காதல் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
பல தடவைகள் தொலைபேசி மூலம் பேச சசி முயன்றும், அந்த மாதிரி நேரங்களில் நிர்மலா, அவளுடைய தாய் ஆகியோர் நடந்து கொண்ட விதம் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியதாகவும் இருந்தது.
அது சசியை மிகவும் வருத்தமடையச் செய்தது. அப்படிப்பட்ட ஒரு குண மாறுபாட்டை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நாட்கள் படிப்படியாக நீங்க நீங்க அவனுடைய மனக்குழப்பமும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அது நாளடைவில் மிகவும் தீவிரமாகி பைத்தியம் பிடிக்கிற நிலைக்கு அவனைக் கொண்டு சென்றது. கடைசியில் அவனை மிகவும் நிலைகுலையச் செய்யும் அளவிற்கு அது அழைத்துச் சென்றது.
அவன் தேர்வில் வெற்றி பெறவில்லை. பட்டமெதுவும் வாங்கவில்லை. மூன்று வருடங்களின் முடிவில் போட்ட கணக்குகள் எல்லாம் தலைகீழாக மாறின. எல்லா ஆசைகளையும் நெருப்பில் பொசுக்கி விட்டு, எதையும் சாதிக்காமல், எதையும் பெறாமல் சசி ஊருக்குத் திரும்பினான்- பழி வாங்கும் எண்ணத்துடன், அடங்காத வைராக்கியத்துடன், பிடிவாதத்துடன்...
ஊரிலிருந்து படிக்கப்போன சசி அல்ல ஊருக்குத் திரும்பி வந்த சசி.
மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவன் மிகவும் மாறிப் போயிருந்தான். அவன் வளர்ந்திருந்தான். அவன் தன்னுடைய தந்தை அளவிற்கு உயரமாக இருந்தான்.
தாடி வளர்த்திருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். திடீரென்று பார்த்தால் ஒரு பார்வையில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாற்றங்கள் அவனிடம் உண்டாகியிருந்தன.
10
மூன்று வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பி ஊருக்கு வந்த சசி நேராகத் தன்னுடைய வீட்டுக்குப் போவதற்குப் பதிலாக நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றான். அது விவேகமற்ற செயல் என்பதை அவன் அறியாமல் இல்லை. உண்மை நிலை என்னவென்று நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று முன்அறிவிப்பு எதுவும் இல்லாமலே அவன் அங்கு சென்றான்.
விமான நிலையத்திற்கு அருகில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து பொருட்களையெல்லாம் அங்கு வைத்துவிட்டு ஒரு நொடி கூட தாமதமாகாமல் வந்த வேகத்தில் நேராக அவளைத் தேடி ஓடினான்.
அழைப்பு மணி ஒலித்தபோது மாதவி அம்மாதான் கதவைத் திறந்தாள். சிறிதும் எதிர்பார்க்காமல் திடீரென்று தனக்கு முன்னால் வந்து நின்றிருந்த சசியைப் பார்த்ததும் முதலில் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. யார் என்று தெரிந்தபோது அவள் ஆச்சரியத்தில் உறைந்து ஒரு சிலையைப் போல் மரத்துப்போய் நின்று விட்டாள்- ஒரு வார்த்தைக்கூட பேச முடியாமல், சிறிதுகூட அசையாமல்...
சசிக்கும் அதே அனுபவம்தான். நிர்மலாவின் தாய் முன்பு பார்த்த மாதவி அம்மா அல்ல. அவளும் நம்ப முடியாத அளவிற்கு மாறிப் போயிருந்தாள். நெற்றிக்கு மேலே ஒரு பக்கம் தலைமுடி முழுவதும் நரைத்திருந்தது. கண்களைச் சுற்றிலும் கறுப்பு வளையம் விழுந்திருந்தது. நெற்றியில் நீளமான கோடுகள் தெரிந்தன. தாடை எலும்புகள் சிறிது புடைத்துத் தெரிந்தன. மொத்தத்தில் உடல் மெலிந்திருந்தது.
முதலில் தோன்றிய மனக்குழப்பம் சற்று தணிந்தவுடன் அவன் மாதவி அம்மாவிடம் விசாரித்தான்: "நிர்மலா..."
குரலின் கடுமையாலும் முக வெளிப்பாட்டின் மாற்றத்தாலும் அவனுடைய மனதிற்குள் இரைச்சலிட்டுக் கொண்டிருந்த கோபத்தின் வலிமையை அவளுக்குப் புரிந்து கொள்ள சிரமமாக இல்லை. அதனால் அந்தக் கேள்விக்குப் பதிலெதுவும் கூறாமல் மாதவி அம்மா மெதுவாகத் திரும்பி நடந்தாள். அவளுடன் சேர்ந்து சசியும்.
அவர்கள் நேராகப் படுக்கையறைக்குச் சென்றார்கள்.
நிர்மலா அங்கு தன்னுடைய கட்டிலில் கம்பளியால் கழுத்து வரை மூடிக்கொண்டு மல்லாக்க படுத்திருந்தாள்.
அங்கு படுத்திருந்தது தன்னுடைய நிர்மலாதான் என்பதை அவனால் நம்பமுடியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு பூப்போன்ற உதடுகளிலிருந்து வந்த புன்னகை மொட்டுகளுடன் தனக்கு விடை தந்த தன்னுடைய நிர்மலா...
அது என்ன தோற்றம்!
அந்த முகம் முற்றிலும் வெளிறிப்போய் காணப்பட்டது. தளர்ந்து ஒட்டிப்போய் இருந்த முகத்தில் இருட்டான குழிகளுக்குள் புகை படர்ந்த கண்ணாடித் துண்டுகளைப் போல காணப்பட்ட கண்கள் இறந்து போன மீனின் கண்களைப் போல விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் அவளுக்கு அருகில் போய் நின்றும் அப்படியொரு மனிதன் தனக்குப் பக்கத்தில் நிற்பதை அவள் உணரவில்லை என்பது தெரிந்தது. அப்போதும் அவளுடைய பார்வை அறையின் மேற்பகுதியில் எங்கேயோ இருந்தது. அவன் அவளை மேலும் நெருங்கி கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்தபோது மட்டுமே அவள் அதை அறிந்தாள். அவள் மெதுவாக, மிக மெதுவாக முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். அவளுடைய தாய்க்கு உண்டான கஷ்டம் அவளுக்கு உண்டாகவில்லை. ஒரே பார்வையில் தனக்கு அருகில் உட்கார்ந்திருப்பது சசிதான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். ஆனால், அந்தப் புரிதல் அவளுடைய உணர்வு நிலையில் பதிந்த பிறகும் ஆச்சரியம் நிறைந்த குழப்பத்துடன் மிரள மிரள விழிப்பதைத் தவிர வேறெதுவும் அவளால் செய்ய முடியவில்லை. அப்போது குழி விழுந்து போயிருந்த அவளுடைய கண்களில் நீர் நிறைந்தது. உதடுகள் துடித்தன. உடல் தலையிலிருந்து கால்வரை நடுங்கியது. அடுத்த நிமிடம் கட்டுப்பாடே இல்லாமல் அவளுடைய விழிகளிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அருவியென அது இரு கண்களிலிருந்தும் வந்து கொண்டே இருந்தது.
அவள் என்னவோ கூற முயல்கிறாள் என்பதை சசி புரிந்து கொண்டான். ஆனால், நடுங்கிக் கொண்டிருந்த அந்த வறண்டு போன உதடுகளில் ஒலி வெறுமனே சுய உணர்வற்று கிடந்ததே தவிர, அது சிறிதும் வெளியே வரவில்லை. கண்களிலிருந்து அப்போதும் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால் அவளுடைய மனத்தின் கட்டுப்பாட்டு எல்லை உடைந்து போயிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்தவாறு எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்த சசி மிகவும் தளர்வடைந்து போயிருந்தான். அவனுடைய உள்ளுக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்த கோப நெருப்பு அந்தக் கண்ணீரில் அப்படியே அணைந்து போனது.
அவன் கையை நீட்டி விரல் நுனியால் அவளுடைய கண்களைத் துடைத்தான்.
யாரும் எதுவும் பேசவில்லை. யாராலும் பேச முடியவில்லை. அசையக்கூட முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போன நிமிடங்கள் நிலைகுலைந்து போய் எங்கு போகிறோம் என்று தெரியாமலே அமைதியாக அந்த வழியே கடந்து சென்றது.
அப்போது அவளுடைய கை மெதுவாகத் தன்னை நோக்கி நீண்டு வருவதை அவன் கவனித்தான். மெலிந்து எலும்புகள் வெளியே தெரிந்த அந்தக் கையைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்துக் கொண்ட சசி அவற்றைத் தன் மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டான். அப்போது அவன் தன் கட்டுப்பாட்டை மீறி அழத் தொடங்கினான்.