இளம் பருவத்துத் தோழி - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6728
சிறு வயதிலிருந்தே ஸுஹ்ராவும் மஜீத்தும் நண்பர்களாக இருந்தார்கள் என்றாலும் அவர்களின் நட்பில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒருவரையொருவர் அறிமுகம் ஆவதற்கு முன்பு அவர்கள் விரோதிகளாக இருந்தார்கள் என்பதுதான். அப்படி விரோதத் தன்மையுடன் இருந்ததற்குக் காரணம் என்ன? அவர்கள் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். அந்த இரண்டு குடும்பங்களும் மிகவும் நெருங்கிய நட்புடன் இருந்தன. ஆனால், ஸுஹ்ராவும் மஜீத்தும் மட்டும் பரம எதிரிகளாக இருந்தார்கள். ஸுஹ்ராவுக்கு அப்போது ஏழு வயது. மஜீத்திற்கு ஒன்பது வயது. ஒருவரையொருவர் கிண்டல் செய்வதும் பயமுறுத்துவதும் அவர்கள் அன்றாடம் செய்து கொண்டிருந்த செயல்கள்.
நிலைமை இப்படி இருக்கும்போது மாம்பழத்திற்கான காலம் வந்தது. ஸுஹ்ராவின் வீட்டிற்கு அருகிலிருந்த மாமரத்தில் மாங்காய் பழுத்து விழ ஆரம்பித்தது. ஆனால், அவளுக்கு ஒரு மாம்பழம் கூட கிடைக்கவில்லை. மாம்பழம் விழுவதைக் கேட்டு அவள் ஓடிச் செல்லும்போது அதை மஜீத் எடுத்து கடித்துத் தின்று கொண்டிருப்பதை அவள் பார்ப்பாள். அவன் அதை அவளுக்குத் தரமாட்டான். அப்படியே கொடுக்கத் தயாராக இருக்கிறானென்றால் அது அவன் கடித்துக் கொண்டிருக்கும் பழத்தின் மீதியாக இருக்கும். அவள் கையை நீட்டும்போது “இந்தா... இந்த கையைக் கடிச்சிக்கோ...” என்று கூறியவாறு அவன் தன் கையை அவளுடைய முகத்திற்கு நேராக நீட்டுவான். பிறகு, காணும் நேரமெல்லாம் அவன் அவளை பயமுறுத்துவான். கண்களை உருட்டியும் நாக்கை தட்டிக் காண்பித்தும் அவளுக்குப் பயமூட்டுவான்.
அதற்கெல்லாம் ஸுஹ்ரா சிறிதும் பயப்பட மாட்டாள். அவளும் பதிலுக்கு அவனிடம் ஏதாவது செய்வாள். ஆனால், மாம்பழ விஷயத்தில் மட்டும் ஸுஹ்ராவுக்குக் கிடைத்தது தோல்விதான். எந்தக்காரணத்தால் அவளுக்கு மாம்பழம் கிடைக்கவில்லை? காற்று இருக்கும்போதும் அது இல்லாத -நேராத நேரத்திலும் கூட அவள் ஆர்வத்துடன் மரத்திற்குக் கீழே நின்றிருப்பாள். அப்போது மாம்பழம் எதுவும் விழாது. ஒரு இலைகூட கீழே விழாது. நன்றாகப் பழுத்திருக்கும் மாம்பழம் கொத்துக் கொத்தாக மாமரத்தில் இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். மாம்பழம் கீழே விழாமல் இருந்தால், மரத்தில் ஏறி அதைப் பறிக்க வேண்டும். ஆனால், மரத்தில் நிறைய எறும்புகள் இருந்தன. அது கடித்துக் கொன்றுவிடும்! கடிக்கும் அந்தப் பெரிய எறும்புகள் மட்டும் இல்லாமலிருந்தாலும் மரத்தில் ஏறுவது என்பது ஸுஹ்ராவிற்கு முடியக்கூடிய காரியமா என்ன! என்ன இருந்தாலும் அவள் ஒரு பெண்ணாயிற்றே!
வாயில் நீர் ஊறிக்கொண்டிருக்க ஒருநாள் அவள் மாமரத்திற்குக் கீழே நின்றிருந்தபோது, கிளைகளில் மோதியவாறு ஓசையை எழுப்பிய வண்ணம் என்னவோ கீழே விழுந்தது!
அந்தச் சத்தத்தைக் கேட்டு ஸுஹ்ரா வேகமாக ஓடினாள். மனதில் மகிழ்ச்சி பொங்க அவள் அதைக்குனிந்து எடுக்க முயன்றாள். அப்போது அவளுக்கே வெட்கமாகி விட்டது. கீழே விழுந்து கிடந்தது ஒரு வெள்ளரிக்காய். தான் ஓடிவந்து ஏமாந்த விஷயத்தை வேறு யாராவது பார்த்திருப்பார்களா என்று சுற்றிலும் அவள் பார்த்தாள். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. இருந்தாலும், மாமரத்திலிருந்து வெள்ளரிக்காய் விழுந்தது எப்படி என்று அவள் ஆச்சரியப்பட்டாள். அவள் நாலா திசைகளிலும் கண்களை ஓட்டிப் பார்த்தாள். அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவ்வளவுதான் - அவளுக்கு ஒருவித நடுக்கமே உண்டாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் காரணம் அவன்தான்!
மஜீத் வெற்றி பெற்றுவிட்ட மமதையுடன் அர்த்தமில்லாத ஒரு சத்தத்தை உண்டாக்கினான். ‘ஜுகு! ஜுகு!’ என்று கூறியவாறு அவன்
மாமரத்தடியை நோக்கிச் சென்றான். அதோடு நிற்காமல் அவன் தன் கண்களை பயங்கரமாக உருட்டவேறு செய்தான். நாக்கை வெளியே நீட்டி அவளை அவன் பயமுறுத்தினான். பார்ப்பதற்கே அவன் அப்போது பயங்கரமாகத் தெரிந்தான்!
அந்தக்கோலத்தில் அவனைப் பார்த்தால் அந்தக் கிராமத்திலுள்ள சிறுமிகள் எல்லாரும் பயந்து நடுங்கி ‘அம்மா’ என்று உரக்கக் கத்தியவாறு நிச்சயம் ஓடுவார்கள். இப்படி பலரும் ஓடவும் செய்திருக்கிறார்கள். ஆனால் ஸுஹ்ரா ஓடவில்லை. அதோடு சும்மாவும் நிற்கவில்லை. தலையை ஒருபக்கம சாய்த்தவாறு நாக்கை நீட்டிக்கொண்டு கண்களால் வெறித்துப் பார்த்தவாறு அவளும் அவனைப் போலவே நின்றிருந்தாள்.
அதைப்பார்த்து மஜீத்துக்குக் கோபம் வந்தது. பெரிய ஒரு ஆண்பிள்ளையை ஒரு சிறு பெண் பயமுறுத்த முயற்சிப்பதா? அவன் அவளை நெருங்கி நடந்து வந்தான். தன் கண்களால் அவன் அவளை முறைத்துப் பார்த்தான். புருவங்களை உயர்த்தினான். அவனுடைய மூக்கின் இரண்டு துவாரங்களும் விரிந்தன. உரத்த குரலில் ‘த்தூ...’ என்று பயங்கரமாக அவன் கத்தினான்.
அவள் பயந்து ஓடவில்லை. தன்னுடைய புருவங்களை உயர்த்திய படி கண்களால் முறைத்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள். அவளுடைய மூக்குத் துவாரங்களும் விரிந்தன. அவளும் சொன்னாள்:
‘த்தூ...’
அதைப்பார்த்து மஜீத் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டான். ஒரு சின்னஞ்சிறு பெண்... ஒவ்வொரு வீடாக ஏறி பாக்கு வாங்கி கோணியில் சுமந்துகொண்டு வந்து அதை விற்பனை செய்யும் சாதாரண ஒரு பாக்கு வியாபாரம் செய்யும் மனிதனின் மகள் தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு நிற்பதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவள் எந்த காரணத்தால், பணக்காரனான - மர வியாபாரம் செய்பவரின் மகனான தன்னைப் பார்த்து பயப்படவில்லை? எந்தச் சூழ்நிலையிலும் ஒரு பெண் ஆணைப் பார்த்து பயப்படவேண்டுமல்லவா? மஜீத் அவளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்றான். சிறிதுகூட அவள் நின்றிருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. தன்னுடைய மரியாதை காற்றில் பறந்துவிட்டதைப் போல உணர்ந்தான் மஜீத். அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“உன் பேர் என்னடி?” - அவன் அவளுடைய கையைப் பிடித்து மிடுக்கான குரலில் கேட்டான். அவளுடைய பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இல்லை. காரணம் - அவளின் பெயர் என்னவென்பது அவனுக்கு ஏற்கனவே தெரியும். இருப்பினும், அவளைப் பார்த்து அவன் ஏதாவது கேட்கவேண்டுமே! என்ன இருந்தாலும், அவன் ஆணாயிற்றே! அவளை இப்போது ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முடிவில் நின்றிருந்தான் மஜீத்.
அவளின் சிறு பற்களும் பாறையைப் போல் உறுதியாக இருந்த பத்து நகங்களும் ஏதாவது செய்வதற்குத் துடித்தன. ஒரு நிமிடம் அவளுக்கு என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை. அவனுடைய கையைக் கடிக்கலாமா? இல்லாவிட்டால் முகத்தை நகத்தால் கீறலாமா என்று தெரியாமல் அவள் தத்தளித்தாள். ‘உன் பேர் என்னடி?’ என்று அவன் கேட்டதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளின் வாப்பாவோ உம்மாவோ கூட அவளை இதுவரை ‘நீ’என்றோ ‘அடியே’ என்றோ அழைத்தது இல்லை.