பிச்சைக்காரர்கள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6347
நகரமெங்கும் காணப்படும் ஏராளமான பிச்சைக்காரர்கள் ஒரு நிமிட நேரம் கல்யாணியின் மனக்கண்களுக்கு முன்னால் வந்து தோன்றினார்கள். மிகவும் வயதானவர்கள்! அவர்கள் பிள்ளைகளைப் பெற்றவர்கள்தான். அவர்களுக்கு மகன்களும் மகள்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு மரக்கொம்புதான் அவர்களுக்கு இப்போது உதவியாக இருக்கிறது! சுவருக்கு அருகில் சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் பிஞ்சுக் குழந்தைகள்! அவர்களைப் பெண்கள் பெற்றெடுத்தார்கள். அந்தப் பெண்கள் எங்கு போனார்கள்? அந்தப் பிள்ளைகளுக்கு முன்பும் பின்பும் உலகத்திற்கு வந்தவர்கள் இருக்கவே செய்வார்கள். அவர்கள் எல்லாம் எங்கே?
கவலை நிறைந்த ஒரு மிகப்பெரிய வரலாறு அவளுக்கு முன்னால் தோன்றியது. அதில் அவளும் அவளுடைய பிள்ளைகளும் கூட இருந்தார்கள். அவன் போய் விட்டான்! இனி அவளுடைய மகளும் போய்விடுவாள். அப்போது அவள் தனியாளாக ஆகிவிடுவாள். பிறகு? பிறகு... பிறகு... அவள் எங்கு கிடந்து இறப்பாள்? அவளுடைய பிள்ளைகள் அருகில் இருக்க மாட்டார்களா? இருக்க மாட்டார்கள்...
அவள் எதற்காகப் பிறந்தாள்? எதற்காக அவளுடைய பிள்ளைகள் பிறந்தார்கள்? ஒரு குடிசை உண்டாக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறப் போவதில்லை. அந்தக் கிழவனிடம் இந்தக் கதைகளை விளக்கமாகக் கூற வேண்டும். ஒரு வீடு உண்டாக்கப் போவதே இல்லை என்ற விஷயத்தை! இந்தத் துயரங்கள் அனைத்திற்கும் முதல் காரணமாக இருப்பவன் அந்தக் கிழவன்தானே?
கல்யாணி எதுவும் பேசாமல் எழுந்து நடந்தாள். அந்தப் புளிய மரத்தடியை நோக்கி அவள் ஏன் போக வேண்டும்? கிழவன் ஆர்வத்துடன் அவளை எதிர்பார்த்து அமர்ந்திருப்பான்! அதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறதா? அந்தக் கேள்வியை நினைத்த போது அந்தப் பெண்ணின் காதுக்குள் ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.
'நான் இதற்காகவா மகளே வேலை செய்தேன்?'
அது சரிதான். அவன் வேலை செய்தது அதற்காக அல்ல. அவளுடைய தந்தையின் வியர்வைத் துளிகள் விழுந்த- பழங்கள் நிறைந்த அந்தத் தோப்பை அவள் பார்த்தாள். துயரங்கள் நிறைந்த பெண்ணாக அவள் இருந்தாலும், கல்யாணி பற்களைக் கடித்து எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டாள்.
சாலையில் விளக்குகள் அணைந்தன. கல்யாணி சற்று நடுங்கினாள்.
பிறப்பும் இறப்பும் அந்த இருட்டில் மரத்தின் இரண்டு பக்கங்களிலும் நடந்து கொண்டிருந்தது. பிறப்பு உண்டாக்கும் வேதனையின் முனகல் சத்தம்! மரணம் உண்டாக்கும் வேதனையின் கடுமை! அவற்றுக்கு நடுவில் வாழ்க்கையின் தாங்க முடியாத வேதனையைத் தாங்கிக் கொண்டு அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். கல்யாணி! அது எந்த அளவிற்கு சுமையான பொறுப்பு! இறுதி மூச்சுகளை விடுவது அவளுடைய தந்தை. இந்தப் பக்கம் அடுத்த தலைமுறை தோன்றுகிறது. இரண்டும் ஒரே நேரத்தில்.
கல்யாணி எங்கே போவாள்? யாரை கவனிப்பாள்?
"என் அம்மா!"
அப்போது அவள் கிழவனுக்கு அருகில் இருந்தாள். மகளின் அழைப்பைக் கேட்டு அவள் இந்தப் பக்கம் வந்தாள். அப்போது அவளுக்குத் தோன்றியது- ஒரு வகையான மன வேதனையுடன் கிழவன் தன்னை அழைக்கிறான் என்று!
எதற்காக அந்தக் குழந்தை பிறக்கிறது? அது பிறக்காமல் இருக்கக் கூடாதா? இறக்கப் போகிற கிழவன்- தன் மகள் தனக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட உரிமை இருக்கிறது.
மீண்டும் கர்ப்பிணிப் பெண் தன் தாயை அழைத்தாள்: "என் அம்மா, நான் சாகப் போறேன்."
"ம்... சாகு."
அவளைப் பெற்றெடுத்தத் தாயிடமிருந்து அந்த வார்த்தைகள் தான் வந்தன. கர்ப்பிணிப் பெண் தனக்குத் தோன்றிய விதத்தில் உட்கார்வதும், படுப்பதுமாக இருந்தாள். கல்யாணி தலையில் கையை வைத்துக் கொண்டு சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தாள்.
"எனக்கு இது தெரியாது அம்மா."
பரிதாபமான குரலில் கர்ப்பிணிப் பெண் சொன்னாள். அவள் மீண்டும் சொன்னாள்: "எனக்கு இது தெரியாது."
தான் கூறுவதை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பதை நினைத்து அவள் கவலைப்பட்டாள்.
தனக்கு அது தெரியாது என்கிறாள்! எது தெரியாது! பிள்ளை பெற இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்ற உண்மை அவளுக்குத் தெரியாதா? இல்லாவிட்டால், கர்ப்பம் உண்டாகும் என்றே அவளுக்குத் தெரியாமல் இருந்ததா? கர்ப்பம் தரிக்கக் கூடிய வயதை அடைந்த ஒரு பெண்ணுக்குக் கர்ப்பத்தால் உண்டாகக்கூடிய விளைவுகளைப் பற்றி தெரியாமலே போய் விட்டதா என்ன?
ஒரு பிச்சைக்காரப் பெண்! அவள் நகரமெங்கும் சுற்றித் திரிந்தாள். உடல் வளர்ச்சியடைந்து, உறுப்புகள் முழுமையை அடைந்தன. ஆனால், அவளுடைய அறிவும் சிந்தனையும் வளராமல் போயிருக்கலாம். பிரச்சினைகளைப் பற்றியும் வரக்கூடிய விளைவுகளைப் பற்றியும் அவளுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். இரண்டு சக்கரங்கள்- அந்த ஆண் என்னவோ ஆசைப்பட்டான். இரண்டு சக்கரங்கள் கொடுப்பதாகக் கூறினான். இரண்டு முழுமையான சக்கரங்கள்... அவளுக்கு இரண்டு சக்கரங்கள் கிடைத்தன. அந்த பரிதாபமான கதை அந்தச் சிறிய சக்கரத்தில் மறைந்திருந்தது. அது உண்மை... அவளுக்கு அது எதுவுமே தெரியாது. அவள் கேட்டாள்:
"என் அம்மா, இதை சொல்லலியே அம்மா."
சரியான ஒரு குற்றச்சாட்டுதான். வரக்கூடிய விளைவுகளைப் பற்றி தாய் முன்கூட்டியே கூறியிருக்க வேண்டாமா?
அந்தப் பக்கம் பெருமூச்சு விடும் சத்தம் கொஞ்சம் குறைந்தது. இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கிக் கொண்டிருந்தது. முடிந்தவரை தெளிவான குரலில் கிழவன் அழைத்தான்.
"பிள்ளைகளே!"
அவன் தன்னுடைய மகளையும் பேத்தியையும் அழைக்கிறான். ஒருவேளை, இன்னும் திரும்பி வந்திராத பேரனையும் கூட இருக்கலாம்.
"நான் செத்துக்கிட்டு இருக்கேன் தாத்தா."
அதை கிழவன் கேட்கவில்லை.
மூன்று முறை வீறிடும் சத்தம் கேட்டது. ஒரு அமைதி! ஒரு பச்சிளம் குழந்தையின் உரத்த அழுகைச் சத்தம்!
மரணத்தால் உண்டான இடைவெளி சரி செய்யப்பட்டுவிட்டது. கல்யாணிக்கு ஒரு சுமை குறைந்தபோது, இன்னொரு சுமை வந்தது சேர்ந்தது. அவள் தரையில் படுத்தாள். அந்தக் குழந்தை சிறிது நேரம் அழுதது. இருட்டில் கவுரி தடவிப் பார்த்தாள்- அந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. அது ஒரு ஆண் குழந்தை!
கல்யாணி கிழவனுக்கு அருகிலிருந்து குழந்தைக்கு அருகில் வந்தாள். அவளுடைய கஷ்டங்கள் முடிவதாகத் தெரியவில்லை. கடந்த தலைமுறையை தண்டித்தாகி விட்டது. அந்தப் பொறுப்பு முடிந்தவுடன், புதிய தலைமுறை எழுகிறது. ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அவள் குழாயை நோக்கி நடந்தாள்.
அந்தக் குழந்தையைப் பார்க்காமலேயா அந்தக் கிழவன் போய் விட்டான்? தன்னுடைய இறுதி மூச்சுகளை விடும்போது, அந்தக் குழந்தையின் அழுகைச் சத்தத்தை அவன் கேட்டிருப்பானோ? கேட்டிருப்பான். ஏனென்றால், அவன் அதிர்ஷ்டம் இல்லாதவன். அதையும் சேர்த்து இறுதியாக அனுபவித்துவிட்டு அவன் இறப்பதே நியாயமானது.