முதல் காதல் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
நெற்றியில் சுருக்கங்கள் விழுந்த, தேவாலயத்தின் கோபுரத்தைப் போன்ற உயரமும் பெரிய தொந்தி விழுந்த வயிறையும் கொண்ட அந்த வக்கீலின் உதவியாளர் சொன்னார்: "காந்தசக்தி படைத்த பெண்!"
யெரோஸ்லாவில் இருந்து ஒரு மாணவன் அவளுக்கு ஒரு கவிதையை எழுதி அனுப்பியிருந்தான். பத்து வரிகளைக் கொண்ட கவிதை அது. அந்தக் கவிதை அப்படியொன்றும் மகத்தானதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதைப் படித்துவிட்டு கண்களில் கண்ணீர் வரும்வரை அவள் சிரித்துக் கொண்டேயிருந்தாள்.
"நீ ஏன் இப்படி ஆண்களைச் சலனப்படுத்துற?" ஒருமுறை நான் அவளைப் பார்த்துக் கேட்டேன்.
"மீன் பிடிக்கிறதைப்போல சுவாரசியமான ஒரு பொழுதுபோக்கு அது"-அவள் சொன்னாள்: "அதைக் காதல் விளையாட்டுன்னும் அழைக்கலாம். அதை அனுபவிக்காத சுயமரியாதை கொண்ட ஒரு பெண்கூட இந்த உலகத்தில் இல்லை..."
சில நேரங்களில் என்னுடைய கண்களை உற்றுப் பார்த்தவாறு அவள் கேட்பாள்:
"பொறாமை தோணுதா?"
இல்லை. பொறாமை தோன்றவில்லை. ஆனால், மனரீதியாகப் பாதிக்கப்பட்டதைப்போல் நான் உணர்ந்தேன். ஆபாசத்தைச் சகித்துக்கொள்ள என்னால் முடியவில்லை. பொதுவாகவே சந்தோஷத்தை விரும்பக்கூடிய ஒரு ஆளாக இருந்ததால் சிரிக்க முடிவது என்ற விஷயம்தான் மனிதனுக்குக் கிடைத்தவற்றிலேயே மிகப்பெரிய பரிசு என்று நான் நினைத்திருந்தேன். சர்க்கஸ் கோமாளிகளையும் மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சி செய்பவர்களையும் தோற்கடிக்கும் வண்ணம் நகைச்சுவையை என்னால் வெளிப்படுத்த முடியுமென்று தோன்றியதால் நான் அவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல நேரங்களில் எங்களின் விருந்தாளிகளை உடலே வலிக்கும் அளவிற்குச் சிரிக்க வைக்க என்னால் முடிந்திருக்கிறது.
"உன்னால நல்ல ஒரு காமெடியனா வரமுடியும்!" அவள் ஒருநாள் சொன்னாள்: "நீ மேடையில ஏறவேண்டிய ஆள். அதற்கான திறமை உன்கிட்ட நிச்சயம் இருக்கு."
நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் மிகவும் சிறப்பாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை அவள் செய்திருக்கிறாள். தொழில் ரீதியான நாடகக் குழுவைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் அவளை நடிக்க அழைக்கக் கூட செய்திருக்கிறார்கள்.
"எனக்கு மேடைன்னா விருப்பம்தான். ஆனா, மேடைக்குப் பின்னாலிருக்கிற விஷயங்களை நினைச்சா ரொம்பவும் பயமா இருக்கு."
தன்னுடைய எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் விருப்பங்களிலும் அவள் உண்மையை நிலைநாட்டினாள்.
"உன் தத்துவ சிந்தனை ஒரு எல்லையை மீறிப் போய்க்கிட்டு இருக்கு!"- அவள் என்னைப் பார்த்துக் கூறுவாள்: "வாழ்க்கையின் சாரத்தைத் தேடிப்போனா அது எளிமையும் பயங்கரமும் கலந்த ஒண்ணாத்தான் இருக்கு. மறைந்திருக்கிற அர்த்தங்களைத் தேடிப்போயிட்டு அதைப்பற்றி குறை சொல்றதுல அர்த்தமே இல்ல. நாம செய்யவேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். அதன் கடுமையை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைக்க நாம முயற்சிக்கணும். அதுக்கு மேல நம்மால ஒண்ணுமே செய்ய முடியாது."
அவளுடைய தத்துவ சிந்தனையில் பெண்ணியல் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். 'ஏ கோர்ஸ் இன் ஆப்ஸ்டெரிக்ஸ்' என்ற நூல்தான் அவளுடைய வேதநூலாக இருந்தது. பள்ளிக்கூட படிப்பை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவள் படித்த முதல் விஞ்ஞானப் புத்தகம் அவளுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்ததாக அவள் சொன்னாள்.
"நான் ரொம்பவும் சூது, வாது தெரியாத பெண்ணாக இருந்தேன். ஒரு மட்டையை வைத்து தலையில அடிச்சது மாதிரி இருந்தது அது மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் இருந்து நான் கீழே கிடந்த சேற்றில் வந்து விழுந்தேன். என்கிட்ட நம்பிக்கை இல்லாமப் போனதுக்கு நான் வாய்விட்டு அழுதேன். ஆனா, ரொம்பவும் சீக்கிரமே எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. என் காலுக்குக் கீழே இருந்த மண் உறுதியாகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தது. நான் வாய்விட்டு அழுதது கடவுளை நோக்கித்தான். கடவுளுக்கு ரொம்பவும் பக்கத்துல நிற்பது போல் எனக்கு இருந்தது. திடீர்னு கடவுள் காத்துல கலந்து போறது போல எனக்கு தோணுச்சு. அதாவது சிகரெட் புகை போறதைப்போல.அதோட சேர்ந்து என்னோட காதல் கனவுகளும் கலந்து போயிடுச்சு. பள்ளிக் கூடத்துல படிக்கிறப்போ காதலிக்கும் காலத்தைப்பற்றி நாங்க என்னென்னவோ நினைச்சிருந்தோம். பேசியிருந்தோம்.”
அவளுடைய நாத்திக வாதத்தைக் கேட்க நேர்ந்தபோது நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து போனேன். ஒரு பள்ளிக்கூடச் சிறுமியின் கள்ளங்கபடமற்ற தன்மையும் பாரீஸின் ஒரு பெண்ணின் நடைமுறைச் சிந்தனையும் அதில் இரண்டறக் கலந்திருந்தன. இரவு நேரங்களில் பல சமயங்களில் நான் என்னுடைய எழுதும் மேஜைக்கு அருகிலிருந்து எழுந்து அவளைத் தேடிப்போவேன். அவள் அதிக இளமையும் வசீகரம் நிறைந்தவளாகவும் தெரிவாள். அவள் படுத்திருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும்போது அவளுடைய மனத்தைச் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையின் பிரச்சினைகளை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமுண்டாகும். அவள் மீது எனக்கு உண்டான பரிதாப உணர்ச்சி அவளிடம் நான் கொண்ட காதலை மேலும் சக்தி மிக்கதாக ஆக்க உதவக்கூடியதாகவே இருந்தது.
எங்களின் இலக்கிய ரசனை மிகவும் மாறுபட்டதாக இருந்தது. நான் பால்ஸாக்கையும் ஃப்ளாபெர்ட்டையும் விரும்பிப் படிக்கக் கூடியவன் என்றால், அவள் பால் ஃபெவால், ஆக்டேவ் ஃப்யூல்லெ, பால் தே காக் ஆகியோரின் படைப்புகளைப் படிக்கக்கூடியவளாக இருந்தாள். ‘யங்கிரா, மை ஒய்ஃப்’ என்ற புதினம் அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. தான் படித்ததிலேயே மிகச்சிறந்த புதினம் அதுதான் என்று அவள் மதிப்பீடு செய்திருந்தாள். குற்றவாளிகளின் சங்கேத மொழியைப் போல மிகவும் சோர்வு தரக்கூடிய ஒரு பொருளாக நான் அந்தப் புத்தகத்தை நினைத்திருந்தேன். நிலைமை இப்படியெல்லாம் இருந்தாலும், நாங்கள் நல்ல ஒற்றுமையுடன்தான் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் ஒருவரோடொருவர் வெறுப்பு கொள்ளவில்லை. காதலை இடையிலேயே முறித்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒன்றாக நாங்கள் வாழ ஆரம்பித்த வாழ்க்கையின் மூன்றாவது வருடம் வந்தபோது ஏதோ ஒன்று என் மனதைப் போட்டு அலைக்கழிப்பதைப் போல் நான் உணர்ந்தேன். அதன் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் என்னால் உணர முடிந்தது. அந்தச் சமயத்தில் நான் தீவிரமாகப் படிப்பதில் ஈடுபட்டிருந்தேன்.எழுதுவதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்த நேரமது. எங்களின் விருந்தாளிகளில் பலர் என்னுடைய வேலையில் குறுக்கிடுவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வமே இல்லாத ஆட்களாக இருந்தார்கள். ஆட்களுக்கு விருந்தளிக்கக்கூடிய பொருளாதார நிலை எங்களிடம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருந்தது.
வாழ்க்கை என்பது அவளுக்கு ஒரு கண்காட்சியைப் போல இருந்தது. ஆண்கள் யாரும் ‘தயவு செய்து என்னைத் தொடக் கூடாது’ என்ற வார்த்தைகளை எழுதி அணியாமல் இருந்ததால், அவள் அவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகினாள்.