தங்கம்மா
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7399
புகை ஆகாயத்தை நோக்கி உயர்ந்து, காற்றில் சிதறிப் பறந்தது. மனித மாமிசம் கரிந்த வாசனை நான்கு பக்கங்களிலும் பரவியது. பாதையில் சென்றவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள்.
தங்கம்மா வேலியருகில் நின்று சுடுகாட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் நின்று கொண்டு நாணி உரத்த குரலில் அழைத்தாள்:
“இங்கே வாடீ... நீ எதற்குடி அங்கே போய் நின்னுக்கிட்டு இருக்கே?”
தங்கம்மா மெதுவாக நடந்து வீட்டின் வாசலுக்கு வந்தாள். நாணி கேட்டாள்:
“நீ எதுக்குடி பிணத்தைச் சுடுற இடத்துக்குப் போய் பார்த்துக்கிட்டு இருக்கே?”
“பார்த்து நின்னா என்ன?”
“பார்த்து நின்னா என்னன்னா கேக்குறே? செத்தவனின் பிணத்தைப் பார்த்துக்கொண்டு நின்னவங்க மேல அது ஏறும்.”
“ஏறி?”
“நெரித்துக் கொல்லும்.”
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நின்றிருந்த பங்கி சொன்னாள் :
“நெரிச்சுக் கொல்லும்னு அப்பனும் சொன்னாரு.”
வீட்டின் தெற்குப் பகுதியில் நின்றிருந்த வேலாயுதன் அழைத்தான்:
“அடியே நாணி?”
நாணி வேலாயுதன் இருக்கும் இடத்திற்கு வந்தாள். தங்கம்மா பங்கியிடம் சொன்னாள் :
“செத்தவங்களோட உயிர் புகையாக மேலே போவும்டி பங்கி. அது பார்த்து நிக்கிறவங்களுக்குள்ளே நுழையிறதெல்லாம் இல்ல.”
“மேலே போனால் எங்கே போகும்? சொர்க்கத்திற்கா, நரகத்திறகா?”
“சிலரோட உயிர் சொர்க்கத்திற்குப் போகும். சிலரோட உயிர் நரகத்திற்குப் போகும்.”
“சொர்க்கத்திற்குப் போகணுமா, நரகத்துக்குப் போகணுமான்னு யார் முடிவு செய்றது? எமன்தானே?”
“இல்லடி... அதைக் கடவுள்தான் முடிவு செய்றாரு. சாகுற மனிதன் புகையாக மாறி கடவுள் முன்னால் போய் நிற்பான். சொர்க்கத்துக்குப் போகணுமா, நரகத்துக்குப் போகணுமான்னு கடவுள் சொல்வாரு.”
“அக்கா, உங்கக்கிட்ட இந்த விஷயங்களை யார் சொன்னது?”
“சொன்னதா? சொன்னது...” தங்கம்மா தலையைக் குனிந்து கொண்டாள்.
“ம்... எனக்குப் புரிஞ்சிடுச்சு... குமாரன் அண்ணன்தானே?” - அவள் அர்த்தத்துடன் புன்னகைத்தாள்.
“குமாரன் அண்ணன் அறிவுள்ள மனிதர். ராமாயணம், பாகவதம் எல்லாவற்றையும் வாசிப்பார்.”
“குமாரன் அண்ணன் உங்களைக் கல்யாணம் பண்ணப் போறாருல்ல அக்கா?”
“அப்படின்னு உன்கிட்ட யார் சொன்னது?”
“யாரும் சொல்ல வேணடாம். எனக்குத் தெரியும்.”
பக்கத்து வீட்டுக்காரி பாரு அங்கே வந்து கேட்டாள்:
“அந்த எரியிற பிணம் யாரோடதுன்னு தெரியுமா?”
“யாரோடது?” - தங்கம்மா கேட்டாள்.
“ராமன் குட்டின்னு கேள்விப்பட்டிருக்கியா? வழிப்பறிக்காரன் ராமன்குட்டி! அந்த ஆளோட பிணம்தான் இப்போ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. வெட்டு, குத்து, வழிப்பறி... இவைதான் அவனோட வேலைகள். கடைசியில என்ன ஆனது? இதோ... எரிஞ்சிக்கிட்டு இருக்கான். புøகாய போய்க்கிட்டு இருக்கான். பாவம் செய்தால்...”
“புண்ணியம் செய்தாலும் கடைசியில் இப்படித்தானே போகணும் பாரு அக்கா? புண்ணியம் செய்தவர்கள் செத்தாலும் நெருப்பை மூட்டி எரிய வைக்கத்தானே செய்வாங்க? அவங்களோட பிணம் எரியாதா? புகையாதா?”
“வித்தியாசம் இருக்குடி தங்கம்மா. என்ன வித்தியாசம்னா... புண்ணியம் செய்தவங்க செத்துட்டா உடனடியாக அவங்களோட ஆன்மா சொர்க்கத்துக்குப் போயிடும். பாவம் செய்தவங்களாக இருந்தால் ஆன்மா பிணத்தோடவே இருக்கும். பிணம் எரியிறப்போ, ஆன்மாவிற்கு வேதனை உண்டாகும்.”
நாணி அருகில் வந்து பாருவிடம் சொன்னாள்:
“நான் அங்கே வரணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தப்போ, நீ இங்கே வந்துட்டே.”
“ஏன் நாணி அக்கா?”
“இன்னைக்கு பொழுது விடிஞ்ச பிறகு, இங்கே நெருப்புப் புகை உண்டாகல. நேற்று ராத்திரி சேம்பு அவிய வைத்து சாப்பிட்டுப் படுத்தது.... இன்னும் ரெண்டு நாழி அரிசி நீ எனக்குத் தா. முன்னால் வாங்கியதையும் சேர்த்து ஒண்ணா நான் தந்திடுறேன்.”
“வேலாயுதன் அண்ணன் இப்படி வேலை எதுவும் செய்யாமலே இருந்தால், நீங்க எப்படி வாழ்வீங்க?”
“தொழுவத்துல கட்ட வேண்டாம். பட்டினி கிடந்து சாகலாம்”- தங்கம்மாதான் அப்படிச் சொன்னாள்.
பாரு சிரித்துக்கொண்டே சொன்னாள்:
“யானையாக இருந்தது அந்தக் காலத்துலதானே நாணி அக்கா? இப்போ எறும்புதானே.... எறும்பு. எறும்பைப்போல வாழணும். இங்கே சுற்றி இருப்பவர்களெல்லாம் கூலி வேலை செய்து வாழ்பவர்கள்தானே? வேலாயுதன் அண்ணன் கூலி வேலைக்குப் போறதுனால என்ன குறைச்சல் வந்துடப் போகுது?”
“பழக்கமில்லைடி பாரு... பழக்கமில்ல.”
“கூலி வேலை செய்பவர்களெல்லாம் பழகிக்கிட்டா செய்றாங்க? வேலை செய்றப்போ பழக்கமாயிடும். அப்படித்தான் எல்லாரும்.”
“அப்படியென்றால் நான் உட்கிட்ட மனம் திறந்து சொல்லலாம். நான் ஒவ்வொரு நாளும் சொல்வேன் - வேலைக்குப் போங்க. வேலைக்குப் போங்கன்னு. நானும் கயிறு பிரிக்கும் வேலைக்குப் போறேன்னு சொல்லுவேன். சம்மதிக்க மாட்டாருடி.... சம்மதிக்க மாட்டாரு. யானை மெலிந்தால் தொழுவத்துல கட்டிடுவாங்களான்னு கேட்டுக் கொண்டிருப்பாரு.”
“சகோதரி எதுவும் தர்றதில்லையா?”
“சகோதரி கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள். இப்போ கொஞ்ச நாட்களாக தர்றது இல்லை. எப்போதும் கூட பிறந்த ஆளுக்கும் பிள்ளைகளுக்கும் செலவுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா பாரு?”
“வேலிக்கு மேலே எட்டிப் பார்க்குறது யாருடா?” - வேலாயுதனின் கேள்விதான் அது.
எல்லாரும் சுற்றிலும் பார்த்தார்கள்.
“நான் தினமும் இதைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். அவன் என் கையால வாங்கப் போறான்” - வேலாயுதன் வடக்குப் பக்கமாக ஓடினான்.
வடக்குப் பக்கமிருந்த வேலிக்கு மேலே தெரிந்த தலை மறைந்தது.
“வேலிக்கு மேலே பார்த்தது யாரு நாணி அக்கா?” - பாரு கேட்டாள்.
தங்கம்மா அங்கேயே நின்றிருந்தாள்.
நாணி பாருவின் கேள்விக்கு பதில் கூறவில்லை. பங்கி சொன்னாள்:
“நான் சொல்றேன். குமாரன் அண்ணன்தான் பார்த்தாரு. அதற்கு அப்பன் எதற்கு சண்டை போட வேண்டும்?”
“குஞ்ஞாண்டியோட மகன் குமாரனா? அவன் ஒரு நல்ல பையனாச்சே நாணி அக்கா! தங்கம்மாவுக்குப் பொருத்தமான பையன் அவன்.”
“அவனும் தங்கம்மாவும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்கடி. பாரு. அப்பனுக்கு அவனைப் பார்த்த உடனே வெறி வந்திடும்.”
“அது ஏன்?”
“அவன் கூலி வேலை பார்க்குறவனாம்.”
“பிறகு... வேலை செய்யாமல் பட்டினி கிடக்குறவனா இருக்கணுமா?”
“பெரிய பணக்காரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை.”