இளம் பருவத்துத் தோழி - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6728
ஆனால், அந்த விஷயம் நடக்கவேயில்லை. அவர் மழையில் நனைந்து இரண்டு மூன்று நாட்கள் கடும் காய்ச்சல் வந்து படுத்தார். மூன்றாவது நாள் மாலையில் அவர் மரணத்தைத் தழுவினார். பிணத்திற்கருகில் மஜீத்தும் உட்கார்நிதிருந்தான். அணைந்துபோன விளக்கின் புகை பிடித்த கறுப்பு நிற சிம்னியைப் போல இருந்தன அந்தக் கண்கள் இரண்டும்! ஒளியையும் வெப்பத்தையும் இழந்த அசைவற்ற அந்த உடல்!
மறுநாள் சவ அடக்கம் நடைபெற்றது. அன்று மாலையில் ஸுஹ்ராவை எதிர்பார்த்து எப்போதும்போல மஜீத் மாமரத்தடியில் நின்றிருந்தான். துக்கம் முழுமையாக அவளை ஆக்ரமித்திருக்க மெதுவாக நடந்து மஜீத்திற்கு அருகில் வந்தாள். மஜீத் அவளின் முகத்தைப் பார்த்தபோது, அவள் தேம்பித் தேம்பி அழுதாள். மஜீத்தால் ஒரு வார்த்தைகூட பேசமுடியவில்லை. அவளுடைய கண்ணீர்த் துளிகள் அவளுடைய நெற்றியிலும் அவளுடைய கண்ணீர் அவனுடைய மார்பிலும் விழுந்து கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் இருண்டு கிடந்த தென்னை மரங்களுக்கு மத்தியில் நீல வானத்தில் சந்திரன் தன் பிரகாசமான முகத்தைக் காட்டினான்.
6
மஜீத்தை அவனுடைய வாப்பா நகரத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக அழைத்துச் செல்வதை ஸுஹ்ரா தன் வீட்டு வாசலில் நின்றவாறு பார்த்தாள். இரண்டு பேர் கைகளிலும் குடை இருந்தது. மஜீத்தின் கைகளில் இருந்தது புதிய குடை. அவன் அணிந்திருந்த சட்டை, வேட்டி, தொப்பி எல்லாமே புதியனவாக இருந்தன. கிராமத்துத் தெரு வழியே அவர்கள் நடந்துபோய் தூரத்தில் மறைவதுவரை அவள் பார்த்தாள்.
அன்று சாயங்காலம் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவந்த மஜீத் மாமரத்தடியை நோக்கி வந்தான். நல்ல மணம் வந்து கொண்டிருந்த புதிய பாடப்புத்தகம் அவனுடைய கையிலிருந்தது. ஆர்வத்துடன் ஓடிவந்த ஸுஹ்ராவிடம் அவன் அந்தப் புத்தகத்தைக் காட்டினான்.
"இதுல நிறைய படங்கள் இருக்கு."
அவள் அதை வாங்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். மஜீத் பல மைல்களைத் தாண்டியிருக்கும் நகரத்தின் அற்புதமான காட்சிக வர்ணித்தான். கடைசியில் பள்ளிக்கூடத்தைப் பற்றிச் சொன்னான்.
“நகரத்தோட நடுவுல, சுண்ணாம்பு பூசப்பட்ட, ஓடு போட்ட பெரிய கட்டிடங்கள். இங்க இருக்கிற பள்ளிக்கூடத்தைப் போல இல்ல. பெரிய ஒரு தோட்டம்! அதுல என்னென்ன மாதிரியான செடிகளெல்லாம் இருக்கு தெரியுமா? நான் அதோட விதைகளைக் கொண்டு வர்றேன். பிறகு... விளையாடுறதுக்கான இடம்...ஓ... அதைக் கட்டாயம் நீ பார்க்கணும்!” மஜீத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்.
“படிக்கிற பசங்க எவ்வளவு தெரியுமா? கணக்கே இல்ல. தலைமை ஆசிரியர் தங்கக் கண்ணாடி போட்ட ஒரு தடிமனான ஆளு- கையில எப்ப பார்த்தாலும் பிரம்பு வச்சிருக்காரு. பிறகு... எங்க சாருக்கு ஒரே ஒரு கண்ணுதான் இருக்கிறதே- எங்க வகுப்புல மொத்தம் இருக்குறது நாற்பத்திரெண்டு பேரு. அதுல பதினாலு பேரு பொம்பளை பசங்க.“
திடீரென்று தான் சொல்லிக்கொண்டிருந்ததை மஜீத் நிறுத்தினான். ஸுஹ்ராவின் கண்களிலிருந்து வழிந்த நீர் புத்தகத்தில்-
“ஸுஹ்ரா!” மஜீத் அழைத்தான். கண்களிலிருந்து வழிந்த நீருக்கான காரணம் என்னவென்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“நீ ஏன் அழற?-”“ மஜீத் திரும்பத் திரும்பக் கேட்டான்.
கடைசியில் அவள் தன் முகத்தை உயர்த்திக்கொண்டு மெதுவான குரலில் சொன்னாள்: “நானும் படிக்கணும்!”
ஸுஹ்ராவும் படிக்கவேண்டும்! ரப்பே - அதற்கு என்ன வழி? மஜீத் ஆழமாகச் சிந்தித்தான். மின்மினிப் பூச்சிகள் கக்துவதைப்போல் ஒரு சத்தம் அவனுடைய தலைக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. இறுதியில் வழி தெரிந்தது.
மஜீத் சொன்னான்:
“நான் படிக்கிறதை ஒவ்வொரு நாளும் உனக்குச் சொல்லித் தர்றேன், ஸுஹ்ரா- “
இப்படி அவன் சொன்னாலும் அதைவிட நல்ல ஒரு வழி இருப்பதை மஜீத் கண்டுபிடித்தான். மஜீத்தின் வீட்டில்தான் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றனவே! அதனால் ஸுஹ்ராவையும் சேர்த்து பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைத்தால் என்ன? இந்த விஷயத்தைத் தன்னுடைய வாப்பாவிடம் சொல்ல அவன் பயந்தான். உம்மாவிடம் சொல்லலாம் என்று அவன் தீர்மானித்தான். அவனுடைய வாப்பா அவன்மீது நல்ல பாசம் கொண்டவரே. சிறிது முன்கோபி. அவ்வளவுதான் விஷயம். எப்போது பேசினாலும் ‘நான் சொல்வது புரிகிறதா’ என்று கேட்டுவிட்டு ‘இல்லை’ என்று அவரே பதிலும் சொல்லிக்கொள்வார்.
அன்று இரவு சாப்பாடு முடித்து மஜீத்தின் வாப்பா வெற்றிலையில் சுண்ணாம்புத் தடவிக்கொண்டிருந்தார். அவனுடைய உம்மா பாக்கு வெட்டிக்கொண்டிருந்தாள்.
இதயம் ‘டக்டக்’கென்று அடித்துக்கொள்ள, மஜீத் தன் உம்மாவினருகில் போய் உட்கார்ந்து, மெதுவான குரலில் அழைத்தான்: “உம்மா!”
அவனுடைய உம்மா அன்பு கலந்த குரலில் கேட்டாள்: “என்ன மகனே?”
மஜீத் மெதுவாகச் சொன்னான்: “நாம ஸுஹ்ராவைப் படிக்க வச்சா என்ன?”
சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை. அவனின் வாப்பா வெற்றிலையை மடித்து சுருட்டி வாய்க்குள் வைத்து துண்டாக்கப்பட்ட பாக்கையும் வாய்க்குள் போட்டு மெல்ல ஆரம்பித்தார். பிறகு தங்கத்தைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்த பித்தளைச் செல்லத்தைத் திறந்து அதிலிருந்த வெள்ளை நிற டப்பா வைத்திறந்தார். கனமான ஒரு வாசனை அப்போது அங்கு பரவியது. கையில் எடுத்த புகையிலையை உள்ளங்கையில் வைத்து வாய்க்குள் போட்டார். வாய்க்குள் போட்டுக் குதப்பிய அவர் சிறிது நேரம் சென்றதும் வாசல் பக்கமாக வெற்றிலை எச்சிலைத் துப்பினார்.
“இதுல துப்பலாம்ல?” - மஜீத்தின் உம்மா எச்சில் பாத்திரத்தை நீட்டியவாறு சொன்னாள்: “அந்தச் செடியோட இலையில இரத்தம் மாதிரி அது தெரியும்.”
“அவன் உம்மாவோட செடி?” என்று கிண்டலாகச் சொன்ன மஜீத்தின் வாப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். பகலைவிட பிரகாசமாக இருந்த சரவிளக்கின் வெளிச்சத்தில் அவனுடைய வாப்பாவின் ஃப்லானல் சட்டையிலிருந்த தங்க நிற பொத்தான்கள் மஞ்சளாக ஜொலித்தன. அவரின் கறுத்த புருவங்கள் உயர்ந்தன. தவிட்டு நிறத்தில் மினுமினுப்பாக இருந்த நெற்றி சுருங்கியது. தங்கக் கண்ணாடியின் வட்டத்துண்டு வழியாகப் பார்த்தவாறு அவர் மஜீத்தைப் பற்றிய தன் எண்ணத்தைக் கூற ஆரம்பித்தார்:
“அடியே... இவன் எங்கே வேணும்னாலும் போகட்டும். நாடு முழுவதும் சுத்தட்டும். நம்மளைப்போல உலகத்துல இருக்கிற மத்தவங்க எப்படி வாழுறாங்கன்றதை இவன் படிச்சு தெரிஞ்சுக்கட்டும். புரியுதா? இல்ல...”
“பேச ஆரம்பிச்சிட்டீங்களா? ஏதாவது சொல்லிட்டா உடனே போ... ஊரைவிட்டுப் போ; அது இதுன்னு... வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பிச்சுருவீங்க. ஆமா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?“”
“அடியே... இவனுக்கு அறிவு கிடையாது.”
“மத்தவங்களுக்கு மட்டும் நிறைய இருக்குதாக்கும்!”
உம்மாவின் குத்துகிற மாதிரியான வார்த்தை! மஜீத்தின் வாப்பா வெறுமனே இருப்பாரா?
“அடியே... இவனுக்கு இருக்கிறது உன்னோட அறிவு. புரியுதா? இல்ல...”