முதல் காதல் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
கடவுளிடம் கூறுகிற மாதிரி தன்னுடைய இதயம் நேசிக்கக்கூடிய பெண்ணிடம் தன்னுடைய மனதைச் சமர்ப்பணம் செய்யும் சில சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரும் நெருக்கமாக இருக்கும் தருணத்தில் அவள் இந்த விஷயங்களை எனக்கு மட்டுமே சொந்தமான அந்த விஷயங்களை- வேறு யாரிடமாவது அவள் சொல்லி விடுவாளோ என்று நினைக்கிறபோது, நான் ஒரு மாதிரி ஆகிவிடுகிறேன். நான் ஏமாற்றப்படுவதைப்போல் ஒரு உணர்வு எனக்கு உண்டாகிறது. சொல்லப் போனால் எல்லாவகை பொறாமைகளுக்கும் அடிப்படை இந்த மாதிரியான புரிதல்களாகத் தான் இருக்கும்.
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நான் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து விலகிப்போய்விடும் என்பது மாதிரி எனக்குத் தோன்றியது. இனிமேல் இலக்கியத்தில் முழுமையாக மூழ்க வேண்டிய மனிதன் நான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. அதே நேரத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து கொண்டு என்னால் நிச்சயம் வேலை செய்ய முடியாது என்பதையும் உணர்கிறேன். மனிதர்கள் மீது கொண்டிருக்கும் மரியாதையும் ஆர்வமும் சிறிதும் குறையாமல் பலவீனங்களுடனும் கெட்ட விஷயங்களுடனும் இருக்கும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இது என்னுடைய வீட்டிற்குள் பிரச்சினைகள் இல்லாமல் இருக்க எனக்கு உதவியாக இருக்கிறது. மெய்ப்பொருள் என்று அழைக்கப்படும் கடவுளுக்கு முன்னால் மனிதர்கள் எல்லாருமே ஒரு விதத்தில் இல்லையென்றாலும், இன்னொரு விதத்தில் குற்றம் செய்பவர்களாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தான்தான் பெரியவன் என்று ஆணவம் பொங்க கூறுவதற்கு நிகராக மனிதனிடம் இருக்கும் வேறொரு கெட்ட பழக்கத்தைக் கூற முடியாது. தான் செய்வதுதான் சரி என்று மிருகத்தனமாக ஒரு மனிதன் கூறுகிறான் என்றால், அவனிடம் இருக்கும் கெட்ட, நல்ல பழக்கங்களின் கலவையால் உண்டான விளைவே அது. அந்த எண்ணம் வன்முறை, கற்பழிப்பு ஆகியவற்றால் ஒருவனிடம் உண்டாகாது. மாறாக, சட்டப்படி நடக்கும் திருமண உறவுகளாலும், பாதிரியாராக வேஷம் போட வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் உண்டாகும் விளைவே அது. இரண்டு மாறுபட்ட துருவங்களை ஒன்றாகக் கொண்டு வந்து இணைக்கும் ஒரு பழமையான தத்துவத்தின் வடிவம்தான் திருமணம் என்பது. அந்தக் காலத்தில் வினோதமான விஷயங்கள் மீது சிறு குழந்தைகள் ஐஸ் மீது விருப்பம் வைத்திருப்பதைப் போல எனக்கு ஆர்வம் உண்டு. வினோதமான விஷயங்களின் உண்மைத் தன்மை காலப்போக்கில்
எனக்குத் தெரிய வந்தது. வார்த்தைகள் உண்மையின் மீது மேற்பூச்சாக பூசப்பட்டிருப்பதை என்னால் உணர முடிகிறது.
"நான் போறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்"- நான் அவளிடம் சொன்னேன்.
அதற்குப் பதில் சொல்வதற்கு அவள் சிறிதுநேரம் எடுத்துக் கொண்டாள். "சரிதான்..."- அவள் சொன்னாள்: "நீ சொன்னது சரிதான். இது உன்னோட வாழ்க்கை இல்ல. என்னால அதைப் புரிஞ்சுக்க முடியுது.
சிறிது நேரத்திற்கு நாங்கள் இருவரும் எங்களுக்கு உண்டான கவலையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுகத் தழுவிக்கொண்டோம். அதற்குப்பிறகு நான் நகரத்தை விட்டுப் புறப்பட்டேன். எனக்குப் பிறகு அவளும் அங்கிருந்து கிளம்பினாள். அவள் ஒரு நாடக நடிகையாக ஆனாள்.
என் முதல் காதலின் முடிவு அதுதான். முடிவு சோகமாக இருந்தாலும் அது ஒரு மகிழ்ச்சியான கதைதான்.
சில நாட்கள் கடந்தபிறகு, அவள் மரணத்தைத் தழுவினாள்.
அவள் ஒரு நல்ல பெண் என்பதைக் கூறாமல் இருக்கமுடியாது. வாழ்க்கையை அதன் வழியே சென்று எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். எல்லா நாட்களும் அவளுக்கு ஒரு விடுமுறை நாளுக்கு முந்தைய நாளைப்போலவே இருக்கும். அடுத்த நாள் புதிய பூக்களைப் பரிசாகத் தரும் என்றும்; நல்ல மனிதன் தோன்றுவான் என்றும்; அசாதாரணமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் அவள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் வாழ்க்கையின் துன்பங்களை கிண்டல் பண்ணவும், வெறுக்கவும் செய்தாள். கொசுக்களை விரட்டியடிப்பதைப் போல அவள் அவற்றை விரட்டினாள். ஏதாவது நல்ல விஷயங்களைப் பார்த்து விட்டால், அதற்காக அவள் சந்தோஷப்படவும் ஆச்சரியப்படவும் செய்தாள். ஒரு கள்ளங்கபடமற்ற பள்ளிக்கூட சிறுமியின் சந்தோஷமல்ல அது. வாழ்க்கையின் பலவிதப்பட்ட வண்ணங்கள் கொண்ட மாறுதல்களையும் விரும்பிய ஒரு மனிதப்பிறவியின் மகிழ்ச்சியே அது. வெயிலில் பிரகாசிக்கும் தூசுகளைப் போல ஒவ்வொரு நாளும் மனித உறவுகளில் நடந்து கொண்டிருந்த சந்தோஷத்தையும், துக்கத்தையும் அவள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் மனிதர்கள் மீது அன்பு செலுத்தினாள் என்று கூறுவதற்கில்லை. ஆனால், மனிதர்களைக் கூர்மையாகக் கவனிப்பதில் மிகவும் அக்கறையுடன் இருந்தாள். பல நேரங்களில் கணவன்- மனைவி இருவருக்குமிடையே இருக்கும் நாடகத்தைப் பெரிதுபடுத்தியோ இல்லாவிட்டால் காதலர்களுக்கிடையே இருக்கும் உறவில் இருக்கும் பொறாமையை ஊதிவிட்டோ ஒருவரால் இன்னொருவருக்குப் பிரச்சினை வரும் வண்ணம் அவள் ஏதாவது செய்து விடுவாள். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"பசியும் காதலும்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவை; தத்துவங்கள் அவற்றை அழிக்கின்றன" என்று அவள் அடிக்கடி கூறுவாள். "மனிதன் வாழ்வதே காதலுக்காகத்தான். அதுதான் அவனுக்கு முக்கியமான விஷயம்."
எங்களுக்குப் பழக்கமான மனிதர்களில் ஒருவர் வங்கியொன்றில் கிளார்க்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். உயரமான, ஒல்லியான உடலைக்கொண்ட, ஒரு கொக்கைப்போல மெதுவாக நடந்து செல்லும் ஒரு மனிதர் அவர். ஆடைகள் அணியும் விஷயத்தில் சிறிதும் திருப்தியே வராத மனிதர் அவர். அவ்வப்போது கண்ணாடியில் பார்த்து தான் ஆடைகள் அணிந்திருப்பது சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்வார். அவருக்கு மட்டுமே தெரியக்கூடிய தூசியை அவர் தன்னுடைய மெலிந்து போன விரல்களால் தட்டி விடுவார். பெரிய கோட்பாடுகளுக்கும், வார்த்தைகளுக்கும், எழுத்துக்களுக்கும் அவர் முழுமையான எதிரி. அவருடைய நாக்குக்கு இந்த மாதிரி விஷயங்களெல்லாம் சிறிதும் தெரியாது. அவர் மெதுவாகப் பேசுவார். அந்தப் பேச்சு யாரையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கும். தனக்கு விருப்பமுள்ள சாதாரண விஷயங்களைப் பற்றி மிகவும் கவனமெடுத்து பேசிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய விரல்களால் அந்தச் சிவந்த நிறமுள்ள மீசையை அவர் தடவி விட்டுக் கொள்வார்.
"காலம் செல்லச் செல்ல வேதியியல் மிகவும் முக்கியத்துவம் உள்ள ஒண்ணா இருக்கும். தொழிற்சாலைகள்ல பயன்படுத்துற கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்யிறதுல அதன் பங்கு பெருசா இருக்கும். பெண்கள் நிலையில்லாத புத்தியைக் கொண்டவர்கள் என்பது சரியான கூற்று. உடல் ரீதியா ஒரு மனைவிக்கும் வைப்பாட்டிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. சட்ட ரீதியான வித்தியாசம் மட்டுமே இருக்கு..."