தங்கம்மா - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7403
“என் அப்பாவுக்காகவும் அம்மாவுக்காகவும் தங்கச்சிக்காகவும்...” தங்கம்மா தனக்குள் உண்டான தவிப்பை அடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டாள்.
ராமகிருஷண்ன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு ராமகிருஷ்ணன் கேட்டான்:
“நான் இங்கே வந்த விஷயம் அவங்க யாருக்கும் பிடிக்கல... அப்படித்தானே?”
“பிடிக்கல...”
“அவங்களுக்குப் பிடிக்கணும்னா, அதுக்கு நான் என்ன செய்யணும்?”
“பணம் கொடுக்கணும்.”
“என் கையில் பணம் இல்ல...”
“பணம் இல்லைன்னா அவங்களுக்குப் பிடிக்காது.”
“தங்கம்மா உன்மேல இருக்குற விருப்பமும்...”
“பணத்தின் மீது வைத்திருக்கும் விருப்பம் மட்டுமே.”
வெளியே வாசலில் நின்று கொண்டிருந்த வேலாயுதன் ஒரு கேள்வியைக் கேட்டான் :
“அவன் இதுவரை போகலையாடீ?”
தங்கம்மா தலையை வேகமாகத் திருப்பினாள். அவளுடைய முகத்தில் கோபம் நிழலாடியது. அவள் எழுந்து கண்களை மூடிக் கொண்டு உதடுகளை அமர்த்தினாள். அப்படியே அவள் சிறிது நேரம் நின்றிருந்தாள்.
அவள் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தாள். அவள் உட்கார்ந்தாள். ராமகிருஷ்ணன் கேட்டான்:
“நான் போகட்டுமா தங்கம்மா? ஆமா... நான் வெளியே போறேன்.”
“நாம படுப்போம்” ... அவள் விளக்கை அணைத்தாள். பொழுது புலர்வதற்கு முன்னால் தங்கம்மா ராமகிருஷ்ணனை எழுப்பினாள்.
“போக வேண்டாமா?”
“போகணும்... போகணும்...” - ராமகிருஷண்ன் எழுந்தான். பாதை வரை தங்கம்மா அவனுடன் சென்றாள். அவள் கேட்டாள்:
“ராத்திரி எப்போ வருவீங்க?”
“வரணுமா?”
“வரணும். நேற்று வந்த நேரத்திற்கு இன்னைக்கும் வரணும்?”
“மற்றவர்கள்...”
“நான் சொல்லித்தான் நீங்க வர்றீங்க. என்னைப் பார்க்குறதுக்காக வர்றீங்க. வரணும். வருவீங்களா?”
“வர்றேன்.”
ராமகிருஷ்ணன் அங்கிருந்து கிளம்பினான்.
10
“நாணி, இன்னைக்கு வறீது குட்டி வர்றாருன்னு அவள்கிட்ட சொல்லு. அவள் அழகுபடுத்திக் கொண்டு தயாரா இருக்கணும்.”
“ஒரு வேளை இன்னைக்கு சேலிக்கரை கிருஷ்ணன் வரலாம்.”
“அவளுக்கு தலைவலின்னு சொல்லிட வேண்டியதுதான்.”
“இன்னைக்கும் ராமகிருஷ்ணன் வந்தால்...?”
“வந்தால் அவனை அடிச்சு வெளியேத்துவேன்” - வேலாயுதன் அழுத்தமான குரலில் சொன்னான்.
“இன்னைக்கு பொழுது விடியிற நேரத்துல அவள் அவனை வழியில கொண்டு போய் விட்டுட்டுத்தான் வந்தாள்.”
“அவனை இங்கே வர வைக்கக் கூடாதுன்னு நீ அவள்கிட்ட இன்னைக்கு சொல்லிடு.”
“நான் சொன்னேன். ஆனால் அவள் வெறுமனே கேட்டுக்கொண்டு இருந்தாள். கடைசியில் ஒரு முனகல் முனகிட்டு எழுந்து போயிட்டா...”
“ரெண்டு நாட்களாக அவளிடம் ஒரு மாற்றம் தெரியுதேடீ நாணி?”
“மாற்றம் இருக்கு. பெரிய மாற்றம் இருக்கு...” நாணி உறுதியான குரலில் சொன்னாள்.
“ம்... நானும் மாறுறேன்.”
அன்று தங்கம்மா அதிக நேரம் அறைக்குள்ளேயே இருந்தாள். சாயங்கால நேரம் ஆனபோது பக்கத்து வீட்டுக்காரி பாரு வந்தாள். அவள் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் வந்தாள். வாசலில் வேலாயுதனும் நாணியும் பங்கியும் மவுனமாக நின்றிருந்தார்கள். பாரு கேட்டாள் :
“இன்னைக்கு என்ன இந்த வீடு சாவு நடந்த வீட்டைப் போல இருக்கு?”
“அவளுக்கு ஒரு திமிர்! எங்க யார் கூடவும் எதுவும் பேசாமல் அறைக்குள்ளேயே உட்கார்ந்துக்கிட்டு இருக்கா.”
“அந்த ராமகிருஷ்ணன் இங்கே வந்தானா நாணி அக்கா?”
“வந்தான்.”
“அவன் பொம்பள பசங்களை மயக்கித் திரியிறவன். அவன் வந்து அவளை மயக்கிட்டான்.”
“நீ போய் அவள்கிட்ட சொல்லு பாரு. அவன் இங்கே வந்தான் என்றால், அவளும் நாசமாகப் போயிடுவா, நாங்களும் அழிஞ்சிடுவோம்னு சொல்லு.”
“நான் சொல்லுறேன் நாணி அக்கா. ஆனால், நான் சொன்னால் அவள் கேட்பாளா?”
பாரு தங்கம்மா இருக்கும் இடத்திற்குச் சென்றாள். தங்கம்மா கட்டிலில் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். பாரு கேட்டாள்:
“தங்கம்மா, நீ ஏன் இப்படி கவலையா இருக்கே?”
“நான் கவலையில இருக்கேன்னு உங்கக்கிட்ட யாரு சொன்னது பாரு அக்கா?”
“யாராவது சொல்லணுமா? பார்த்தாலே தெரியாதா? இப்படி தனியா அறைக்குள்ளே பிறகு எதற்கு இருக்கணும்?”
“பாரு அக்கா, உங்களுக்கு இப்போ என்ன தெரிஞ்சிக்கணும்?”
“ராமகிருஷ்ணனை இங்கே எதற்காக வரவைக்கணும்?”
“அது என்னுடைய விருப்பம்.”
“உன் விருப்பத்திற்கு நடப்பது உனக்கும் மற்றவர்களுக்கும் நல்லதா?”
“பிறகு யாருடைய விருப்பத்துக்கு நடக்குறது நல்லது?”
“உன் அப்பா, அம்மாவோட விருப்பப்படி நீ நடக்கணும்.”
“அப்படின்னா...?”
“சொல்லு தங்கம்மா... சொல்லு.”
“என்னை விற்றுப் பணம் வாங்கி அவங்க சுகமா வாழணும். அதுதானே அவங்களோட விருப்பம்! அது என்னுடைய விருப்பமில்லை பாரு அக்கா.”
“அப்படின்னா...?”
“முடியாது... பாரு அக்கா. அவங்க அழைச்சிட்டு வர்றவங்ககூடவெல்லாம் படுக்குறது என்னால முடியாது.”
“நீ இப்படிப் பிடிவாதம் பிடிச்சா எல்லாரும் பட்டினி கிடக்க வேண்டியது வருமே தங்கம்மா?”
“பட்டினி கிடந்து சாவோம். அதுதான் நல்லது... பாரு அக்கா, நீங்க போங்க...” தங்கம்மா திரும்பி நின்றாள்.
பாரு அங்கிருந்து கிளம்பினாள்.
இரவு எட்டு மணி தாண்டியது.
நாய் குரைத்தது. வேலாயுதன் ஓடிச் சென்றான். தங்கம்மாவும் வாசலுக்கு வந்தாள். யாரோ வந்து கொண்டிருந்தார்கள். வேலாயுதன் கேட்டான்:
“ராமகிருஷ்ணனா அது?”
பதில் இல்லை. வேலாயுதன் அருகில் சென்றான். பின்னால் தங்கம்மாவும் வந்தாள். வேலாயுதன் கோபத்துடன் சொன்னான்:
“ராமகிருஷ்ணன் இங்கே வரக்கூடாதுன்னு நான் நேற்றே சொன்னேன்ல?”
“நான் சொல்லித்தான் வந்திருக்கார்” - தங்கம்மா அழுத்தமான குரலில் சொன்னாள்.
“வெளியே போடா ராமகிருஷ்ணா...” - வேலாயுதன் கோபத்தில் விறைத்துக் கொண்டு நின்றான்.
தங்கம்மா ராமகிருஷ்ணனின் கையைப் பிடித்தாள். நாணியும் பங்கியும் அங்கு ஓடி வந்தார்கள்.
“போறியா என்ன?” - வேலாயுதனின் கை உயர்ந்தது.
தங்கம்மா ராமகிருஷ்ணனைப் பிடித்திருந்ததை விட்டு, மேலே உயர்ந்த வேலாயுதத்தின் கையைப் பிடித்துக் கொண்டு கர்ஜனை செய்யும் குரலில் கேட்டாள்:
“அடிப்பீங்களா?”
வேலாயுதனின் கை இறங்கவில்லை.
தங்கம்மா ராமகிருஷ்ணனிடம் சொன்னாள் :