தங்கம்மா - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
எல்லாவற்றையும் இழந்து வேலாயுதனும் குடும்பமும் அங்கிருந்து வேறு இடத்திற்கு இருப்பிடத்தை மாற்றியபோது குமாரனும் தங்கம்மாவும் அழுதார்கள். சுடுகாட்டிற்கு அருகில் இருந்த புதிய இருப்பிடத்திற்கு குமாரன் தங்கம்மாவைப் பார்ப்பதற்காக தினமும் ஒரு தடவை வருவான். இருப்பிடத்தை மாற்றி சில நாட்கள் ஆனபோது, அந்தக் குடும்பம் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது. அந்த விஷயத்தைத் தெரிந்திருந்த காரணத்தால், குமாரன் தான் வரும்போது தின்பதற்கு எதையாவது கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் தங்கம்மாவிற்குத் தருவான்.
சில நாட்கள் கடந்த பிறகு குமாரன் இசையைக் கற்பதற்காக நகரத்திற்குப்போக ஆரம்பித்தான். சுடுகாட்டிற்கு அருகில் இருந்த வழியேதான் அவன் நகரத்திற்குப் போயாக வேண்டும். போகும் போதும் வரும்போதும் குமாரன் தங்கம்மாவின் வீட்டிற்குச் செல்வான்.
காலப்போக்கில் வேலாயுதனுக்கு அந்த அன்பான உறவில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. தங்கம்மாவிற்கு பதினேழு வயது முடிந்தது. இனிமேலும் அவளும் குமாரனும் அந்த மாதிரி அருகருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அனுமதிக்கலாமா? குமாரன் பாட்டு பாடுவான். தங்கம்மா அந்தப் பாட்டில் தன்னை மறந்து ஈடுபட்டிருப்பாள். அது அப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதை வேலாயுதன் விரும்பவில்லை. ஒருநாள் வேலாயுதன் கறாரான குரலில் சொன்னான்:
“டேய் குமாரா, நீ பாட்டு பாடி அவளை மயக்கப் பார்க்குறியா? நடக்காதுடா... அந்த விஷயம் இங்கே நடக்காது. எழுந்து போ. இனிமேல் நீ இங்கே வரக்கூடாது.”
குமாரன் எழுந்து போய்விட்டான். தங்கம்மா அதிர்ச்சியடைந்து உட்கார்ந்திருந்தாள். நாணி சொன்னாள்:
“அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வளர்ந்தவர்கள்தானே? அவனிடம் அப்படிச் சொல்லலாமா?”
“விளையாடக்கூடிய வயசு முடிஞ்சிடுச்சேடீ! இனிமேல் விளையாடினால் நிலைமை மோசமாகிவிடும். தெரியுதா?”
“அவன் அவளை...”
“சொல்லு... சொல்லுடீ... அவன் அவளை என்ன செய்யப் போறான்? கல்யாணம் பண்ணப் போறானா?”
“கல்யாணம் பண்ணினா என்ன?”
“மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் பண்ணுறவனோட மகனுக்கு என்னுடைய மகளைக் கொடுக்கணுமாடீ? உனக்கு அது சம்மதமாடீ?” - வேலாயுதன் கோபத்தில் அதிர்ந்தான்.
“பிறகு யாருக்குக் கொடுப்பீங்க? பெரிய பணக்காரன் வருவானா? மகளைக் கொண்டு போறதுக்கு...”
“வருவான்டீ.. வருவான். அவளைப் பார்த்தால் பெரிய பணக்காரன் வருவான்.”
தன்னுடைய மகளின் அழகின்மீது அந்த அளவிற்கு வேலாயுதன் மதிப்பு வைத்திருந்தான். அவள் வாசலில் நிற்கும்போது, பாதையில் செல்பவர்கள் அவளைப் பார்த்துக் கொண்டே செல்வதை வேலாயுதன் பார்ப்பதுண்டு. யாராவது ஒரு பணக்காரன் அவள்மீது ஆசை வைத்து, திருமணம் செய்வதற்காக வருவான் என்று அவன் உறுதியாக எதிர் பார்த்தான். நாணி வேலாயுதனிடம் ரகசியமாகச் சொன்னாள்:
“அவளுக்கு அவனே போதுமாம்.”
“அவள் அவன்கூட போனால் பட்டினி கிடந்து செத்துடுவா... அவன் பாட்டு பாடிக்கிட்டுத் திரிஞ்சா அவளுடைய பசி அடங்கிடுமா?”
“அவள் அவன்கூட போய் விட்டாள்னா, நீங்க என்ன பண்ணுவீங்க?”
“நான் அவளையும் கொல்வேன். அவனையும் கொல்வேன்.”
குமாரன் தங்கம்மாவின் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்ட பிறகு சாயங்காலம் ஆகிவிட்டால் தங்கம்மா வடக்கு பக்க முற்றத்தில் வடக்கு திசையைப் பார்த்துக் கொண்டு தினமும் நின்றிருப்பாள். அந்த வடக்குப் பக்க வேலியின் மேற்பகுதி வழியாகத் தங்கம்மாவைப் பார்ப்பான். அந்த வகையில் அவர்கள் தினமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள்.
“மகளே, இந்த ஊரிலேயே சங்கரன் முதலாளிதான் பெரிய பணக்காரர்” - நாணி தங்கம்மாவிடம் தந்திரம் கலந்த குரலில் சொன்னாள்.
“ம்...” தங்கம்மா அலட்சியமாக முனக மட்டும் செய்தாள்.
“அவர் இன்னும் ஒண்ணோ ரெண்டோ கல்யாணம் கூட பண்ணிக்கட்டும்.”
“அவருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை.”
“அவர் ஆசைப்பட்டுக்கிட்டே இருக்கட்டும்” - தங்கம்மா எழுந்து போக முயற்சித்தாள்.
நாணி அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள் :
“மகளே, உட்காரு. நான் சொல்றதை முழுசா கேளு” – தங்கம்மாவை பலத்தைப் பயன்படுத்தி உட்கார வைத்தாள்.
“நீ குமாரன்கூட போனால்...”
“போனால் என்ன?”
“பட்டினி கிடந்து செத்துடுவே. அவன் பாட்டு பாடினால் உன் வயிறு நிறைஞ்சிடுமா?”
“நான் பட்டினி கிடந்துக்குறேன். இப்போக்கூட எப்போதாவது தானே கஞ்சி குடிக்கிறோம்?”
“நம்முடைய பட்டினியும் கஷ்டங்களும் தீர்ந்திடும் மகளே. நீ அவனுடைய பாட்டைக் கேட்டு மயங்காமல் நான் சொல்றபடி கேளு மகளே.”
“அம்மா, குமாரன் அண்ணனின்...”
“அவனை மறந்துடு மகளே... மறந்துடு...”
தங்கம்மா அங்கிருந்து எழுந்து போனாள்.
அன்று சாயங்காலம் தங்கம்மா வடக்குப் பக்கத்திலிருந்த முற்றத்தில் வடக்கு திசையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். வடக்குப் பக்க வேலிக்கு மேலே குமாரனின் தலை தெரிவதை அவள் பார்த்தாள். குமாரன் கையைக் காட்டி தங்கம்மாவை அழைத்தான். தங்கம்மா வேலியின் அருகில் ஓடிச் சென்றாள். குமாரன் சொன்னான்:
“இனி நாம ஒருவரையொருவர் பார்க்க முடியாது.”
“ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“இனி நாம இன்னொரு உலகத்தில் சந்திப்போம்.”
“என்னடா அங்கே? அங்கே யாருடீ?” வேலாயுதன் உரத்த குரலில் கத்தியவாறு ஓடி வந்து கொண்டிருந்தான். குமாரனின் தலை மறைந்தது. வேலாயுதன் தங்கம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
“நீ இங்கே யார்கிட்டடீ பேசிக்கிட்டு இருந்தே? உன்னை நான் அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்ததுனாலதானடீ நீ இப்படி உன் விருப்பப்படி நடந்துக்கிட்டு இருக்கே! போ... வீட்டுக்குப் போ!” - தங்கம்மாவைப் பிடித்து அவன் தள்ளினான்.
தங்கம்மா வீட்டுக்குள் சென்று அறைக்குள் நுழைந்து படுத்துக் கொண்டாள். பங்கி அவளுக்கு அருகில் சென்று கேட்டாள்:
“அக்கா, நீங்க அங்கே போய் நின்னுக்கிட்டு குமாரன் அண்ணனிடம் ஏன் பேசினீங்க?”
“இல்லடீ... நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கப் போறது இல்ல. பேசப்போறது இல்ல...” - தங்கம்மா தேம்பித் தேம்பி அழுதாள்.
நாணி வேலாயுதனின் அருகில் சென்று கேட்டாள்:
“அவளை அடிச்சீங்களா?”
“நான் அவளை அடிக்கலடீ... லேசா தள்ளினேன். அவ்வளவுதான்...”
“அவன் அங்கே நின்று கொண்டு கையைக் காட்டி அழைச்சதுனாலதான் அவள் போனாள்.”
“அவன் அழைச்சான்னா இவள் போகலாமான்னுதான் நான் கேக்கறேன். நாம இவளை அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவுதான்டீ இதெல்லாம்... அடிச்சு வளர்த்திருந்தா போட்ட கோட்டுல நின்னுருப்பா.”