முதல் காதல் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6371
படிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தை நோக்கி படுவேகமாகப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில்தான் முதல் காதல் என்ற விஷயமும் என் வாழ்க்கையில் நடந்தது. சந்தோஷம், துக்கம் இரண்டும் சம அளவில் கலந்திருந்த ஒரு அனுபவம் என்று தான் அதைச் சொல்ல வேண்டும்.
என்னுடைய சில நண்பர்கள் ஓகா நதியின் வழியாகப் படகில் பயணம் செய்யும் ஒரு திட்டத்தை வகுத்திருந்தார்கள்.
சமீபத்தில் ஃப்ரான்சிலிருந்து திரும்பியிருந்த பெயர் தெரியாத அந்த மனிதனையும் அவனுடைய மனைவியையும் அந்தப் பயணத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் பொறுப்பை நண்பர்கள் என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். அதுவரை அவர்களை நான் பார்த்ததேயில்லை. அன்று மாலையில் நான் அவர்களைப் பார்த்தேன்.
ஒரு பழைய வீட்டின் மாடிப் பகுதியில் சிறிய ஒரு வீட்டை அமைத்து அதில்தான் அவர்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டிற்குச் செல்லும் பாதையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை குறுக்கே எப்போதும் ஒரு குட்டை தேங்கியே கிடக்கும். வசந்த காலத்திலும், கோடை காலத்தில் பெரும்பாலான நேரத்திலும் கூட அந்த இடத்தில் தண்ணீர் தேங்கியே இருக்கும். காகங்களும் நாய்களும் அதை ஒரு கண்ணாடியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, பன்றிகள் அதைக் குளிப்பதற்கான இடமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தன.
தீவிரமான சிந்தனையில் மூழ்கிக்கொண்டே நடந்து சென்ற நான் அந்தக் குட்டையில் வழுக்கி கட்டுப்பாட்டை இழந்து அந்த வீட்டின் வாசல் கதவில் போய் இடித்து நின்றேன். அதன் விளைவு மிகவும் அசாதாரண ஒன்றாக இருந்தது. சராசரி உயரத்தைக் கொண்ட தடித்த ஒரு மனிதன் மிகவும் குளிர்ச்சியாக என்னை வரவேற்கவில்லை. தனக்கு மிகவும் அருகில் இருந்த அறையில் வாசல் கதவோரத்தில் மறைந்து நின்றிருந்த அந்த மனிதன் தவிட்டு நிறத்திலிருந்த தாடியுடனும் கனிவு நிறைந்த நீலக்கண்களையும் கொண்டிருந்தான். அவன் சீராக உடைகளை அணிந்திருந்தான். மிகவும் கோபம் தொனிக்கும் குரலில் அவன் என்னைப் பார்த்து "உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டான். அதோடு கொஞ்சம் திட்டுகிற மாதிரி அவன், "ஒரு வீட்டுக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடி மரியாதையான மனிதர்கள் வாசல் கதவைத் தட்டுறதுதான் முறை" என்றான்.
அவனுக்குப் பின்னால் அறைக்குள் இருந்த நிழலில் ஏதோவொரு வெள்ளைப் பறவை மெதுவாகப் பறந்து கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. மிகவும் இனிமையான ஒரு குரல்- அப்போது உள்ளிருந்து கேட்டது.
"குறிப்பா திருமணமான ஆணும் பெண்ணும் இருக்குற ஒரு வீட்டுக்கு வர்றப்போ..."
நான் தேடி வந்திருக்கிற ஆட்கள் அவர்கள்தானா என்று சிறிது சந்தேகத்துடன் கேட்டேன். பணக்காரனான ஒரு வியாபாரியைப் போலிருந்த அந்த மனிதன் அதை உறுதி செய்த போது நான் வந்திருக்கும் நோக்கத்தை அவர்களிடம் கூறினேன்.
"க்ளார்க்தான் உங்களை இங்கே அனுப்பி வச்சார்னு நீங்க சொல்றீங்க. அப்படித்தானே?"- மிகவும் அமைதியாகத் தன்னுடைய தாடியைத் தடவியவாறு அவன் திரும்பக் கூறினான். திடீரென்று அவன் "ஏய் ஓல்கா" என்று உரத்த குரலில் கூறியவாறு இப்படியும் அப்படியுமாக அசைந்தான். பிறகு மரியாதையான மனிதர்களிடம் உரத்த குரலில் சொல்ல முடியாத உடம்பின் ஒரு பகுதியை அவன் இறுகப் பிடித்துக் கொண்டான். அவனை யாரோ கிள்ளியதைப் போல் இருந்தது.
வாசலில் அவனுடைய இடத்தை இப்போது ஒரு மெலிந்து போய்க் காணப்பட்ட இளம்பெண் பிடித்துக் கொண்டாள். தன்னுடைய பிரகாசமான நீல நிறக் கண்களால் அவள் என்னைப் பார்த்தாள்.
"நீங்க யாரு? போலீஸ்காரரா?"
"இல்ல... என் ட்ரவுசரைப் பார்க்கறப்போ அப்படித் தோணியிருக்கலாம்..." - மிகவும் மரியாதையான குரலில் நான் சொன்னேன்.
அவள் சிரித்தாள். பல நாட்களாகவே நான் தேடிக்கொண்டிருந்த பிரகாசம் அவளுடைய கண்களில் இருப்பதைப் பார்க்க முடிந்ததால் அவளின் செயல்கள் எனக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் என்னுடைய ஆடைகள்தான் அவளைச் சிரிக்கச் செய்தன. போலீஸ்காரர்கள் அணியக்கூடிய பெரிய ட்ரவுசரையும் சமையல் செய்பவன் அணியக்கூடிய வெள்ளைச் சட்டையையும் நான் அணிந்திருந்தேன். சமையல்காரனின் ஆடை மிகவும் சவுகரியம் அளிக்கக்கூடிய ஒன்று. ஒரு கோட்டைப் போல கழுத்துவரை பொத்தான்களை இட்டு அணியக்கூடிய சவுகரியமான ஆடை. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் அணியக்கூடிய அகலமான ஓரங்களைக் கொண்ட தொப்பியையும் வேட்டைக்குச் செல்லும்போது அணியக்கூடிய காலணிகளையும் நான் இரவல் வாங்கி அணிந்திருந்தேன்.
அவள் என் சட்டையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்று மேஜைக்கு நேராகத் தள்ளினாள்.
"நீங்க இப்படிப்பட்ட வினோதமான ஆடைகள் அணிந்திருப்பது எதுக்காக?"- அவள் கேட்டாள்.
"நீ ஏன் இதை வினோதமா இருக்குன்னு நினைக்கிற?"
"கோபிக்காம உள்ளே வா!" - என்னைச் சாமாதானப்படுத்தும் வகையில் அவள் சொன்னாள்.
அவள் எப்படிப்பட்ட அசாதாரணமான ஒரு பெண்ணாக இருக்கிறாள்! அவள் மீது கோபப்பட யாருக்கு முடியும்?
விரல்களுக்கு மத்தியில் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டு அந்தத் தாடிக்காரன் கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அந்த ஆளைப் பார்த்துக் கொண்டே நான் அவளிடம் கேட்டேன்:
"இது உன்னோட அப்பாவா? இல்லாட்டி அண்ணனா?"
"அவளோட புருஷன்." - அவன் என்னைப் பார்த்து கட்டைக் குரலில் சொன்னான்.
"என்ன?"- சிரித்துக்கொண்டே அவள் கேட்டாள்.
"மன்னிக்கணும்!"- ஒரு நிமிடம் அவளுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே நான் சொன்னேன்.
எந்தவித தொடர்பும் இல்லாத விஷயங்களை நாங்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் எனக்கு அப்படிப் பேசிக்கொண்டிருந்ததில் சிறிது கூட சோர்வு உண்டாகவில்லை. அந்த அறையில் ஐந்து மணி நேரங்கள் இருப்பதாக இருந்தாலும் அதற்கு நான் தயாராகவே இருந்தேன். அவளுடைய வட்டமான முகத்தையும் அழகான கண்களையும் பார்த்துக்கொண்டு வருடக்கணக்காக அங்கு இருக்கக்கூட நான் தயார்தான். மேலுதடைவிட அவளுடைய கீழுதடு சிவப்பாக இருந்தது. அதில் சிறிது வீக்கம் இருக்கிறதோ என்பது மாதிரி இருந்தது- அந்தச் சிவப்பைப் பார்க்கும்போது, தவிட்டு நிறத்தில் நீளமாக வளர்ந்திருந்த தலைமுடியை அவள் 'க்ளிப்'பால் கட்டி வைத்திருந்தது ஒரு தொப்பியைப் பார்ப்பதுபோல் இருந்தது. ஒன்றிரண்டு தலைமுடிகள் அவள் பின்கழுத்திலும் அழகான சிவந்த கன்னங்களிலும் விழுந்து கிடந்தன. அவளுடைய கைகளும் உள்ளங்கைகளும் மிகவும் அழகாக இருந்தன. வாசல் கதவைப் பிடித்து நின்றுகொண்டிருந்த அவளுடைய முழங்கை வரை இருந்த பாகம் ஒரு தனி அழகைத் தந்தது. அவள் உடை அணிந்திருந்த முறை மிகவும் எளிமையாக இருந்தது.