கோழி - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6634
நாராயணனுக்கு முகத்தில் அரச களை இருந்தது. வட்டமான முகம். கறுமை நிறக் கண்கள். சுருள் விழுந்த முடி. நல்ல உடல் கட்டு.
பல தலைமுறைகளுக்கு முன்பு கொடிகட்டி வாழ்ந்த அக்னி சர்மனின் அச்சு அசல் என்று அவனைச் சொல்லலாம்.
அக்னி சர்மனின் வாழ்க்கை மடத்திற்கு அழிவு உண்டாக்கக் கூடியதாக முடிந்தாலும் ஊருக்கு அவர் வாழ்ந்த காலம் பொற்காலமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் மடத்தைச் சேர்ந்த நிலங்கள் ஏக்கர் கணக்கில், மலை கணக்கில் அந்த ஊரைச் சேர்ந்த நாயர் குடும்பங்களுக்கு கை மாற்றம் செய்யப்பட்டது.
அக்னிசர்மனுக்கு ‘சேவல்’ என்றொரு பெயரும் இருந்தது.
சேவல் தங்கப் பஸ்பம் சாப்பிட்டார். தங்கம் சேர்த்த லேகியம் உண்டார். நெற்றியில் சந்தனம் பூசினார். பொன் நிறத்தைக் கொண்ட மார்பு எப்போதும் திறந்த கோலத்தில் இருந்தது. அந்த வடிவத்தை ஒருமுறையாவது பார்க்க அச்சிமார்கள் துடித்தார்கள். அவர் தங்களைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஏங்கினார்கள். திருமேனியைச் சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டார்கள்.
சேவலின் கருட பார்வையிலிருந்து விலகியிருக்க யாராலும் முடியவில்லை. அவருடைய கறுத்த கண்கள் ஊரெங்கும் அலைந்து கொண்டிருந்தன. போர்க்கோழியின் வீரியத்துடன் அக்னி சர்மன் பறந்து கொத்தினார். நாலு கெட்டுகளையும் எட்டு கெட்டுகளையும் கொத்தி ஒரு வழி பண்ணினார். வாசற் கதவுகளைக் கொத்தி உடைத்தார். உள்ளே நுழைந்து கோழிகளுடன் போர் புரிந்தார்.
கோழிகள் துடித்தன. கத்தின. முட்டை இட்டன.
சேவல் உற்சாகத்துடன் பறந்து திரிந்தது.
அக்னி சர்மன் சமஸ்கிருத பண்டிதராக இருந்தார். அவர் குமார சம்பவத்திலிருந்த பார்வதி வர்ணனையை வாயால் சொன்னார். அதை விரித்து விளக்கினார். கீதா கோவிந்தம் முழுவதையும் மனப்பாடமாகக் கூறினார். வாத்ஸ்யாயனனுக்குப் புகழ் மாலை சூட்டினார். புகழ் மாலை சூட்டியது மட்டுமல்ல – ஊரெங்கும் நடந்து காமசூத்திரத்திற்கு விளக்க உரைகள் எழுதிச் சேர்த்தார்.
சிற்றின்ப விஷயத்தில் அரசராக இருந்த அக்னி சர்மனிடமிருந்து அச்சிமார்களுக்கு உடல் சுகம் மட்டுமல்ல - பொருள் இன்பமும் கிடைத்தது. அக்னி சர்மனை மிகவும் அதிகமாக இன்பக் கடலில் மூழ்க வைத்த அச்சிமார்களின் குடும்பங்களுக்கு மடத்தைச் சேர்ந்த சொத்துக்களின் ஒரு பெரிய பகுதியை அவர் எழுதிக் கொடுத்தார்.
அக்னி சர்மனின் வாழ்வு முறை மடத்தின் வீழ்ச்சிக்கு நாள் குறித்தது.
அதே நேரத்தில் அய்க்கர மடத்திலேயே மிகவும் புகழ்பெற்ற திருமேனி என்ற பெயரை அவர் பெற்றார் என்பதென்னவோ உண்மை.
அவருடைய முகத்திலிருந்த ராஜகளையுடன் நாராயணன் பிறந்தான்.
நாராயணனுக்குத் தங்கப் பஸ்பம் கிடைக்கவில்லை. தங்கம் சேர்ந்த லேகியமும் கிடைக்கவில்லை. வெறும் `ச்யவன ப்ராசம்’ கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.
கஞ்சி, பயறு, பூசணிக்காய், பால் என்று நாராயணன் வளர்ந்தான். சுருக்கமாகச் சொல்லப்போனால் அக்னி சர்மனின் பரிதாபமான ஒரு பதிப்பாக அவன் இருந்தான்.
எனினும், நாராயணனைப் பார்த்தபோது ஊர்க்காரர்கள் அக்னிசர்மன் என்ற கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட திருமேனியை நினைத்துக் கொண்டார்கள். அவருடைய வீரச் செயல்களை அவர்கள் அப்போது பேசிக் கொண்டார்கள். மடத்திற்குத் திரும்பவும் புகழ் கிடைக்கும் என்று தங்கள் மனதிற்குள் எண்ணினார்கள். மடத்தை அழித்தார் என்றாலும், சேவல் புகழ்பெற்ற ஒரு மனிதராக இருந்தாரே!
பட்டாடை அணிந்து நாராயணன் வயல்வெளியில் ஓடித் திரிந்தபோது, பால கண்ணனைச் சுற்றி இருந்த கோபிகைகளைப் போல பக்கத்து வீடுகளைச் சேர்ந்த அச்சிமார்கள் அவனைச் சுற்றி எப்போதும் இருந்தார்கள். அவனை மிகவும் கவனம் எடுத்துப் பார்த்துக் கொண்டார்கள். அவனைக் கைகளில் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். முத்தம் தந்தார்கள். பெரியவரின் மனதைத் தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
அவர்கள் செய்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது. பெரியவர் கோபிகைகள்மீது தன் கண்களைப் பதித்தார். ஆடைகளை அவர்களிடமிருந்து பறித்தார். ஆடைகளை அவிழ்த்த பெண்களுக்குத் தங்கக் கட்டிகளை அள்ளித் தந்தார். நாராயணன் என்ற பாலகன் எதுவும் தெரியாமல் ஓடி விளையாடிக் கொண்டு திரிந்து கொண்டிருந்த நேரத்தில், மாளிகை அறைக்குள் படுத்துக் கொண்டு பெரியவர் அக்னிசர்மன் ஆரம்பித்து வைத்த மிகப் பெரிய அழிவிற்கு அடையாளச் சின்னமாக இருந்தார்.
தேவதத்தனுக்கும் உண்ணி சங்கரனுக்கும் அந்தக் கொஞ்சல்களெல்லாம் சிறிதும் கிடைக்கவில்லை. அவர்கள் பிறந்தபோது மடம் கிட்டத்தட்ட வறுமை நிலையை எட்டியிருந்தது. வீட்டுக்குள்ளிருந்த பெண்கள் வெளியே அதைச் சொல்லாமல் இருந்தாலும், பிள்ளைகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது- நிலைமை அந்த அளவிற்குச் சிறப்பாக இல்லையென்று.
இப்போது இதோ முழுமையான அழிவிற்குக் காரணமாக இருந்த திருமேனி புகைச் சுருள்களாக முன்னோர்களின் உலகத்தைத் தேடி பறந்து போய்விட்டார். மடம் மரண வயதில் இருக்கிறது. வயலில் எங்கோ விழுந்து கிடந்து பரதேவதை தன்னுடைய இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது.
கடினமான, மிகப் பெரிய கேள்வி திருமேனியின் பிள்ளைகளின் மனங்களின் கோட்டைச் சுவர்களில் பீரங்கியாக வெடித்துக் கொண்டிருந்தது.
“இப்போ என்ன செய்றது?”
நாராயணன் பாதியாக விட்ட தன்னுடைய கேள்வியைத் திரும்பச் சொல்லி முழுமை செய்தான்.
“இருந்தாலும், அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டாமா?”
தேவதத்தன் என்ற உல்பதிஷ்ணு எழுந்து அறைக்குள் நடந்தான். கரையான் அரித்த மரக்கதவின்மீது சாய்ந்து நின்று கொண்டு அவன் வெளியே பார்த்தான். மடத்தைச் சேர்ந்த நிலத்தின் எல்லைகள் சுருங்கிக் கொண்டிருந்தன. வேலி மிகவும் அருகில் இருப்பதை அவன் பார்த்தான்.
கொந்தளித்து வந்த கோபத்துடன் அவன் சொன்னான்: “அந்தஸ்து! மண்ணாங்கட்டி!”
மற்ற இரண்டு உண்ணித் திருமேனிமார்களும் அதைக் கேட்டு நடுங்கினார்கள். தேவதத்தனின் குரல் உண்மையாகவே ஒலித்ததுதானா என்று நம்ப அவர்களுக்கே தயக்கமாக இருந்தது. உல்பதிஷ்ணு தன்னுடைய சகோதரர்களின் முகங்களைப் பார்க்காமல் தொடர்ந்து சொன்னான்:
“அந்தஸ்து ஒண்ணுதான் பாக்கியா? வீடு எங்கே? எல்லாம் போயிடுச்சுல்ல? எல்லாவற்றையும் அழிச்சு தேய்ச்சு கழுவியாச்சே! வேலி எவ்வளவு பக்கத்துல இருக்குன்றதைப் பாருங்க. அதைத் தாண்டி எவ்வளவு செழிப்பு தெரியுதுன்றதையும் பாருங்க. அந்த நிலங்கள் யாருக்குச் சொந்தமானவைன்னு தெரியுமா? வேலிக்குள்ளே வளர்றது பாம்புகளும் தெய்வங்களும் மட்டும்தான். அவை இரண்டையும் சுட்டுத் தின்ன முடியாது. விற்பனை செய்யவும் முடியாது. அந்தஸ்து வேணுமாம் அந்தஸ்து! இந்த மாதிரி ஏதாவது நீங்க பேசாம இருக்குறதே நல்லது!”
தேவதத்தன் தன்னுடைய பேச்சை நிறுத்தினான். மீண்டும் அறைக்குள் அவன் நடக்க ஆரம்பித்தான். நம்பிக்கை இல்லாமல் ஒருவித பதைபதைப்புடன் சகோதரர்கள் அவன் சொன்னதைக் கேட்டவாறு உட்கார்ந்திருந்தார்கள்.