காதல் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணுமா, சசி?"
"அப்படின்னா நீ தைரியமா இரு. வேற வழியே இல்லைன்னா நான் அந்த அஸ்திரத்தை எடுப்பேன். அம்மாவுக்கு மகள் வேணுமா? வேண்டாமா? இதுதான் கடைசியா நான் கேட்கப்போறது!"
"எனக்குத் தெரியாது. எனிவே... நாம புறப்படலாம். நேரம் இன்னைக்கு அதிகமாயிடுச்சு..."
"சரி... அப்படின்னா முதல்ல கண்ணைத் துடை."
அவள் பேக்கைத் திறந்து கைக்குட்டையை எடுத்து தன் முகத்தைத் துடைத்தாள்.
"குட். இப்போ ஸ்மைல் பண்ணு... ம்... சிரி!"
அவள் மெதுவாக முகத்தை உயர்த்திப் பார்த்தாள். அப்போது அவளுடைய உதடுகளுக்கிடையில் சிறு முல்லை மொட்டுகள் விரிந்தன.
சசி தன் வலது கையின் சுண்டு விரலால் அவளுடைய கீழுதடை மெதுவாகத் தொட்டான். பிறகு இரண்டு விரல்களைக் கொண்டு அந்த உதடுகளை மெதுவாக நசுக்கினான்.
ஒரு செம்பருத்தி மலருக்குப் பின்னால் அந்த முல்லை மொட்டுகள் நாணம் கொண்டு ஒளிந்து நின்றன.
சசிக்கு அப்போது அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அந்த உதடுகளிலிருந்த சிவப்பு நிறத்தை தன் சிரிப்பால் ஒற்றி எடுக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், அவர்களுக்கு அருகில் இங்குமங்குமாய் அவர்களைப் போன்ற வேறு சில ஜோடிப்புறாக்கள் ஒட்டி உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தன. அவர்கள் பார்க்க...
"போகலாம்"- அவள் மீண்டும் சிரித்தாள்.
"எனக்கு ஒரு வெறி"- சசி தன் ஜோடிப்புறாவைப் பார்த்துச் சொன்னான். "என்ன?"
"அந்த உதடுகள்ல ஒரு முத்தம் தரணும்போல இருக்கு."
"அம்மா காதுல விழுந்துடப்போகுது!"
"விழுந்தா என்ன? என்னைக் கொன்னுடுவாங்களா?"
"வீர வசனம் பேசிக்கிட்டு இருக்காம எழுந்திரிங்க, சார். அம்மா முன்னாடி நிக்கிறப்போ காலோட முட்டிகள் இடிக்கப்போகுது"
"யாரைப் பார்த்து சொல்ற?"
அவள் எழுந்து நடந்தாள்.
நிர்மலாவின் வீட்டின் முன்னால் வந்தவுடன் அவன் கேட்டான்: "நானும் வரட்டுமா?"
"இப்போ வேண்டாம்!"
"இங்கே வரை வந்துட்டு உள்ளே வராமப்போனா ஆன்ட்டி அதுக்காக முகத்தை ஒரு மாதிரி வச்சுக்கப் போறாங்க..."
"பரவாயில்ல..."
"ஓகே... ஆனா, நீ கவலைப்படாதே. நம்ம வழியில யாரும் குறுக்கே வரமுடியாது. ஜாதி ஆர் யூ நோ ஜாதி... ஐ ஆம் மை ஃபாதர்ஸ் ஸன் அதை மறந்துடாதே!"
"பட் ஐ நோ யுவர் மதர் ஆல்ஸோ"- அவள் விளையாட்டாகச் சொன்னாள். "அதுவும் சரிதான்"- அவன் ஒப்புக் கொண்டான். "ஆனா, அப்பாவோ அம்மாவோ யாரும் இந்த ஒரு விஷயத்துல தலையிடுறதை நான் அனுமதிக்கவே மாட்டேன். அது மட்டும் நிச்சயம்!"
"ஓகே... குட்பை!" - திரும்பி கேட்டைத் திறக்கும் போது நிர்மலா சொன்னாள்.
"குட் பை அன்ட் குட் நைட்!"
சசி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான்.
7
பன்னிரண்டு மணிக்கு முன்பே மாதவி அம்மா அஸ்டோரியா ஹோட்டலுக்கு முன்னால் வந்திருந்தாள். பாதையோரத்தில் வரிசையாக அமர்ந்து வர்த்தகம் செய்து கொண்டிருந்தவர்களின் விற்பனைப் பொருட்களில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தவாறு அவள் அந்த நடைபாதையில் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு அவசியம் தேவைப்படும் பொருள் எதுவும் அங்கு இல்லை. வழிப்போக்கர்களில் சிலர் தன்னை கவனிக்கிறார்களோ என்று அவள் சந்தேகப்பட்டாள். அப்படி கவனிக்கும் அளவிற்குச் சிறப்பான விஷயமெதுவும் தன்னிடம் இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனினும் ஆண்களாயிற்றே! சிலர் பார்க்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு வயது ஒரு பிரச்சினையில்லை. முகம், இல்லாவிட்டால் மார்பகம், இல்லாவிட்டால் இடுப்பு, அதுவும் இல்லையென்றால் நடை... இப்படி ஒரு முறை பார்க்கத் தகுதியில்லாத ஒரு பெண்ணும் உலகத்தில் இல்லாமல் இருக்கமாட்டாள். அப்படியொருத்தி இருந்தால், அவளையும் பார்க்கவே செய்வார்கள். பெண்களிடமிருக்கும் அவலட்சணம் கூட சிலரைச் சுண்டி இழுக்கத் தான் செய்கிறது என்பதை அவளும் புரிந்து கொண்டிருந்தாள்.
இங்குமங்குமாய் நடந்தும் வாங்குவதற்கு எதுவும் இல்லாது போகவே கடைசியில் இருபத்தைந்து பல்லி உருண்டை இருக்கக்கூடிய ஒரு பாக்கெட்டை வாங்கி அதை பேக்கைத் திறந்து உள்ளே வைத்தாள். பிறகு பேக்கை மூடும் நேரத்தில் தனக்கு நெருக்கமாக யாரோ நின்றிருப்பதை அவள் உணர்ந்தாள். அடுத்த நிமிடம் அவள் வேகமாக ஒரு பக்கம் தள்ளி நின்றாள். பிறகு தலையை உயர்த்திப் பார்த்தாள்.
அவளுக்குப் பின்னால் சிரித்துக் கொண்டு பிரபாகர் நின்றிருந்தார். அவர் சிறிது தயங்குவதைப் போல இருந்தது. பிறகு ஒரு நிமிடம் சுற்றிலும் அவர் தன் கண்களை ஓட்டினார். தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது அந்த இடத்தில் எங்காவது தென்படுகிறார்களா என்று ஆராய்ந்தார். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
"வா... ஷாப்பிங் முடிச்சாச்சு இல்ல...?"- அவர் கேட்டார். அதற்கு பதிலெதுவும் சொல்லாமல் அவள் அவருடன் சேர்ந்து நடந்தாள். அவர் ஹோட்டலுக்கு முன்னாலேயே காரை நிறுத்தியிருந்தார். அவர் காரின் முன் கதவைத் திறந்தவாறு நின்றார். மாதவி அம்மா வேகமாக உள்ளே ஏறி உட்கார்ந்தாள். அப்போதும் அவர் சுற்றிலும் எதையோ தேடுவதைப்போல பார்த்துக் கொண்டுதானிருந்தார்.
ரேடியோ கிளப்பை இலக்கு வைத்து கார் படுவேகமாக ஓடியது.
சிக்னலுக்கு பின்னால் வண்டி நின்றபோது மட்டுமே அவர் மாதவி அம்மாவைப் பார்த்தார். அவள் தீவிர சிந்தனையில் மூழ்கியவாறு தனக்கு முன்னால் இருந்த ஏதோவொன்றில் பார்வையைப் பதித்தவாறு அமர்ந்திருந்தாள். அவளுடைய சிறிது மேலே வளைந்த மூக்கும் சிவந்த கீழுதடும் நாற்பது வயது நெருங்கினாலும் சிறிதும் கவர்ச்சி குறையாத பூவிதழைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த கன்னமும் கறுமையான அடர்த்தியான தலைமுடியும்... மொத்தத்தில் சுண்டி இழுக்கக்கூடிய அளவிற்கு அவளுடைய முகம் இருந்ததென்னவோ உண்மை.
சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது.
இதுவரை இரைந்தவாறு நின்றிருந்த எல்லா வண்டிகளும் முன்னோக்கி ஓடின.
இவ்வளவு நேரமும் இரண்டு பேரும் எதுவும் பேசவில்லை. பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. ஓராயிரம் விஷயங்கள், ஊர் விஷயங்கள், வீட்டு விஷயங்கள், அலுவலக விஷயங்கள், சொந்த விஷயங்கள்... இப்படி எத்தனையோ...
எனினும், அவர்கள் இருவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
மாதவி அம்மாவை வேண்டுமென்றால் அப்படிப்பட்ட குணத்தைக் கொண்டவள் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், பிரபாகரைப் பொறுத்தவரையில் அவர் குணத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாத ஒன்றாக இருந்தது அது. எதுவும் பேசாமல் இருப்பது என்பது அவருடைய குணமே அல்ல. அவர் எப்போதும் சலசலவென்று பேசிக் கொண்டேயிருப்பார். எப்போதும் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் அவர்.