முதல் காதல் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6371
அழகான- நான்கு வயதுள்ள குழந்தை அந்தத் துறைகளில் அவளுடைய சுயநலமில்லாத சேவைக்குக் கிடைத்த பரிசு என்று கூறலாம். மிகவும் நெருக்கமாக உணரக்கூடிய விதத்தில், அதே நேரத்தில் மிகவும் சோர்வு தட்டக்கூடிய வகையில் அவள் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். சில வேளைகளில் அவள் தன்னை நினைத்து ஆச்சரியப்படுவாள். அப்போது அவள் தன் கண்களை அழகாகச் சுழற்றுவாள். ஆச்சரியப்பட்டதற்கு அடையாளமாக ஒரு சிறு மலர்ச்சி அவளுடைய கண்களின் ஆழத்தில் தெரியும். வெட்கப்படும் இளம்பெண்கள் சிரிப்பதென்னவோ அப்படித்தான்.
அவளுடைய மனம் எந்த அளவிற்குக் கூர்மையானது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவள் என்னை விட மிகவும் உயர்ந்து இருந்தாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடன் இருப்பவர்களுடன் அவள் கள்ளங்கபடமில்லாமல் பழகியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இதுவரை பார்த்திருந்த பெண்களுடனும், இளம் பெண்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவள் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவளாக இருந்தாள். சர்வ சாதாரணமாக கதைகள் சொல்லக்கூடிய அவளின் குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பல விஷயங்களிலும் மிகவும் ஆழமான அறிவை அவள் கொண்டிருந்தாள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அவள் வசித்துக் கொண்டிருந்த அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்தன. முன்னாலிருந்த ஹாலும் சமையலறையும் சேர்ந்து ஒரே அறையாக இருந்தது. பின்னாலிருந்த அறை பெரியதாக இருந்தது. தெருவைப் பார்த்திருந்த இரண்டு ஜன்னல்களும் அந்த அறையில் இருந்தன. ஒரு காலணி செய்யக் கூடிய மனிதனுக்கு ஏற்ற இடம் அது என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகமில்லை. ஆனால், மகத்தான புரட்சி நடந்த நகரமான மோலியர், ஹ்யூகோ, ப்யூமார்ஷெ போன்ற மிகப்பெரிய மனிதர்கள் வாழ்ந்த பாரீஸில் வசித்த அந்தப் படித்த நவநாகரீகப் பெண்ணுக்கு ஏற்ற இடமல்ல அது. ஓவியத்திற்கும் அதைக் கொண்டிருந்த சட்டத்திற்கும் இடையே மிகவும் கருத்து வேறுபாடு இருந்தது. இந்த விஷயம் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியதுடன், அந்தப் பெண் மீது எனக்குள் ஒரு பரிதாப உணர்வு தோன்றுவதற்கும் அது காரணமாக அமைந்தது. மிகவும் ஆழத்தில் காயத்தை உண்டாக்குகிற விஷயங்களைக்கூட அவள் ஒரு பொருட்டாக நினைக்காமல், அதை மறந்து போகிறாள் என்பதாக எனக்குத் தோன்றியது.
காலை முதல் இரவு வரை அவள் பல விஷயங்களிலும் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் இருந்தாள். காலையில் அவள் ஒரு சமையல் காரியாகவும், வேலைக்காரியாகவும் இருந்தாள். அதற்குப் பிறகு அந்தப் பெரிய மேஜைக்கு மேலே பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டு அந்த நகரத்தின் பெரிய பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொண்டிருந்தாள். நாட்டின் வரைபடங்களை வரைந்தாள். அவற்றுக்கு நிறம் கொடுத்தாள். கிராமங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல்களைச் சேகரித்து வைக்கும் விஷயத்தில் தன் கணவனுக்கு உதவினாள். தெருவிலிருந்து தூசுகள் ஜன்னல் வழியாக அவளுடைய தலைமுடிமீதும் மேஜைமீதும் பறந்து வந்து விழுந்தது. அதன் வழியாகக் கடந்து போய்க் கொண்டிருந்த மனிதர்களின் கால்கள் அவள் வேலை செய்து கொண்டிருந்த பேப்பர்கள் மீது நிழல்கள் விழும்படி செய்தன. வேலை செய்யும்போது அவள் பாட்டுப் பாடினாள். உட்கார்ந்து உட்கார்ந்து மனதில் சோர்வு உண்டாகும்போது, அவள் எழுந்து தன்னுடைய குழந்தையுடன் விளையாடினாள். எவ்வளவு அழுக்கு நிறைந்த வேலைகளைச் செய்தாலும், ஒரு வெண்மையான பூனைக் குட்டியைப் போல சுத்தமும் சுறுசுறுப்பும் கொண்ட பெண்ணாக அவள் இருந்தாள்.
அவளுடைய கணவன் பொறுப்பற்ற ஒருவனாக இருந்தான். அதே நேரத்தில் மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவனாகவும் இருந்தான். படுக்கையில் படுத்துக்கொண்டே ப்ரெஞ்ச் நாவல்களை, குறிப்பாக டூமாஸ் பெரேராவின் நாவல்களைப் படித்துக் கொண்டிருப்பான். அதுதான் அவனுடைய பொழுது போக்காக இருக்கும். "அது உங்களின் மூளைக்குள் இருக்கிற கசடுகளைச் சுத்தம் செய்து விடும்" என்று அவன் கூறுவான். முழுமையான- விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையுடன் அவன் வாழ்க்கையைப் பார்த்தான். அவன் உணவை 'உடம்பில் கலக்கும் சத்துக்கள்' என்று கூறுவான். சாப்பிட்டு முடித்தவுடன் அவன், "உணவை வயிற்றுல இருந்து மற்ற உறுப்புகளுக்குப் போக வைக்கிறதுக்கு உயிரணுக்களுக்கு முழுமையான ஓய்வு தேவை" என்பான்.
சொன்னதோடு நிற்காமல் தன்னுடைய தாடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுப்பொருட்களின் எச்சத்தைக்கூட கையால் துடைக்காமல் அவன் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டு டூமாஸையோ, தெமோண்டோவையோ படிக்க ஆரம்பித்துவிடுவான். பிறகு தன்னுடைய மீசையே நடுங்குகிற அளவிற்குக் குறட்டை விட்டவாறு அடுத்த இரண்டு மணி நேரங்கள் முழுமையான தூக்கத்தில் அவன் மூழ்கிவிடுவான். தூக்கம் கலைந்தவுடன் சிறிது நேரம் மேற்கூரையிலிருக்கும் சிறு சிறு வெடிப்புகளைப் பார்த்தவாறு படுத்துக் கிடந்துவிட்டு வெளியே எழுந்து வந்து, "நேற்று ராத்திரி பார்ணலின் தத்துவங்களைப் பற்றி குஸ்மா சொன்னது தவறான விளக்கம்" என்பான்.
அப்போதே குஸ்மாவைத் திருத்துவதற்காக அவன் வெளியிலேயே கிளம்புவான். வெளியே புறப்படும்போது அவன் தன் மனைவியைப் பார்த்து, “மைதான் வொளாஸ்ட்டிலிருந்து வந்த விவரங்களைச் சரி பண்ணி வைக்கணும். நான் சீக்கிரம் திரும்பி வருவேன்” என்பான்.
நள்ளிரவு நேரத்திலோ அல்லது அதற்குப்பிறகோ அவன் வீட்டிற்கு வீராவேசத்துடன் திரும்பி வருவான்.
“இங்க பாரு. நான் எல்லா விஷயங்களையும் குஸ்மாவுக்கு விளக்கமா சொன்னேன். அந்த ஆளுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் நல்லா ஞாபகம் இருக்கு. அதே மாதிரி எனக்கும்தான் ஞாபகத்துல இருக்கு. ஆனால் க்ளாட்ஸ்டனோட பாரம்பரிய விஷயங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை அந்த ஆளு புரிஞ்சிக்க மாட்டேங்குறாரு.”
பீனேயைப் பற்றியும் ரிஷேயைப் பற்றியும் மன ஆரோக்கியத்தைப் பற்றியும் அவன் எப்போதும் பேசிக் கொண்டிருந்தான். மழை காரணமாக வீட்டிற்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டானால், தன் மனைவியின் குழந்தையைப் படிக்க வைக்கும் வேலையை அவன் ஏற்றுக்கொள்வான். இரண்டு காதல் உறவுகளுக்கு இடையில் இருந்த பாதையில் எங்கோ அவளுக்கு கிடைத்ததுதான் அந்தக் குழந்தை.
"வோலியா, நீ நல்லா உணவைமென்று சாப்பிடணும். உணவை ஏராளமான ரசாயனப் பொருட்களாக மாற்றி சீக்கிரமா ஜீரணமாக அது உதவும்."
உணவு உண்டபிறகு தன்னுடைய உடலை முழுமையான ஓய்வு எடுக்கும்படி செய்யும் அதே நேரத்தில், அந்தக் குழந்தையையும் தன்னுடன் படுக்க வைத்துக்கொண்டு அவன் ஒரு கதையைக் கூற ஆரம்பித்து விடுவான்.
"அப்போதான் கெட்டவனும் இரத்த தாகம் எடுத்தவனுமான நெப்போலியன் அதிகாரத்தைத் தன் கையிலெடுத்தான்..."
அவனுடைய பேச்சுக்கள் அவனுடைய மனைவியிடம் சிரிப்புப் பட்டாசுகள் வெடிக்க நெருப்பைப் பற்ற வைத்தன.