பாக்கன் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6401
சில நேரங்களில் ஆகாயத்தோடும், நட்சத்திரங்களோடும் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பார். இரவு வேளைகளில்- இந்த உலகமே ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக் கிடக்கும் தருணத்தில்- கோவிலுக்குள் சென்று பக்திப் பரவசம் சொட்ட கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருப்பார்.
இப்படித்தான் மருமகன் தம்புரான் பைத்தியக்கார பாகவதர் ஆனார்.
பத்து வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய கிராமம் தேடி வந்த தம்புரான் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புனிதயாத்திரை கிளம்பி விட்டார். அதன் பிறகு அவர் கிராமத்து மண்ணில கால் வைத்தது சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான். இப்போதெல்லாம் வருடத்திற்கொருமுறை கிராமத்திற்கு வருவதுண்டு. வந்தவுடன் தன்னுடைய தந்தையையும், தாயையும், மாமாவையும் காணச் சென்றுவிடுவார். இரண்டு மூன்று நாட்கள் அவருடைய ஜீவிதம் கோயிலுக்கு உள்ளேயே நடந்து கொண்டிருக்கும். நாளடைவில் இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகப் போய்விட்டதால் இவர் வருவதையோ, போவதையோ தங்குவதையோ யாருமே ஒரு பொருட்டாக எண்ணியதாகத் தெரியவில்லை.
இச்செய்திகளெல்லாம் முன்பே அமதனும், குஞ்ஞிப்பாக்கனும் அறிந்தவைதாம்.
தம்புரான் பேசினார்.
“அமதனைப் பற்றி நான் நிறையவே பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது உன்னைக் காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சி. உட்காருங்க. எல்லோரும் என் அருகே வந்து உட்காருங்க.”
எல்லோரும் அவரைச் சுற்றிலும், திண்ணையில் அமர்ந்தார்கள். அமதன் கூறினான்.
“இவன் என் மாணவன். பெயர் குஞ்ஞிப்பாக்கன். சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருக்கிறான். தயவு செய்து இவனை உங்களது சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளணும் ஸ்வாமி...”
இதைக் கேட்டதும் கைகொட்டிச் சிரித்தார் தம்புரான்.
“அமதா, என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா? நான் ஒரு இடத்தில் நிற்காமல் தினமும் ஒவ்வொரு இடமாய் அலைந்து உலகைச் சுற்றிக் கொண்டிருப்பவன். என்னுடைய நிலை இவ்வாறு இருக்க என்னால் இவனை எப்படி சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள முடியும்?”
“நீங்கள் போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” - குஞ்ஞிப்பாக்கன் கூறினான். குஞ்ஞிப்பாக்கனின் விழிகளையே உற்று நோக்கினார் தம்புரான்.
“சரி, ஒரு பாட்டுப்பாடு பார்ப்போம்.”
“எனக்குப் பாட்டொண்ணும் தெரியாது, ஸ்வாமி.”
“ஒரு பாட்டு கூட தெரியாதா? ஒரு நாட்டுப் பாட்டுகூட...?”
“நான் சிறுவயதாயிருக்கும்போது என் அம்மா பாடிக் காட்டிய பாட்டு மட்டும்தான் தெரியும்.”
“அது போதும், எங்கே பாடு, பார்ப்போம்”
“சீரப்பன் என்றொரு பெரிய யானை
அதனைச் சுற்றித்தான் எத்தனை யானை
அண்ணன் உண்டு தம்பியும் உண்டு
மொத்தம் நான்கு ஆண் யானைகள்!”
சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்த தம்புரான் விழிகளை அகல விரித்து குஞ்ஞிப்பாக்கனையே நோக்கிக் கொண்டிருந்தார்.
“சரி... ஒரு ஸ்லோகம் சொல். பார்க்கலாம்.”
“மின்னும் பொன்னும் கிரீடம்...”
எவ்வித சலனமுமின்றி அமர்ந்திருந்தார் தம்புரான். ஒரே நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது அங்கே. ஸ்லோகம் முடிந்ததும் கூறினார்.
“குஞ்ஞிப்பாக்கனுக்கு உண்மையாகவே சங்கீத ஞானம் இருக்கிறது. எனக்கு உன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்வதில் ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால், உனக்குத்தான் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும் என்று பார்த்தேன். நான் ஒரு இடத்தில் நிலையாக நிற்காமல் அலைந்து திரியக் கூடியவன். நினைத்த இடத்தில் தூங்கி விடுவேன். பெரும்பாலும் ஏதாவது கோயில்களில்தான் தூங்குவேன். கோவிலில் ஏதாவது கொடுத்தால் சாப்பிடுவேன்; இல்லாவிட்டால், பட்டினியும் கிடப்பேன். நானாக வலியச் சென்று யாரிடமும் ஒன்றும் கேட்பதில்லை. எதையும் பிரதிபலனாக எதிர்பார்க்கவும் மாட்டேன். என்னிடம் பொன்னில்லை; பொருள் இல்லை; ஒன்றும் இல்லை. இதுதான் என்னுடைய நிலை. பிறகு செய்ய வேண்டியதை நீயே தீர்மானித்துக் கொள்.”
“நான் உங்களுடன் கட்டாயம் வருவேன். என்னை நீங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள் ஸ்வாமி.”
தம்புரானின் பதிலிற்காகக் காத்து நிற்காமல், நெடுஞ்சாண் கிடையாக அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான் குஞ்ஞிப்பாக்கன்.
5
ஊரின் தெற்குப் பகுதியிலிருந்த பெரிய வீட்டில் மிகவும் அறிவு வாய்ந்தவனாக வாழ்ந்தான் பெரிய தம்புரானின் மருமகன். பதின்மூன்று வயதிலேயே சமஸ்கிருதத்தின் காவியங்கள் பலவற்றையும் படித்துச் சுவைத்தவனாக அவன் இருந்தான். தன்னுடைய மருமகனுக்கு இயல்பாகவே இசையின்பால் இயற்கையான பிடிப்பு உண்டாகியிருக்கின்ற உண்மையை அறிய நேரிட்ட பெரிய தம்புரான் காலப்போக்கில் சாஸ்திரீய சங்கீதம் கற்றுத் தேர்ந்த ஒரு பண்டிதனை தினமும் அரண்மனைக்கு வந்து அவனுக்கு இசை கற்றுத் தர நியமனம் செய்தார். அந்தப் பண்டிதனின் சிஷ்யனாய் இருந்து மிகவும் ஆர்வத்துடன் இசையின் மூலை முடுக்கையெல்லாம் உற்று நோக்கி ஆராய்ந்து கற்றான் பெரிய தம்புரானின் மருமகன்.
சிறு பருவத்திலேயே தனிமையை மிகவும் விரும்பி நாடக்கூடியவனாக இருந்தான் மருமகன் தம்புரான். சில சமயங்களில் யாருமில்லாத அனாதையாய்க் கிடக்கும் ஒரு இடத்தில் போய் தனியே அமர்ந்து ஏதாவதொரு ராகத்தை தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பான். வேறு சில சமயங்களில், ஒன்றுமே பேசாமல் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டு எதையாவது குறித்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பான். சில நேரங்களில் வீசி வரும் தென்றலோடும், மேகங்களுடனும் சுவாரஸ்யம் ததும்பப் பேசிக் கொண்டிருப்பான்.
தன்னுடைய மருமகனின் செயல்களைக் காண நேரிடும் ஒவ்வொரு நிமிடமும் வேதனையால் நொந்து கொண்டிருந்தார் பெரிய தம்புரான். மருமகன் தம்புரானின் தந்தை ஒரு சமஸ்கிருதப் பண்டிதராயிருந்தார். மகனுடைய காரியங்கள் ஒவ்வொன்றையும் கண்டு மனத்துள் வருத்தம் கொண்டு அவர் ஒரு நாள் மருமகன் தம்புரானை அருகே அழைத்துக் கூறினார்.
“மகனே, ஏன்டா எங்களை இப்படி கஷ்டப்படுத்திக்கிட்டிருக்க?”
“என்னப்பா சொல்றீங்க? நான் உங்களை வேதனைப்படச் செய்றேனா?”
“பிறகென்ன? இப்படி பைத்தியமா அலைந்து திரிவதற்கான உன்னை நான் படிக்க வைத்தேன்? இதற்குத்தானா நீ சங்கீதம் கற்றது?”
அதற்குள் அவனுடைய அம்மா சொன்னாள்.
“மகனே, உன்னி, சாதாரண மனிதர்களைப்போல நடந்து கொள்ளுடா ராஜா.”
“நான் அப்படி என்னம்மா பெரிய தப்பு செய்து விட்டேன்? நீங்கள் என்னவோ பெரியதாக...”
“உன்னி, நீ ஒழுங்காகத் தலையை வாருவதில்லை; கழுத்தில் வைர மாலை அணிவதில்லை. காதுகளில் கடுக்கன் போடுவதில்லை. அம்மாவிடமும், அப்பாவிடமும் கூட ஆசையுடன் ஒரு வார்த்தை பேசுவதில்லை. உன்னைப் பத்து மாதங்கள் வயிற்றில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் சுமந்து பெற்றவளடா நான். என்னிடம் கூடவா நீ ஒரு வார்த்தை பேசக் கூடாது.”
மகன் கூறினான்.
“ஆபரணங்கள் அணிவதில் எனக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை அம்மா. விஷயம் எதுவுமே இல்லாமல் வெறுமனே வளவளவென்று பேசிக் கொண்டிருப்பதிலும் எனக்கு நாட்டம் இல்லை. ஏதாவது சங்கதி இருக்க வேண்டும்; பேச வேண்டும். அதுதான் என் கொள்கை.”