பிச்சைக்காரர்கள் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6347
அவன் என்னவெல்லாமோ சிந்தித்துப் பார்த்து விட்டான். இனியும் அவன் செய்ய வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒரு தெளிவான நோக்கம் இல்லை என்பதென்னவோ உண்மை.
அந்தப் புளியமரத்தடியில்தான் இப்போதும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரவு உணவு சாப்பிட்டு முடித்து, ஒரு பீடியை உதட்டில் வைத்துப் புகைத்துக் கொண்டிருந்த போது, அவன் அந்தப் பெண்ணிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்க ஆரம்பிப்பான். கதையில்லாத கேள்விகள் இல்லை. சிந்தனையில் இருந்து உருவான வாழ்க்கை அனுபவங்கள் பிரதிபலிக்கக்கூடிய கேள்விகள். யாரோ லாப வெறி கொண்ட ஒரு முதலாளியின் பணப்பை வீங்குவதற்காக வாழ்க்கையை விற்ற ஒரு தொழிலாளியின் மனைவியால்தான் அதற்கு பதில் தர முடியும். அவள் பிச்சைக்காரியும்கூட.
ஒரு நாள் அவன் கேட்டான்:
"இந்த முதலாளியின் சொத்து... கொஞ்சம் நமக்கு அதுல உரிமை இருக்குல்ல? அப்படி இருக்கணுமே! நமக்குச் சேர வேண்டியதை அந்த ஆளு அபகரித்துக் கொண்டதால்தானே, அவன் பணக்காரன் ஆனான்?"
அவள் அதற்கு பதில் சொன்னாள்:
"நீ சொல்றது உண்மைதான்."
அவனுடைய சிந்தனை மேலும் உறுதி படைத்ததாக ஆனது. அவன் கேட்டான்:
"இந்தப் பிச்சைக்காரர்களும் பிச்சைக்காரர்களாக ஆகப் போகிற தொழிலாளிகளும் ஒன்று சேர்ந்தால், இந்த முதலாளி என்ன செய்ய முடியும்?"
"அப்படி ஒன்று சேர முடியாது மகனே. ஒன்று சேரக் கூடாதுன்றதுக்காகத்தானே அவர்கள் பிச்சைக்காரர்களை உண்டாக்குறாங்க."
அவனுடைய தலைக்குள் அதற்குப் பிறகு என்ன வழி என்ற சிந்தனை அலையடித்துக் கொண்டிருந்தது. அந்த முதலாளி சேர்த்து வைத்திருக்கும் சொத்தைக் கைப்பற்றினால்தான் சரியாக இருக்கும்.
நகரத்தையே நடுங்க வைக்கும் அந்தத் திருட்டு நடந்து முடிந்தது. மிகப்பெரிய தொகை ஒரு பெரிய முதலாளியின் வீட்டிலிருந்து திருடு போனது. எங்கும் அதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. திருடியவன் புத்திசாலி என்றுதான் சொல்ல வேண்டும். அதைச் செய்வதற்கு நீண்ட காலமாக திட்டம் போட்டிருக்க வேண்டும். அதைச் செய்ததற்கு எந்தவொரு நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அந்தத் திருடன் யாராக இருக்கும்?
போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தியது. அதை நகரத்தில் இருந்த எல்லோரும் உணர்ந்தார்கள். ஏழையாக இருக்கும் ஒருவன் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.
எல்லாவற்றையும் கேசு பார்த்துக் கொண்டிருந்தான். தெரிந்து கொண்டிருந்தான். அந்தப் புளிய மரத்தடியில் படுத்திருக்கும் போது, அந்தத் திருட்டைப் பற்றி அன்று ஆட்கள் பேசுவதைக் கேட்டதையும், போலீஸ்காரர்கள் நடத்திய விசாரணைகளைப் பற்றி அறிந்ததையும் நினைத்துப் பார்த்தபோது ஒரு மெல்லிய புன்சிரிப்பு அவனுடைய உதடுகளில் மலரும். ஆனால், அதை யாரும் பார்க்கவில்லை. அந்த முதலாளி இன்னும் எழுந்திருக்கவில்லை. அந்த ஆள் படுத்திருப்பதைப் பார்க்க வேண்டும் போல் இருக்கும் கேசுவிற்கு.
இந்த போலீஸ்காரர்கள் எதற்காக இந்த அளவிற்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்? அவனுடைய இப்போதைய தாய் அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்: "இதை விட்டால் போலீஸ்காரர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கு? வசதி படைத்தவர்களின் சொத்தை பாதுகாப்பதுதான் அவர்களின் வேலையே!"
எவ்வளவு அப்பிராணியான நிரபராதிகள் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்! அது அவனுடைய இதயத்தை மிகவும் வேதனை கொள்ளச் செய்தது. இதற்கிடையில் நிறையபேர் அந்தக் குற்றச் செயலை ஒப்புக் கொண்டிருந்தார்கள். ஆனால், பணம்தான் யாரிடமும் கிடைக்கவில்லை.
அந்த உண்மையை அந்தப் பெண்ணிடம் கூற பல தடவைகள் அவன் ஆசைப்பட்டான். அந்தத் திருட்டைச் செய்தது தான் தான் என்ற உண்மையை. அந்தப் பணம் முழுவதும் அவனிடம் இருந்தது. ஆனால், அவன் சொல்லவில்லை. தான் செய்தது சரியா, தவறா என்று அவனாலேயே நிச்சயமாகக் கூற முடியவில்லை.
அந்த மிகப்பெரிய தொகையை வைத்து என்ன செய்வது? அதைப் பிச்சைக்காரர்கள் எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தால்... அதனால் என்ன நிம்மதி கிடைக்கப் போகிறது? எதுவுமே இல்லை. அதற்குப் பிறகும் அந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கும். அவனால் எத்தனை எத்தனை ஏழைகள் அடியும் உதையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
தான் செய்தது தவறா, சரியா? இதை யாரிடம் அவன் போய் கேட்பான்? அதற்குப் பதில் கிடைத்தால் அவன் சந்தோஷப்படுவான். அன்று எடுத்த பணத்தை அதற்குப் பிறகு அவன் பார்க்கவேயில்லை. அதை எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற தைரியமும் அவனுக்கு இல்லை. அந்தப் பணத்தை எடுத்ததால், அந்த முதலாளிக்கு என்ன உண்டாகப் போகிறது? அவனும் பிச்சைக்காரனாக ஆகலாம். அப்படியென்றால், மேலும் ஒரு பிச்சைக்காரன் உண்டாகியிருக்கிறான் என்பதுதான் உண்மை. இல்லாவிட்டால் இந்த நிமிடம் கூட தனக்கு உண்டான இழப்பைச் சரிகட்ட அவன் யாரையாவது ஏமாற்றிக் கொண்டிருப்பான்.
ச்சே! அந்தத் திருட்டைச் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், செய்தாகிவிட்டதே! இனி என்ன செய்வது?
அந்தக் குற்றத்தை அவன் அந்தப் பெண்ணிடம் ஒப்புக் கொண்டான். அவள் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டாள்.
"நீ அதை ஏன் செய்தே மகனே?"
"நான் செஞ்சிட்டேன் அம்மா."
"அதைச் செய்யாமல் இருந்திருக்கலாம்."
"உண்மைதான். நான் போலீஸ்காரர்கள்கிட்ட போய் செய்த குற்றத்தை ஒத்துக்கப் போறேன். அந்தப் பணம் முழுவதும் என் கையில இருக்கு."
அதன் ஒரு சிறு பகுதியையாவது அவள் கேட்பாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவள் கேட்கவில்லை. அந்த ஆசையின் ஒரு சிறு சாயல்கூட அவளிடம் இல்லை.
உண்மையான வருத்தத்துடன் அவள் சொன்னாள்:
"என் மகனே, உன் காலத்தை நீ வீணாக்கிட்டே. உன்னை சிறையில போட்டுடுவாங்க. அங்கு நீ நிறைய நாட்கள் கிடக்க வேண்டியதிருக்கும்."
அது ஒரு மிகப் பெரிய இழப்புதான். சிறைக்குள் எந்தவிதமான காரணமும் இல்லாமல் வாழ்க்கையின் ஒரு பகுதியைச் செலவிடுவது என்றால்...?
அவள் கேட்டாள்:
"இந்தப் பணத்தை வச்சிக்கிட்டு நீ ஊரைவிட்டு போய் விட்டால்...?"
"போய் விட்டால்...?"
"நீ மானத்தோட வாழலாம். பணக்காரனாக!"
அவன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. அந்த அளவிற்கு மிகப்பெரிய தொகைக்குச் சொந்தக்காரனாக ஆக அவன் விரும்பவில்லை. தான் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இல்லை.
கேசுவைத் தண்டித்தார்கள். அந்தப் பணத்தில் ஒரு காசுகூட குறையாமல் முதலாளிக்குக் கிடைத்தது. கேசு சிறைக்குச் சென்றபோது, அந்தத் தாயும் மகளும் நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியில் நின்றிருந்தார்கள். அந்தச் சிறுமி 'அண்ணனை' இரண்டு முறை அழைத்தாள். இனி எப்போது அண்ணன் திரும்பி வருவான் என்று அவள் தன் தாயிடம் கேட்டாள். கண்களில் கண்ணீர் நிறைய நின்றிருந்த தாய் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.