தங்கம்மா - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7402
அவனுடன் பேசவேண்டும் என்ற ஆவல் தங்கம்மாவிற்கு இருக்கிறது. ராமகிருஷ்ணனுக்கும் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால் என்ன காரணத்திற்காக ராமகிருஷ்ணன் வீட்டுப் பக்கம் வரவில்லை? அவள் மிகவும் கேவலமானவள், விலைமாது என்று அவன் தெரிந்து கொண்டிருக்கலாம். அவனுக்கு அவள் மீது வெறுப்பு உண்டாகி இருக்கலாம். ஆனால் அவன் அவளைப் பார்க்கும்போது வெறுப்பான அடையாளம் எதுவும் தெரியவில்லை.
ஒருநாள் ராமகிருஷ்ணன் தெற்கு திசையிலிருந்து வருவதைப் பார்த்துக் கொண்டு தங்கம்மா ஒற்றையடிப் பாதைக்கு அருகில் நின்றிருந்தாள். ராமகிருஷ்ணன் அருகில் வந்தபோது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். ராமகிருஷ்ணன் கேட்டான் :
“என்னைத் தெரியுதா?”
“தெரியுதான்னு நான்தான் கேட்கணும்.”
“கேட்டால் தெரியும் என்பதுதான் பதில்.”
ராமகிருஷ்ணன் சிறிது நடந்துவிட்டுத் திரும்பிக் கேட்டான்:
“நான் அங்கே வரட்டுமா?”
“எப்போ?”
“ராத்திரி?”
“ம்...”
ராமகிருஷ்ணன் நடந்து சென்றான்.
இரவு எட்டு மணி தாண்டியது. வெளியே நாய் குரைத்தது. வேலாயுதன் ஓடிச் சென்றான்.
“யார் அது?”
ராமகிருஷ்ணன் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். வேலாயுதன் அருகில் சென்று பார்த்தான்.
“இப்போ எதற்காக இங்கே வந்தே?”
“நான் சொல்லித்தான் வந்திருக்காரு” - பின்னால் நின்று கொண்டு தங்கம்மா அழுத்தமான குரலில் சொன்னாள்.
வேலாயுதன் அதிர்ச்சியடைந்து விட்டான். தங்கம்மா அருகில் சென்று ராமகிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.
நாணியும் பங்கியும் வேலாயுதனின் அருகில் சென்றார்கள். நாணி கேட்டாள் :
“யார் அது?”
“ராமகிருஷ்ணன்... அவள் சொல்லித்தான் அவன் வந்திருக்கான்.”
“இன்னைக்கு மத்தியானம் அவங்க பேசிக் கொண்டு இருந்ததை வேலியின் மேற்பகுதி வழியாக நான் பார்த்தேன்.”
“வேலையோ தொழிலோ எதுவும் இல்லாமல் புத்தகங்களைப் படித்துக் கொண்டு திரியறவன் அவன்.”
“அவள் எதற்காக அவனை அழைக்கணும்?”
“அதைத்தான் நானும் கேட்கிறேன். அதற்குப் பிறகு அவள் என்ன செய்தாள் தெரியுமா?” - வேலாயுதனின் குரல் உயர்ந்தது: “நான் இங்கே நின்னுக்கிட்டு இருக்குறப்போ அவள் அவனுடைய கையை பிடிச்சிக்கிட்டு உள்ளே போறாள்.”
“மெதுவாகச் சொல்லுங்க... அவள் கேட்டுறக் கூடாது.”
“என்னை மீறுற அளவுக்கு அவளுக்கு தைரியம் வந்திருச்சான்னு நான் கேட்கிறேன்.”
“மெதுவா பேசுங்க...” - நாணி வேலாயுதனின் வாயைக் கையால் மூடினாள்.
“அவள்கூட சண்டை போடக் கூடாது. சண்டை போட்டால் ஆபத்து.”
வேலாயுதன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்:
“வீடு பட்டினி கிடந்திடும்டீ... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் வறீது குட்டிக்கிட்ட கொஞ்சம் பணம் கேட்டேன். அவர் தர்றேன்னும் சொல்லிட்டாரு. அவர் பணத்துடன் இன்னைக்கு வருவார். நான் என்ன சொல்வேன்? அவனை அங்கேயிருந்து வெளியேற்றணும்னு நீ போய் அவள்கிட்ட சொல்லு.”
நாய் குரைத்தது. யாரோ வந்து கொண்டிருந்தார்க்ள.
வேலாயுதன் கேட்டான்:
“யார் அது?”
“நான்தான். என்னைத் தெரியலையா?” - மிடுக்கான குரலில் பதில் வந்தது.
வேலாயுதன் அருகில் சென்று பார்த்தான்.
“குட்டப்பனா? நீ ஏன் இந்த இரவு நேரத்துல இங்கே வந்தே?”
“இங்கே இரவு நேரங்களில் பலரும் வர்றாங்கள்ல! அப்படி இருக்குறப்போ நான் வந்தால் என்ன?”
“இங்கே பலரும் வர்றாங்கன்னு உன்கிட்ட யார் சொன்னது?”
“என்கிட்ட யாரும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இரவு நேரங்கள்ல யார் யார் இங்கே வர்றாங்கன்ற விஷயம் எனக்கு நல்லா தெரியும்.”
நாணி வேலாயுதனின் காதில் என்னவோ சொன்னாள். வேலாயுதன் குட்டப்பனின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்:
“வாடா குட்டப்பா! நாம கள்ளுக்கடைவரை போயிட்டு வருவோம்.”
அவர்கள் இருவரும் வெளியேறினார்கள்.
வாய் சவடால் அடிக்கக் கூடியவன் குட்டப்பன். எதிர்த்துப் பேசினால் நிலைமை பெரிதாகிவிடும். அதனால் சமரசம் செய்துகொண்டு அவனை அங்கிருந்து அழைத்துப் போகும்படி நாணி அறிவுறுத்தினாள்.
சட்டம் பேசும் குட்டப்பனைச் சரி செய்வதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. கள்ளு வாங்கிக் கொடுப்பதே அது. அந்த வகையில் வேலாயுதன் குட்டப்பனை அழைத்துச் சென்றான். பங்கி சொன்னாள்:
“அம்மா, அக்கா இப்படி ஆரம்பித்தால் நாம பட்டினி கிடக்க வேண்டியது வருமே?”
“அக்காவைப் போல நீயும் அழகா இருந்தால்...?”
“நான் அழகா இல்லாமல் போனதற்கு நானா குற்றக்காரி?”
நாய் குரைத்தது. நாணி கேட்டாள்:
“யார் அது?”
“நான் இன்னைக்கு வர்றதா சொல்லியிருந்தேன்” - வறீது குட்டி சொன்னார்.
“நாங்க இங்கே எதிர்பார்த்து நின்னுக்கிட்டு இருக்கோம். விஷயம் என்னன்னா... அவளுக்கு தலைவலி...”
“வேலாயுதன் எங்கே?”
“வைத்தியரைப் பார்க்கப் போயிருக்காரு. எங்களை இங்கே இருக்கச் சொல்லிட்டு போனாரு. வந்த பிறகு சொல்றேன். பிறகு என்னவோ கொண்டு வருவீங்கன்னு சொன்னாரு.”
“இப்போ நான் போறேன். தலைவலி சரியான பிறகு வர்றேன்.” வறீது குட்டி திரும்பி நடந்தார்.
“உனக்கு தர்றதுக்கு நான் எதையும் கொண்டு வரல” - தங்கம்மாவிற்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு ராமகிருஷண்ன் சொன்னான்.
“எனக்கு ஏதாவது தரணும்னு நான் சொன்னேனா?”
“தராதவர்களை இங்கே உள்ளே நுழைய விடமாட்டார்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும்.”
“என்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியுமா?”
“என்மேல விருப்பம் இருந்ததாலா இங்கே வரலாமான்னு என்கிட்ட கேட்டீங்க?”
“நீ இப்போ இருக்குறதைவிட சின்ன பிள்ளையா இருக்குறப்பவே உன்மீது எனக்கு விருப்பம் வந்திடுச்சு. இப்போ நீ ரொம்பவும் மாறிட்டே. இருந்தாலும் இப்போவும் விருப்பம் இருக்கத்தான் செய்யுது. என்மேல விருப்பம் இருப்பதாலா நான் வர்றதுக்கு நீ சம்மதிச்சே?”
“எனக்கு விருப்பம் இல்லாதவர்கள் யாரும் இங்கே வர நான் சம்மதிச்சது இல்லை.”
“அப்படின்னா... இங்கே வர்றவங்க எல்லாரும் நீ விருப்பப்பட்டவங்க... அப்படித்தானே தங்கம்மா?”
“அவர்கள் யாரும் நான் சம்மதித்து வருபவர்கள் இல்லை” - தங்கம்மா தலையைக் குனிந்து கொண்டாள்.
“நீ சம்மதிக்காமல் வருவார்களா? அப்படி வந்தால் நீ அவர்கள் சொன்னபடி கேட்பியா?”