காதல் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
8
சசியின் கழுத்தில் தன் கைகளைச் சுற்றி இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு நிர்மலா நீண்ட நேரம் அழுதாள். ஒரு விதத்திலும் அவளைத் தேற்ற சசியால் முடியவில்லை.
"இங்கே பாரு... அமைதியா இரு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா நான் திரும்பி வந்திடுவேன். வந்தவுடன் நாம திருமணம் செஞ்சிக்குவோம். உன் அம்மா அதற்கு எதிரா இருந்தாங்கன்னா, எதிர்த்துக்கிட்டு அங்கேயே இருக்கட்டும். நம்ம விஷயத்தை நாம பார்த்தால் போதும்"- அவன் மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கொண்டிருந்தான். "இருந்தாலும் என்னால அமைதியா இருக்க முடியல சசி. ஏன்னே தெரியலை... எனக்கு ஒரே பயமா இருக்கு. நீங்க போயிட்டா அதுக்குப் பிறகு நாம நிச்சயம் ஒருவரையொருவர் சந்திக்கப் போறது இல்லைன்னு என் மனசுல தோணிக்கிட்டே இருக்கு!"
"உனக்கு எல்லா விஷயங்கள்லயும் தேவையில்லாத பயம்தான்."
"இல்ல சசி... ஐ ஃபீல்... ஐ ஃபீல்... வீ வில் நாட் மீட் அகெய்ன்!"
"நான்சென்ஸ்!"
அப்போதும் அவள் அழுதாள்.
அவன் அவளை தன் மார்போடு சேர்த்து இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவளுடைய தலையிலும் நெற்றியிலும் ஒரு சிறு குழந்தைக்குக் கொடுப்பதைப் போல மாறி மாறி முத்தங்கள் பதித்தான். அவளுடைய கண்களிலிருந்து தொடர்ந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரில் அவளின் மார்புப் பகுதி நனைந்தது.
கடைசியில் அவன் அவளைத் தன்னிடமிருந்து அகற்றிக் கொண்டு சொன்னான்: "அழாதே. நீ இப்படி அழறதைப் பார்த்து நான் எப்படி போக முடியும்? அழாம மகிழ்ச்சியா என்னை அனுப்பி வை. நான் எங்கேயிருந்தாலும் என் மனசு எப்பவும் உன்கூடத்தான் இருக்கும். அழாதே... கண்களைத் துடை!"
அவள் புடவைத் தலைப்பால் கண்ணீரை ஒற்றினாள்.
"கொஞ்சம் சிரி. அந்தச் சிரிப்பைப் பார்த்துக்கிட்டே நான் போறேன். அந்தச் சிரிப்பு என்றென்றைக்கும் என் இதயத்துல ஆழமா பதிஞ்சு இருக்கட்டும். எப்போ வேணும்னாலும் நான் அந்தப் பெட்டியைத் திறந்து வெளியே எடுத்து பார்த்துக்கற மாதிரி... ம்... சிரி..."
அவளுடைய அழுது கொண்டிருந்த உதடுகள், மீட்டப்பட்ட வீணைக் கம்பியைப் போல சிறிது நேரம் உணர்ச்சிவசப்பட்டு துடித்தன. பிறகு அது ஒரு தாமரைப் பூவைப் போல மலர்ந்தது. அழகான ஒரு தாமரைப்பூ! சிறிதும் வாடாத ஒரு தாமரைப்பூ! அதன் இதழ்களில் நீர்த்துளிகள் தங்கி நின்றிருந்தன. அவன் அதை அதே நிலையில் தன்னுடைய மெல்லிய சிரிப்பையும் சேர்த்து பத்திரமாக எடுத்து இதயத்தின் கருவறைக்குள் வைத்துப் பூட்டினான். கடைசியில் அவளுக்கு மட்டும் கேட்பது மாதிரி அவளுடைய காதில் அவன் மெதுவாகச் சொன்னான்:
"யார் கிட்டயும் சொல்லாதே. நான் அங்கே போயி ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணிடுறேன். அதற்குப்பிறகு உன்னையும் நான் அங்கே அழைச்சிட்டுப் போயிடுறேன். ரகசியமா இந்த விஷயத்தை உன் மனசுல வச்சுக்கோ!"
அவள் தலையை ஆட்டினாள்.
சசியை வழியனுப்பி வைப்பதற்காக நிர்மலா விமான நிலையத்துக்குச் சென்றிருந்தாள். ஆனால், அவள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டுக் கொண்டும், எவ்வளவு வற்புறுத்தியும் அவளுடன் வர மாதவி அம்மா ஒப்புக் கொள்ளவேயில்லை. ஒரு கெட்ட பிடிவாதத்தை அவள் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
"நான் வரலைன்னு சொல்லிட்டேன்ல... நீ போ... அதுவும் போகணும்னு கட்டாயமிருந்தா..."- கடைசியில் மகளின் தொந்தரவைத் தாங்க முடியாத நிலை வந்தபோது மாதவி அம்மா அவளிடம் சண்டை போட்டாள். நிர்மலாவிற்குத் தன் தாயின் அந்த நினைக்கமுடியாத நடத்தையைச் சிறிதும் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு எந்த விஷயத்திலும் தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக இதுவரை நடந்திராத தன்னுடைய தாய் இப்போது தன் விருப்பத்திற்கு எதிராக நடப்பது மட்டுமில்லை தன்னுடைய விருப்பங்களையும் நிறைவேற்றித் தர சிறிதும் தயங்காத தன்னுடைய தாய் இப்படி சில எதிர்பாராத சம்பவங்களின்போது காரணங்களே இல்லாமல் முழுமையான எதிர்ப்புத் தெரிவித்து நடப்பதைப் பார்த்து அவள் உண்மையாகவே ஆச்சரியப்பட்டாள். சசியின் தாயிடமிருந்து கடந்த பல நாட்களாகவே எந்த அளவிற்கு விலகி இருக்கவேண்டுமோ அந்த அளவிற்குத் தன் தாய் விலகி நிற்கிறாள் என்பதையும் நிர்மலா புரியாமல் இல்லை. அந்த மாற்றம்கூட திடீரென்று நடந்ததுதான். அதாவது- அவளுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு அந்த மாற்றத்திற்கான காரணம் எது வேண்டுமென்றாலும் இருக்கட்டும்- இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அந்த வெறுப்பையும் பகையையும் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு சிறிது நாகரீகமாக நடந்து கொள்வதுதானே மரியாதைக்குரிய செயலாக இருக்கும்! அதற்குக்கூட தன் தாய் தயாராக இல்லை என்பதை நினைக்கும்போது தன்னுடைய சொந்தத் தாயாகவே இருந்தாலும் அவளுடைய நடத்தையை நிர்மலாவால் சிறிதும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அப்படி அவள் நிலைமையை விளக்கி தன் தாயை மாற்ற முயற்சிசெய்த போது, அது இறுதியில் சண்டையில் போய்தான் முடிந்தது. வாக்குவாதத்தில் ஆரம்பித்து சண்டையில் முடிந்தது. கண்ணீரில் ஆரம்பித்து பிணக்கத்தில் முடிந்தது. அதற்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு இரண்டு பேரும் எதுவும் பேசாமல் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருந்தார்கள். இதே விஷயம் பலமுறை நடந்து நடந்து அதுவே இப்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சசி போன பிறகு தன்னுடைய வாழ்க்கையை மிகவும் பலமாகப் பிடித்திருந்த ஏதோ ஒன்று கயிறை அறுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டதைப் போல் நிர்மலா உணர்ந்தாள். கண்களுக்குப் பார்வை இல்லாமற் போனதைப் போல, கால்கள் சோர்ந்து போனதைப் போல, முதுகெலும்பு ஒடிந்து போனதைப் போல... மொத்தத்தில் எல்லாம் ஒரே நேரத்தில் நடந்ததைப் போல் இருந்தது. எதுவும் நடக்காதது மாதிரியும் எதையும் இழக்கவில்லை மாதிரியும் எந்தத் தளர்ச்சியும் தன்னிடம் உண்டாகவில்லை என்றும் நினைத்துக் கொண்டு, அந்த நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொண்டு தைரியத்துடன் முன்னோக்கி நடக்க அவள் முடிந்தவரையில் முயற்சி செய்தாள். ஆனால், இறுதியில் தோல்விதான் அவளுக்குக் கிடைத்தது.
காரணமே இல்லாமல் அவளிடம் உண்டான அந்த வெற்றுணர்வு அவளை விட்டு நீங்குவதாகவே இல்லை. அதனால், திட்டமிட்டே அதைத் தன்னுடன் வைத்துக் கொண்டு அவள் தன் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தாள். நிச்சயமற்ற ஒன்றாக இருந்தது அந்தப் பயணம்.
9
சசி ஒவ்வொரு வாரமும் தவறாமல் நிர்மலாவிற்குக் கடிதம் எழுதினான். கடிதம் வந்தாலும் தாமதமாக வந்தாலும் அவளும் எல்லா வாரங்களிலும் ஒரு கடிதமாவது சசிக்கு எழுதுவாள். முன்பு நேரில் காணும்போது கூறுவதற்குத் தயங்கிய, கூறுவதற்குச் சிரமமாக இருந்த, கூற பயப்பட்ட பல விஷயங்களையும் அவர்கள் கடிதங்களில் பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் ஒவ்வொரு நிமிடமும் அந்தக் கடிதங்களுக்காகக் காத்திருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் முக்கால் பகுதி அந்தக் கடிதங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டன. அந்தக் கடிதங்களைப் படித்து அவர்கள் சிரித்தார்கள், அழுதார்கள், கனவுகள் கண்டார்கள். அதற்குப் பிறகு உள்ள மற்ற விஷயங்கள் அவர்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் இல்லாத சாதாரண விஷயங்களாக மட்டுமே இருந்தன.
இந்நிலை தொடர்ந்து கொண்டிருக்க, அவர்களின் கடிதங்கள் அந்த இரண்டு வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியாத ரகசியமாகவும் இருக்கவில்லை. சொல்லப்போனால் அதை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையென்றாலும் இரு வீட்டைச் சேர்ந்த அம்மாக்களும் அதை விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் வெளிப்படையாக அதை எதிர்க்கவோ அந்தச் செயல்களுக்குத் தடங்கல்கள் உண்டாக்கவோ அவர்களால் முடியவில்லை.