மழை நாளில் குடையானாய்! - Page 32
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6834
வெளியில் காவலுக்கு நின்றிருந்த செக்யூரிட்டி, தியாகுவிற்கு சல்யூட் அடித்து உள்ளே அனுப்பினான். அவனுக்கு பணத்தைக் கொடுத்தான் தியாகு. அவர்கள் இருவரும் பங்களாவிற்குள் நுழைந்ததும் பங்களாவின் பெரிய கதவை சாத்தினான் செக்யூரிட்டி. சற்று தள்ளி நின்று இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ப்ரவீன், அந்த பங்களாவிற்குள் சென்றான். செக்யூரிட்டி, ப்ரவீனை நிறுத்தினான். உள்ளே அனுப்ப மறுத்தான்.
ஷர்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு நூறு ரூபாய் தாளை அந்த செக்யூரிட்டியின் முகத்தின் முன் நீட்டினான் ப்ரவீன். ரூபாய் நோட்டைக் கண்ட செக்யூரிட்டியின் கண்கள் விரிந்தன. வாயில் பற்கள் தெரிய சிரித்தான். ரூபாயை வாங்கிக் கொண்டு, ப்ரவீனை உள்ளே அனுப்பினான். உள்ளே நுழைய முற்பட்ட ப்ரவீன், செக்யூரிட்டியிடம் தன் விசாரணையை ஆரம்பித்தான்.
"இப்ப உள்ளே ஒரு பொண்ணு கூட போனாரே அவர் யார்?"
"அவர் யார்ன்னெல்லாம் எனக்கு தெரியாது ஸார். அடிக்கடி பொண்ணுங்களோட வருவார். கை நிறைய காசு குடுப்பார்..."
"இந்த பங்களா...?"
"ஸார் விஷயம் தெரியாமயா வந்துருக்கீங்க? சும்மா என் வாயைக் கிண்டறீங்க. அப்படித்தானே..." அவன் இழுத்த இழுவைக்கு அர்த்தம் புரிந்துக் கொண்ட ப்ரவீன், மேலும் இன்னொரு நூறு ரூபாய் தாளைக் கொடுத்தான். அடுத்து எதுவும் அநாவசியமான கேள்வி கேட்காமல் மடை திறந்த வெள்ளமாய் விபரங்களை அள்ளி வீச ஆரம்பித்தான் அந்த செக்யூரிட்டி.
"ஸார்... உங்களை மாதிரி ஆம்பளைங்க, கண்ணுக்கு அழகான பொண்ணுங்களை இங்கே கூட்டிக்கிட்டு வருவாங்க. உல்லாசமா இருந்துட்டு போவாங்க. பலான விஷயத்துக்குன்னே இந்த பங்களாவை வாடகைக்கு எடுத்திருக்கார் ஒருத்தர். இதோட ஓனருக்கு இங்கே நடக்கற எதுவும் தெரியாது. அவர் மலேஷியாவுல இருக்காரு. மாசா மாசம் ஒழுங்கா வாடகை பணம் போயிடுச்சுன்னா போதும். வேற எதுவும் கேட்க மாட்டார். லாட்ஜ்ல போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குன்னு இந்த மாதிரி பங்களாவுக்கு வந்துடறாங்க... இவ்வளவுதான் ஸார் எனக்குத் தெரியும். எனக்கும் மாசம் பிறந்து ரெண்டாந்தேதி ஆச்சுன்னா கரெக்ட்டா சம்பளம் வந்துடும். மேல் வருமானம் உங்களை மாதிரி ஆளுங்களால. ஆமா... நீங்க ஏன் ஸார் தனியா வந்திருக்கீங்க...? ஜோடி வரலியா?"
"நான் வேற ஜோலியா வந்திருக்கேன்" கூறிய ப்ரவீன், பங்களாவின் காம்பௌண்டிற்குள் சென்று ஒரு மரத்தடியில் நின்று கொண்டான். பல ஜோடிகள் பங்களாவிற்குள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தியாகும், ராதிகாவும் தோளோடு தோள் உரசியபடி வெளியே வந்து வந்த வழியே நடந்தனர். ப்ரவீனும் ஜாக்ரதையாகப் பின் தொடர்ந்தான். ஏற்கெனவே கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்த அவர்கள் இருவரும் காரின் அருகே நின்று சில நிமிடங்கள் சிரித்துப் பேசினர்.
தியாகு தன் காரில் ஏறிக் கொள்ள, ராதிகா அங்கே நின்றிருந்த வாடகை காரில் ஏறிக் கொண்டாள். கார்கள் புறப்பட்டன. ராதிகா போகும் காரை ஆட்டோவில் பின் தொடர்ந்து சென்றான் ப்ரவீன். ராயப்பேட்டையில் ஒரு தெருவின் முனையில் இறங்கிக் கொண்டாள் ராதிகா. ப்ரவீனும் இறங்கினான்.
காரில் இருந்து இறங்கிய ராதிகா, இரண்டு தெருக்களைக் கடந்து, நடந்து சென்று ஒரு வீட்டிற்குள் சென்றாள். அந்த வீடு மிகவும் சிறியது. அந்த சிறிய வீட்டையும் பல போர்ஷன்களாகப் பிரித்து புறாக்கூடு போல அமைந்திருந்தது. மறைவாக நின்று கண்காணித்தான் ப்ரவீன்.
"என்னம்மா இது இவ்வளவு லேட்டாயிருச்சு?" ராதிகாவின் தாயாக இருக்க வேண்டும்.
"அதான் சொன்னேனேம்மா நைட் ட்யூட்டின்னு..."
"சரிம்மா. சாப்பிடவா." கனிவாகக் கூறினார் அம்மா.
"வேணாம்மா. நான் கேன்ட்டீன்ல சாப்பிட்டுட்டேன். எனக்கு தூக்கம் வருது." அதற்கு மேல் அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை. ப்ரவீன் கிளம்பினான். அப்போது நடுத்தர வயதில் உள்ள ஒருவர் ப்ரவீனிடம் வந்தார்.
"என்ன தம்பி... மறைவா நின்னு என்ன பார்க்கறீங்க? அந்தப் பொண்ணைத் தேடி வீட்டுக்கே வர ஆரம்பிச்சுட்டீங்களா... அந்தப் பொண்ணோட அம்மாவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சதுன்னா... அவ்வளவுதான். தூக்குல தொங்கிடும். ஏழையா இருந்தாலும் கௌரவமா வாழணும்னு நினைச்சு, கஷ்டப்பட்டிருக்கற குடும்பம். வாயைக் கட்டி வயித்தைக் கட்டி இந்தப் பொண்ணை படிக்க வச்சாங்க. ஆனா அதோட துரதிர்ஷ்டமோ என்னமோ வேலையே கிடைக்கலை. வேலை கிடைக்காட்டா கூட மானத்தோட வாழறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனா, இந்தப் பொண்ணு ராதிகா தடம் புரண்ட ரயில் மாதிரி தடுமாறிடுச்சு. நல்லா உடுத்தணும், நல்லா சாப்பிடணும், வசதியா இருக்கணும்னு ஆசைப்பட்டு அந்த ஆசைக்கு பலியாயிடுச்சு. வேலைக்குப் போறதா அவங்கம்மா கிட்ட பொய் சொல்லிட்டு தவறான பாதையில போய்க்கிட்டிருக்கா. ஒரு நாள் ஹோட்டல்ல எவனோ ஒரு பணக்காரன் கூட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தா. என்னைப் பார்த்ததும் பயந்து போய் ஒளிஞ்சுக்கிட்டா. மறுநாள் அவளைத் தனியா சந்திச்சுக் கேட்டப்ப, 'உங்களுக்கென்ன வந்துச்சு? என் இஷ்டப்படிதான் நான் இருப்பே’ன்னு முகத்தில அடிச்சாப்ல சொல்லிட்டா. அதில இருந்து என் கூட பேசறது இல்லை. இப்ப எதுக்காக இதையெல்லாம் சொல்றேன்னா, அவளைத் தேடி இங்க, வீடு வரைக்கும் வராதீங்க. நாலு நல்ல குடும்பங்கள் குடித்தனம் நடத்தற இடத்துக்கு இப்பிடி அவளைத் தேடி வர்றது கௌரவமா இல்ல. ராதிகாவோட அப்பா செத்துப் போனதுக்கப்புறம் அவங்கம்மா உருக்குலைஞ்சு போயிட்டாங்க. இந்தப் பொண்ணு விஷயம் தெரிஞ்சு போச்சுன்னா பெரிய சிக்கலாயிடும். ப்ளீஸ் இனிமே இங்க வராதீங்க..." அவர் நீளமாக பேசி முடித்தார். ப்ரவீனின் பதிலை எதிர்பார்க்காமலே அவர் அங்கிருந்து நகர்ந்தார். மீண்டும் திரும்பி வந்து "அந்தப் பொண்ணை நான் கண்டிக்கப் போக, அதுல இருந்து அது என் கூடப் பேசறதில்லை. அவங்கம்மா கிட்ட என்ன சொல்லுச்சோ ஏது சொல்லுச்சோ அந்தம்மாவும் என்னைப் பார்த்தா முகத்தைத் திருப்பிக்கறாங்க... ம்... நல்லதுக்கு காலமில்ல..." பேசியபடியே அங்கிருந்து போனார்.
அவர் கூறியதையெல்லாம் கேட்ட ப்ரவீனுக்கு அந்த இரவிலும், குளிரிலும் கூட வியர்த்தது. 'நல்ல பொண்ணு ராதிகா.. இப்பிடி மாறிட்டாளே. பொருளாதாரத் தேவைக்காக எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமான மானத்தையே விற்பனை செய்ற அளவுக்கு மாறிட்டாளே’ கவலை குறையாத மனதுடன் ஆட்டோவில் ஏறிக் கொண்டான் ப்ரவீன்.