இளம் பருவத்துத் தோழி - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6728
அப்படியிருக்கும்போது வக்கனை காட்டிக்கொண்டும், மாம்பழம் தராமலும், கையைக் கடிக்கும்படி கூறிக்கொண்டும் இருக்கும் இந்த நாற்றம்பிடித்த பையன் தன்னை அப்படி அழைப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? அவள் கோபத்துடன் முன்னோக்கி நடந்து தன்னுடைய இடது கையில் பாறைபோல் உறுதியாக இருந்த நகங்களால் மஜீத்தின் வலது கையை பலமாகக் கிள்ளினாள்.
அடுத்த நிமிடம் நெருப்பு பட்டதைப் போல் உணர்ந்த மஜீத் நிலை தடுமாறிப்போய் தான் பிடித்திருந்த பிடியை விட்டு “என் உம்மா...” என்று உரத்த குரலில் அலற ஆரம்பித்தான். அப்படியொரு சூழ்நிலை தனக்கு உண்டாகும் என்பதை அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை. இருந்தாலும், அவனும் பதிலுக்கு அவளைத் தாக்க நினைத்தான். ஆனால், தன்னுடைய நகங்களை அவன் ஏற்கனவே முழுமையாக வெட்டியிருந்தான். அதற்குப் பிறகு அவன் செய்வதாக இருந்தால், ஒன்று அவளை அடிக்கலாம்; இல்லா விட்டால் கடிக்கலாம். ஆனால், பதிலுக்கு அவளும் அதே மாதிரி தன்னிடம் நடந்துவிட்டால், என்ற பயம் அவனுக்கு இல்லாமலில்லை. என்ன இருந்தாலும், அவள் நகத்தால் அவனைக் கிள்ளி முடித்துவிட்டாள். இனிமேல் அவள் அவனை அடிக்க வேறு செய்தாள் என்ற உண்மையை உலகம் அறிந்தால் அது அவனுக்கு எந்த அளவிற்கு மரியாதைக் குறைவான ஒரு செயலாக இருக்கும்? அதனால் அவன் ஒன்றும் செய்யவில்லை. தோற்றுப்போய் பல்லைக் காட்டிக்கொண்டு அவன் நின்றிருந்தான்.
ஸுஹ்ரா அவனைப் பார்த்து பற்களை இளித்துக் காட்டினாள். மஜீத் சிறிதுகூட அசையவில்லை. அவள் வக்கனை காட்டியவாறு மஜீத்தைப் பார்த்துக் கிண்டல் செய்தாள். “என் உம்மா...”
அதற்குப்பிறகும் மஜீத் அசையவில்லை. தனக்கு வந்த அவமானத்தை மறைப்பதற்காக உடனடியாக தான் ஏதாவது சொன்னால்தான் சரியாக இருக்குமென்றும், இந்த விஷயத்தில் ஸுஹ்ரா கட்டாயம் தோற்றே ஆகவேண்டும் என்றும் அவன் தீர்மானித்தான். என்ன இருந்தாலும் அவன் ஒரு ஆணாயிற்றே! இருந்தாலும்... அவளிடம் என்ன சொல்வது? அப்படிச் சொல்வது அவள் நம்பக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், என்ன சொல்வது என்ற விஷயம் அவன் மனதில் தோன்றவேயில்லை. அவன் ஒருவித பதற்றத்துடன் அவளைப்பார்த்தான். வாழை மரங்களுக்கு நடுவில் வைக்கோல் வேயப்பட்டு களிமண் பூசப்பட்ட ஸுஹ்ராவின் வீட்டையும் தென்னை மரங்களுக்கு நடுவில் ஓடு போடப்பட்டு சுண்ணாம்பு அடிக்கப்பட்ட தன்னுடைய வீட்டையும் பார்த்தபோது மஜீத்திற்கு ஒரு எண்ணம் பளிச்சிட்டது. ஸுஹ்ரா அவமானப்பட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விடாத மாதிரி அவன் சொன்னான்:
“என் வீடு ஓடு போட்டதாக்கும்!”
இதிலென்ன உயர்வு இருக்கிறது? அவளுடைய வீடு வைக்கோல் வேய்ந்ததும், களிமண் பூசப்பட்டதும்தான். ஆனால், அதற்குள் என்ன குறைவாக இருக்கிறது? அவள் மீண்டும் வக்கனை காட்டியவாறு அவனைப் பார்த்து கிண்டல் பண்ணினாள்: “என் உம்மா...”
அதற்கு மஜீத் வேறொன்றைச் சொன்னான். ஸுஹ்ராவின் வாப்பா ஒரு சாதாரண பாக்கு வியாபாரிதானே? மஜீத்தின் வாப்பா பெரியவொரு மர வியாபாரம் செய்யும் பணக்காரர். அதற்குமேல் மரியாதையான ஒன்றை ஸுஹ்ரா இதுவரை பார்த்ததேயில்லை. மஜீத் என்ற உயிர் தனக்கு மிகவும் அருகில் நின்றிருக்கிறது என்ற எண்ணம் சிறிதுகூட இல்லாமல் ஸுஹ்ரா மாமரத்தின் உச்சியைப் பார்த்தாள்.
மஜீத்திற்கு அழுகை வருவதைப் போல இருந்தது. அவமானம்! தோல்வி! எல்லாம் சேர்ந்து அவனைப் பாடாய்ப்படுத்தின. அவனுக்கு ஒரு கழுதையைப் போல ‘பே’ என்ற உரத்த குரலில் அழ வேண்டும் போல இருந்தது. அப்படி அழுதாலாவது நிம்மதி கிடைக்காதா என்ற நினைப்புதான் அவனுக்கு. ஆனால், அடுத்த நிமிடமே அவனுக்கு ஒரு விஷயம் ‘பளிச்’சென்று தோன்றியது. மற்ற யாரிடமும் இல்லாத ஒரு திறமை தன்னிடம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் தான் ஸுஹ்ராவைத் தோற்கடித்திருப்பது உண்மை என்றும் திடமாக அவன் நம்பினான். அந்த நினைப்புடன் அவன் வானமும் பூமியும் கேட்கிற மாதிரி கம்பீரமான குரலில் சொன்னான்:
“எனக்கு மாமரம் ஏறத்தெரியுமே!”
அடுத்த நிமிடம் ஸுஹ்ராவின் கண்கள் அசையாமல் அப்படியே நின்றுவிட்டன. மாமரத்தில் ஏறுவதற்கு தெரிந்திருப்பது... உண்மையிலேயே அது ஒரு பெரிய விஷயம்தான்! அவள் அதைக்கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அவன் மரத்தில் ஏறுவதாக இருந்தால் அவளுக்கு அவன் மாம்பழத்தைத் தருவானா? அதற்கு முன்பே அவள் தன்னுடைய உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தாள். கையெட்டும் உயரத்தில் இருந்த பெரிய இரண்டு மாம்பழங்களைச் சுட்டிக் காட்டிய ஸுஹ்ரா மிடுக்கான குரலில் சொன்னளாள்:
“பையா, அந்த பெரிய ரெண்டு மாம்பழங்களையும் முதல்ல பார்த்தது நான்தான்.”
மஜீத் பதிலெதுவும் பேசாமல் மவுனமாக இருந்தான்.
அவன் ஏன் பேசாமல் இருக்கிறான்? ஒருவேளை எறும்புகளைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டானோ! அவள் சொன்னாள்:
“ஓ... எறும்பு கடிக்குதோ!”
அவளின் குரல், நடந்து கொள்ளும் முறை எதுவுமே மஜீத்திற்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது. எறும்பு! எறும்பல்ல... கருந்தேள்களே சுற்றியிருந்தாலும் அவன் மரத்தில் ஏறுவது உறுதி! பெரிய இரண்டு மாம்பழங்களையும் முன்கூட்டியே பார்த்தது அவளாயிற்றே! அடடா... மஜீத் வேஷ்டியை மடித்து தார் பாய்ச்சியவாறு மாமரத்தின் மீது ஏறினான். மார்பில் மாமரத்தின் தோல் உராய்ந்தபோதும் எறும்பு உடம்பைச் சுற்றிக் கடித்தபோதும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஸுஹ்ரா பார்த்து வைத்திருந்த மாம்பழங்கள் இரண்டையும் பறித்துக்கொண்டு வெற்றி வீரனாக அவன் மரத்தை விட்டிறங்கினான்.
ஸுஹ்ரா ஓடி வந்தாள். ஆர்வம்! பரபரப்பு! அவள் தன் கைகளை நீட்டினாள்.
“இங்கே தா பையா... நான் பார்த்துவச்ச மாம்பழங்களாச்சே!”
மஜீத் பதிலேதும் பேசவில்லை. வாயின் இரண்டு பக்கங்களையும் இழுத்துக்கொண்டு உதடுகளை ஒருமாதிரி வைத்தவாறு அவன் நின்றிருந்தான்.
“இங்கே தா பையா... நான் பார்த்த மாம்பழங்கள்தானே?”
மஜீத் கிண்டலாகப் பார்த்தான்.
“பெருசாதான் ஆசைப்படுற...” - அவன் நடந்தான். தொடர்ந்து மாம்பழங்களை மூக்கின் முன் வைத்து வாசனை பிடித்தவாறு அவன் சொன்னான் :
“அடடா... என்ன மணம்!”
ஸுஹ்ராவிற்கு அதைக்கேட்டு எரிச்சல் உண்டானது. அவள் கோபப்பட்டாள். அவளின் இதயம் ஓ... அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. தேம்பித்தேம்பி அழுதாள்.
அவன் திரும்பி வந்தான். தன்னுடைய உயர்ந்த குணத்தைக் காட்டிக் கொள்வதற்கு அவனுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்! அவன் மாம்பழத்தை அவள் முன்னால் நீட்டினான். அதை வாங்கவேண்டும் என்ற ஆர்வம் மனதில் இருந்தாலும் அவள் தன் கைகளை நீட்ட வில்லை.