மீனவனும் அவன் ஆன்மாவும் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7078
மீனவன் அந்தச் செயலைச் செய்ததும், மற்ற பெண் மந்திரவாதிகள் பயந்து போய், கழுகுகளைப் போல உரத்த குரலில் கத்திக்கொண்டு பறந்து செல்ல ஆரம்பித்தார்கள். அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த வெளிறிய முகம் கொண்ட மனிதன் வேதனையால் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் ஒரு சிறிய மரக் கட்டையின்மீது ஏறி நின்று சீட்டி அடித்தவுடன், வெள்ளியைப்போல மின்னிக்கொண்டிருந்த ஒரு பருந்து அங்கு வந்தது. அவன் அதன் மீதேறி மிகுந்த கவலையுடன் மீனவனையே சிறிது நேரம் பார்த்தான்.
சிவந்த நிறத்தில் தலைமுடியைக் கொண்டிருந்த பெண் மந்திரவாதியும் பறந்து செல்லத் தயாரானபோது, மீனவன் அவள் கையை இறுகப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.
“என்னை விடு... நான் போக வேண்டும்.” அவள் கெஞ்சினாள். “நீ செய்யக் கூடாததைச் செய்தாய். கூறக் கூடாததைக் கூறினாய்.”
“இல்லை...” அவன் சொன்னான்: “எனக்கு நீ அந்த ரகசியத்தைக் கூறவில்லையென்றால், நான் உன்னைப் போகவிடமாட்டேன்.”
“என்ன ரகசியம்?” நுரையும் எச்சிலும் ஒழுகிக் கொண்டிருந்த தன்னுடைய உதடுகளைக் கடித்துக் கொண்டும், ஒரு காட்டுப் பூனையைப்போல அவனுடைய கையிலிருந்து போராடிக் கொண்டும் அவள் கேட்டாள்.
“அது உனக்குத் தெரியும்...”
அவளுடைய அடர்த்தியான பச்சை நிறத்திலிருந்த கண்கள், நீரால் நிறைந்து விட்டன. அவள் சொன்னாள்: “என்னிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்... அந்த ஒன்றே ஒன்றை மட்டும் தவிர...”
மீனவன் குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே, மேலும் சற்று பலமாக அவளைப் பிடித்து நிறுத்தினான்.
தப்பித்துச் செல்வதற்கு வேறு எந்தவொரு வழியும் இல்லையென்ற நிலைமை உண்டானதும், அவனுக்கு முன்னால் அவள் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். “நான் ஒரு அழகான பெண் அல்லவா? கடலின் பிள்ளைகளைப்போல நல்லவள் அல்லவா? நீலநிறக் கடலில் வாழும் எந்தவொரு உயிரினத்தைப்போலவும், பிரகாசமான தோற்றத்துடன் இருப்பவள் அல்லவா?” தொடர்ந்து அவனைப் புகழ்ந்து கூறி, அவனை வீழ்த்துவதற்கான முயற்சிகளைச் செய்தாள். அவள் தன்னுடைய முகத்தை அவனுக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்தாள்.
ஆனால், தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி அவளைப் பின்னோக்கித் தள்ளியபடியே அவன் உரத்த குரலில் சத்தமிட்டான்:
“எனக்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லையென்றால், கபடத்தனங்கள் நிறைந்த பெண் மந்திரவாதியான உங்களை நான் வெட்டி துண்டு துண்டாக்கி விடுவேன்.”
யூதச் செடியின் மொட்டைப்போல வெளிறிப் போய் காணப்பட்ட அவள் அதிர்ச்சியடைந்து நடுங்கிக்கொண்டே முணுமுணுத்தாள்: “அப்படியென்றால்... இது உன்னுடைய ஆன்மா... என்னுடையதல்ல... அதைக் கொண்டுபோய் உனக்கு விருப்பமுள்ளபடி செய்துகொள்...” அந்தப் பெண் மந்திரவாதி தன்னுடைய பைக்குள்ளிருந்து, கைப்பிடியில் பாம்பின் தோல் சுற்றப்பட்டிருந்த கத்தியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“இதன் பிரயோஜனம் என்ன?” அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
அவள் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அப்போது அவளுடைய முகத்தில் அச்சத்தின் நிழல் பரவிக் காணப்பட்டது. நெற்றியில் விழுந்து கிடந்த தலைமுடியை பின்னோக்கி இழுத்து விட்டுக்கொண்டே அவள் சொன்னாள்: “உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- மனிதர்கள் நிழல் என்று குறிப்பிடுவது உடலின் நிழலை அல்ல; அது ஆன்மாவின் சரீரம். நீ கடற்கரைக்குச் சென்று, நிலவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நில்... பிறகு உன்னுடைய பாதத்திலிருந்து அந்த நிழலை- உன்னுடைய ஆன்மாவை வெட்டி நீக்கு... அந்த வகையில் நீ ஆன்மாவை விலக்கிவிட முடியும்...”
இளைஞனான மீனவன் பரபரப்படைந்து விட்டான். “இது உண்மையா?”
அவன் பெண் மந்திரவாதியின்மீது இருந்த தன் பிடியை விட்டுவிட்டு மலையின் எல்லைக்குச் சென்று, கத்தியைத் தன்னுடைய இடுப்பில் செருகிக் கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தான்.
அப்போது அவனுக்குள் இருந்த ஆன்மா வெளியே வந்து கேட்டது. “நில்... நான் இவ்வளவு காலம் உன்னுடன் சேர்ந்து, உன்னுடைய பணியாளாக இருந்திருக்கிறேன். என்னை வெளியே விட்டெறியும் அளவிற்கு நான் என்ன துரோகச் செயலைச் செய்து விட்டேன்?”
மீனவன் சிரித்தான்: “நீ எனக்கு எந்தவொரு துரோகத்தையும் செய்யவில்லை. ஆனால், எனக்கு நீ வேண்டாம்... அந்த உலகம் மிகவும் பெரியது... விசாலமானது. அங்கு சொர்க்கம், நரகம் இருக்கிறது. இவை இரண்டுக்குமிடையே உள்ள தீவும் இருக்கிறது. உனக்கு விருப்பப்படும் ஏதாவதொரு இடத்திற்கு நீ செல்லலாம். ஆனால், என்னைத் தொல்லைப்படுத்த வரவேண்டாம். என்னை என்னுடைய காதலி அழைக்கிறாள். நான் செல்கிறேன்...”
மீனவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் கடுமையாக இருந்தாலும், அவன் தன்னுடைய வாதத்தில் பாறையைப்போல உறுதியாக நின்றான். இறுதியில் அவர்கள் கீழே, கடற்கரையை அடைந்தார்கள்.
அங்கு, வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட கிரேக்க சிலையைப்போல நிலவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அவன் நின்றான். முன்னால் நிழலும் ஆன்மாவின் சரீரமும், பின்னால் தேன் நிறத்தைக் கொண்ட சூழ்நிலையில் நிலவும்...
“நீ என்னை வெளியேற்றியே ஆவது என்றால், இதயத்தையும் சேர்த்துக் கொடுத்துவிட்டுச் செல். குரூரம் நிறைந்த இந்த உலகத்தில் இதயமே இல்லாமல் என்னை விட்டெறிந்து விடாதே.” ஆன்மா மீனவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
“இதயத்தைக் கொடுத்து விட்டால், நான் எப்படிக் காதலிப்பேன்? இல்லை... அது முடியாது...” தலையை ஆட்டிக் கொண்டே மீனவன் சொன்னான்:
“என்னுடைய இதயம் என் காதலிக்குச் சொந்தமானது. அதைத் தர முடியாது...”
“அப்படியென்றால், நான் யாரையும் காதலிக்க வேண்டாமா?” ஆன்மா கேட்டது.
“இங்கேயிருந்து நகர்ந்து செல். நான் உன்னைப் பார்க்கவே தேவையில்லை. சீக்கிரமாகப் போ...” மீனவன் உரத்த குரலில் கத்தியவாறு பாம்பின் தோல் சுற்றப்பட்டிருந்த கத்தியை வெளியே எடுத்து கால்பகுதியிலிருந்த நிழலை வெட்டி நீக்கினான். அவனைப்போலவே இருந்த நிழல் எழுந்து நின்று, மீனவனையே பார்த்தது.
அவனோ சிறிது நிம்மதியுடன் பின்னால் நகர்ந்து நின்றுகொண்டு, கத்தியைத் திரும்பவும் உறைக்குள் போட்டான். “இங்கேயிருந்து சீக்கிரமாகப் போ. இனி உன் முகத்தைப் பார்க்கவேண்டிய நிலைமை வராமல் இருக்கட்டும்...” அவன் ஆன்மாவிடம் சொன்னான்.
“இல்லை... நாம் இனிமேலும் பார்த்தேதான் ஆகவேண்டும்...” ஆன்மா கூறியது. மிகவும் இனிமையான குரலில், உதடுகளை அசைக்காமலேயே இந்த வார்த்தைகளை அது உச்சரித்தது.
“எப்படி பார்ப்போம் என்கிறாய்? நீ எனக்குப் பின்னால் கடலின் ஆழத்திற்குள் வருவாயா?” மீனவன் கேட்டான்.
“வருடத்திற்கு ஒருமுறை நான் இங்கு வந்து உன்னை அழைப்பேன்.” ஆன்மா கூறியது: “உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- நான்தான் உனக்குத் தேவைப்படுவேன். எனக்கு நீ தேவைப்பட மாட்டாய்.”