பிச்சைக்காரர்கள் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6347
சில நேரங்கள்ல ஒண்ணுகூட உயிரோடு இல்லாமலும் போகலாம். அப்போ வம்சம் அதோடு முடிஞ்சு போகுதுல்ல? அப்படித்தான் இந்தப் பிச்சைக்காரர்கள் இனம் அழிஞ்சிக்கிட்டு இருக்கு. பிள்ளைகளோட பிள்ளைகள் அதற்குப் பிறகு எங்கும் போக மாட்டாங்க. போக முடியாது."
அந்தப் பெண் தனக்கு நன்கு தெரிந்த மூன்று நான்கு குடும்பங்களின் கதைகளைக் கூறினாள். அவளுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு பத்து பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் ஒன்றுகூட கடைசியில் எஞ்சியிருக்கவில்லை. இன்னொரு பெண்ணுக்கு தன்னுடைய ஒரு பிள்ளையையாவது வளர்த்துப் பெரியதாக ஆக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. மூன்றாவதாக இருந்த பெண், தன்னுடைய ஒரு பிள்ளைகூட உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. எதற்காக அவர்கள் வாழ வேண்டும்?
ஒரு நீண்ட கதையை அவள் இப்படிக் கூறி முடித்தாள்.
"நாம யாரும் யார் மேலயும் பாசம் வைக்க முடியாது குழந்தை. நாம யாரும் அன்பு இல்லாதவங்க இல்ல. அன்பு உள்ளவங்கதான். ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் விருப்பம் இல்லாமப் போயிடுமா? உடன் பிறந்தவர்களுக்கு இடையில் பாசம் இல்லாமப் போயிடுமா? அதேமாதிரி பெற்ற தாய்க்கு பிள்ளைகள் மீதும், ஒருத்தியின் பாலைக் குடிச்சு வளரும் ஒரு பிள்ளைக்குத் தன் தாய் மீதும் பாசம் இல்லாமப் போயிடுமா? ஆனால், பாசம் வைக்க முடியாது குழந்தை... முடியாது. இப்படி பலவகைப்பட்ட அனுபவங்கள் கிடைச்ச பிறகு, எல்லாவற்றையும் சகிச்சு வாழக்கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். சாகுற வரை வாழணுமேன்ற நினைப்பு வரும். இப்படித்தான் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு. இப்போ உன் அம்மாவையே எடுத்துக்கோ. அவங்க சாகாம இருந்தா, இங்கேயிருந்து போனது மன விருப்பத்தோடு இல்ல. அவங்க இப்போ இருந்தா, உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாங்க. என் விஷயமும் அதுதான் குழந்தை!"
கேசு அமைதியாக உட்கார்ந்து பல விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டிருந்தான். எத்தனைப் பிள்ளைகள் இப்படித் தங்களின் தாய்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்! எத்தனைத் தாய்மார்கள் இப்படித் தங்களின் பிள்ளைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்! சகோதரர்கள் சகோதரிகளையும்,சகோதரிகள் சகோதரர்களைம் பார்த்தால் ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமலே கூட இருக்கலாம். அவனுடைய சகோதரியின் முகம் அவனுக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. தாயையே பார்த்தாலும், அவனால் இனிமேல் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்ன?
அவன் எழுந்து உட்கார்ந்தான். அந்தப் புளியமரத்திற்குக் கீழே வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவனுடைய ஞாபகத்தில் வந்தன. அவனுடைய தாய் அவன் மீது பாசம் வைத்திருந்தாள். சகோதரி தன்னுடைய ஒரே தம்பிக்கு சாதத்தைதக் கொடுத்துவிட்டு, வெறும் நீரை மட்டும் குடித்திருக்கிறாள். அவர்களுக்கு ஒரு வீடு உண்டாக்கித் தர வேண்டும் என்பதற்காக, ஐம்பது வருடங்கள் முயற்சித்த ஒருவன் தான் அவனுடைய தாத்தா.
ஒரு மெல்லிய திரை விலகி மீண்டும் அவனுடைய தாயின் முகமும் அக்காவின் முகமும் அவன் மனதில் தெளிவாகத் தெரிந்தன. இனியும் அந்த முகங்கள் மறையாமல் அங்கு இருக்க வேண்டும்!
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாகவே அவன் ஆகிவிட்டான். அந்தப் பெண்ணின் மூத்த மகன் கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் அவன் கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் கொடுப்பான். அவள் சமையல் செய்து அவனுக்குப் பரிமாறுவாள். அவளுடைய சிறிய பெண் குழந்தை அவனை 'அண்ணா' என்று கூப்பிட கற்றுக் கொண்டாள். அவன் அப்படி அழைக்க அவளுக்குக் கற்றுத் தந்தான். முதல் தடவையாக அந்தப் பெண் குழந்தை அவனை அப்படி அழைத்த இரவு நேரத்தில் அவன் தன் மனதில் ஒரு திட்டத்திற்கு வடிவம் கொடுத்தான்.
பிச்சைக்காரர்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் வாழ்க்கையின் இறுதிவரை 'அண்ணா' என்று அழைக்க ஒரு ஆள் இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றொரு எண்ணம் அவனுக்கு உண்டானது.
தினமும் சாயங்காலம் திரும்பி வரும்போது அவனுடைய புதிய தாயிடம் கூறுவதற்கு ஒவ்வொரு புதிய விஷயங்கள் அவனிடம் இருக்கும். கேட்பதற்குப் பல சந்தேகங்கள் இருக்கும். தெரிந்து கொள்வதற்கும் நிறைய இருக்கும். பிச்சைக்காரர்கள் எங்கு உருவாகின்றனர் என்பதை அவன் படித்தான். ஒவ்வொரு நாளும் பிச்சைக்காரர்கள் அழிவதும் உண்டாவதுமாக இருக்கிறார்கள் என்று அந்தத் தாய் அவனுக்குச் சொல்லித் தந்தாள். அவளுக்குப் பல குடும்பங்களின் வரலாறுகளையும் கூறத் தெரிந்திருந்தது. புதிய புதிய பிச்சைக்காரர்கள் பலரையும் அவன் சந்தித்தான். அவனுடைய தாத்தாவும் தாயும் சகோதரியும் பிச்சைக்காரர்களாக வீட்டை விட்டு வெளியேறிய அந்த நாளை அவன் பல நேரங்களில் மனதில் நினைத்துப் பார்ப்பான். தெளிவற்ற சில ஞாபகங்கள் அவனிடம் அதைப்பற்றி இருந்தன. இப்போதும் குழந்தையையும் பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வாழ்க்கையில் மிச்சமென்று எதுவுமே இல்லாதவர்கள் தெருக்களில் நடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டும் கையில் பிடித்துக் கொண்டும் இருக்கும் அந்தக் குழந்தைகள் பின்னால் அனாதையாக விடப்படப் போகிறவர்களே.
தினமும் காலையில் போகும்போது அந்தப் புளிய மரத்திற்குக் கீழேயே மாலையிலும் பார்ப்போமா என்று அவன் கேள்வி கேட்பதுண்டு. நகரம் முழுக்க அலைந்து திரிந்த போது ஒரு பதைபதைப்பு அவனைப் போட்டு ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்பதை எப்படி உறுதியாகக் கூற முடியும்? அவனுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன? அவனை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற நியதி எதுவும் உண்டா என்ன? ஒருவேளை அவனுடைய தாய்க்கும் சகோதரிக்கும் இதே மாதிரி ஒரு மகன் இப்போது கிடைத்தாலும் கிடைத்திருக்கலாம். அது இவர்களுடைய பிரிந்து போன மகனாக இருக்கக்கூடாதா என்ன?
அன்றொரு நாள் மாலையில் அவன் ஒரு முக்கிய செய்தியுடன் வந்தான். அவனுக்கு ஒரு வேலை கிடைத்திருந்தது- ஒரு தொழிற்சாலையில்.
அந்தப் பெண் கேட்டாள்:
"சம்பளம் எவ்வளவு?"
"அது எதுவும் தெரியாது. வேலை கிடைத்தது. இன்னைக்கு முழுவதும் வேலை செய்தேன். எட்டணா கூலியா கிடைச்சது."
அவன் அந்தக் காசை அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தான். நாளைக்கும் அவன் வேலைக்குப் போகப் போகிறான். தன்னுடைய சில நண்பர்களையும் கூட அவன் தன்னுடைய வேலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறான். அங்கு நிறைய ஆட்களை வேலையிலிருந்து போகச் சொல்லி விட்டார்கள். அதற்கு பதிலாக ஆட்களை எடுக்கிறார்கள்.
அந்தப் பெண் சொன்னாள்: