முதல் காதல் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6371
அதற்குப் பிறகு பைத்தியம் பிடித்திருக்கும் நிலைக்கு நிகரான மனரீதியான பாதிப்புடன் ஒரு அரை நோயாளியாக நான் அந்த நகரத்தை விட்டு புறப்பட்டேன். சுமார் இரண்டு வருடங்கள் நான் ரஷ்யாவின் கிராமப் பகுதிகள் வழியாக அலைந்து திரிந்தேன். ஓல்கா நதி, டான் நதி ஆகியவற்றின் வழியாக நான் எந்தவித இலக்கும் இல்லாமல் நடந்து திரிந்தேன். உக்ரைனிலும், க்ரீமியாவிலும் காக்கஸஸ்ஸிலும் நான் அலைந்து திரிந்தேன். பலவிதப்பட்ட அனுபவங்களுடன் பலவகைப்பட்ட செயல்களில் ஈடுபட்டேன். மேலும் பக்குவப்பட்ட மனிதனாகவும் கோபமற்றவனாகவும் மாறினேன். அவளை விட அழகிகளையும், அறிவு கொண்ட பெண்களையும் நான் பார்த்தேனென்றாலும், என் இதயத்தின் ஆழங்களில் அந்தப் பெண்ணின் உருவத்தை மட்டும் நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்தேன்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவள் பாரீஸிலிருந்து திரும்பவும் வந்திருப்பதாக டிஃப்ளீஸில் எனக்குச் செய்தி கிடைத்தது. மழைக் காலத்தின் ஒரு நாள் அது. அவள் வசித்துக் கொண்டிருந்த அந்த நகரத்தில்தான் நானும் வசிக்கிறேன் என்ற செய்தி என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. இருபத்து மூன்று வயது கொண்ட அந்தப் பக்குவப்பட்ட இளைஞனான நான் வாழ்க்கையில் முதல் தடவையாக ஆசை என்னும் வலையில் விழுந்து தவித்தேன்.
யாரோ ஒரு நண்பன் மூலம் அவள் என்னை அழைக்காதிருந்தால் ஒருவேளை அவளை அங்கு போய்ப் பார்ப்பதற்கான தைரியம் சிறிது கூட எனக்கு இல்லாமல் போயிருக்கும்.
அவள் முன்பு இருந்ததைவிட மிகவும் அழகாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவளிடம் அந்தப் பழைய இளமையின் வனப்பும், நல்ல வெண்மையான நிறமும், நீல நிறக் கண்களில் இருந்த மென்மையான பிரகாசமும் அப்போதும் அப்படியே இருந்தன. அவளுடைய கணவன் ஃப்ரான்ஸிலேயே இருந்துவிட்டான். மகளை மட்டும் அழைத்துக் கொண்டு அவள் மட்டும் தனியே இங்கு வந்திருக்கிறாள். ஒரு மான்குட்டியின் சுறுசுறுப்பும் கள்ளங்கபடமற்ற தன்மையும் அந்தக் குழந்தையிடம் தெரிந்தன.
அவளைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்தபோது ஒரு கடுமையான காற்று வீசுவதற்குத் தயாராக இருந்தது. மழைத்துளிகள் விழுந்து கொண்டிருக்கும் சத்தம் அந்த இடமெங்கும் கேட்டது. மழை பெருக்கெடுத்து வெள்ளமென புனித டேவிட் மலைச்சரிவு வழியாகக் கீழ்நோக்கி வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. காற்றின் இரைச்சலும் மழை பெய்யும்போது உண்டாகும் ஆக்ரோஷமான சத்தமும் அந்த வீட்டைப் பிடித்து குலுக்கிக் கொண்டிருந்தன. நகரம் மழை, இடி, காற்று ஆகியவற்றால் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. காற்றில் ஜன்னல்கள் அடித்து ஓசை உண்டாக்கின. மின்னல் வெளிச்சம் அறைக்குள் விழுந்தது. புதிர் நிறைந்த, முடிவற்ற, ஆழமான ஏதோ ஒரு இருண்ட குகைக்குள் மாட்டிக்கொண்ட நிலையில் நான் இருந்தேன்.
பயந்து நடுங்கிப் போன குழந்தை போர்வைக்குள் தலையை மூடிக் கொண்டது. மின்னலின் கண்களைக் கூசச் செய்யும் ஒளி நுழைந்து கொண்டிருந்த ஜன்னலுக்கு அருகில் நின்றுகொண்டு, மெதுவான குரலில் நாங்கள் பேசினோம்.
"முன்பு ஒருமுறை கூட இப்படிப்பட்ட கடுமையான காற்றை நான் பார்த்ததே இல்ல."- என் காதலி சொன்னாள்.
"சரி, அது இருக்கட்டும். என் மீது தோணின அந்தக் காதலை உன்னால வேண்டாம்னு ஒதுக்க முடிஞ்சதா?" அவள் திடீரென்று கேட்டாள்.
"இல்ல..."
ஆச்சரியத்துடன், அதே தாழ்வான குரலில் அவள் சொன்னாள்:
"கடவுளே, உன்கிட்ட எப்படியெல்லாம் மாற்றங்கள் இருக்கு தெரியுமா? நீ முழுமையாகவே இன்னொரு மனிதனா மாறிப்போயிருக்கே."
ஜன்னலுக்கு அருகில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அவள் மெதுவாகச் சாய்ந்தாள். புதிதாக அடித்த மின்னல் ஒளியில் ஆர்வமும் கேலியும் தெரிந்த அவளுடைய முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. "உன்னைப் பற்றி ஆளுங்க எவ்வளவோ பேசுறாங்க. நீ எதுக்காக இங்கே வந்தே? உன்னைப் பற்றி நீ சொல்லு..."-அவள் சொன்னாள். கடவுளே! அவள் எந்த அளவுக்கு இளமையாகவும் அழகானவளாகவும் இருக்கிறாள்!
நள்ளிரவு வரை அவளுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். இயற்கை, அதன் மோசமான நிலையிலும், என்னை உற்சாகப்படுத்தி சந்தோஷம் கொள்ளச் செய்தது. நான் நன்றாகப் பேசியதாக எனக்குப்பட்டது. கண்களை அகல விரித்து வைத்துக்கொண்டு அவள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்கு அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. இடையில் அவ்வப்போது நான் பெருமூச்சு விடவும் செய்தேன்.
"ச்சே! என்ன கஷ்டம்!"
விடை பெறும்போது முன்பெல்லாம் செய்வதைப் போல வயதில் மூத்த ஒரு பெண் வயது குறைவானவனிடம் பாதுகாப்பு கருதி வெளிப்படுத்தக் கூடிய அந்தச் சிரிப்பை அவள் உதிர்க்கவில்லை. ஆகாயத்தில் நிறைந்திருந்த மேகங்களுக்கு மத்தியில், இடையில் அவ்வப் போது தென்பட்ட கூர்மையான அரிவாளைப் போன்ற நிலவைப் பார்த்தவாறு அந்த நனைந்து குளிர்ந்து போயிருந்த சாலை வழியாக மகிழ்ச்சி பொங்க நான் முன்னோக்கி நடந்தேன்.
அடுத்த நாள் நான் அவளுக்கு ஒரு கவிதை அனுப்பினேன். (அதற்குப்பிறகு அவ்வப்போது அந்தக் கவிதையை அவள் பாடுவாள். அதனால் அது என் நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டது.)
'என் பிரியமானவளே!
அந்த மென்மையான வார்த்தைகள், மென்மையான
தொடல் ஒன்றுமில்லாததை சிறிய சிறிய சந்தோஷங்களாக்கி
மாற்றும் இந்த மந்திரவாதியை
அமைதியான அடிமையாக்கி விட்டன.
இந்த அடிமையை பெண்ணவள் ஏற்றுக்கொண்டால், ஒருவேளை
சிறிய சிறிய சந்தோஷங்களை
மிகப்பெரிய ஆனந்த வேளைகளாக
அவள் மாற்றி அமைக்கலாம்.
இந்த மகத்தான உலகம் படைக்கப்பட்டது
சிறிய ஒரு பெண்ணிலிருந்துதானே!
நான் கூறுவது சந்தோஷத்தின்
உலகத்தைப் பற்றித்தான்.
ஆனந்தத்தின் சந்தோஷத்தின் உலகம்.
எனினும்
அதற்கு அதற்கே உரிய கோமாளித்தனமும் உண்டு.
உனது எளிய அந்த அடிமையும்
அந்த சந்தோஷத்தின் பாகமே.
உன்னைவிட அழகாயிருப்பது யார்?
மன்னிக்க வேண்டும்.
வார்த்தைகளின் கூரிய நகங்களுக்கு
இந்த உலக அழகை விட அழகான
உன்னைப் பற்றி என்ன பாடத் தெரியும்?'
உண்மையாக சொல்லப்போனால் இதைக் கவிதை என்று கூற முடியாது. ஆனால், மென்மையான உணர்வுகளை உண்மையில் தோய்த்து எழுதப்பட்ட ஒன்று அது.
இங்கு நான் இதோ மீண்டும் இந்த உலகத்தின் மிக முக்கியமான ஒரு நபருக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். அவள் அணிந்திருக்கும் நீல நிற கவுன் அவளுடைய உடல் வாளிப்பை அதிகம் மறைத்து வைக்கவில்லை. இடையில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்த பட்டைத் துணியைக் கையால் திருகிக்கொண்டே எனக்குச் சிறிதும் பழக்கமேயில்லாத வார்த்தைகளில் அவள் பேசினாள்.