காதல் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
"அப்படின்னா?"
"புரியலைன்னு நடிக்காதே. இருக்குற விஷயத்தை மனம் திறந்து சொல்லு. அப்படி ஏதாவது இருந்தா...?"
உடனடியாக அதற்குப் பதில் சொல்ல நிர்மலாவால் முடியவில்லை. என்ன கூற வேண்டும் என்பதைப் பற்றி அவள் சிந்திக்க வேண்டியிருந்தது. நன்கு ஆலோசனை செய்த பிறகு மட்டுமே தன் தாயின் கேள்விக்குப் பதில் சொல்லக்கூடிய ஒரு விஷயமாக அது இருந்தது.
"அம்மா, நீங்க அதைக் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்னா நான் சொல்றேன். நேரம் வர்றப்போ சொல்லலாம்னு நான் நினைச்சிருந்தேன். நாங்க ஒருத்தரையொருத்தர் விரும்புறோம்"- கடைசியில் அவள் சொன்னாள்.
"அது எனக்கும் தெரியும். ஆனால், நான் கேட்டது அதை அல்ல. ஒருத்தரையொருத்தர் விரும்புறோம்னு சொன்னா மட்டும் போதாது."
"அதுக்குமேல உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும் அம்மா?"
"அந்த நெருக்கம் எந்த அளவு வரை வந்திருக்கு?"
"யானைத் தலை அளவு..."
"விளையாட்டா பேசாத..."
"பிறகு?"
"விருப்பம் விருப்பம்னு சொல்லிட்டா மட்டும் போதாது. எனக்கு வேற சில விஷயங்களும் தெரியணும்."
"வேற என்ன நீங்க தெரிஞ்சிக்கணும், அம்மா?"
"நீங்க ரொம்பவும் நெருங்கியாச்சா?"
"ஆமான்னு நான் சொல்லிட்டேனே!"
"அப்படியா?"- மாதவி அம்மா அலறினாள். அவளால் அதை நம்ப முடியவில்லை. அதனால் அவள் உண்மையாகவே கலங்கிப் போய்த்தான் அப்படிக் கேட்டாள்.
"ம்..."-நிர்மலா மெதுவான குரலில் சொன்னாள்.
"எவ்வளவு நாட்களாச்சு?"
"எது?"
"உங்க நெருக்கம்!"
"அம்மா உங்களுக்குத் தெரியாதா? சின்னப்பிள்ளைகளா இருக்குறப் போலயிருந்தே நாங்க ஒண்ணா சேர்ந்து விளையாடினவங்கதானே!"
"சின்ன பிள்ளைங்க விளையாட்டு வேறு. இது வேறு."
"இதுன்னு சொன்னா எது? எனக்குப் புரியல."
"எல்லாம் புரியுது. என்னை முட்டாளாக்க நினைக்காதே. உன் வயசைத் தாண்டித்தான் நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன். அதை முதல்ல ஞாபகத்துல வச்சுக்கோ!"
"சரி... அம்மா, உங்களுக்கு இது பிடிக்கலையா?"
"ஆமா... பிடிக்கல. உண்மையை மனம் திறந்து சொல்றதுதானே சரி! உங்களுக்குள்ள இரக்குற இந்த நெருக்கத்தை நான் விரும்பல. அவங்க நமக்கு ஏற்றவங்க இல்ல. பல காரணங்களை வச்சு நான் இதைச் சொல்றேன். அதை மட்டும்தான் இப்போ என்னால சொல்ல முடியும். சசி மேல எனக்கு எந்தவித பகையும் இல்ல. பகை இல்லைன்றது மட்டுமில்ல, என் சொந்த மகனை மாதிரித்தான் அவனை நான் நினைக்கிறேன். ஆனா..."
"பிறகு என்ன அம்மா ஒரு ஆனா...?"
"எல்லாம் ஒரு எல்லைவரை மட்டுமே இருக்கணும். அதைத்தாண்டி போகக்கூடாது."
"நீங்க ஏன் கதை எழுதுறது மாதிரி பேசுறீங்க, அம்மா? இங்கே என்ன எல்லை இருக்கு? அந்த எல்லையை முடிவு செஞ்சது யாரு?"
"இப்படியெல்லாம் கேட்டா நான் என்ன பதில் சொல்றது? பல காரணங்களால நமக்கு அப்படி ஒரு உறவு சரிவராதுன்னு நான் செல்றேன். இப்போ நீ அதை மட்டும் மனசுல வச்சுக்கிட்டா போதும்."
"எனக்குத் தெரியும். உங்களுக்கு சசியோட வீட்டுல இருக்குறவங்க கூட ஏதோ பகை இருக்கு. ஒருவேளை அவங்க நம்ம ஜாதியைச் சேர்ந்தவங்களா இல்லைன்றது காரணமா இருக்கலாம்..."
"அப்படி நினைக்கிறதா இருந்தா நினைச்சுக்கோ. பிறகு... உனக்குத் தெரியும்ல அவன் அம்மாவோட குணம் எப்படின்னு?"
"வாட் நான்சென்ஸ்... நான் சசியைப் பற்றி மட்டும்தான் பேசுறேன். சசியோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஊர்க்காரங்களுக்கும் இந்த விஷயத்துல என்ன தொடர்பு இருக்கு?"
"இப்படியெல்லாம் ஏதாவது நாடகங்கள்லயோ திரைப்படங்கள்லயோ நாவல்கள்லயோ வேணும்னா சொல்லலாம். ஆனால், நடைமுறையில எல்லாரையும் ஒரு ஓரத்துல நிற்கச் சொல்லிட்டு நாம எதுவுமே செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அதுதான் வழக்கத்துல இருக்குறது."
"வழக்காம் வழக்கு! நான்சென்ஸ்! அந்தக் காலமெல்லாம் எப்பவோ முடிஞ்சிடுச்சு. இந்தக் காலத்துல நாங்க யாரும் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படமாட்டோம். நம்ம ஒவ்வொரு பழமையான பழக்கவழக்கங்களும் முட்டாள்தனம்... அட்டர் நான்சென்ஸ்... அம்மா, பேசாம இருங்க. அதையும் இதையும் நினைச்சு தேவையில்லாம அலட்டிக்காதீங்க. எங்க விஷயத்தை நாங்களே பார்த்துக்கறோம்."
அதைச் சொல்லி விட்டு நிர்மலா மீண்டும் புத்தகத்தை எடுத்துத் திறந்தாள். "நான் சொல்றதைக் கேளு. அதுதான் நல்லது. உன் நன்மைக்குத் தானே தவிர, உனக்கு கேடு வர்றது மாதிரி நான் எதுவும் செய்யமாட்டேன்னு உனக்கு உறுதியா தெரியும்ல. இதுவரை உனக்கு அப்படி நான் எதையாவது செய்திருக்கேனா, மகளே? எனக்குன்னு இருக்குற ஒரே பொண்ணு நீதான். நிலைமை அப்படி இருக்குறப்போ, என்னைக் கவலைப்பட வைக்கிற..." -அதைச் சொன்னபோது மாதவி அம்மாவின் தொண்டை இடறியது. நிர்மலாவால் அதை நம்பவே முடியவில்லை. தனக்கும் சசிக்குமிடையே இருக்கும் உறவிற்கு இந்த அளவிற்கு எதிர்ப்பான சூழ்நிலை இருக்கும் என்று அவள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அதுவும் தன்னுடைய தாய் இப்படி எதிர்ப்பாள் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கிடையே, அந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே இருந்தது வெறும் அறிமுகம் மட்டுமல்ல. ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மாதிரிதான் அவர்கள் நடந்து கொள்வார்கள். நிர்மலாவின் தந்தை உயிரோடு இருக்கும்வரை அப்படித்தான் நடந்தது. அவளுடைய தந்தை இறந்தபிறகும் அந்த உறவு அப்படியே தொடர்ந்தது.
அதற்குப் பிறகுதான் காரணமே இல்லாமல் அவர்களுக்கிடையில் சிறிது சிறிதாகக் கீறல்கள் உண்டாக ஆரம்பித்தன. காலப்போக்கில் அந்தக் கீறல் பெரிதாகிப் பெரிதாகி பெரிய ஒரு இடைவெளியே உண்டாகிவிட்டது. இப்போது அதைச் சிந்தித்துப் பார்த்தால் எதற்காக அப்படியொரு மாற்றம் உண்டானது என்பதை நிர்மலாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை சசியின் தாய் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பெண்களுக்கென்று இருக்கும் சாதாரண குண வெளிப்பாடே அது. அதைத்தவிர பெரிய அளவில் எதிர்ப்போ பகையோ வெளியே தெரிகிற மாதிரி எந்த காரணங்களோ நிர்மலாவிற்குத் தெரிந்த அளவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி இருப்பதற்குரிய அவசியங்களும் இல்லை. பிறகு ஜாதி வேறுபாடு... அவர்களுக்கிடையில் ஒருமுறை கூட சிறிது அளவில் கூட இந்த விஷயம் தலையை நீட்டிப் பார்த்ததில்லை. அவர்கள் யாருக்கும் ஜாதி என்ற விஷயம் ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை.
நிர்மலாவின் மனதில் அந்த கடந்த கால நினைவுகள் ஒரு திரைப்படத்தைப் போல தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அதில் தெளிவற்றதாகவோ புரிந்து கொள்ள முடியாமலோ அப்படி எதுவும் இல்லை. அதனால்தான் இன்று தன்னுடைய தாயிடம் காணும் குழப்பமான வெளிப்பாட்டிற்கு அடிப்படையான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை எவ்வளவு முயன்றாலும் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.