செல்க்காஷ் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7038
ஏதோ ஒருவித மயக்க நிலை தன்னை வந்து ஆக்கிரமிப்பதைப் போல் கவ்ரில்லா உணர்ந்தான். அவனுடைய தலை மெல்ல ஆட ஆரம்பித்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. அச்சம் கலந்த ஒருவித ஆர்வத்துடன் அவன் மதுச் சாலைக்குள் நடந்தான்.
கடைசியில் செல்க்காஷ் திரும்பி வந்தான். அவர்கள் இருவரும் தின்னவும் குடிக்கவும் பேசவும் ஆரம்பித்தார்கள். மூன்றாவது டம்ளர் வோட்கா உள்ளே போனவுடன் கவ்ரில்லா மதம் பிடித்த நிலையில் இருந்தான். அவனுக்கு மிகவும் உற்சாகம் உண்டானது. தனக்கு அருமையான விருந்தை அளித்த அந்த மனிதனிடம் ஏதாவது கூற வேண்டும் போல் ஒரு ஆர்வம் அவனுக்கு உண்டானது. ஆனால், என்ன காரணத்தாலோ அவனுடைய தொண்டைக்குள்ளிருந்து வார்த்தைகள் நாவுக்கு வந்து சேரவில்லை. நாக்கு திடீரென்று கனமாகி விட்டது. அது தன் செயல்பாட்டை இழந்து விட்டது.
சிரித்துக் கொண்டே ஒருவித கனிவுடன் செல்க்காஷ் அவனைப் பார்த்தான்.
"உனக்கு தடுமாற்றம் வந்திருச்சாடா? டேய், பழைய துணி... அஞ்சு டம்ளர் வோட்கா அடிச்சதும் நீ இப்படி ஆயிட்டியா? இன்னைக்கு ராத்திரி நீ எப்படி வேலை செய்வே?"
"ஓ... என் நண்பரே"- கவ்ரில்லா கொஞ்சிக் குலாவினான். "பயப்பட வேண்டாம். எப்படி வேலை செய்யிறதுன்னு நான் காண்பிக்கிறேன். வாங்க... வந்து எனக்கு ஒரு முத்தம் தாங்க..."
"அதெல்லாம் சரிதான். இந்தா... இதையும் வாங்கிக்கோ."
சுற்றியிருந்த ஒவ்வொன்றும் ஒத்திசைவு கொண்ட அலைகளைப் போல தலைகீழாகி ஆடுவதைப் போல் தோன்றும் வரை கவ்ரில்லா மது அருந்துவதைத் தொடர்ந்தான். அது அவனிடம் ஒரு தள்ளாட்டத்தை உண்டாக்கியது. அவனுடைய முகத்தில் முட்டாள்தனம் கலந்த மிடுக்கு வந்து சேர்ந்திருந்தது. ஏதாவது கூற முயற்சிக்கும் போதெல்லாம் அவனுடைய உதடுகள் மற்றவர்களிடம் சிரிப்பு உண்டாக்கும் விதத்தில் மூடிக் கொண்டன. வினோதமான சத்தங்கள் அந்த உதடுகளின் வழியாக வெளியே வந்தன.
செல்க்காஷ் தன்னுடைய மீசையை நீவி விட்டுக் கொண்டே தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தான். எதையோ நினைத்து சிரித்தான். அப்போது அவன் வேறு எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது.
மற்ற எல்லா விஷயங்களையும் போல மதுச்சாலை ஒரு மது அருந்தும் மனிதன் செயல்படுவதைப் போல உரத்த குரலில் சத்தம் போட்டு அழைத்துக் கொண்டிருந்தது. சிவந்த தாடிக்காரன் மேஜை மீது தன் கைகளை மடக்கி வைத்துக் கொண்டு அதன்மீது தலையைச் சாய்த்து வைத்து உறங்க ஆரம்பித்தான்.
"போறதுக்கான நேரமாயிடுச்சு"- செல்க்காஷ் எழுந்து நின்று கொண்டு சொன்னான்.
கவ்ரில்லா அவனைப் பின்பற்றி நடக்க முயன்றாலும் அவனால் நடக்க முடியவில்லை. சாதாரண குடிகாரர்கள் செய்வதைப் போல எதையோ நினைத்துக் கொண்டு ஒரு முட்டாளைப் போல அவன் சிரித்தான்.
"இப்படியொரு கேடு கெட்ட நிலைமையா?"- தரையில் உட்கார்ந்து கொண்டு செல்க்காஷ் முணுமுணுத்தான்.
கவ்ரில்லா தன்னுடைய எஜமானனைப் பார்த்து சிரித்தான். சொருகிப் போய் காணப்பட்ட கண்களால் அவன் செல்க்காஷைப் பார்த்தான். செல்க்காஷ் அவனை வெறித்துப் பார்த்தான். தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் மனிதனின் விதி மிருகத்திற்கு இணையான தன்னுடைய கைகளில் இருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான். தன்னுடைய விருப்பம் போல அவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செல்க்காஷ் நினைத்தான். ஒரு சீட்டைக் கசக்குவதைப் போல அவனை தன்னுடைய உள்ளங்கையால் நசுக்கலாம். இல்லாவிட்டால் அவனை அவனுடைய பழைய தொழிலான விவசாய வேலைகளுக்கே திரும்பிப் போகும்படி செய்யலாம். செல்க்காஷ் அந்தப் பையனைப் பற்றி நினைத்து பொறாமைப்படவும், பரிதாபப்படவும் செய்தான். அவன் அந்தப் பையனை வெறுத்தான். ஒருவேளை வேறு யாருடைய கைகளிலாவது, தன்னைவிட மோசமாக இருக்கும் மனிதர்களின் கைகளில் போய் சிக்கியிருந்தால் அவனுடைய நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை நினைத்து அவன் கவலைப்பட்டான்.
கடைசியில் செல்க்காஷின் உணர்வுகளெல்லாம் பிள்ளைமீது ஒரு தந்தை கொண்டிருக்கும் பாசமாக சீர் செய்யப்பட்டு ஒரே நேர்கோட்டில் சஞ்சரிக்கும் ஒரே உணர்வாக மாறியது. அவனுக்கு அந்த இளைஞன்மீது ஒருவித கனிவு உண்டானது. செல்க்காஷூக்கு அவன் தேவையாக இருந்தான். அவன் அந்தப் பையனைத் தன்னுடைய கைகளால் தாங்கியவாறு, முழங்காலால் அவனைத் தள்ளியவாறு, மதுச்சாலையை விட்டு வெளியே அவனை நடக்க வைத்துக் கொண்டு சென்றான். அங்கு அடுக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளுக்கு அருகில் அவனைப் படுக்க வைத்துவிட்டு, அவனுக்கு அருகில் உட்கார்ந்து செல்க்காஷ் புகைபிடிக்க ஆரம்பித்தான்.
ஒன்றிரண்டு முறை தலையைத் தூக்க முயற்சித்த கவ்ரில்லா என்னவோ முணுமுணுத்துக் கொண்டே உறங்க ஆரம்பித்தான்.
3
"தயாரா?"- துடுப்புகளை நீரில் அடித்து ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்த கவ்ரில்லாவிடம் செல்க்காஷ் கேட்டான்.
"ஒரு நிமிடம்... துடுப்பு கொஞ்சம் சரியா இல்லாதது மாதிரி இருக்கு. இந்தத் துடுப்பால அடிச்சு அதை சரி பண்ணட்டுமா?"
"வேண்டாம்... ஒரு சத்தம்கூட இங்கே கேட்கக் கூடாது. நீ அதைக் கையால தள்ளி விட்டு சரி பண்ணு. அது சரியா ஓட்டையில போய் விழுந்துக்கும்..."
சந்தனத் தடிகளும் சைப்ரஸ் தடிகளும் ஏற்றப்பட்ட துருக்கியிலிருந்து வந்திருந்த ஃபெலுக்காவுடனும், தேக்கு மரங்கள் ஏற்றப்பட்ட இன்னொரு சரக்கு கப்பலின் முனையிலும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்க்கும் அமைதியான வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
பொழுது 'கும்'மென்று இருட்டி விட்டிருந்தது. பிரிந்து பிரிந்து மேகங்கள் ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. கடல் மிகவும் அமைதியாகவும் கறுத்த எண்ணெய் போல அடர்த்தியாகவும் இருந்தது. ஈரமான, உப்புச்சுவை கொண்ட வாசனை கடலிலிருந்து கிளம்பி வந்தது. கடற்கரையிலும் கப்பலின் ஓரங்களிலும் அலைகள் மோதி ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அலைகளொடு சேர்ந்து செல்க்காஷன் படகும் ஆடியது. கரையிலிருந்து சற்று தூரத்தில் கப்பல்களின் இருண்ட நிழல் உருவங்களும், வண்ண விளக்குகள் எரிந்து கொண்டிருந்த பாய்மரக் கப்பல்களும் ஆகாயம் பின்புலமாக இருக்க, தெரிந்தன. கடல் நீரில் அந்த வண்ண விளக்குகள் தெரிந்தன. கறுப்பு வெல்வெட் துணியில் கண் சிமிட்டும் மஞ்சள் பொட்டுகளை போல அவை சிதறிக் கிடந்தன. சாயங்காலம் வரை கடினமாக வேலை செய்துவிட்டு படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியைப் போல கடல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது.
"நாம போகலாம்"- துடுப்பை நீருக்குள் செலுத்தியவாறு கவ்ரில்லா சொன்னான்.
"போகலாம்"- சுக்கானைப் பிடித்துக் கொண்டு படகை ஃபெலுக்காக்களுக்கு நடுவில் நீரில் தள்ளிவிட்டவாறு செல்க்காஷ் சொன்னான். படகு நீர்ப்பரப்பில் படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.