காதல் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
தன்னுடைய கணவரின் நண்பர் ஒரு எல்லைக்கும் மேலே தங்கள் மீது ஈடுபாடு கொண்டிருப்பதையும், தங்களுக்கு உதவுவதையும் தேவை என்று மாதவி அம்மா நினைக்கவில்லை. தேவையில்லை என்று நினைத்தது மட்டுமல்ல, அவர் அப்படி நடந்து கொள்வது தங்களின் மனத்துணிச்சலைக் குறைக்கச் செய்கிறது என்று அவள் நினைத்தாள். அவள் அப்படி நினைத்தது நியாயமாகக் கூட இருக்கலாம். ஆனால், மாதவி அம்மாவின் குணமோ, அவள் அப்படி மனதில் நினைத்து நடந்ததோ அவரை எதுவும் செய்யவில்லை. அந்தக் குடும்பத்துடன் அவர் கொண்டிருந்த உறவில் சிறிதுகூட மாற்றம் உண்டாகவில்லை. அவரைப் பொறுத்தவரையில் எல்லாமே முன்பு இருந்ததைப் போலவே நடந்து கொண்டிருந்தன.
சசிக்கு மட்டுமே மாறிய சூழலால் உண்டான மாற்றத்தை வருத்தத்துடன் பார்க்க முடிந்தது. தன்னுடைய தாயின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக உண்டாகியிருந்த மாற்றத்தைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். ஆச்சரியப்பட்டதோடு மட்டுமல்ல-அது அவனைக் கவலை கொள்ளவும் வைத்தது. அப்படிப்பட்ட குணமாற்றம் எதையும் அவன் தன் தந்தையிடம் பார்க்கவில்லை. என்றாலும், தன்னுடைய வீட்டுச் சூழ்நிலையில் என்னவோ பிரச்சினை உண்டாகியிருக்கிறது என்று அவன் சந்தேகப்பட்டான். எனினும், எதுவுமே நடக்கவில்லை என்பதைப்போல- அதே நேரத்தில் அப்படி எதுவும் நடந்திருந்தால் கூட அது தனக்குச் சிறிதும் தெரியாது என்பதைப் போல அவன் நடந்து கொண்டான். முன்பிருந்தே அவனுடைய தாய் சிறிது முன் கோபமும் வீண் பிடிவாதம் கொண்ட பெண்ணாகவுமே இருந்து விட்டாள். வானத்தின் முகத்தைக் கருமி ஆக்கிவிட்டு, பெய்யாமலே போய்விடுகிற மழை மேகத்தைப் போல அவனுடைய தாயின் குணம் அவ்வப்போது இந்த மாதிரி வெளிப்படும். வெளிப்பட்ட அடுத்த நிமிடம் போயும் விடும். போகாமல் இருக்கின்ற நேரத்தில் மட்டும் காற்றில் கொஞ்சம் வெப்பம் இருப்பதை உணர முடியும். அது இயற்கையில் கலந்திருக்கும் குணம். அந்த குணம்தான் சசியின் தாயிடமும் இருந்தது. சசி அதை ஏற்கெனவே நன்கு தெரிந்திருந்தான்.
சசியின் ஒரு பிறந்த நாளன்றுதான் அந்தப் பெட்டியின் மூடியைத் திறக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. அன்று வரை வெறுப்பையும் கோபத்தையும் அந்த இரண்டு தாய்மார்களும் மிகவும் ஆழத்தில் அந்தப் பெட்டிக்குள் மூடி வைத்திருந்தார்கள். சசியின் பிறந்த நாளுக்கு நிர்மலாவின் குடும்பமும் நிர்மலாவின் பிறந்த நாளுக்கு சசியின் வீட்டைச் சேர்ந்தவர்களும் பங்கு பெறாமல் ஒருமுறை கூட இருந்தது இல்லை. மற்ற எந்த விஷயத்தில் சாக்குப்போக்கு சொல்லி விலகியிருந்தாலும் பிள்ளைகளின் பிறந்த நாளன்று ஒன்று சேர்வது என்பது ஒரு கட்டாய விஷயமாக இருந்தது. எனினும் அந்தப் பிறந்த நாளுக்கு நிர்மலாவுடன் சசியின் வீட்டிற்குச் செல்ல மாதவி அம்மா தயாராக இல்லை.
"நீ போயிட்டு வா, குழந்தை... நான் வரல. அங்கே சசி வயசுல இருக்குற அவனாட நண்பர்கள்தான் பெரும்பாலும் வருவாங்க. அவங்களுக்கு மத்தியில நான் இருந்து என்ன செய்யப் போறேன்?"- நிர்மலா தொடர்ந்து கட்டாயப்படுத்தியபோது மாதவி அம்மா சொன்னாள்.
"என்னம்மா பேசறீங்க? இதுக்கு முன்னாடி நீங்க இப்படியெல்லாம் பேசினது இல்லையே! சசியோட பிறந்த நாளுக்கு நாம இதுவரை போகாம இருந்திருக்கோமா?"- நிர்மலா கேட்டாள். அவளுக்கு கவலையுடன் கோபமும் இருந்தது.
"இதுவரை போகாம இருந்ததில்லைங்கறதுக்காக இனிமேல் போகாம இருக்கக்கூடாதா என்ன? அப்படி இருக்கக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் கிட்டம் இருக்குதா? ஒவ்வொரு நேரத்துக்கும் ஏற்றபடி தானே நாம ஒவ்வொண்ணையும் செய்யணும். அப்படிச் செய்யறது தானே சரி!"
அதைக்கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள் நிர்மலா. அப்படியொரு பேச்சை தன் தாயின் வாயிலிருந்து அவள் அப்போதுதான் முதல் தடவையாகக் கேட்கிறாள். அதனால் அவள் சொன்னாள்: "அம்மா, இப்போ நீங்க நடந்துக்கறதை என்னால புரிஞ்சுக்கவே முடியல."
"வயது ஏற ஏற இப்போ புரிஞ்சிக்க முடியாத பலதையும் அப்போ உன்னால புரிஞ்சிக்க முடியும். நம்ம வாழ்க்கையில புரிஞ்சிக்க முடியாத பல விஷயங்களும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. என் அளவு வயசு ஆகறப்போ அதுல பலவற்றை நீ அனேகமா புரிஞ்சுக்குவே!"
"என்ன, முட்டாள்தனமா பேசுறீங்க!"
"அப்படியே இருக்கட்டும். முட்டாள்தனம்னே நீ நினைச்சுக்கோ!"
"அம்மா, நீங்க வரலைன்னா நானும் போகல"- அதைச் சொன்னபோது அவளுடைய கண்களில் நீர் நிறைந்து விட்டது. அதற்குப் பிறகு அவள் எதுவும் பேசாமல் முகத்தை 'உம்' என்று வைத்துக்கொண்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டாள்.
"நீ போயிட்டு வா, குழந்தை. எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு. அதனாலதான் சொல்றேன். நீ போயிட்டு வா. நீங்க ஒரே வயசைச் சேர்ந்தவங்க தானே! நான் வந்து என்ன பிரயோஜனம்?"- மாதவி அம்மா மென்மையான குரலில் சொன்னாள்.
"இல்ல... அம்மா, நீங்க வராம நான் போறதா இல்ல. உங்க உடம்புக்கு முடியலைன்னா, நானும் போகல"- நிர்மலா உறுதியான குரலில் சொன்னாள். கடைசியில் வெற்றி பெற்றதென்னவோ அவள்தான். சிறிது தாமதமானால்கூட தன் தாயையும் அழைத்துக்கொண்டுதான் நிர்மலா சென்றாள். அவர்களை அழைத்துக்கொண்டு போவதற்காக சசியே காருடன் வந்திருந்தான்.
சசியின் தந்தையும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து முன்பக்கத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரபாகர் மிகவும் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். மதுவின் போதையில் மிதந்து கொண்டிருந்த கொடுங்கல்லூர்புரம்! சிறிது மது உள்ளே நுழைந்தால் கூட போதும், பிரபாகர் முற்றிலும் மாறிவிடுவார். அதற்குப் பிறகு பாட்டுதான், ஆட்டம்தான். அந்தப் பாட்டிலும் ஆட்டத்திலும் யார் இருந்தாலும், என்ன செய்தாலும் அவருக்குத் தெரியாது. அந்தச் சமயத்தில் ஆண், பெண் குழந்தைகள், வயதானவர்கள் எல்லாருமே அவருக்கு ஒரே வயதைச் சேர்ந்தவர்கள்தாம். நிர்மலாவிற்கும் அவளுடைய வயதையொத்த சினேகிதர்கள் இருந்தார்கள். பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம்பெண்கள். இடையில் அவ்வப்போது அவர்களைத் தேடி இளைஞர்கள் வருவதுண்டு. ஆனால் தீப்பந்தத்தைப் போன்ற கண்களுடன் காவல் காத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு முன்னால் அப்படி நாடி வரும் இளைஞர்களின் ஆசை முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிடும். தனியாக நின்றிருந்தது மாதவி அம்மா மட்டும்தான். இடையில் ஒன்றிரண்டு தடவைகள் சசியின் தந்தை வந்து என்னவோ பொழுதுபோக்குக்காகப் பேசிவிட்டுச் சென்றார். சசியின் தாய், தனக்கு அதிகமாக வேலை இருப்பதைப் போல் காட்டிக்கொண்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாளே தவிர, மாதவி அம்மாவை அவள் சிறிது கூட கவனிக்கவே இல்லை.
அறிமுகமான ஒன்றிரண்டு பெண்களுடன் சிறிது நேரம் குசலம் விசாரித்த மாதவி அம்மா தன் மகளை அழைத்தாள்.