கோழி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6634
3
பிள்ளைகள் நகரத்திற்குத் திரும்பினார்கள்.
கோடையின் ஆரம்பத்தில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து பிள்ளைகள் திரும்பவும் தங்களுடைய குடும்பத்தைத் தேடி வந்தார்கள். மாளிகையின் அறையில் அமர்ந்து கொண்டு, சில நேரங்களில் சதுரங்கம் விளையாடினார்கள். வேலைக்காக மனுக்கள் போட்டார்கள். இனிமேல் படிப்பு வேண்டாமென்று அவர்கள் தீர்மானித்தார்கள்.
மாலை நேரம் மயங்கியதும் நாராயணனும் உண்ணி சங்கரனும் தனித்தனியாக ஊருக்குள் நடந்து திரிந்தார்கள்.
தேவதத்தன் வீட்டிலேயே இருந்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டதைத் தவிர, அவன் வேறு எந்த விஷயத்தையும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவில்லை. எந்த நேரம் பார்த்தாலும் எதையாவது வாசித்துக் கொண்டோ, படித்துக் கொண்டோ அவன் இருப்பான்.
அதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்படவில்லை. மிகுந்த அறிவு படைத்தவன் தேவதத்தன் என்ற விஷயம் எல்லோருக்கும் நன்கு தெரியும். ஆர்யன் என்ற ஒரு திருமேனியின் அவதாரம் அவன் என்று மக்கள் நி்னைத்தார்கள்.
ஆர்யன் பல தலைமுறைகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு திருமேனி. அவர் நல்ல ஒரு அறிவாளியாக இருந்தார். வானவியல் பண்டிதரும் சோதிடருமாக அவர் இருந்தார். அவற்றுடன் மிகப் பெரிய மந்திரவாதியாகவும் அவர் இருந்தார்.
அவருடைய காலத்தில் அய்க்கர மடத்தின் பெருமை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் போய் அடைந்துவிட்டிருந்தது. வேற்று உலகங்களிலிருந்தும் புராணங்களின் தாள்களிலிருந்தும் தேவர்களும் புண்ணிய மனிதர்களும் இறங்கி வந்து ஆர்யன் திருமேனியைச் சந்தித்தார்கள். அவர் பெரும்பாலான நேரங்களில் பழைய காலத்தைச் சேர்ந்த வரலாற்று மனிதர்களுடன் உரையாடித்தான் தன்னுடைய நேரத்தையே செலவிட்டார்.
அவருடைய கணிப்புகள் ஒருமுறைகூட தவறாக இருந்ததில்லை. ஆசீர்வாதங்களும் சாபங்களும் அப்படியே பலித்தன. ஆர்யனுக்கு இளநீர் குடிக்க வேண்டுமென்று தோன்றினால், மாளிகை அறை சாளரத்தைத் திறந்து தன்னுடைய கையை நீட்டினால் போதும். தென்னை மரம் அன்புடன் சாளரத்தை நோக்கிச் சாய்ந்து இளநீர் காய்களை நீட்டும். ஆர்யன் இளநீரைப் பெற்று தன்னுடைய கைகளால் அதை உரித்து, உடைத்து குடிப்பார்.
ஆர்யனின் கணக்குக் கூட்டல்களுக்கேற்றபடி நட்சத்திரங்கள் பயணித்தன. லக்னங்களும் ராசிகளும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன.
ஆர்யன் திருமேனியின் மந்திரச் சக்தியைப் பற்றியும் மிகுந்த அறிவுத் திறமையைப் பற்றியும் ஏராளமான கதைகள் இருந்தன.
வெற்றிலையின் நாறைக் கிள்ளி அவர் பாம்பை வரவைத்தார். வாழையிலையை வெட்டி ஆற்றில் மிதக்கவிட்டு, அதன்மீது ஏறி அவர் பயணம் செய்தார். முட்டையை உடைத்து அவர் கோழியைப் பறக்கச் செய்தார். தூரத்தில் இருந்தவாறு தன்னிடமிருந்த அபூர்வ சக்தி கொண்டு படகை மூழ்கச் செய்தார்.
மிகப்பெரிய மந்திரவாதியாக இருந்த காஞ்ஞங்காட்டு விஷ்ணு நம்பூதிரியைக் கதி கலங்க வைத்து மந்திர வித்தையில் உன்னத சிம்மாசனத்தில் போய் உட்கார்ந்தவர் ஆர்யன். காஞ்ஞங்காட்டு விஷ்ணு, ஆர்யனை அழைத்திருந்தார். வாழையிலைமீது உட்கார்ந்து பயணம் செய்து அங்கு போனார் ஆர்யன். விஷ்ணு நம்பூதிரிக்கு அவர் அப்படிச் சென்றது சிறிதும் பிடிக்கவில்லை. ஆர்யன் கரையில் இறங்கிய நிமிடம், விஷ்ணு நம்பூதிரி கேட்டார்:
“வாகனம் எங்கே?”
ஆர்யன் திரும்பிப் பார்த்தபோது வாழையிலை ஒரு வாழை மரத்தின்மீது போய் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். ஆர்யன் அதைப் பார்த்து சிரித்தார். அவர் சொன்னார்:
“பரவாயில்ல... அது அங்கேயே இருக்கட்டும். இங்கேதான் ஏராளமா வாழை மரங்கள் இருக்கே! பிறகு எதற்கு என்னோட அந்த அப்பிராணி இலை?”
அடுத்த நிமிடம் காஞ்ஞங்காட்டு நிலத்திலிருந்த வாழை மரங்கள் முழுவதும் வாடி கரிந்துக் கீழே விழுந்தன.
காஞ்ஞங்காட்டு விஷ்ணுநம்பூதிரி விடவில்லை. தன்னிடம் உண்டான மிகுதியான கோபத்துடன் அவர் உரத்த குரலில் கர்ஜனை செய்தார்.
“விஷயம் இந்த அளவுக்கு ஆயிடுச்சா? அப்படின்னா நான் யார்ன்றதை இப்போ காட்டுறேன்.”
அவர் இப்படிக் கூறி முடித்ததும் வாடிக் கீழே விழுந்த வாழை மரங்கள் பாம்புகளாக மாறி ஆர்யனுக்கு நேராகச் சீறிப் பாய்ந்து கொண்டு வந்தன. ஆனால், ஆர்யன் அழைத்து அங்கு வந்து சேர்ந்த கழுகுகள் பாம்புகளைக் கொத்திக் கொண்டு பறந்தன.
இந்த வகையில் மந்திரங்களும் அவற்றுக்கு எதிரான மந்திரங்களும் நடைபெற்றன.
இறுதியில் விஷ்ணுநம்பூதிரி தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆர்யனை குருவாக அவர் ஏற்றுக் கொண்டார்.
ஆர்யனின் மந்திரசக்தியைப் போலவே அவருடைய அறிவுத் திறமையைப் பற்றியும் ஊரெங்கும் கதைகள் பரவிவிட்டிருந்தன.
அந்த அறிவாளியின் இன்னொரு அவதாரம்தான் தேவதத்தன்.
பத்து வயது ஆவதற்கு முன்பே அவன் சமஸ்கிருதத்தில் பண்டிதனாகி விட்டான். இலக்கியத்தை மட்டுமல்ல; இலக்கணத்தையும், எல்லா முக்கிய நூல்களையும்கூட மிக இளம் வயதிலேயே அவன் மனப்பாடமாக்கியிருந்தான்.
தேவதத்தன் ஆர்யனையே தோல்வியடையச் செய்தான். அவனுடைய அறிவு தலைக்குள் முழுமையாக இருந்தது. இரவு நேரத்தில், உறங்கும்போது அவன் பாணினி சூத்திரங்களையும் அமரகோசத்தையும் உச்சரித்தான். காளிதாசனின் சாகுந்தலத்தையும் பாஸ நாடகங்களையும் வாய்விட்டுச் சொன்னான். வியாக்யானங்கள் நடத்தினான்.
கல்லூரிக்குச் சென்றபோது தேவதத்தனின் மனம் முழுவதும் கணித சாஸ்திரம் நிறைந்திருந்தது. தூக்கத்தில் அலறும்போது கூட அவன் திரிகோணமெட்ரியைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய அலறலைக் கேட்டு சகோதரர்கள் அதிர்ச்சியடைந்து எழுந்தார்கள். அந்தர்ஜனங்களான வீட்டிலிருந்த பெண்கள் அதிர்ந்து போய் எழுந்தார்கள். அவனைத் தட்டி எழுப்பியபோது, எழுந்து ஒரு முட்டாளைப்போல அவன் உட்கார்ந்திருந்து சிரித்துவிட்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.
தேவதத்தன் ஊர் முழுக்கப் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்தான்.
“உண்மையாகவே அவன் ஆர்யன் திருமேனிதான்”- ஊர்க்காரர்கள் கூறினார்கள்: “கவனமா இருக்கணும். இல்லாட்டி சாபம் போட்டே நாம ஒரு வழி ஆயிடுவோம்.”
“குணங்களைப் பார்க்குறப்போ அப்படியே ஆர்யன் திருமேனிதான்”- ஊரைச் சேர்ந்த பெண்கள் சொன்னார்கள்: “பெண் என்றொரு நினைப்பே இல்லையே...”
அழகான ஆடைகள் அணிந்து மடத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடந்து கொண்டிருந்த இளம் பெண்களை தேவதத்தன் ஒருநாள்கூட பார்த்ததில்லை. நாராயணனும் உண்ணிசங்கரனும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் இளம் பெண்களைப் பார்த்துக் கொண்டும், அவர்களுடன் பேசிக் கொண்டும் இருந்ததைப் பலரும் பார்த்தார்கள். தேவதத்தனைப் பற்றி யாருக்கும் அப்படியொரு குற்றச்சாட்டே இல்லை.
“இந்தத் திருமேனி என்ன இப்படியொரு நாகப் பாம்பா இருக்காரு!” என்று பெண்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள்.
ஆர்யன் கடுக்காய் போட்ட கஷாயம் குடிப்பார் என்றொரு கருத்து உண்டு. தேவதத்தனும் அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள்.
உண்மை என்னவென்று அவனுக்கு மட்டுமே தெரியும்.