இளம் பருவத்துத் தோழி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6728
மஜீத் மாம்பழங்கள் இரண்டையும் அவளுக்கு முன்னால் வைத்தான். ஆனால், அவள் அவற்றை எடுக்கவில்லை. அவளால் அவன் போக்கைச் சிறிதுகூட நம்பமுடியவில்லை. அவன் அந்த அளவிற்கு நல்லவனா என்ன? அவளுக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கையே வரவில்லை. கைகள் இரண்டையும் பின்னால் கட்டியவாறு கண்ணீர் விட்டபடி அதே இடத்தில் அவள் நின்றிருந்தாள்.
மஜீத் அன்பு மேலோங்கச் சொன்னான்:
“வேணும்னா இனியும் பழங்கள் பறிச்சுத் தர்றேன்.”
அதைக்கேட்டு ஸுஹ்ராவின் இதயம் நொறுங்கிப் போய் விட்டது. அவளுக்கு வேண்டுமென்றால் இனியும் அவன் பழங்களைப் பறித்துத் தருகிறானாம். தியாகி... தைரியசாலி! எவ்வளவு நல்ல பையன்! அவனைத்தான் கிள்ளியது சரிதானா? அவள் மிகவும் அமைதியான பெண்ணாக மாறி நின்றிருந்தாள். பிறகு மெதுவான குரலில் சொன்னாள்:
“எனக்கு ஒண்ணு போதும்.”
அந்த நல்லவனான பெரிய தியாகி அலட்சியமான குரலில் சொன்னான்:
“எல்லாத்தையும் எடுத்துக்கப் பெண்ணே!”
“எனக்கு ஒண்ணு போதும்.”
அவள் ஒரு மாம்பழத்தை எடுத்து மஜீத்திடம் நீட்டினாள். அவன் வேண்டாமென்று மறுத்தான். அவள் அதை வாங்கிக் கொள்ளும் படி அவனை வற்புறுத்தினாள். அவன் அதை வாங்கவில்லையென்றால் தனக்கு அழுகை வந்துவிடுமென்று அவள் சொன்னாள்.
மஜீத் மாம்பழத்தை வாங்கிக் கடித்தபோது மாம்பழச்சாறு அவன் மார்பின் வழியே ஒழுகிக் கொண்டிருந்தது. அப்போது அவனுடைய உடம்பில் எறும்பு கடித்திருப்பதை ஸுஹ்ரா பார்த்தாள். அதைப் பார்த்து அவளுக்கு வருத்தம் உண்டானது. அவள் அவனுடைய உடம்போடு சேர்ந்து நின்றுகொண்டு உடம்பில் ஒட்டியிருந்த எறும்புகளை மெதுவாக விரல்களால் எடுத்தாள். அவளின் நகங்கள் மஜீத்தின் உடம்பைத் தொட்டபோது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.
அன்று மஜீத்தை அவள் மீண்டும் அடிக்கவில்லையென்றாலும் எவ்வளவோ நாட்கள் அவள் மஜீத்தை அடிக்கவும் கிள்ளவும் செய்திருக்கிறாள். அவள் ‘அடிப்பேன்’ என்று சொன்னால் மஜீத் பயந்து நடுங்குவான். அவளின் மிகவும் கூர்மையான ஆயுதமான அந்த நகங்களை தந்திரமான ஒரு வழியைப் பின்பற்றி அவளின் முழு சம்மதத்துடனே ஒருநாள் அவன் வெட்டியெறிந்தான்.
2
ஒரு நாள் காலையில் ஸுஹ்ராவும் மஜீத்தும் சேர்ந்து அருகிலுள்ள இடங்களிலெல்லாம் அலைந்து பூஞ்செடிக் கொம்புகளைச் சேகரித்துக் கொண்டு வந்தார்கள். மஜீத்தின் வீட்டு வாசலுக்கருகில் ஒரு தோட்டம் அமைப்பது அவர்களின் நோக்கம். பூஞ்செடிக் கொம்புகளை ஸுஹ்ராதான் சுமந்துகொண்டு வந்தான். மஜீத் அவளுக்கு முன்னால் மிடுக்காக நடந்து வந்து கொண்டிருந்தான். என்ன இருந்தாலும் அவன் ஆணாயிற்றே!
அவனுடைய கையில் விரிக்கப்பட்ட ஒரு பேனாக்கத்தி இருந்தது. எதிர்காலத்தில் தான் செய்யப்போகும் பெரிய பெரிய காரியங்களைப் பற்றி மஜீத் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லும் ஒவ்வொன்றையும் ‘உம்’ கொட்டி கேட்டுக் கொண்டிருக்கவும், மகிழ்ச்சி கொள்ளவும், ஆச்சரியப்படவும் மட்டுமே ஸுஹ்ராவால் முடிந்தது. மஜீத்தின் கனவுகள் எல்லையற்றிருந்தன. தங்க வெளிச்சத்தில் மூழ்கிப் போயிருக்கும் ஒரு அழகான உலகம்... அதன் ஒரே அரசனாக சுல்த்தான் மஜீத் இருந்தாலும் பட்டமகிஷியான ராஜகுமாரி என்னவோ ஸுஹ்ராதான். அதை மறுப்பதற்கில்லை. அப்படி மறுத்தால், அவளுக்கு அழுகை வரும். அவளின் நகங்கள் முன்னோக்கி நீளும். அதற்குப்பிறகு மஜீத்திற்குத் தாங்க முடியாத வேதனைதான். அப்படிப்பட்ட ஒரு அனுபவம் தனக்கு வேண்டுமா என்பதை மனதில் வைத்துக் கொண்டு தான் மஜீத் எதையும் பேசவே செய்வான். இருப்பினும் சில நேரங்களில் அவன் அதை மறந்து விடுவான். பிறகென்ன... அடி, உதைதான்!
கற்பனைகளுக்கு அடிமையாகிப்போனவன் மஜீத். எதிர்காலத்தில் தன் வாப்பா சொல்லக் கேட்டிருக்கும் அரேபியக் கதைகளில் வரும் அழகான அரண்மனையைத்தான் கட்டவேண்டும் என்று அவன் கற்பனை பண்ணுவான். அதன் சுவர்கள் ஒவ்வொன்றும் பொன்னால் செய்யப்பட்டிருக்க வேண்டும். திண்ணை சுத்தமான மாணிக்கக் கற்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் மேற்கூரை எதனால் செய்யப்பட்டிருக்கும்? அவனுடைய கற்பனையில் எதுவுமே தோன்றாது. தேவைப்படும் நேரத்தில் ஸுஹ்ரா ‘உம்’ கொட்டாமல் இருந்திருப்பாள். அவள் மட்டும் ‘உம்’ கொட்டிருந்தால் மஜீத்திற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் கிடைத்திருக்கும்.
“ஸுஹ்ரா...”
“என்ன மஜீத்?”
“நீ ஏன் ‘உம்’ கொட்டல?”
“நான் ‘உம்’ கொட்டினேனே! அப்புறம்... பையா, நீ ஏன் என்னை ‘நீ’ன்னு கூப்பிடுற?”
அவள் பயங்கர கோபத்துடன் அவனுக்கு மிகவும் நெருக்கமாக வந்து அவனை அறைந்தாள். அடியை வாங்கிய மஜீத் நிலை குலைந்து நின்றிருந்தான். அவன் பேனாக்கத்தியுடன் திரும்பினான். அவள் தன்னுடைய பத்து நகங்களையும் முன்னால் நீட்டி, கண்களால் முறைத்து மஜீத்தை பயமுறுத்தினாள்.
“நான் இனிமேலும் உன்னை அடிப்பேன்.”
பழைய அடிகளின், கிள்ளல்களின் ஞாபகம் மஜீத்தின் இரத்தத்தைக் குளிரச் செய்தது. நகங்களைக் கொண்ட ஸுஹ்ரா ஒரு ராட்சசியைப் போல அவனுக்குத் தோன்றினாள். அவளிடம் அந்த நகங்கள் இல்லாமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால், முன்பிருந்தே அவளுக்கு நகங்கள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்துவதில் அவளுக்கு எந்தவொரு தயக்கமுமில்லை. இந்தச் சூழ்நிலையில் அவளை மீண்டும் கோபம் கொள்ளச்செய்தது நல்லதா என்று நினைத்தான் மஜீத். அந்த ஒரே காரணத்தால்தான் ஸுஹ்ரா தன்னை அடித்திருக்கிறாள் என்று எடுத்துக்கொண்ட அவன் ஒரு அப்பிராணியைப்போல் அவளைப் பார்த்துக் கேட்டான்:
“ஸுஹ்ரா, ஏன் என்னை அடிச்சே?”
“என்னை நீ எப்படி ‘நீ’ன்னு அழைக்கலாம்?”
மஜீத் ஆச்சரியப்படுவதைப் போல் நடித்தான்.
“எப்போ நான் கூப்பிட்டேன். நான் உன்னை அப்படி கூப்பிடவே இல்ல. ஸுஹ்ரா ... கனவு கண்டிருப்பே!”
மஜீத் பேசிய விதத்தையும், நடந்துகொண்ட முறையையும் பார்த்த ஸுஹ்ராவின் இதயத்தில் வேதனை அரும்பியது. உண்மையில் மஜீத் தன்னை ‘நீ’ என்று அழைத்தானா? இல்லாவிட்டால் அப்படி தனக்குத் தோன்றியதா? அப்படி யென்றால் மஜீத்தை அடித்தது கொடூரமான ஒரு விஷயமாயிற்றே! சிவந்து போய், தடித்துக் காணப்பட்ட நான்கு விரல்தடங்கள்... அது அவளுடைய மனதிலிருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதானே!
அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்தது.
மஜீத் அதைப் பார்க்காதது மாதிரி வெண்மையான மணல் நிறைந்த கிராமத்துத் தெரு வழியே நடந்துகொண்டே தனக்குத் தானே சொன்னான்:
“நான் எதுவுமே செய்யலைன்னாக்கூட வாப்பாவும் உம்மாவும் என்னை வெறுமனே அடிப்பாங்க. இல்லாட்டி வாய்க்கு வந்தபடி திட்டுவாங்க. பிறகு... சிலபேரு எதுக்குன்னே தெரியாம என்னை அடிப்பாங்க... அப்படி அடிக்குறதுல அவங்களுக்கு என்னவோ சுகம். ஒருநாள் நான் சாகுறப்போ அவங்க புலம்புவாங்க - அந்த அப்பிராணிப் பய மஜீத் மட்டும் உயிரோட இருந்திருந்தான்னா, அவனை அடிக்கவாவது செய்யலாம்னு..”