சாமக்கோழி - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6855
10
கருணை மனுவுடன் சுமதி இப்போது எதற்காக ஓடிக் கொண்டிருக்கிறாள். அவள் எனக்கு யார்? மனைவி அல்ல என்ற விஷயம் எனக்கும் அவளுக்கும் நன்றாகத் தெரியும்.
அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று குட்டிக் குறுப்பு கூறுகிறார். மனுவில் என் தந்தை ராக்கியும் என் தாய் கத்ரீனாவும் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்.
ஃபைல் ஹோம் செக்ரட்டரிக்கு முன்னால் இருக்கிறது என்று சிறை சூப்பிரெண்ட் கூறுகிறார். என் வயதைக் கணக்கில் எடுத்து, அவர் எனக்குச் சாதகமாக தன் கருத்தை எழுதுவார் என்கிறார் அவர். கவர்னர் இரக்க குணம் கொண்டவர் என்றும், அவர் மரண தண்டனையைக் கட்டாயம் ரத்து செய்துவிடுவார் என்றும் சூப்ரெண்ட் கோமஸ் உறுதியாக நம்புகிறார்.
மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாறும்.
எனக்கு ஏன் இந்த தண்டனைக் குறைப்பு?
இனியும் பல வருடங்கள் இந்தச் சிறை அறைக்குள் ஆந்தையாக வாழ்வதற்கா?
பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் என்னைப் பார்க்க என் தந்தையும்- தாயும் ஏன் வரவில்லை?
பப்பூஸும் மூஸாவும் வரவில்லை.
அவர்கள் சுங்க அதிகாரிகள் அல்லது போலீஸ்காரர்களிடம் பிடிபட்டிருப்பார்களோ?
அபுவும் எலியாஸும் வரவில்லை.
சுமதி மட்டும் வந்தாள். எனினும், நான் அவளைப் பார்க்க மறுத்துவிட்டேன்.
நான் என்னுடனே நாடகம் ஆடுகிறேனா? நான் அவளைக் காதலித்தவன்தானே? இப்போதும் நான் அவளைக் காதலிப்பது உண்மைதானே?
அன்று திருமணத்தைப் பற்றி அவள் வற்புறுத்திக் கூறியதற்கு காரணம் என்னவாக இருக்கும்? எனக்கு அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் எனக்கு எதிராக சாட்சி சொல்லக் காரணம் என்ன?
இன்று டாக்டர் நாயர் வந்தார். அவர் இப்போதும் நல்ல முடிவையே எதிர்பார்க்கிறார். என்னுடைய பிணம் கல்லூரியின் அறுத்துப் பார்க்கும் மேஜைக்கு வரவே வராது...
இன்று பாதிரியார் பீட்டரும் வந்திருந்தார்.
ஒரு சிறு குழந்தையைக் கோபிக்கிற மாதிரி அவர் என்னிடம் சொன்னார்: ‘‘அன்பு செலுத்துபவர்கள் தேடி வர்றப்போ, அவர்களை நிராகரிக்கக் கூடாது. பொறுப்புகளில் இருந்து பின்வாங்கக் கூடாது.’’
அவர் கூற நினைத்தது என்ன?
இன்று பார்வையாளர்கள் இங்கு வரலாம்.
யாரையும் நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் ஆச்சரியம்! எலியாஸ் வந்து மன்னிப்பு கேட்டார். ‘‘சுமதியைப் பற்றி நான்தான் தப்பா நினைச்சிட்டேன். அதன் விளைவு இப்படி ஆகும் என்று யார் நினைச்சது? நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பத்மாவும் நானும் தவறாக நினைத்ததை சரி செய்ய முயன்றோம். மன்னிச்சிக்கோ ஜோசப். சுமதியும் நீயும் ஒண்ணுசேர வேண்டியவங்க. கடவுள் என்று ஒருவர் இருந்தால்... உங்களைக் காப்பாற்றுவார்!’’
எலியாஸ் சென்றவுடன், குட்டிக் குறுப்பு வந்தார். ‘‘ஜோசப், இன்னும் ரெண்டு ஆட்கள் வந்திருக்காங்க. பார்வையாளர்கள் நேரம் முடிந்துவிட்டாலும் நீ அவங்ககூட பேசலாம்.’’
என் தந்தை ராக்கியையும் சுமதியையும் பார்த்ததும் என்னுடைய மனம் உடைந்து நொறுங்கிய கண்ணாடியைப் போல் ஆகிவிட்டதா? பலவிதப்பட்ட உணர்ச்சிகளால் உந்தப்பட்ட களமாகிவிட்டதா அது? கண்களில் ஒருவகை எரிச்சல் உண்டானதா?
கல் எறிவதைப்போல என் தந்தை வார்த்தைகளை எறிந்தார். - சுமதியைத் தொட்டுக்கொண்டே.
‘‘ஜோசப் உனக்கு இருப்பது வளர்ப்புத் தந்தைதான். ஆனால், உன் மகனுக்கு அப்பன் வேண்டாமா?’’
எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
இரும்புக் கம்பிகளுக்கு நடுவில் கையை நீட்டி நான் சுமதியைத் தொட்டேன்.
எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அவளுக்கும்தான்.
இறுதியில் நான் சொன்னேன்.
‘‘சுமதி, நாளைக்கு நான் உன்னைத் திருமணம் செய்றேன்.’’
அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்: ‘‘சத்தியமா?’’
‘‘சத்தியமா...’’ - நான் மெதுவான குரலில் சொன்னேன்.
இப்போது இரவுநேரம்.
நான் இப்போது சாமக்கோழி அல்ல.
தன்னம்பிக்கை கொண்ட - பல நிறங்களைக் கொண்ட பறவை.
கருணை மனு ஏற்றுக் கொள்ளப் படட்டும். நிராகரிக்கப்படட்டும். எது வேண்டுமானாலும் நடக்கட்டும்.
இங்கு என்மீது மட்டுமல்ல. சுமதி மீதும் எல்லோருக்கும் இரக்கம் இருக்கிறது. சிறை சூப்ரெண்ட் கோமஸும் சங்கு வண்ணனும் குட்டிக் குறுப்பும் ஹமீதும் உதவியாக இருப்பார்கள். உதவிப் பதிவாளர் இங்கு வருவார். சுமதியும் நானும் கையெழுத்திடுவோம்.
வாழ்க்கை...
அது இன்னும் முன்னோக்கி நகரும்.
என் மூலமாக... என்னுடைய மகன் மூலமாக...
யாருக்குத் தெரியும்? யார் பார்த்தார்கள்?
நான் எறிந்த விதைகள் பாத்தியில் பூத்து நின்று கொண்டிருக்கலாம்.
ஹமீத்திடம் கேட்க வேண்டும்.