செல்க்காஷ்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7036
கறுத்த தூசு மேல்நோக்கி உயர்ந்ததன் காரணமாக ஆகாயத்தின் தெற்குப் பக்கம் முழுமையாக இருண்டு போனது. அடர்த்தியான மூடு பனிக்குள்ளிருந்து பார்ப்பதைப் போல எரிந்து கொண்டிருந்த சூரியன் பச்சை நிறத்திலிருந்த கடலையே உற்றுப் பார்த்தது. சாதாரண படகுகளின் துடுப்புகளும், நீராவிக் கப்பல்களின் காற்றாடிகளும், துர்க்கியிலிருந்து வந்திருந்த ஃபெலுக்கா என்றழைக்கப்பட்ட கப்பல்களின் கூர்மையான அடிப்பகுதியும், துறைமுகத்தின் சுறுசுறுப்பாக இருக்கும் நீர்ப்பரப்பை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தன.
கனமான எடையைக் கொண்ட கப்பல்கள் நீர்ப்பரப்பில் பயணம் செய்வதால், கருங்கல் சுவர்களின் எல்லைகளுக்கிடையில் அலைக்கழிக்கப்படும் நீரலைகள் கரையிலும் கப்பல்கள் மீதும் வேகமாக வந்து மோதிக் கொண்டிருந்தன. நுரை தள்ளியவாறு பேரிரைச்சலுடன் வந்து மோதிக் கொண்டிருந்த அலைகளின் கைகளில் ஏராளமான குப்பை, கூளங்கள் இருந்தன.
நங்கூரச் சங்கிலிகளின் சத்தம், சரக்கு வண்டிகளின் ஓரங்கள் ஒன்றோடொன்று இடித்து உண்டாக்கும் சத்தம், கருங்கல் மீது விழும் இரும்புத் தூண்களின் ஓலம், மரத்தடிகள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது எழும் மெல்லிய ஓசை, குதிரை வண்டிகளின் கடகடா சத்தம், ஒரு தேம்பலிலிருந்து கூப்பாட்டிற்கு உயரும் நீராவிக் கப்பலின் சங்கொலி, சுமை தூக்குபவர்களின், மாலுமிகளின், காவல்காரர்களின் உரையாடல்கள்- இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து சுறுசுறுப்பான ஒரு வேலை நாளில் காதை அடைக்கக்கூடிய சத்த கோலாகலத்தைப் படைத்தன. துறைமுகத்திற்கு மேலே இருந்த ஆகாயத்தை நோக்கிக் கட்டுப்பாடே சிறிதும் இல்லாதது மாதிரி அந்தச் சத்தம் உயர்ந்தது. அதனை நேரில் சந்திப்பதைப் போல பூமியிலிருந்து, புதிய சில சத்தங்கள் வானத்தை நோக்கி உயர்ந்து சென்றன. பூமியைப் பிடித்து உலுக்கக்கூடிய ஒரு அலறல் அல்லது பரபரப்புடன் இருக்கும் சூழ்நிலையைப் பிளக்கக்கூடிய ஒரு வெடிச் சத்தம்...
கருங்கல், மரம், இரும்பு, நடக்கும் பாதையில் போடப்பட்டிருக்கும் தட்டையான கற்கள்... மனிதர்கள் வணிக தேவதைக்கு முன்னால் உச்சரித்த உயர்ந்த மந்திர வார்த்தைகளில் அவை ஒவ்வொன்றும் ஆழ்ந்து கிடந்தன... அந்தச் சத்த பூகம்பத்திலிருந்து மனித சத்தத்தைப் பிரித்தெடுப்பது என்பது கஷ்டமான ஒன்றாக இருந்தது. தளர்ந்து போனதும் கேலிக்குரியதாகவும் இருந்தது மனிதனின் சத்தம். அந்தச் சத்தங்களுக்கெல்லாம் மூல காரணமாக இருந்த மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தால், அது மிகவும் பரிதாபப்படக்கூடிய விதத்தில் இருந்தது. கனமான சுமைகளைச் சுமந்து கொண்டு, முதுகு வளைய வெயிலையும் தூசியையும் பொருட்படுத்தாமல் இங்குமங்குமாய் ஓடிக் கொண்டிருந்த அந்த மனிதர்களின் உடலெங்கும் அழுக்குப் படிந்திருந்தது. நைந்து போன ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். இரும்பால் ஆன பிரம்மாண்டமான இயந்திரங்களுடனும் சரக்குகளின் வாகனங்களின் இரைச்சல்களுடனும், தாங்களே உண்டாக்கிய பல பொருட்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனிதர்கள் ஒன்றுமேயில்லை. மனிதன் படைத்த இயந்திரங்களே மலை போன்ற குவியல்களுடனும், அவனை அடிமையாக்கின. அவை மனிதனின் சுயத்தை அபகரித்துக் கொண்டிருந்தன.
ஆவி வந்து கொண்டிருந்த பெரிய கப்பல்கள் விசில் ஊதுவதும், இரைவதும், அவ்வப்போது நீண்ட பெருமூச்சுகள் விடுவதுமாக இருந்தன. தங்களின் சொந்த உழைப்பால் உண்டாக்கிய பொருட்களை அடுக்குவதற்காக, கப்பல்களை நோக்கி வேகமாக ஓடி ஏறும் செம்மண் படிந்த மனிதப் புழுக்களை கேலியும் கிண்டலும் செய்வதாக இருந்தன அந்தச் சத்தங்கள். தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காகக் கப்பலின் அடித்தளத்தில் ஆயிரக்கணக்கான தானிய மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருக்கும் உழைப்பில் ஏற்பட்டிருக்கும் மனிதப் பிறவிகளின் நீளமான வரிசையைப் பார்க்கும் எந்த ஒரு ஆளுக்கும் சிரித்துச் சிரித்து கண்ணில் கட்டாயம் நீர் வரும்.
நைந்துபோன ஆடைகள் அணிந்து வியர்வை வழிய நடந்து கொண்டிருக்கும், துறைமுகத்தில் சத்தமும் உஷ்ணமும் கடின உழைப்பும் காரணமாகத் தளர்ந்து போன மனிதர்களின், அவர்களே உண்டாக்கிய பிரம்மாண்டமான சூரியக் கதிர்களைச் சிதற விடுகிற இயந்திரங்களின் ஆவியால் அல்ல அந்த இயந்திரங்கள் இயங்குவது- மாறாக, மனிதர்களின் குருதியும் சதையும்தான் அவற்றை இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த முரண்பாடுகள் ஒரு 'முரண்பாட்டுக் கவிதை'யையே படைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவை.
சத்தங்கள் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தன. மூக்கின்மீது மோதிய தூசி கண்ணில் பட்டது. உஷ்ணம் உடலைக் கடுப்பாக்கித் தளரச் செய்தது. சகிப்புத் தன்மையின் எல்லையையும் தாண்டி, ஏதோ ஒரு விபத்து நடக்கப் போவதைப்போல, முழுமையான அழிவுக் காலம் மிகவும் நெருங்கி விட்டதைப் போல எல்லா விஷயங்களும் ஒருவித இறுக்கத்தில் நடந்து கொண்டிருந்தன. அந்தப் பெரிய விபத்து நடந்து முடிந்தவுடன், சூழ்நிலை முற்றிலும் மாறிவிடும். அமைதியான உலகத்தை நோக்கி எல்லாமும் திரும்ப ஆரம்பிக்கும். மனிதர்களை பைத்தியச் சூழ்நிலைக்குள் ஆழ்த்தும், காதுகளைக் கிழிக்கும் ஆரவாரமும் தூசியும் இல்லாமற் போகும். நகரத்தில், கடலில், ஆகாயத்தில் காற்று சுத்தமானதாகவும் சுகமானதாகவும் மாறும்.
சரியாகப் பன்னிரண்டு முறை மணியடித்தன. வெண்கல மணியின் கடைசி நடுக்கம் நின்றவுடன் கடின உழைப்பின் கொடூர இசையின் கடுமை குறைந்தது. ஒரு நிமிடம் கழிந்ததும் அது திருப்தியற்ற தன்மையின் முணுமுணுப்பாக மாறியது. மனிதர்களின், கடலலைகளின் சத்தம் இப்போது மிகவும் தெளிவாகக் கேட்டது. அது உணவு உட்கொள்ளும் நேரம்.
2
சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களின் வேலையை நிறுத்தினார்கள். சத்த ஆரவாரங்களின் சிறுபகுதியாகப் பிரிந்த அவர்கள் உணவை வாங்கிய பிறகு, நிழல் இருக்கும் இடங்களைத் தேடிப்போய் உணவு உட்கொள்ள ஆரம்பித்தபோது, க்ரீஷ்கா செல்க்காஷ் அங்கு தோன்றினான். துறைமுகத்திலிருக்கும் எல்லா உயிர்களுக்கும் அவனைத் தெரியும். எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட மது அருந்தும் மனிதன்; தைரியசாலியும் புத்திசாலியுமான திருடன். அவனிடம் காலணிகள் இல்லை. தலையை மறைக்க தொப்பியுமில்லை. ஆங்காங்கே கிழிந்திருக்கும் முரட்டுத்தனமான ட்ரவுசர், தவிட்டு நிறத்தில் இருக்கும் தோலும், எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் நெஞ்சும் வெளியே காண்பது மாதிரி முன்பக்கம் திறந்த தோலால் ஆன சட்டை- இவைதான் அவனுடைய தோற்றம். ஜடை பிடித்து கரும் சாம்பல் நிறத்தில் இருக்கும் முடியும், கழுகைப் போன்ற கூர்மையான முகமும், சோர்வான பார்வையும் அவன் இப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகக் காட்டின. ஒரு வைக்கோல் புல் அவனுடைய இடதுபக்கக் கன்னத்திலிருந்த சிறு ரோமங்களுக்கு நடுவில் ஒட்டிக் கொண்டிருந்தது. காதுக்கு நடுவில் அவன் ஒரு ஈர்க்குச்சியைச் செருகி வைத்திருந்தான். இப்படியும் அப்படியுமாக ஆடி அசைந்தவாறு, சிறிது முன்னோக்கி வளைந்து கற்கள் பதித்த பாதை வழியாக மெதுவாக நடப்பதற்கு மத்தியில் யாரையோ தேடுவதைப்போல அவன் துறைமுகம் முழுவதும் கண்களால் அலசினான். அவனுடைய கறுத்து நீண்ட மீசை ரோமங்கள் ஒரு பூனையன் முடிகளைப் போல எழுந்து நின்றிருந்தன.