இளம் பருவத்துத் தோழி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6728
அதை அவள் நடும்போது, அதில் ஒரு சிவப்பு வண்ண மலர் பூத்திருந்தது.
ஒவ்வொரு நாளும் காலையில் ஸுஹ்ரா மஜீத்தின் வீட்டிற்குச் சென்று செடிகளுக்கு நீர் ஊற்றுவாள்.
ஒருநாள் விளையாட்டாக ஸுஹ்ராவின் உம்மா கேட்டாள்:
“ஸுஹ்ரா, எதுக்கு நீ யாரோ ஒருத்தரோட செடிக்கு ஒவ்வொரு நாளும் போயி தண்ணி ஊத்திட்டு இருக்கே?”
அதற்கு ஸுஹ்ரா சொன்னாள்:
“அது ஒண்ணும் யாரோ ஒருத்தரோட செடி இல்ல...”
அன்று சாயங்காலம் ஸுஹ்ராவும் மஜீத்தும் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள். முளைத்து நின்றிருந்த செடிகளைச் சுட்டிக் காட்டிய மஜீத் உரத்த குரலில் கேட்டான்:
“ஸுஹ்ரா, இந்தச் செடிகளெல்லாம் உன்னோடதா?”
“பையா. இது எல்லாம் என் செடிகள்தான். உன்னோடதா என்ன?”
அதைக்கேட்டு ஒரு கேலிச்சிரிப்பு சிரித்தான் மஜீத்.
“பொண்ணுக்கு ஆசை அதிகம்தான்.”
அதைக்கேட்டு அவளுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவள் அவனைக் கிள்ளினாள். எப்போதுமிருக்கும் நகங்கள் இல்லாததால் மஜீத் சொன்னான்:
“இனியும் கிள்ளு. எனக்கு நல்லா சுகமாத்தான் இருக்கு!”
ஸுஹ்ரா தன்னுடைய நகங்களைப் பார்த்து தேம்பித்தேம்பி அழுதாள்.
“அப்படின்னா நான் கடிப்பேன்.”
அவள் மஜீத்தின் கையைக் கடிக்க முயன்றாள். வேறு வழியில்லாமல் மஜீத் ‘குர்-ஆன்’ மீது சத்தியம் செய்தான்.
“முப்பது யூதர்கள் உள்ள முஸ்ஹஃப் மேல சத்தியமா சொல்றேன் - ராஜகுமாரி கடிக்கக்கூடாது.”
ஸுஹ்ரா கண்ணீர் வழியக் கேட்டாள்.
“யாரையுமா?”
புன்னகை சிந்தியவாறு மஜீத் சொன்னான்:
“யாரையும்.”
3
ஸுஹ்ரா கணக்குப் பாடத்தில் மிகவும் திறமை வாய்ந்தவளாக இருந்தாள். ஆசிரியர் அவளைப் புகழ்வதும் மஜீத்தை அடிப்பதும் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். கணக்குகளைப் போடுவதென்றால் மஜீத்திற்கு எப்போதுமே பிரச்சினைதான். எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவனுக்குச் சரியாகக் கணக்குப் போட வரவே வராது.
“மரமண்டை...” என்றுதான் மஜீத்தை ஆசிரியர் அழைப்பார். வருகைப் பதிவிற்காக பெயர் சொல்லி அழைக்கும்போதுகூட அப்படித்தான். அதைப்பற்றி யாரும் குறைபட்டுக்கொள்ளவும் இல்லை. காரணம் - மஜீத் ஒரு முட்டாள்தான். அதனால் அவன் மாணவ-மாணவிகளுக்கு மத்தியில் இருந்தவாறு உரத்த குரலில் சொல்லுவான்:
“ஆ..ஜர்...”
“ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா எத்தனைடா?”
ஆசிரியர் ஒருநாள் மஜீத்தைப் பார்த்துக் கேட்டார். ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு என்பதுதான் உலகத்திற்கே தெரிந்த விஷயமாயிற்றே! ஆனால், அதற்கு மஜீத் சொன்ன வினோதமான பதிலைக் கேட்டு ஆசிரியர் விழுந்து விழுந்து சிரித்தார். மொத்த வகுப்பும் விழுந்து விழுந்து சிரித்தது. மஜீத் சொன்ன பதில், பிறகு அவனுக்குக் கேலிப்பெயர் வைக்கக் காரணமாக அமைந்துவிட்டது. அந்த பதிலைக் கூறுவதற்கு முன்பு மஜீத் சிந்தித்தான். இரண்டு நதிகள் ஒன்றாகச் சேர்ந்து மேலும் பெரிய ஒரு நதியாக ஓடுவதைப் போல இரண்டு ஒன்றுகள் ஒன்று சேரும்போது மேலும் பெரிய ஒன்றாக அது மாறுகிறது. இப்படி கணக்குப்போட்ட மஜீத் சொன்னான்:
“கொஞ்சம் பெரிய ஒண்ணு...”
இவ்வாறு கணக்குப் பாடத்தில் ஒரு புதிய தத்துவத்தைக் கண்டு பிடித்ததற்காக மஜீத்தை அன்று ஆசிரியர் பெஞ்சின்மீது ஏறி நிற்கச் சொன்னார்.
‘கொஞ்சம் பெரிய ஒண்ணு...’ என்று கூறியவாறு எல்லாரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். அதற்குப்பிறகும் மஜீத் ஒப்புக் கொள்ளவில்லை. ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு என்பதுதான் சரியான விடையாக இருப்பதால், வினோதமான அந்த பதிலைச் சொன்னதற்கான பரிசு என்ற வகையில், மஜீத்தின் கையில் ஆறு அடிகளைக் கொடுத்த ஆசிரியர் எல்லா அடிகளையும் சேர்த்துப் பார்த்து அதை ஒரு பெரிய அடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவனிடம் கூறினார்.
அதற்குப்பிறகு அவனுடைய நண்பர்கள் அவனைப் பார்க்கும்போது தங்களுக்குள் கூறிக்கொள்வார்கள்:”
“கொஞ்சம் பெரிய ஒண்ணு!”
அந்தக்கிண்டலும், அதற்குக் காரணமான சம்பவமும் மஜீத்தை மிகவும் வேதனை கொள்ளச் செய்தன. தான் சொன்னது ஒரு பரம சத்தியமே. ஆனால், யாருமே அதை நம்பாமல் போனதற்குக் காரணம் என்ன? ஒருவேளை, தான் சொன்னது தவறோ? எல்லாரும் சொல்வது மாதிரி தான் ஒரு அடிமுட்டாள்தானோ? தாங்கமுடியாத வருத்தத்துடன் மஜீத் தன் மனக்குறையைத் தன்னுடைய உம்மாவிடம் போய்ச் சொன்னான். அவன் சொன்னதைக் கனிவுடன் கேட்ட அந்தத்தாய் மனதில் இருக்கும் வருத்தத்தைக் கடவுளிடம் கூறும்படி சொன்னாள்.
“ரப்புல் ஆலமீன் ஒவ்வொருத்தரோட வேண்டுதலையும் செவிசாய்ச்சு கேட்பாரு...”
தாய் சொல்லியபடி அந்த இளம் மனது பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளிடம் இதயபூர்வமாகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
“என் ரப்பே, என் கணக்குளையெல்லாம் நீங்கதான் சரியாக்கித் தரணும்...”
மஜீத்தின் முதல் பிரார்த்தனையே அதுதான் இரவு, பகல் எந்நேரமும் மஜீத் பிரார்த்திப்பான். இருப்பினும், எல்லா கணக்குகளும் தப்பாகவே வந்து கொண்டிருந்தன. அதனால் மஜீத்துக்கு ஏராளமான அடிகள் கிடைத்தன. அவன் உள்ளங்கைகள் எப்போதும் வீங்கிப் போயே காணப்படும். அவனால் அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. நடந்த எல்லா விஷயங்களையும் அவன் ஸுஹ்ராவைப் பார்த்துச் சொன்னான். இது நடந்தது அவர்களுக்கிடையே நிகழ்ந்த பல சண்டைகளுக்குப் பிறகு... ‘கொஞ்சம் பெரிய ஒண்ணு’ ஆனபிறகு மஜீத் யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அடுத்த பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ஸுஹ்ரா அவனைப் பார்ப்பாள். அப்போது மஜீத் தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொள்வான். கடைசியில் மஜீத் பேசினான். ஸுஹ்ரா சிரித்தாள். அவள் இடம் மாறி உட்கார்ந்தாள். மஜீத்திற்கு அருகிலிருக்கும் பெஞ்சின் ஓரத்தில் அவளுடைய இருக்கை இருந்தது. அதற்குப்பிறகு மஜீத்திற்கு அடி எதுவும் கிடைக்கவில்லை. ஆச்சரியப்படும் வண்ணம் அவனுடைய எல்லா கணக்குகளும் சரியாக வந்து கொண்டிருந்தன.
“அடடா...!” - ஆசிரியர் ஆச்சரியப்பட்டார்: “நான் மனசுல நினைச்சதைப் போல உன் தலைக்குள்ளே இருக்குறது முழுவதும் களிமண் இல்ல...”
இவ்வாறு ஆசிரியர் சொன்ன புகழ் வார்த்தைகள் மஜீத்தின் கேலிப் பெயரை மாற்றின. மாணவர்கள் பொறாமையுடன் கூறுவார்கள்: “மஜீத்தான் வகுப்பிலேயே முதல் மாணவன்!”
அதைக்கேட்டு ஸுஹ்ரா புன்சிரிப்பாள். அதற்கு அர்த்தம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. மஜீத்தின் கணக்குகள் சரியாக வருவதன் ரகசியம் ஸுஹ்ராவின் புன்சிரிப்பிற்குப் பின்னால் மறைந்திருந்தது.
கணக்குகள் போடுவதற்காக மாணவர்களும் மாணவிகளும் எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும் போது மஜீத்தின் இடதுகண் ஸுஹ்ராவின் சிலேட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும். அவள் எழுதியிருப்பதைப் பார்த்து மஜீத் அதை அப்படியே தன் சிலேட்டில் எழுதுவான். கணக்குப் போட்டு முடித்த பிறகுகூட, அவள் உட்கார மாட்டாள். முதலில் மஜீத் அமர வேண்டும்!
பள்ளிக்கூடத்தை விட்டு அவர்கள் சேர்ந்து வீட்டிற்கு வரும்போது வேறு யார் காதிலும் விழாதமாதிரி மஜீத்தை ஸுஹ்ரா கிண்டல் செய்வாள்.