பாக்கன் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6401
கரும்பனையோலைகள் வீசி வரும் தென்றல் காற்றோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தன. அசோக மரத்தின் இலைகள் காற்றில் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தன.
கோவிலில் இருந்த வெளிவந்த குலவைச் சத்தம் அவர்கள் எல்லோருடைய செவிகளிலும் விழுந்தது.
தம்புரான் குடிலினுள் காலடி எடுத்து வைத்து நுழைந்தபோது அவர் மேல் மலர்களைச் சொரிந்தார்கள் அமதனும், அவனுடைய மாணவர்களும்.
எல்லாவற்றையும் நோக்கிக் கொண்டிருந்த தம்புரான் திருப்தி தொனிக்கும் குரலில் கூறினார்.
“அமதா, இது குடிலல்ல; அரண்மனையல்ல; மாறாக, இதுதான் என் ஆஸ்ரமம்.”
அன்று இரவு உலகமே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார் தம்புரான். குஞ்ஞிப்பாக்கனும் அவருடன் சேர்ந்து பாடினான். தன்னுடைய மாணவனான குஞ்ஞிப்பாக்கனை உவகையுடன் கட்டியணைத்துக் கொண்ட அமதன் கூறினான்.
“குஞ்ஞிப்பாக்கன், உண்மையாகவே நீ குருவுக்கேற்ற சிஷ்யன்தான்.”
நான்கு வருடங்கள் உருண்டோடின.
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தம்புரானிடத்திலும், அவருடைய ஜீவிதத்திலும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு முடிந்துவிட்டன. இப்போது அவர் முன்னைவிட மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருடைய குடில் ஒரு ஆஸ்ரமமாகவே மாறிவிட்டது. முற்றத்தில் ஏராளமான செடிகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வள்ளிக்கொடி படர்ந்து ஆஸ்ரமத்திற்கே அழகு செய்து கொண்டிருந்தது.
தம்புரான் கண்டுபிடித்த புதிய ராகங்களுக்கு இசை வடிவம் கொடுத்து பாடினான் குஞ்ஞிப்பாக்கன். சங்கீத ஞானம் உள்ளவர்களின் பார்வை குஞ்ஞிப்பாக்கனை நோக்கித் திரும்பின. சங்கீதத்திற்கு ஒரு புதிய ஜீவனை நல்கிய பெருமையுடன் தலையை நிமிர்த்தி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது அந்த ஆஸ்ரமம்.
எப்பொழுதும் நடைபெறும் திருவிழா அந்த வருடமும் நடக்க இருந்தது. உலகம் முழுவதும் புகழப்பெற்ற ஞானேஸ்வரன் மதுராபுரியில் இருந்து கச்சேரி நடத்த வருகிறாராம்.
கச்சேரி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட்ட அவர் வந்தவுடன் விருபாக்ஷன் நம்பூதிரியை அழைத்து வினவினார்.
“எனக்குத் தம்புரானைக் கொஞ்சம் காண வேண்டும்.”
“அந்த மனிதர் இப்போது புலைப்பயல்களுடன் அல்லவா இருக்கிறார்?”
“அதனாலென்ன...?”
“அங்கு நீங்க போகக்கூடாது.”
“அதைத் தீர்மானிக்க வேண்டியது நீங்கள் அல்ல; நான்” - அவருடைய குரலில் கோபத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன.
கடைசியில் விருபாக்ஷன் நம்பூதிரி வழிகாட்ட தம்புரானின் ஆஸ்ரமத்தை நோக்கி நடந்தார் பாகவதர்.
இரண்டு இசை அறிஞர்களும் ஒன்றாக அமர்ந்து அந்த ஆஸ்ரமத்துக்குள் பேசிக் கொண்டிருக்கும் காட்சி மிகவும் ரம்யமான ஒன்றாக இருந்தது. சங்கீதம் குறித்து தம்புரான் பேசப் பேச தன்னையே மறந்த ஒரு மயக்க நிலைக்குப் போய்விட்டார் ஞானேஸ்வரன். தம்புரானின் மீது அவருக்கு ஒரு பெரிய மதிப்பே வந்துவிட்டது. இரண்டு கைகளையும் முகத்துக்கு நேரே உயர்த்தி தம்புரானை வணங்கினார் அவர்.
தம்புரான் கண்டுபிடித்த நான்கு ராகங்களையும் பாடினான் குஞ்ஞிப்பாக்கன். பாட்டைக் கேட்க கேட்க ஒரு வகையான ஞானப் பரவச நிலையையே அடைந்துவிட்டார் பாகவதர். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவருடைய உடலில் இருந்த மயிர்கள் உணர்ச்சிப் பெருக்கில் குத்திட்டு நின்றன. தானும் ஒரு பாகவதர்தான்; என்றாலும் சங்கீதத்தின் சக்தி இத்தனை தூரம் தன்னை ஆட்கொண்டு விடவில்லை என்பதை அவர் நன்கு அறிவார்.
“நாளை மறுநாள் நடக்கப்போகும் கச்சேரியில் குஞ்ஞிப்பாக்கனும் பாடவேண்டும்” - ஞானேஸ்வரன் கூறினார்.
“என்னை அங்கு நுழைய விட மாட்டார்களே!” - குஞ்ஞிப்பாக்கனின் குரலில் ஒரு வகையான ஏக்கம் கலந்தொலித்தது.
“அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.”
தம்புரானின் பாதங்களைத் தொட்டு வணங்கிய ஞானேஸ்வரன் எல்லோரிடமும் விடை பெற்றார்.
திருவிழா நடக்கப்போகும் நாளும் வந்துவிட்டது. கச்சேரிக்கான ஏற்பாடுகளெல்லாம் முடிந்துவிட்டன.
மாலை வந்தது. மண்டபத்தினுள் நுழைந்தார் ஞானேஸ்வரன். அவருக்குப் பின்னே, அவரையொட்டி வந்து கொண்டிருந்த குஞ்ஞிப்பாக்கனைக் கண்டபோது பிரமாணிக்குக் கோபம் வந்துவிட்டது.
“இவனை யார் இங்கு அழைத்து வந்தது! எதற்காக இவனை இங்கு அழைத்து வந்தீர்கள்?” - விருபாக்ஷன் நம்பூதிரி கேட்டார்.
“பாட்டுப் பாட...”
“இந்த செருமப் பயலா...?”
“நம்பூதிரியின் முட்டாள்தனத்தை இனியும் பார்த்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. மாறி நில்லுங்கள்” - அதிகாரத்துடன் கூறினார் ஞானேஸ்வரன்.
நம்பூதிரியும் மற்ற உயர்ந்த ஜாதிக்காரர்களும் அதிர்ந்து போய் நின்றனர்.
எவ்விதத் தயக்கமுமின்றி மண்டபத்தின் மேடையில் ஏறினார் ஞானேஸ்வரன்.
“வா...” குஞ்ஞிப்பாக்கனையும் மேலே வரும்படி அழைத்தார் அவர்.
மேடையில் அவர் அமர, அருகில் அமர்ந்தான் குஞ்ஞிப்பாக்கன்.
“தம்புரான் ஏன் இங்கு வரவில்லை?”
“அவர் இங்கு வர மறுத்துவிட்டார். எத்தனை நிர்ப்பந்தித்தும்”
“உண்மைதான்... அவருடைய தனித்தன்மைக்கு இதுவும் ஒரு சான்று.”
கச்சேரி ஆரம்பித்தது.
திடீரென்று கூட்டத்தின் முன் பகுதியிலிருந்து ஒரு குரல்.
“அந்த செருமப் பயலை மண்டபத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.”
“நண்பர்களே, என்னுடைய அருகில் அமர்ந்திருப்பது அசாதாரண புலமையுடைய சங்கீத வித்துவான். மருமகன் தம்புரானின் சிஷ்யன் குஞ்ஞிப்பாக்கன். அவனுடைய பாட்டை நீங்கள் விரும்பாவிட்டால், தாராளமாக நீங்கள் அவனை மண்டபத்தில் இருந்து வெளியேற்றலாம்” - உயர்ந்த ஸ்தாயியில் பேசினார் ஞானேஸ்வரன்.
மீண்டும் ஒரே நிசப்தம்.
ஞானேஸ்வரன் ஒரு பாட்டுப் பாடினார். அதற்குள் கூட்டத்தில் இருந்து ஒரு குரல்-
“குஞ்ஞிப்பாக்கனைப் பாடச் சொல்லுங்கள்.”
ஒரு புதிய ராகம் அங்கு உருவெடுத்தது. இதற்கு முன் யாருமே கேட்டிராத ராகமது. அந்த ராகத்தின் இனிமையில் மயங்கிப்போனது கூட்டம். குஞ்ஞிப்பாக்கனின் குரல் இனிமை அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரையும் சுண்டி இழுத்தது. இதயத்தை நாதத்தால் குளிர வைப்பதுபோல் ஒரு தோணல். வியப்பு மேலிட அந்த தாழ்த்தப்பட்ட இனச் சிறுவனையே நோக்கிக் கொண்டிருந்தனர் எல்லாரும்.
மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
ஞானேஸ்வரன் பாடினார். அது முடிந்ததும் குஞ்ஞிப்பாக்கன் பாடினான். அங்கே ஒரு நாத பிரபஞ்சமே உருவாகிவிட்டிருந்தது.
அதோ வருகிறார் தம்புரான்! மண்டபத்திற்குள் நுழைந்த தம்புரான் குஞ்ஞிப்பாக்கனை நோக்கி வந்தார். குருவைக் கண்டதும், மரியாதையுடன் எழுந்து நின்றான் குஞ்ஞிப்பாக்கன். உடன் ஞானேஸ்வரனும்.
குஞ்ஞிப்பாக்கனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஆசீர்வதித்தார் தம்புரான். அவருடைய கால்களில் விழுந்து நமஸ்கரித்தான் குஞ்ஞிப்பாக்கன். உடன் ஞானேஸ்வரனும்.
அந்தக் கூட்டம் திறந்த விழிகளை மூடாமல் இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது.