காதல் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
அதனால்தான் அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்த அதிர்ச்சி அவளுடைய முகத்திலும் குரலிலும் தெளிவாகத் தெரிந்தது.
"யார் என்ன சொன்னாலும் சரி... எங்களுக்குச் சரின்னு படுறதை நாங்க நடத்தியே காட்டுவோம். இந்த விஷயத்துல யார் எதிர்த்தாலும், அதனால ஒரு பிரயோஜனமும் இல்ல. நாங்க என்ன செய்யறோம்னு எங்களுக்குத் தெரியும்" கடைசியில் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உறங்குவதற்காகத் திரும்பிப் படுத்தபோது நிர்மலா உறுதியான குரலில் சொன்னாள்: "அம்மா, இதுல நீங்க தலையிடாம இருக்கறதே நல்லது. எங்களுக்குத் தெரிஞ்சு நாங்க எந்தத் தப்பும் பண்ணமாட்டோம்னு உங்களுக்குத் தெரியும்ல? பிறகு எதுக்கு தேவையில்லாம கவலைப்படுறீங்க?"
"நான் எதுவும் சொல்லுறதா இல்ல. சொன்னா உன் தலையில எதுவும் ஏறாது. இருந்தாலும் ஒரு விஷயத்தை நான் உறுதியா சொல்றேன். இப்படிப்பட்ட ஒரு உறவு நமக்கு ஏற்றதல்ல. நமக்கு மட்டுமல்ல, நம்மோட உறவு கொண்டவர்களுக்கும்தான். ஜாதியும் மதமும் நமக்குப் பிரச்சினையில்லாம இருக்கலாம். ஆனால், நாம இருக்குற சமூகத்துக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்கும். அந்தச் சமூகத்தைத் தூக்கி எறிஞ்சுட்டு நாம மட்டும் தனியா வாழமுடியாது. உனக்கு அது புரியவே மாட்டேங்குது. அதனாலதான் நான் அதைத் திரும்பத் திரும்ப உன்கிட்ட சொல்றேன். என் விருப்பமும் என் மன அமைதியும் கொஞ்ச அளவிலாவது உனக்குச் சாதகமா இருக்குறது மாதிரி இருந்தா நீ அந்த வழியில இனிமேல் ஒரு எட்டுகூட முன்னோக்கி வைக்க வேண்டாம். நான் சொல்ல நினைக்கிறது அது ஒண்ணுதான்!"
மாதவி அம்மா சொன்னதை நிறுத்தினாள்.
"என்ன பேசுறீங்க? எல்லாம் ஒரே பைத்தியக்காரத்தனமா இருக்கு!"
மாதவி அம்மா அதற்கு எதுவும் பேசவில்லை.
தன் தாயின் அசாதாரணமான நடத்தை நிர்மலாவின் பதைபதைப்பை மேலும் அதிகரிக்கவே செய்தது. அவளிடம் உண்டான உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு மாதவி அம்மாவின் அன்றைய நடத்தை இல்லை. அவளுடைய தாய் ஒரு பயங்கர பிடிவாதக்காரி என்பதென்னவோ உண்மைதான். அது அவளுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும், இந்த விஷயத்தில்...!
பக்கத்து வீட்டு நாய் அப்போதும் குரைத்துக் கொண்டிருந்தது.
"நாசமாப் போச்சு! அந்த நாய் அமைதியா இருக்கக்கூடாதா?"- யாரிடமோ கோபத்தைப் போக்குவதைப் போல நிர்மலா சொன்னாள்.
"அது அது பாட்டுக்கு குரைக்குது. நீ உறங்கற வழியைப் பாரு. நேரம் எவ்வளவு ஆயிடுச்சு தெரியுமா? நாளைக்குக் காலையில சீக்கிரமா கல்லூரிக்குப் போகணும்ல!"- மாதவி அம்மா சொன்னாள்.
"சரி மம்மி... குட்நைட்."
"குட்நைட் மகளே!"
தலையணைக்கு அருகில் வைத்திருந்த புத்தகத்தை மேஜைமீது வைத்துவிட்டு படுத்த நிலையிலேயே சற்று கையை நீட்டி அவள் விளக்கின் பொத்தானை அழுத்தினாள். ட்ரான்சிஸ்டரையும்தான்.
விளக்கு அணைந்தது. பாட்டும் நின்றது.
அதற்காக வெளியே எங்கோ பொறுமையுடன் காத்து நின்றிருந்த இருட்டு அறைக்குள் வேகமாக நுழைந்தது.
அந்த நாய் அப்போதும் குரைத்துக் கொண்டுதானிருந்தது.
அதை நீக்கி விட்டுப் பார்த்தால்,
பேரமைதி!
4
நடு நிலையான மனநிலையுடன் சிந்தித்துப் பார்த்தபோது தன்னுடைய நிலைக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் செய்யும் நிர்மலாவின் போக்கை மாதவி அம்மாவிற்குப் புரிந்து கொள்ள அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை. அவளின் நிலையில் வேறு யாராக இருந்தாலும் அப்படித்தான் நடப்பார்கள். நினைவு தெரிந்த நாளிலிருந்து நிர்மலாவிற்கு சசியையும் அவனுடைய வீட்டில் உள்ளவர்களையும் நன்கு தெரியும். தெரிவது மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு உறவு அந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே இருந்தது. சொல்லப்போனால் அந்த உறவு நிர்மலாவின் பிறப்பிற்கு முன்பே ஆரம்பித்திருந்தது. சசி, நிர்மலா ஆகியோரின் தந்தைகள் தொழில் விஷயமாக அந்த நகரத்திற்கு வந்திருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து அதில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். சசியின் தந்தை திருமணம் செய்து கொள்ளும் வரையில் அந்த அறையில்தான் இருந்தார். திருமணம் முடிந்த பிறகு மனைவியுடன் சசியின் தந்தை பிரபாகருடன் அப்போது வரை வசித்த இடத்தை விட்டு சற்று தூரத்திலிருந்த கொஞ்சம் சுமாரான ஒரு வீட்டிற்குத் தன் குடியிருப்பை மாற்றினார். அதற்குப் பிறகும் அந்த இரண்டு நண்பர்களின் நட்புறவில் சிறிதும் இடைவெளி உண்டாகவில்லை. இரண்டு பேரும் ஒரு தாயின் பிள்ளைகளைப் போலத்தான் அப்போதும் இருந்தார்கள். பிரபாகரின் மனைவி விஜயம் தன் கணவனின் நண்பர் குமாரமேனனைத் தன் உடன்பிறந்த சகோதரனைப் போல நினைத்தாள். அந்த அளவிற்கு அன்புடனும் பாசத்துடனும் அவர்கள் பழகினார்கள்.
அதற்குப் பிறகு வருடங்கள் படுவேகமாகக் கடந்தோடின. காலத்தின் அந்தப் பயணத்திற்கு ஏற்றபடி அவர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் உண்டாயின. தங்களுடைய தொழிலில் அனுபவங்களும் அறிவும் அதிகமாக உண்டாக உண்டாக அதற்கேற்றாற்போல் உயர்ந்த பதவிகளை நோக்கி அவர்கள் உயர்ந்து கொண்டிருந்தார்கள். அந்த வளர்ச்சிக்கேற்றபடி இயற்கையாகவே அவர்களின் வாழ்க்கை முறையிலும் சூழ்நிலைகளிலும் மாற்றங்கள் உண்டாயின.
சொல்லக்கூடிய விதத்தில் மாற்றம் உண்டாகாமல் இருந்தது இருவரின் நட்பு விஷயத்தில் மட்டும்தான். பிரபாகர் திருமணமாகி குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்திருந்தாலும், அந்தக் குடும்பத்தின் ஒரு நபர் என்ற நிலையில்தான் அப்போதும் குமாரமேனன் இருந்தார். பெரும்பாலும் எல்லா நாட்களிலும் மேனன் பிரபாகரின் வீட்டிற்கு வந்துவிடுவார். அது வெறும் சடங்காக நடக்கவில்லை. அது ஒரு கட்டாயம் என்ற நிலையிலேயே நடந்தது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் விஜயம் சசியைப் பெற்றெடுத்தாள். சசி பிறந்த பிறகு சிறிது நாட்களில் மேனனும் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவியின் பெயர் மாதவி அம்மா. திருமணம் முடிந்து தன் கணவருடன் அவர் தொழில் செய்யும் இடத்திற்குச் சென்றபோது, தன்னுடைய சொந்த வீட்டைத் துறந்து அறிமுகமே இல்லாத ஒரு திசையில் ஒரு புதிய வாழ்க்கைக்கு அடித்தளம் போடுகிறோம் என்ற பிரச்சினை மாதவி அம்மாவின் மனதில் சிறிதுகூட உண்டாகவில்லை. ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையான எல்லா சூழ்நிலைகளையும் வசதிகளையும் அவர்கள் கேட்காமலே உண்டாக்கிக் கொடுப்பதற்கு அங்கு பிரபாகரும் அவருடைய மனைவியும் தயாராக இருந்தார்கள்.
இப்படி எல்லா விதங்களிலும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் அந்த இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையும் ஒளிமயமாக விளங்கியது.
பகலின் வெப்பத்தில்- காலை நேரத்தின் குளிர் மறைந்து போய் விட்டிருந்த வேளையில் சிறிதும் எதிர்பார்க்காமல் மோசமான ஒரு பாதிப்பிற்கு விஜயம் ஆளாக வேண்டி வந்தது. அவளை விஷக் காய்ச்சல் பாதித்தது.