முதல் காதல் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6371
என் மனதிலுள்ளதை அப்படியே அவளிடம் சொன்னபோது அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள்.
"அப்படிப்பட்ட சம்பவங்கள் தான் இப்படிப்பட்ட நிலையில் உன்னைத் தள்ளி விட்டதா? எவ்வளவு மென்மையான உணர்ச்சியைக் கொண்ட மனிதனாக நீ இருக்குற? அந்த மனிதன் ரொம்பவும் அழகா இருந்தான்னு நீ சொல்ற. அவனுக்கு ஒரே ஒரு கண்தான் இருந்ததுன்னா, அவன் எப்படி அழகானவனா இருக்க முடியும்?"
துன்பங்கள் அவளுக்கு வெறுப்பைத் தந்தன. துரதிர்*டத்தைப் பற்றி யாராவது பேசினால் அவளுக்குப் பிடிக்காது. உணர்ச்சிமயமான பாடல்களை அவளுக்குப் பிடிக்காது. அவள் மனிதர்கள் மீது பரிதாபம் கொள்வது என்பது எப்போதாவது ஒருமுறைதான் நடக்கும். தன்னுடைய துயரங்களைப் பார்த்து தானே சிரிக்கும் ஹெய்ன், பெராங்கர் போன்ற கவிஞர்களைத்தான் அவளுக்குப் பிடிக்கும்.
குழந்தைகள் மந்திரவாதிகளை எப்படிப் பார்ப்பார்களோ, அப்படித்தான் அவள் வாழ்க்கையைப் பார்த்தாள். அவளுடைய ஒவ்வொரு செயலும் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், மிகவும் சுவாரசியமானது எப்போதுமே இனிமேல் வரப்போவதாகத்தான் இருக்கும். நாளையோ, நாளை மறுநாளோ மந்திரவாதி தன் புதுமையான வித்தையைக் காட்டாமல் இருந்தாலும், நிச்சயம் அவன் காட்டுவான் என்பது உண்மை. தன்னுடைய மரண சமயத்தில் அந்த ஆச்சரியமான, குறிப்பிடத்தக்க வித்தையைப் பார்க்க அவள் மிகவும் ஆர்வமாக இருந்தாள் என்று நான் நினைக்கிறேன்.