காதல் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
"நான்தான் சொன்னேனே; சசி வந்து என்னை அழைச்சார்னு"
"எப்போதும் இல்லாம இப்போ மட்டும்..?"
"எப்போதும் இல்லாதது ஒண்ணுமில்ல. கல்லூரி விடுற நேரத்துல அந்த வழியே அவர் வர்றதா இருந்தா என்னையும் அழைச்சிட்டுத்தான் வருவாரு."
"கார்ல வர்றதா இருந்தா, வழக்கமா வர்ற நேரத்துக்கு முன்னாடி வந்திருக்கலாமே?"
"அம்மா, எதுக்கு ஒரு புலனாய்வு அதிகாரியைப் போல துருவித் துருவி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க?"- நிர்மலா வெறுப்புடன் தன் தாயைப் பார்த்துக் கேட்டாள்.
"நான் துருவித் துருவி ஒண்ணும் கேட்கல. எப்போதும் இல்லாதது மாதிரி இப்போ ஏன் வீட்டுக்குத் தாமதமா வந்தேன்னு கேக்குறேன். ஒரு பெற்ற தாய்க்கு இதைக் கேக்குறதுக்குக்கூட உரிமை இல்லையா என்ன?"
"அதிகாரம் இல்லைன்னு ஆயிடுமா... ஏதாவது காரணத்தால கொஞ்சம் தாமதமா வர்றது மாதிரி சூழ்நிலை உண்டானா, தாமதமா வர்றதுக்கான சுதந்திரம் எனக்கும் இருக்குல்ல? நானும் ஒரு வளர்ந்த பெண்தானே? மற்ற பெண்களைப் போல எனக்கும்..." - அவள் தான் சொல்லிக் கொண்டிருந்ததை முழுமையாக முடிக்கவில்லை. அதை அவள் முடிக்காமலே தயங்கினாள்.
"என் மகளே... நீ ஒரு வளர்ந்த பெண் இல்லைன்னு நான் சொன்னேனா? ஏன் இவ்வளவு தாமதமா வந்தேன்னு மட்டும்தான் கேட்டேன்... பிறகு... வளர்ந்த பொண்ணுன்றதுக்காக நீ செய்யறது எல்லாம் சரியா இருக்கும்னு சொல்றதுக்கு இல்ல. அதையும் நான் சொல்லலாம் இல்ல..."
- அவள் சொன்னது எதுவும் காதில் விழாத மாதிரி நிர்மலா சொன்னாள்: "சசி வற்புறுத்தி சொன்ன ஒரே காரணத்துக்காக வர்ற வழியில காபி ஹவுஸ்ல காபி குடிச்சேன். அங்கே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு உட்கார்ந்திருந்தோம். நான் அதைச் செய்யக்கூடாதா?"
"அப்படின்னா நீ ஏற்கெனவே சொன்ன மாதிரி அவனுக்கு அப்படியொண்ணும் அவசரம் இல்ல... அப்படித்தானே?"
அதற்கு என்ன பதில் கூறுவது என்பது தெரியாமல் நிர்மலா தயங்கினாள். அவன் அவசரத்தில் இருந்தான் என்று முன்பு கூறியது தான் தவறாகப் போய்விட்டது என்று அவள் நினைத்தாள். எது எப்படி இருந்தாலும் மாதவி அம்மா அந்த விஷயத்தைப் பற்றி அதற்குமேல் அவளிடம் கேட்கவில்லை. அவளுடைய மனதில் என்னவெல்லாமோ சிந்தனைகள் குருவிகளைப் போல கூடுகள் கட்டிக் கொண்டிருந்தன. அதை வெளியே தெரியவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் அவள் வேகமாக மகளின் பாத்திரத்தில் உணவைப் பரிமாறினாள்.
நிர்மலா முகத்தை உயர்த்திப் பார்த்தாள். தன் தாயின் முகபாவம் மாறி விட்டிருந்ததை அவள் கவனிக்காமல் இல்லை. இந்த அளவிற்கு முகத்தில் மாறுபட்ட உணர்ச்சிகள் தெரியக்கூடிய மாதிரி அப்படி என்ன நடந்து விட்டது? அவளுக்கு அதுதான் ஆச்சரியமாக இருந்தது.
"அம்மா, எதுக்கு வீணா கவலைப்படுறீங்க? நான் என்ன செய்யறேன்னு எனக்கு நல்லா புரிஞ்சுதான் செய்யறேன். நீங்க அதைப்பற்றி கவலையே படவேண்டாம். நான் ஒண்ணும் விரலைக் கடிக்கிற குழந்தை இல்ல..."
மாதவி அம்மா அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை.
"அம்மா, நீங்க சாப்பிடலியா?"- நிர்மலா கேட்டாள்.
"இல்ல... எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு நான் மெதுவா சாப்பிடுறேன். நீ சாப்பிட்டுட்டுப் போ!"
நிர்மலா அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.
பேசியது அவளுடைய தாய்தான். சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு அவள் மீண்டும் தன் மகளைப் பார்த்துக் கேட்டாள்: "நீ சசிகூட அடிக்கடி இப்படிப் போறது உண்டா?"
"அம்மா, திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? சசிக்கு என்னைத் தலையில வச்சுக்கிட்டு நடக்கிறதுதான் வேலையா?"- அவள் கோபத்துடன் கேட்டாள். "நான் அதைக் கேட்கல. நான் கேக்குறதுக்கு நீ பதில் சொன்னா போதும். வளர்ந்த பொண்ணுன்றதுக்காகத் தான்தோன்றித்தனமா நீ பேசக்கூடாது."
"நான் அப்படி தான்தோன்றித்தனமா இப்போ என்ன பேசிட்டேன்?"
"நீ சசிகூட இந்த மாதிரி அடிக்கடி போவியான்னு மட்டும்தான் கேட்டேன்."
"ம்..."- அவள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்.
அதற்குப் பிறகு சிறிது நேரத்திற்கு மாதவி அம்மா எதுவும் பேசவில்லை. பேசுவாள் என்றும் தோன்றவில்லை.
தன் தாய் மவுனமாக இருக்கவே, நிர்மலா கேட்டாள்: "சசிகூட நான் போகுறது உங்களுக்குப் பிடிக்கலையா, அம்மா?"
"நீ சாதத்தை முழுமையா சாப்பிடு... அதையும் இதையும் பேசிக்கிட்டு நேரத்தை வீண் பண்ணுறியே தவிர, சாதத்தை நீ ஒழுங்கா சாப்பிடல. இவ்வளவு நேரமான பிறகும், சாப்பாட்டுல கொஞ்சம் கூட மீதி இருக்கக்கூடாது. சின்னக் குழந்தைகளைவிட நீ மோசம்..." -மாதவி அம்மா வேகமாக விஷயத்தை மாற்றினாள். அது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள நிர்மலாவிற்கும் அதிகக் கஷ்டமாக இல்லை. அதைத் தொடர்ந்து அவளும் சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.
சில அமைதியான நிமிடங்கள் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு கடந்து சென்றன.
'சாயங்காலம் காப்பி குடிச்சதுனால, பசி இல்லாமல் போயிருக்கும். கண்ட இடத்துக்குள்ளேயும் நுழைஞ்சு அதையும், இதையும் சாப்பிட்டா, பசி இல்லாமத்தான் போகும். கல்லூரி விட்ட உடனே நேரா வீட்டுக்கு வரணும் பிள்ளைங்க... ம்... வளர்ந்த பொண்ணாம், வளர்ந்த பொண்ணு!"
மாதவி அம்மா முணுமுணுத்தாள். தொடர்ந்து அவள் மேஜை மீதிருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒதுக்கி வைத்தாள். அது எதையுமே கேட்காதது மாதிரியும், காணாதது மாதிரியும் காட்டிக் கொண்ட நிர்மலா மெதுவாக எழுந்து கையைக் கழுவுவதற்காகச் சென்றாள்.
கை கழுவிக் கொண்டிருந்தபோது அவளுடைய மனதிற்குள் புகைந்து கொண்டிருந்தது திடீரென்று வெளியே வந்தது.
-அவள் சொன்னாள்: "அம்மா, எதையும் ஒரு அளவோட பேசுங்க."
3
வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு, சமையலறையிலும், ஹாலிலும் இருந்த விளக்குகள் ஒவ்வொன்றையும் அணைத்து விட்டு மாதவி அம்மா படுக்கையறையை நோக்கிச் சென்றாள். நிர்மலா இன்னும் தூங்கவில்லை. அவள் எதையோ படித்துக்கொண்டு படுத்திருந்தாள். மேற்கத்திய இசையை வெளியிட்டுக்கொண்டிருந்த ட்ரான்சிஸ்டரின் ஓசையை மிகவும் குறைவாக்கிக் கொண்டு அதை அவள் தன் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தாள்.
மாதவி அம்மா அறைக்குள் நுழைந்தவுடன் வேகமாக எழுந்து படுக்கையின் மத்தியில் சம்மணம் போட்டு அமர்ந்த கொண்டு சுவரைச் சுட்டிக் காட்டியவாறு நிர்மலா சொன்னாள்: "அம்மா... அந்தப் பல்லி திரும்பவும் வந்திருக்கு."
"அது அதன் போக்குக்கு வரும், போகும். எது வேணும்னாலும் செய்யட்டும். அதைப்பற்றி உனக்கு என்ன? உன் மேல அது ஏறி வருதா என்ன?"- மாதவி அம்மா கேட்டாள். தொடர்ந்து அவள் தன் தலைமுடியை அவிழ்த்து, சிக்கலெடுக்க ஆரம்பித்தாள்.