தங்கம்மா - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
“பொண்ணுங்க வயசுக்கு வந்து நிக்கிறப்போ, பலருக்கும் கண்கள் துடிக்கத்தான் செய்யும் நாணு. அவர்கள் இப்படி மனசுக்குத் தோணியதை சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாங்க” - வேலாயுதன் சொன்னான்.
“அது இருக்கட்டும் வேலாயுதன் அண்ணே நான் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே இல்லைன்னு வச்சுக்கோங்க. நீங்க முதலாளியை எப்போ பார்க்க வர்றீங்க?”
“நாளைக்கு சாயங்காலம்.”
“அப்படின்னா நான் போகட்டுமா?”
“சரி... போ நாணு.”
“வேலாயுதன் அண்ணே, உங்களுக்கு ஏதாவது வேணும்னா...” - நாணு ஒரு தாள் பொட்டலத்தைக் கையில் எடுத்தான்.
“ஏதாவது இருந்தால்...”
தாள் பொட்டலத்தை வேலாயுதனின் கையில் கொடுத்துவிட்டு நாணு அங்கிருந்து கிளம்பினான்.
6
“வாழணும் மகளே. எப்படியும் வாழணும்... பிறந்ததே வாழ்வதற்குத்தான்...” - வேலாயுதன் முழு பலத்தையும் பயன்படுத்தி தங்கம்மாவிடம் கூறினான்.
தங்கம்மா அதைக் கேட்டுப் புன்னகைத்தாள். பல நாட்களுக்குப் பிறகு அவள் முதல் தடவையாக அப்போதுதான் புன்னகைக்கிறாள். வேலாயுதன் தொடர்ந்து சொன்னான்:
“பிறந்தது இறப்பதற்காக அல்ல மகளே. வாழறதுக்காகத்தான் பிறப்பதே...”
“வாழுங்க... நீங்க வாழுங்க...” - தங்கம்மா அலட்சியமான குரலில் சொன்னாள்.
“மகளே, நீ வாழணும். நாங்களும் வாழணும்.”
“உங்களுக்காக நானும் வாழறேன் அப்பா.”
“அப்படிச் சொல்லக்கூடாது மகளே. உனக்காக நீ வாழணும். அப்போது நாங்களும் வாழுவோம். நீ வாழணும் மகளே.”
“வாழறேன் அப்பா.”
“அப்படின்னா மகளே... நீ போய் குளி. நான் தந்த பொட்டலத்தைப் பிரிச்சுப் பாரு.”
“ம்... நான் குளிக்கிறேன்” - தங்கம்மா அங்கிருந்து எழுந்து சென்றாள்.
“அவளுடைய அறிவு தெளிஞ்சிருச்சிடீ நாணி...” - வேலாயுதன் மகிழ்ச்சியான குரலில் சொன்னான்.
“அவளுடைய கஷ்டகாலம் முடிஞ்சிடுச்சு.”
“நம்முடைய கஷ்ட காலமும் முடிஞ்சிடுச்சு. அவளுக்கு முதலாளி ஒரு பொட்டலத்தைக் கொடுத்து அனுப்பினாரு. நீ அதுல என்ன இருக்குன்னு போய்ப்பாரு.”
நாணி எழுந்து உள்ளே சென்றாள். தங்கம்மாவும் பங்கியும் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாணியும் அங்கு சென்றாள்.
முண்டும் ரவிக்கையும் ஜரிகை போட்ட மேற்துண்டும் இருந்தன. சோப், கண்மை, சாந்து, ஹேர் ஆயில், குங்குமம் ஆகியவையும் இருந்தன. நாணி சொன்னாள்:
“மகளே, இந்த சோப்பை எடுத்துக்கொண்டு போய் குளிச்சிட்டு வா.”
தங்கம்மா சோப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அன்றும் சுடுகாட்டில் ஒரு பிணத்தை எரித்துக் கொண்டிருந்தார்கள். புகை ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. தங்கம்மா அதைப் பார்க்கவில்லை. அவள் குளத்தில் இறங்கிக் குளித்தாள். பக்கத்து வீட்டுக்காரி பாரு குளத்தின் படித்துறைக்கு வந்து கேட்டாள்:
“தங்கம்மா, இன்னைக்கு என்ன சாயங்கால நேரத்துல குளிக்கிறே?”
“எனக்கு களைப்பா இருந்தது. குளிச்சா சரியாயிடும்னு நினைச்சு குளிக்கிறேன்.”
“என்ன ஒரே வாசனையா இருக்கு? சோப்பா?”
“அப்பா கடைக்குப் போனப்போ எனக்காக ஒரு சோப் வாங்கிட்டு வந்திருக்காரு.”
“ம்...ம்... எனக்குத் தெரியும்.”
“என்ன தெரியும்?”
“தெரியும் தங்கம்மா தெரியும்” - பாரு அங்கிருந்து கிளம்பினாள். நாணி குளத்தின் படித்துறைக்கு வந்து தங்கம்மாவிடம் கேட்டாள்:
“மகளே, பாரு வந்து என்ன கேட்டாள்?”
“சாயங்கால நேரத்துல குளிக்கிறதுக்குக் காரணம் என்னன்னு பாரு அக்கா கேட்டாங்க. நான் சொன்னேன் களைப்பா இருக்குதுன்னு. பாரு அக்கா சொன்னாங்க சோப் வாசனை அடிக்குதுன்னு. நான் சொன்னேன் அப்பா வாங்கிட்டு வந்தாருன்னு. அப்போ பாரு அக்கா எல்லாம் எனக்குத் தெரியும்னு சொன்னாங்க.”
“அவளுக்கு என்ன தெரியும்?”
“யாருக்குத் தெரியும்?”
“அவள் திருடி... அவளுடைய கண்ணும் காதும் எப்பவும் இங்கேதான் இருக்கும். ஊர் முழுக்க சொல்லிக்கிட்டுத் திரிவா.”
“சொல்லித் திரியட்டும்.”
“மகளே, அதனால் உனக்குத்தான் கேடு.”
“எனக்கு ஒரு கேடும் இல்லை.”
“நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா மகளே” - நாணி அங்கிருந்து கிளம்பினாள்.
தங்கம்மா குளித்து முடித்து வந்தபோது, வராந்தாவில் ஒரு குத்து விளக்கு எரியும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தது. வேலாயுதன் சொன்னான்:
“வணங்கிட்டுப் போ மகளே.”
தங்கம்மா விளக்கை வணங்கிவிட்டு உள்ளே சென்றாள். அறையில் ஒரு புதிய லாந்தர் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கட்டிலில் ஒரு புதிய விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. தங்கம்மா அறைக்குள் நுழைந்ததும் பங்கி அங்கிருந்து வெளியேறினாள். தங்கம்மா கேட்டாள்:
“நீ எங்கே போறேடீ?”
“அக்கா, இது உன்னோட அறை. நான் இனிமேல் இந்த அறைக்குள் வரமாட்டேன்.”
அதைக் கேட்டு தங்கம்மா சிரித்தாள். அவள் ஈரமான முண்டை அவிழ்த்துப் போட்டுவிட்டு, புதிய முண்டையும் ரவிக்கையும் எடுத்து அணிந்தாள். முழங்கால்வரை தொங்கிக் கொண்டிருந்த கூந்தலை தன்னுடைய விரல்களால் கோதிவிட்டுக் காய வைத்தாள். முகத்தில் பவுடர் பூசினாள். கண்களில் மை பூசினாள். பொட்டு வைத்தாள். நாணி வாசலில் வந்து நின்றுகொண்டு சொன்னாள்:
“அந்த ஜரிகை போட்ட மேற்துண்டையும் எடுத்து அணிஞ்சுக்கோ மகளே.”
தங்கம்மா ஜரிகை போட்ட மேற்துண்டையும் எடுத்து அணிந்தாள்.
பின்னால் நின்றுகொண்டு வேலாயுதன் சொன்னான்:
“இவளை இப்போ பார்த்தால் தேவதைன்னு சொல்லுவாங்கல்லடீ...?”
“இப்படி அழகுபடுத்திக் கொள்ளாமல் இருந்தால்கூட என் மகள் தேவைதைதான்.”
ஒரு இருமல் சத்தம்!
வேலாயுதன் கேட்டான்.
“யார் அது?”
“நான்தான்... குஞ்ஞுண்ணி...”
“நீ எதற்காக இப்போ இங்கே வந்தே?” - வேலாயுதன் கோபத்துடன் கேட்டான்.
கொம்பை ஊன்றிக் கொண்டு நொண்டியவாறு குஞ்ஞுண்ணி அருகில் வந்து வராந்தாவில் உட்கார்ந்தான்.
“நீ இங்கே உட்கார வேண்டாம். எழுந்து போ...” - வேலாயுதனின் குரல் பெரிதானது.
“இன்னைக்கு ஏன் இப்படிச் சொல்றீங்க? பல நேரங்கள்ல நான் இங்கே வந்திருக்கேன். எனக்கு ஏதாவது கொடுப்பீங்க. சில நேரங்களில் இரவு நேரத்துல நான் இங்கேயே படுக்குறதும் உண்டு.”
“இனிமேல் இங்கே எதுவும் தர்றதா இல்ல. நீ இங்கே படுக்கவும் வேண்டாம்.”
“எனக்கு எதுவும் தர வேண்டாம். நான் இங்கே படுக்கப் போறதும் இல்ல. நான் இங்க கொஞ்சம் உட்கார்ந்திருக்கேனே!”