தங்கம்மா - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
ஒருநாள் வேலாயுதன் நகரத்திற்குப் போனான். பல இடங்களிலும் அலைந்து திரிந்த அவன் இறுதியில் ஒரு வெற்றிலைப் பாக்கு கடைக்கு முன்னால் போய் உட்கார்ந்தான். அங்கு வேறு இரண்டு மூன்று ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். கடைக்காரனும் அவர்களும் பணம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வேலாயுதன் பெஞ்சில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.
இப்போது அங்கு வேறொரு மனிதன் வந்தான். கறுத்து மெலிந்த ஒரு ஆள். ஆனால் அவன் சில்க் சட்டையும் ஜரிகை போட்ட வேட்டியும் அணிந்திருந்தான். அவன் ஒரு பாக்கெட் சிகரெட்டும் ஒரு தீப்பெட்டியும் வாங்கி, பாக்கெட்டிற்குள்ளிருந்து சில நோட்டுகளை எடுத்தான். ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கடைக்காரனின் கையில் கொடுத்துவிட்டு மீதியைத் தரும்படி சொன்னான். கடைக்காரன் மீதியைத் தந்தான். வந்த மனிதன் பாக்கியை வாங்கிவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு அங்கிருந்து கிளம்பினான்.
கடையில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒரு மனிதன் கடைக்காரனிடம் கேட்டான்:
“அந்த ஆளைத் தெரியுமா?”
“தெரியாது. யார் அது?”
“அதுவா? ஊர்வசி மாதவியோட கணவன்.”
“கணவனா? கூட்டிக் கொடுப்பவன்னு சொல்லு” - இன்னொரு மனிதன் சொன்னான்.
“முதலில் மாதவியின் கணவனாக மட்டும்தான் இருந்தான். அப்போ பிச்சை எடுக்குறதுதான் வேலை. அதற்குப் பிறகு கூட்டிக் கொடுக்குறவனா ஆயிட்டான். அப்போ பணக்காரனா ஆயாச்சு. பாக்கெட்ல இருந்து நோட்டுகளை எடுக்குறதைப் பார்த்தேல்ல?”
மூன்றாவது ஆள் சொன்னான்:
“அப்போ இந்த ஆளு தாடி வளர்த்துக் கொண்டு, கிழிஞ்ச சட்டையைப் போட்டுக் கொண்டு கச்சேரி சந்திப்பில் நின்று கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கேன். சில நேரங்களில் குட்டன் நாயரின் தேநீர்க் கடையில் போய் உட்கார்ந்திருப்பான். சில வேளைகளில் குட்டன் நாயர் ஒரு தேநீர் தருவார். அப்படிப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிஞ்ச ஆளை இப்போ பார்த்தப்போ எனக்கே அடையாளம் தெரியல...”
“பார்க்குறதுக்கு அழகா இருக்குற ஒரு பெண் கையில இருந்தால்...” - கடைக்காரன் முழுமையாகக் கூறாமல் சிரித்தான்.
“அப்படிச் சொல்லு... அழகு இருந்தால் எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம்” - முதலாவது ஆள் சொன்னான்.
“அழகு இருந்தால் மட்டும் போதாதுடா. அழகை விற்பனை செய்றதுக்கும் தெரிஞ்சிருக்கணும்.”
“வாழ்றதுக்காக எதை வேணும்னாலும் விற்கலாம்னு நீ சொல்றியா? - மூன்றாவது ஆள் கேட்டான.
“முதல்ல வாழணும். அதற்குப் பிறகுதான் மற்ற எல்லா விஷயங்களும். பசியால சாகுற சூழ்நிலை வர்றப்போ கையில இருக்குறது எதுவாக இருந்தாலும் எடுத்து விற்பேன்டா. வாழணும்ன்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும்.”
வேலாயுதன் எழுந்து நடந்தான். ஏதோ ஒரு வெளிச்சம் கிடைத்ததைப்போல அவனுடைய முகம் பிரகாசமாக ஆனது.
இரவு உணவு சாப்பிட்டு முடித்து தங்கம்மாவும் பங்கியும் படுத்தார்கள். வேலாயுதன் வராந்தாவில் உட்கார்ந்திருந்தான். நாணி கேட்டாள் :
“படுக்கலையா?”
“கொஞ்ச நேரம் ஆகட்டும். நீ இங்கே வந்து உட்காரு.”
“வௌக்குல மண்ணெண்ணெய் கொஞ்சம்தான் இருக்கு” - நாணி அருகில் வந்து உட்கார்ந்தாள்.
“அரிசியும் சாமான்களும் கொண்டு வந்தது எங்கே இருந்துன்னு உனக்குத் தெரியுமா?”
“எங்கேயிருந்துன்னு நான் கேட்டதற்கு பதிலே சொல்லலையே! பிறகு சொல்றேன்னுல்ல சொன்னீங்க.”
“அப்படின்னா இப்போ சொல்றேன். சங்கரன் முதலாளியோட கடையில இருந்து...”
“கடனுக்கா?”
“கடனுக்கு இல்லைடி... அந்த ஆளு கொடுத்து விட்டிருக்காரு.”
“அந்த ஆளு யாருக்கும் எதையும் வெறுமனே கொடுக்குறவர் இல்லையே!”
“முதலாளியின் கணக்குப்பிள்ளை இங்கே வருவான். அவன் சொல்லுவான்.”
வெளியே நின்றிருந்த ஒரு மனிதர் வராந்தாவிற்கு வந்தார். வேலாயுதன் சந்தோஷமான குரலில் சொன்னான்:
“நாணு, உன்னைப் பற்றி இப்போத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதற்குள் நீ வந்துட்டே உட்காரு நாணு” - வேலாயுதன் ஒரு பலகையை நீட்டினான்.
நாணு உட்கார்ந்தான். கையிலிருந்த பொட்டலத்தை வேலாயுதனுக்கு முன்னால் வைத்தான். வேலாயுதன் கேட்டான் :
“இது என்ன?”
“கொஞ்சம் வெற்றிலையும் புகையிலையும்.”
வேலாயுதன் பொட்டலத்தை எடுத்து நாணியின் கையில் கொடுத்தான். நாணி கேட்டாள்:
“முதலாளி நல்ல இருக்காருல்ல?”
“நல்லா இருக்காரான்னு கேட்டால்... நல்லா இருக்காருன்னு சொல்லணும்... இல்லைன்னும் சொல்லணும்.”
“முதலாளிக்கு என்ன குறைச்சல்? பணத்தை வாரி வாரி சேர்க்குறார்ல?”
“பணத்தை வாரி வாரி சேர்த்தால் சந்தோஷம் கிடைச்சிடுமா?”
“பிறகு என்ன வேண்டும்? மனைவி இருக்காங்க. ஒரு குழந்தையும் இருக்கு.”
“மனைவியைப் பார்த்திருக்கீங்களா?”
“நான் பார்த்தது இல்ல.”
“நீங்க ஒரு தடவை பார்க்கணும். அப்போத்தான் சங்கரன் முதலாளியின் சுகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ”
“அழகா இருப்பாங்கள்ல? கிட்டன் முதலாளியின் மகள் தானே?”
“முதலாளியின் மகளாகிவிட்டால் அழகா இருப்பாங்கன்னு சொல்லிட முடியுமா? இரண்டு காதுகளையும் மோதிக்கொண்டு இருக்குற வாய்.... இரண்டு வரிசைப் பற்களும் வெளியே நீட்டிக்கிட்டு இருக்கும். கடுகு அளவுக்கு இருக்குற கண்கள்... தலைமுடியைக் கட்டி வச்சால், ஒரு வெங்காயம் அளவுக்கு இருக்கும்.”
“அப்படின்னா பிறகு எதுக்கு சங்கரன் முதலாளி கல்யாணம் பண்ணினாரு.”
“கல்யாணம் பண்ணினதா? கல்யாணன் பண்ணினதுனாலதான் சங்கரன், சங்கரன் முதலாளியா ஆனாரு. நாலு ராட்டு இருந்தன. அவற்றில் கயிறு பிரித்து விற்று வாழறப்போத்தான் கல்யாண விஷயம் அவரைத் தேடி வந்தது. பத்தாயிரம் ரூபாய்களும் ஒரு ஏக்கர் தென்னந்தோப்பும் கிடைத்தன. கிடைக்குமா? யாராவது கொடுப்பாங்களா?”
“கிட்டன் முதலாளிகிட்டத்தான் இருக்கே! பிறகு கொடுத்தால்தான் என்ன?”
“மற்ற இரண்டு பொண்ணுகளை ஐயாயிரம் ரூபாய் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. இந்தப் பொண்ணு யாருக்கும் தேவைப்படாமல் இருந்ததால் இந்தத் தொகை கிடைச்சது.”
“அதற்கென்ன? இப்போ சங்கரன் முதலாளியைவிட பெரிய முதலாளி யார் இருக்கா?”
“பணம் மட்டுமே போதுமாடீ நாணி?” - வேலாயுதன் ஒரு கேள்வி கேட்டான்.
“அதற்காக இப்போ என்ன செய்ய முடியும்?”
“முதலாளிக்கு ஒரு யோசனை...” - நாணு சொன்னான்.
“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னா?”
“அதேதான். அதற்காகத்தான் நான் இப்போ இங்கே வந்திருக்குறதே...”