வர்றப்போ...” தங்கம்மா தான் கூற வந்ததை முழுமையாகக் கூறாமல் அங்கிருந்து கிளம்பினாள்.
வேலாயுதன் ஒரு நாயைக் கொண்டு வந்தான். கடிக்கக் கூடிய நாய். நாயை வாசலில் கட்டிப் போட்ட வேலாயுதன் சொன்னான்:
“குரைச்சா போதும்... கடிக்க வேண்டாம்.”
சிறிது நேரம் சென்றதும் நாய் குரைத்தது. வேலாயுதன் வெளியே வந்து பார்த்தான். சேலிக்கரை கிருஷ்ணன் அங்கு வந்திருந்தான். சில்க் சட்டை அணிந்து சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு அவன் நின்றிருந்தான்.
வந்து நின்று கொண்டிருந்த மனிதனைக் கடிப்பதற்காக வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்த நாயை வேலாயுதன் தடுத்து நிறுத்தினான். சேலிக்கரை கிருஷ்ணன் கேட்டான்:
“நேற்று இந்த நாய் இங்கே இல்லையே!”
“இல்லை. இதை இன்னைக்குத்தான் கொண்டு வந்தேன். நேற்று இந்த நாய் இங்கே இல்லை என்ற விஷயம் எப்படித் தெரியும் கிருஷ்ணா?”
“நேற்று நான் இங்கே வந்தேன்.”
“எப்போ?”
“ராத்திரி...”
“பிறகு?”
“உள்ளே சங்கரன் முதலாளி இருந்தாரு. அதனால் நான் போயிட்டேன்.”
“உள்ளே இருந்தது சங்கரன் முதலாளி என்று உனக்கு எப்படித் தெரியும்.”
“கண்களை மூடிக் கொண்டு பால் குடிக்காதீங்க... இங்கே நடக்கும் விஷயங்கள் எல்லாருக்கும் தெரியும்.”
“கிருஷ்ணா வா, வந்து உட்காரு” - வேலாயுதன் கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு வாசலுக்கு வந்தான்.
சேலிக்கரை கிருஷ்ணன் மலேஷியாவில் இருந்து வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. அவன் நிறைய பணத்துடன் வந்திருந்தான். ஒரு விசாலமான இடத்தை விலைக்கு வாங்கினான். அதில் வீடு கட்டும் வேலைகளை ஆரம்பித்தான். மூன்று மாதங்கள் ஆன பிறகு அவன் மலேஷியாவிற்குத் திரும்பச் சென்று விடுவான்.
சேலிக்கரை கிருஷ்ணன் மலேஷியாவிற்குப் போவதற்கு முன்பே வேலாயுதனுக்கு அவனைப் பற்றித் தெரியும். மலேஷியாவில் இருந்து வந்த பிறகு இரண்டு மூன்று தடவை அவனை வேலாயுதன் பார்க்கவும் செய்தான். அப்படிப்பட்ட நிலையில் சிறிதும் எதிர்பார்க்காமல் அவன் வீட்டிற்கு வந்ததைப் பார்த்து வேலாயுதன் மனதில் மகிழ்ச்சி அடைந்தான்.
வாசலில் ஒரு பாயில் கிருஷ்ணனை உட்கார வைத்துவிட்டு வேலாயுதன் சொன்னான்: