பூவினும் மெல்லிய பூங்கொடி! - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6818
நெற்றியிலுள்ள தழும்பை மீண்டும் தடவியபடியே லேசாக சிரித்தாள் ரேச்சல். "இவ்வளவு வருஷமா பழகியும் நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா மேரி? என்னோட உயிர் பிரியறதைப் பத்தியா நான் கவலைப்படறேன்? அதைப்பத்தின கவலையோ பயமோ எனக்குக் கொஞ்சம் கூட கிடையாது. ஏன்னா, என் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எந்தக் குறையும் இல்லை. இந்த நர்ஸ் சேவையில என்னோட மனசுக்கு நல்ல நிம்மதி, ஆறுதலெல்லாம் கிடைச்சாச்சு. அனாவசியமான ஆசைகளை எனக்குள்ள உருவாக்கிக்கிட்டு அதெல்லாம் கிடைக்கலியேன்னு ஆதங்கப்பட்டதும் இல்லை... நம்ம பெரிய டாக்டர் செங்குட்டுவனும், அவரோட மகன் சின்ன டாக்டர் இளங்கோவும் என்னை அவங்களோட குடும்பத்துல ஒருத்தியா நேசிக்கறாங்க. கவனிச்சிக்கறாங்க. இதோ அறுபத்தஞ்சு வயசு தாண்டியாச்சு. உயிர் மேல ஆசை வச்சு இன்னும் நீண்ட நாள் வாழணும்னா நான் நினைக்கிறேன்...?"
"அதில்ல அக்கா, உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? உங்க முகத்துல ஒரு இனம் புரியாத வேதனை இருந்துக்கிட்டே இருக்கு. அது தொடர்பான சிந்தனையிலேயே மூழ்கிப் போயிருக்கீங்க? எதையோ யோசிக்கறீங்கன்னு மட்டும் தெரியுது. ஆனா என்னவா இருக்கும்னு என்னால யூகிக்க முடியலை. மத்தபடி, நோய் காரணமாத்தான் இப்படி இருக்கீங்கன்னு உங்களைப் போய் நான் நினைப்பேனாக்கா?... என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க..."
"உன்கிட்ட சொல்றதுக்கென்ன மேரி. என் மனசுக்குள்ளேயே புதைச்சு வச்சிருக்கறதை விட வெளியில சொல்லிட்டா எனக்கும் கொஞ்சம் பாரம் குறையும். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு பணக்கார வீட்டுப் பொண்ணு இங்க பிரசவத்துக்கு வந்திருந்தா. அவ பேர் கூட பிரபான்னு ஞாபகம். அதே சமயம் இந்த ஊருக்குப் பக்கத்து கிராமத்துல இருந்து ஒரு அபலைப் பொண்ணு பிரசவத்துக்கு வந்திருந்தா. அந்தப் பொண்ணு எவன் கிட்டயோ ஏமாந்து வயித்துல பிள்ளையோட இங்க வந்தா. அவ ரொம்ப பலவீனமா இருந்தா. அதனால அதிகப்படியான ரத்தப் போக்கு வேற. குழந்தையைப் பெத்துட்டு செத்துப் போயிட்டா. அதே சமயம், பணக்கார வீட்டுப் பொண்ணுக்கும் பிரசவமாச்சு. ஆனா அவளோட குழந்தை பிறந்த மறுநிமிஷமே செத்துடுச்சு. ஒரு பக்கம் தாயில்லாத ஒரு குழந்தை. இன்னொரு பக்கம் பெத்த குழந்தை செத்துப் போனது கூட தெரியாத மயக்கத்துல ஒரு தாய். எனக்கு அந்தத் தாய் மேலயும், குழந்தை மேலயும் ரொம்ப பரிதாபமாயிடுச்சு. அதனால செத்துப் போன குழந்தையைத் தூக்கி, பிரசவத்துல கண்ணை நிரந்தரமா மூடிட்ட அபலைப் பொண்ணு பக்கத்துல யாருக்கும் தெரியாம போட்டுட்டேன். அவளுக்குப் பிறந்த குழந்தையைத் தூக்கி பணக்காரப் பொண்ணு பக்கத்துல போட்டுட்டேன். அந்த நேரத்துல அந்த அனாதைக் குழந்தைக்கு ஒரு அம்மாவைக் குடுக்கறோம்ங்கற நல்ல எண்ணம் மட்டும்தான் தோணுச்சு. வேற எதைப்பத்தியும் சிந்திச்சுக் கூட பார்க்கலை. அதனால அப்பிடி செஞ்சேன்..."
"கர்த்தர் மற்ற உயிர்கள் மேல 'இரக்கப்படு'ன்னு தானே சொல்லியிருக்காரு?... நீங்க செஞ்சது நல்ல விஷயம்தானே.. அதுக்கு ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க?..."
"நல்ல விஷயமா இருந்தாலும், ஒரு உண்மையை புதைச்சுட்டேனேன்னு என்னோட மனசாட்சி உறுத்துது. மரணத்தோட எல்லையிலே இருக்கற எனக்கு அந்த உண்மையை சம்பந்தப்பட்டவங்ககிட்ட சொல்லிடணும்னு ஒரே துடிப்பா இருக்கு. சொன்னாத்தான் என் ஆத்மாவுக்கு நிம்மதியும், அமைதியும் கிடைக்கும்..."
"இதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலை? நம்ம ஹாஸ்பிட்டல் ஃபைலைப் பார்த்தா அவங்க அட்ரஸ் கிடைக்கும். லெட்டர் போட்டு வரவழைக்கலாம். ஃபோன் போட்டு பேசலாம்..."
"ஏற்கெனவே நான் எடுத்த முயற்சிதான் அது. அந்த வருஷத்து ஃபைல்ல, அந்தப் பணக்காரப் பொண்ணோட அம்மா வீட்டு அட்ரஸ்தான் இருக்கு. அந்த அட்ரஸ்க்கு லெட்டர் போட்டேன். அப்பிடி யாருமே இல்லைன்னு லெட்டர் திரும்பி வந்துடுச்சு..."
"அந்தப் பெண் கூட வந்தவங்க வேற யாரையாவது தெரியுமா?"
"அவளோட கணவரை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ரொம்ப உயரமா இருப்பார். சராசரி உயரத்தை விட அதிகமான உயரம். அதனால மட்டுமில்ல, அவர் ரொம்ப நல்லவர். அந்தப் பொண்ணை இங்கே சேர்த்ததில் இருந்து தினமும் வருவார். பொண்டாட்டி மேல உயிரா இருந்தாரு. என் கூடயும் 'சிஸ்டர், சிஸ்டர்'ன்னு அன்பா பேசுவாரு. பண்பாடு நிறைஞ்சவரு. அதனால அவரை நல்லா ஞாபகம் இருக்கு. அந்தப் பொண்ணோட அம்மா வீட்டு ஆளுங்களும் மாத்தி மாத்தி வந்து இருந்தாங்க. ஆனா அவங்களுக்குப் போட்ட லெட்டர் திரும்பிடுச்சு..."
"பல வருஷமா உங்க மனசுக்குள்ள இருக்கற இந்த உண்மையை அந்தப் பொண்ணோட கணவர் கிட்டயோ, அவங்க குடும்பத்தினர் கிட்டயோ இப்ப சொல்றதுனால உங்க மனசுக்கு அமைதி கிடைக்கும். ஆனா... அவங்க குடும்பத்துல குழப்பம் வந்துடாதாக்கா?..."
"வரக்கூடும். ஆனா வரக்கூடாது. மனசாட்சிக்குப் புறம்பா நான் செஞ்ச ஒரு காரியத்தை அது நல்லதுக்காகவே இருந்தாலும் கூட அதை சொல்லிட்டாதான் என் மனசுக்கு நிம்மதி. இந்த என்னோட உந்துதல், நல்லதுக்காகத்தான் இருக்கும்னு நான் நம்பறேன். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னு ஆண்டவனை மன்றாடி கேட்டு, பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருக்கேன்."
"உங்க பிரார்த்தனை பலிக்கும் ரேச்சல் அக்கா. அந்தப் பொண்ணோட குடும்பத்தினரை ஆண்டவன் உங்களுக்கு எப்படியாவது காட்டணும்னு நானும் வேண்டிக்கிறேன்க்கா. நீங்க அதையே நினைச்சு கலங்காம, அமைதியா இருங்க. வயித்தைக் காயப் போடாம நல்லா சாப்பிடுங்க. அப்பதான் மருந்து, மாத்திரையெல்லாம் எடுத்துக்க முடியும்."
"சரிம்மா மேரி" கூறிவிட்டு சோர்வுடன் படுத்துக் கொண்டாள் ரேச்சல். பழக்க தோஷமாய், தன் நெற்றியின் நடுவிலுள்ள தழும்பைத் தடவிக் கொண்டிருந்தாள்.
நெஞ்சின் நடுவே சிலுவை போட்டபடி அங்கிருந்து நகர்ந்தாள் மேரி.
14
கிராமத்து ஸ்டேஷன். மிகச்சிறியது. விடிஞ்சும் விடியாத இருட்டு. ஒளி மங்கிய லைட் ஒன்று 'மினுக்'கென்று எரிந்துக் கொண்டிருந்தது. தூக்கம் கலைந்த முகத்துடன், ரயிலிலிருந்து இறங்கினாள் கவிதா. தோளில் நவீன ஏர்-பேக் தொங்கிக் கொண்டிருக்க, கையில் சிறிய ஹாண்ட்-பேக்குடன் அந்தக் கிராமத்து சூழ்நிலையிலிருந்து வெகுவாய் வித்யாசமாய் காணப்பட்டாள். கைப்பையைத் திறந்து ரங்கநாயகியின் விலாசம் இருந்த சிறிய டைரி போன்ற நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள். பிரித்துப் பார்த்தாள். 'ரங்கநாயகி, ஸ்டேஷனுக்கு வர்றதா சொன்னாளே...' நினைத்தபடியே சற்று நேரம் நின்றாள். ரங்கநாயகி வரவில்லை.
மேலும் சில நிமிடங்கள் காத்திருந்தாள்.
'சரியான தூங்கு மூஞ்சி. தூங்கியிருப்பா. அட்ரஸ்தான் இருக்குல்ல. நாமளே போயிடலாம்' நினைத்தபடியே நடக்க ஆரம்பித்தாள். இருட்டில் நடப்பது சற்று சிரமமாக இருந்தது. தோப்பும், துரவுமாக அடர்ந்து இருந்த பகுதி ஆகையால் இருட்டு கப்பியிருந்தது. சமாளித்து நடந்தாள். லேசாக மழை வேறு தூற ஆரம்பித்தது. நிற்காமல் நடையைத் தொடர்ந்தாள்.