மீனவனும் அவன் ஆன்மாவும் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7078
“ஆனால், என்னுடைய ஆன்மாவை என்னிடமிருந்து அகற்றுவது எப்படி என்பதை எனக்குக் கூறவேண்டும். அதைக் கூறுவதாக சத்தியம் செய்து தர முடியுமா?” அவன் கேட்டான். அவள் சூரிய வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து நின்றாள். அவளுடைய சிவப்பு நிறத் தலைமுடிகளைப் பறக்கச் செய்து கொண்டு காற்று கடந்து சென்றது.
“ஆட்டின் குளம்புகளின்மீது ஆணையிட்டு சத்தியம் செய்கிறேன். நான் அதை உனக்குக் கூறுவேன்.” அவள் வாக்குறுதி அளித்தாள்.
“பெண் மந்திரவாதிகளிலேயே மிகவும் நல்லவள் நீங்கள்தான்.” மீனவன் உரத்த குரலில் சத்தமாகக் கூறினான்: “இன்று இரவு மலையின் உச்சியில் நான் உங்களுடன் சேர்ந்து நடனமாடுவேன். நிச்சயமாக... இந்த அளவிற்கு சாதாரணமான ஒரு விஷயத்தைப் பிரதிபலனாகக் கேட்கும்போது, அதை நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன்.” அவளுக்கு முன்னால் தொப்பியைக் கழற்றி, குனிந்து வணங்கிவிட்டு, அவன் சந்தோஷத்துடன் கீழ்நோக்கி வேகமாக நடந்து சென்றான்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த பெண் மந்திரவாதி, தன் பார்வையிலிருந்து அவன் மறைந்த பிறகு குகைக்குள் நுழைந்தாள். தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட பெட்டிக்குள்ளிருந்து ஒரு கண்ணாடியை எடுத்து, அதன் சட்டத்தைக் கையால் பற்றினாள். ப்ளாஸின் மரத்தின் கொம்பை எடுத்து, நெருப்பு பற்ற வைத்து, அதை எரிய வைத்தாள். தொடர்ந்து அவள் புகை மண்டலத்தின் வழியாகக் கூர்ந்து பார்த்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, கோபமடைந்து, தன்னுடைய கையின் முஷ்டியை இறுக்கிக் கொண்டு அவள் முணுமுணுத்தாள். "அவன் எனக்குச் சொந்தமானவாக வேண்டும். அவளைப் போல நானும் நல்லவள்தான்.”
5
அன்று இரவு, வானத்தில் நிலவு உதயமானபோது, அந்த இளைஞனான மீனவன் மலையின் உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் அங்கு சென்று மரத்திற்குகீழே அவளை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அதற்குக் கீழே, மினுமினுப்பான உலோகத்தாலான கவசத்தைப்போல நீல நிறக் கடல் தெரிந்தது. அங்கு... தூரத்தில்... கடலின் உட்பகுதிக்கு மீன்களைப் பிடிப்பதற்காகச் சென்ற படகுகள் நிழல்களைப்போலத் தெரிந்தன. பிரகாசித்துக் கொண்டிருந்த- மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட பெரிய ஆந்தை ஒன்று வந்து அவனுடைய பெயரைச் சொல்லி அழைத்தது. ஆனால் அவன் எதுவும் பேசாமல் இருந்தான். ஒரு கறுப்பு நிற நாய் முனகியவாறு அவனை நோக்கி வர, ஒரு மரத்தின் கொம்பை எடுத்து வீசியதும், அது கத்திக் கொண்டே திரும்பிச் சென்றது.
நள்ளிரவு நேரம் ஆனபோது, பெண் மந்திரவாதிகள் வவ்வால்களைப் போல பறந்துவர ஆரம்பித்தார்கள். “ஃப்யூ...” தரையில் இறங்கிய அவர்கள் ஓசை உண்டாக்கினார்கள். “நமக்கு அறிமுகமில்லாத யாரோ இங்கே இருக்கிறார்கள்.” வாசனை பிடித்த அவர்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டு, ஒருவருக்கொருவர் சைகைகள் காட்டிக் கொண்டார்கள். இறுதியாக காற்றில் இப்படியும் அப்படியுமாக அசைந்து கொண்டிருந்த தலைமுடியைக் கொண்ட அந்த இளம் பெண் மந்திரவாதி வந்து சேர்ந்தாள். மயிலின் கண்களைக் கொண்டு சேர்த்து தைக்கப்பட்ட, பொன் வேலைப்பாடுகள் கொண்ட பட்டாடையும், தலையில் பச்சை நிற ‘வில்லீஸ்’ தொப்பியையும் அணிந்து அவள் வந்திருந்தாள்.
“அவன் எங்கே? அந்த ஆள் எங்கே?” அவளைப் பார்த்ததும், மற்ற பெண் மந்திரவாதிகள் ஆரவாரம் செய்தார்கள். ஆனால், அவள் வெறுமனே சிரிக்க மட்டும் செய்தாள்... ஓக் மரத்தின் அடிப்பகுதியை நோக்கி ஓடிய அவள் அவன் கையைப் பிடித்து, நிலவு வெளிச்சத்திற்கு அவனைக் கொண்டு வந்தாள். தொடர்ந்து அவர்கள் அங்கு நடனமாட ஆரம்பித்தார்கள்.
கைகளைக் கோத்துக் கொண்டு, வட்டமிட்டு சுற்றிக்கொண்டே அவர்கள் நடன எட்டுகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அவர்களுக்கு மத்தியில் ஒரு குதிரையின் குளம்போசை கேட்டது. ஆனால், குதிரைகள் எதுவும் அங்கு தென்படவில்லை. மீனவனுக்குச் சிறிது அச்சம் உண்டாகாமல் இல்லை.
“வேகம்... வேகம்...” பெண் மந்திரவாதி உரத்த குரலில் கூறினாள். அவளுடைய கைகள் அந்த இளைஞனின் தோளிலும் கழுத்தைச் சுற்றியும் இருந்தன. அவளுடைய மூச்சின் வெப்பம் அவன் முகத்தின்மீது பட்டுக் கொண்டிருந்தது.
“வேகம்... இன்னும் வேகம்” அவள் கத்தினாள். தன்னுடைய கால்களுக்கு கீழே பூமி சுற்றுவதைப் போலவும், மூளை கலங்குவதைப்போலவும் அவனுக்குத் தோன்றியது. ஏதோ கெட்ட சக்திகளின் பாதிப்பு உண்டாகியிருப்பதைப்போல அவனுக்கு பயம் உண்டாக ஆரம்பித்தது. இறுதியில் அங்கிருந்த ஒரு பாறையின் நிழலில், முன்பு இல்லாமலிருந்த ஒரு உருவம் நின்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான்.
‘ஸ்பானிஷ்’ பாணியில் தைக்கப்பட்ட, வில்லீஸாலான கருப்பு நிற ஆடை அணிந்திருந்த ஒரு ஆண் அங்கு நின்றிருந்தான். அவனுடைய முகம் மிகவும் வெளிறிப்போய் காணப்பட்டாலும், உதடுகள் செம்பருத்தி மலரைப்போல சிவப்பாக இருந்தன. சோர்வுடன் காணப்பட்ட அவன் சாய்ந்து நின்று கொண்டு, தன்னுடைய கத்தியின் கைப்பிடியைப் பிடித்தவாறு, அலட்சியமாக அதை ஆட்டிக் கொண்டிருந்தான். அருகிலேயே இறகு செருகப்பட்ட தொப்பியும், கையுறையும் இருந்தன. அவன் தன்னுடைய தோளில் ஒரு சிறிய மேலாடையையும், வெளுத்து மெலிந்த தன் கைகளில் வளையத்தையும் அணிந்திருந்தான். கண் இமைகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. வலையில் சிக்கிய மிருகத்தைப்போல, மீனவன் அவனையே பார்த்தான். இறுதியில் அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. தான் நடனமாடும் இடங்களிலெல்லாம் அவனுடைய கண்கள் பின்தொடர்ந்து வருவதைப்போல அவன் உணர்ந்தான். பெண் மந்திரவாதி சத்தம் உண்டாக்குவதை அவன் கேட்டான். அவன் அவளுடைய இடையைப் பிடித்து, அவளைச் சுழற்றினான். திடீரென்று, மரங்களுக்கு மத்தியிலிருந்து நாயொன்று வந்ததைத் தொடர்ந்து, எல்லாரும் நடனத்தை நிறுத்தினார்கள். பிறகு இரண்டிரண்டு பேர்களாக நடந்து சென்று, முழங்காலிட்டு அமர்ந்து, அந்த மனிதனின் கைகளில் முத்தமிட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு ஜோடியும் அப்படிச் செய்தபோது, அவனுடைய உதடுகளில் ஒரு பெருமை கலந்த புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், அங்கு ஒரு முக்கிய செயலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவன் மீனவனையே கவனித்துக் கொண்டிருந்தான்.
“வா.... நாமும் வணங்குவோம்.” பெண் மந்திரவாதி குரலைத் தாழ்த்திக் கொண்டு கூறினாள். அவள் அவனை அந்த இடத்தை நோக்கி நகர்த்தினாள். அவளுடைய வற்புறுத்தல் அதிகமானபோது, மீனவனின் மனதிலும் அப்படிச் செய்ய வேண்டுமென்ற விருப்பம் உண்டானது. அவன் மிகவும் அமைதியாக அவளைப் பின்தொடர்ந்து நடந்தான். ஆனால், அந்த மனிதனுக்கு அருகில் வந்ததும், என்ன காரணமென்று தெரியவில்லை- அவன் தன்னுடைய நெஞ்சில் சிலுவையை வரைந்து, கடவுளின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான்.