காதல் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
ஆரம்பத்தில் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் அந்தக் காய்ச்சலின் தீவிரம் அதிகமாகியது. மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை செய்தனர். ஒரு சூழ்நிலையில் காப்பாற்ற முடியுமா என்ற எண்ணம் எல்லாரிடமும் உண்டாக ஆரம்பித்தது. ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன என்ற நிலை வந்தபோது கடவுள் சக்தி துணைக்கு வந்தது. வந்ததைப் போலவே நம்ப முடியாத அளவிற்கு நோய் போகவும் செய்தது. எல்லாருக்கும் அப்போதுதான் நிம்மதி வந்தது.
ஆனால், டாக்டர்களின் கருத்து என்னவென்றால் தங்களின் சிறப்பான சிகிச்சை முறைகளோ கடவுள் சக்தியோ விஜயத்தைக் காப்பாற்றவில்லை என்பதுதான். விஜயத்தை ஆபத்தான கட்டத்திலிருந்து காப்பாற்றியது மாதவி அம்மாவின் சுயநலமற்ற கவனிப்பு மட்டுமே என்றார்கள் அவர்கள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர்கள் அதைச் சொன்னார்கள். ஒருவேளை அது உண்மையாகக்கூட இருக்கலாம். விஜயம் உடல் ரீதியாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற உண்மை தெரிந்த நிமிடத்திலிருந்து அவளுடைய படுக்கையை விட்டு ஒரு நொடி கூட அகலாமல் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாய் அக்கறையுடன் கவனிப்பதைவிட ஈடுபாட்டுடனும் உண்மையுடனும் மாதவி அம்மா பார்த்துக் கொண்டாள். அந்த நாட்களில் எந்தவொரு விஷயத்துக்காகவும் தன்னுடைய வீட்டுப்பக்கம் கூட அவள் போகவில்லை. இரவு, பகல் எந்நேரமும் உறக்கத்தைக்கூட விலக்கி விஜயத்தின் அருகிலேயே அவள் இருந்தாள். விஜயம் தன்னுடைய சுகமற்ற நிலையிலிருந்து முழுமையாக விடுபட்டு படுக்கையை விட்டு எழுந்து தன்னுடைய வேலைகளைத் தானே பார்க்கக்கூடிய நிலையை அடையும் வரை மாதவி அம்மா அவளுடனே இருந்தாள். அந்த அளவிற்கு இருக்க வேண்டியதில்லை என்று மற்றவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், மாதவி அம்மாவுக்கென்று தனிப்பட்ட தீர்மானங்கள் இருந்தன.
அதற்குப் பிறகு அந்த இரண்டு குடும்பங்களின் வாழ்க்கைப் பெருவெள்ளம் ஒன்றாகச் சேர்ந்து மலையிலிருந்து ஓடிவரும் அருவியைப் போல எதிரில் இருக்கும் அமைதியான புல்வெளியை நோக்கி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. முழுமையான மகிழ்ச்சியுடன் ஓடிக்கொண்டிருந்த ஒரு வாழ்க்கைப் பெருவெள்ளம்... ஆனால், மீண்டும் போட்ட கணக்குகள் தவறாயின.
எது நிலையானது, எது நிரந்தரமானது என்று பலரும் கேட்கலாம்.
அவர்கள் அப்படிக் கேட்பது சரியே. எதுவும் நிலையானது இல்லை எதுவும் நிரந்தரமானது இல்லை.
இல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்குமென்று யாராவது கனவில் கூட நினைத்திருப்பார்களா? ஆனால், நடந்தது... கனவில் கூட நினைக்காதது நடந்தது.
நிர்மலாவிற்கு பத்து வயது ஆகியிருந்தது. அப்போதுதான் அந்த வருத்தப்படக் கூடிய சம்பவம் நடந்தது.
அவளுடைய தந்தை மரணத்தைத் தழுவினார். அது ஒரு விபத்தில் நடந்தது. அவர் ஓட்டிக்கொண்டிருந்த கார் சரக்குகள் ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி விட்டது. அந்த நிமிடத்திலேயே அவருடைய மரணமும் நடந்துவிட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டிய நிலைமையே உண்டாகவில்லை.
அந்தச் சம்பவம் மாதவி அம்மாவை மிகவும் நிலைகுலையச் செய்துவிட்டது. எனினும், அவள் அதை எப்படியோ தாங்கிக் கொண்டாள். அவளுக்கு அது ஒரு கட்டாயமும் கூட தனக்காக அவள் வாழ வேண்டியதில்லை என்றாலும் வளர்ந்து கொண்டிருக்கும் தன் மகளுக்கு நிழல் தருவதற்காகவும் அவளைப் பத்திரமாகக் கரையில் கொண்டு சேர்ப்பதற்காகவும் உள்ள பொறுப்பு தன்னிடம் தரப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தப்பொறுப்பு தனக்கு மட்டுமே இருக்கிறது என்பதையும் உணர்ந்த அவள் அந்தத் தளர்ந்து போகச் செய்யும் சூழ்நிலையில் தன்னை மூழ்கச் செய்துவிடாமல் தான் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை நினைக்க ஆரம்பித்தாள். அந்த ஒரே காரணத்தால் அவளிடம் உண்டான சோர்வு, ஒரு நிரந்தர சோர்வாக நீடிக்கவில்லை.
பொறுப்புணர்வு அவளுக்கு தைரியத்தைத் தந்தது. வாழ்க்கையில் தனக்கு இனியும் ஒரு லட்சியம் இருக்கிறது என்பதை அவள் உணர்ந்தாள். அந்தப் புரிதலும் மன தைரியமும் கவலையென்ற சுழலில் சிக்கி மூழ்கிப்போய் விடாமல் அவளை அந்தந்த நேரத்தில் கையைப் பிடித்துத் தூக்கி கரை ஏற உதவிக் கொண்டிருந்தன. அதற்குப் பக்கபலம் என்று கூறுகிற மாதிரி அப்போது சசியின் குடும்பம் இருந்தது என்பதென்னவோ உண்மை. அந்த உதவி கிடைப்பதற்காக அவள் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டிருக்கிறாள்! ஆனால், மீண்டும்...
கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சில சம்பவங்கள் அங்கு நடக்கத்தான் செய்தன. அரக்கு கொண்டு ஒட்டியதைப்போல உறுதியாக இருந்த அந்த இரண்டு குடும்பங்களின் நட்பிற்கிடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு அடியோட்டம், ஒரு அழுக்கு நீர் ஓட்டத்தைப்போல ஓட ஆரம்பித்தது. அது எப்படி ஆரம்பித்தது, எங்கிருந்து வந்தது என்று யாருக்குமே தெரியவில்லை. தன்னுடைய சொந்த தங்கையைப் போல எண்ணியிருந்த மாதவி அம்மாவிற்கும் உடன்பிறந்த அக்காவைப்போல எண்ணியிருந்த விஜயத்திற்குமிடையில் தான் அந்த அழுக்கு நீரோட்டம் ஓடிக்கொண்டிருந்தது. யாரும் அதைக் கவனிக்கவில்லை. அந்த இரண்டு பெண்களும்கூட அதைப்பற்றி தெரிந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். எனினும் யாருடைய கவனத்திலும் படாமல் யாருக்கும் தெரியாமல் அந்த நீரோட்டம் பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது.
அதற்குக் காரணம் என்ன? ஒரு காரணமும் இல்லாமல் எதுவும் நடக்கக்கூடியது இல்லையே! ஆனால், தெளிவான ஒரு காரணத்தை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. செயலும் செயலுக்கான காரணமும் அந்த அளவிற்குப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தன.
ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் போல் வாழ்ந்து கொண்டிருந்தனர் அந்த இரு குடும்பத்தினரும். ஆனால்...!
அது அல்ல... சிறிய நீரோட்டமல்ல... ஒரு வெள்ளப்பெருக்கே வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத ஒரு மனிதர் இருந்தார். சசியின் தந்தை... எவ்வளவு பெரிய பூகம்பம் உண்டானாலும் அந்த மனிதரின் சமநிலையைக் குலைக்கவே முடியாது. தன்னுடைய தொழில், எல்லாருடனும் நட்பு, பிறகு சிறித மது அருந்தும் பழக்கம் இதுதான் அவருடைய வாழ்க்கை முறையாக இருந்தது.
மாதவி அம்மாவின் குடும்பத்துடன் முன்பு எந்தவிதத்தில் உதவியாக இருந்தாரோ அதேபோல் தான் இப்போதும் அவருடைய அணுகுமுறை இருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால் மேனனின் மறைவுக்குப்பிறகு, அந்த உறவின் இறுக்கம் அதிகமானதே தவிர, சிறிதும் அது குறையவில்லை. மாதவி அம்மாவின் விஷயத்திலும் அவளுடைய மகளின் விஷயத்திலும் தன்னுடைய நண்பரின் மரணத்திற்குப் பிறகு அவர் சற்று தனியான கவனத்தைச் செலுத்தினார் என்பதும் உண்மை. அவர்களுக்குத் தேவைப்பட்ட எல்லா உதவிகளையும் யாரும் கேட்காமலேயே தானே கண்டும் தெரிந்தும் அவர் செய்தார்.
எனினும், மனதில் வருத்தம் உண்டாவது மாதிரியான சூழ்நிலை அங்கு உண்டாகவில்லை என்று கூறிவிடுவதற்கில்லை.