இளம் பருவத்துத் தோழி - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6729
அவள் கேட்டாள்: “அதுக்காக?”
“அதனால ஒண்ணுமில்ல. ஸுஹ்ரா, நீதான் ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணும் என்ன இருந்தாலும் நீ ஒரு பெண். பேருக்குக் களங்கம் வராம பார்த்துக்கணும்...”
“அப்படியா களங்கம் வர்றதா இருந்தா வரட்டும். என் மனசுல கூட களங்கம் வரட்டும். அதுனால ஆகப்போறது ஒண்ணுமில்லையே!”
அவளுடைய கண்கள் நீரால் நிறைந்துவிட்டது. உடனே ஏதாவது சொல்லவேண்டும் போல் இருந்தது மஜீத்திற்கு. ஸுஹ்ரா சம்பந்தப்பட்ட கடைசி முடிவு அது. ஆனால், அதை எப்படி அவளிடம் அவன் கூறுவான்? ஸுஹ்ராவிற்கு கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? வீடு இல்லை. சொத்து இல்லை... எனினும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறான்.
மஜீத் சொன்னான்: “ஸுஹ்ரா... இனிமேல் நீ உன் கணவன் வீட்டுக்கு போகவேண்டாம்.
“போகல...”
மஜீத் தன் உம்மாவிடம் இந்த விஷயத்தைச் சொன்னான். நீண்ட நேரமாகியும் அவள் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. கடைசியில் மஜீத்தின் உம்மா தன் எண்ணத்தைச் சொன்னாள். மஜீத் ஸுஹ்ராவைத் திருமணம் செய்வது என்பது நல்ல ஒரு விஷயம்தான்! அதே நேரத்தில் மஜீத்தின் இரண்டு சகோதரிகள் பருவ வயதை எட்டியிருக்கிறார்களே!
“நாம எதுவும் இல்லாதவங்களா ஆயிட்டோம். இருந்தாலும் மானம், மரியாதையைப் பார்க்கவேண்டாமா? மகனே, நீ எங்கேயாவது போயி தங்கம் சம்பாதிக்கணும். வரதட்சணைப் பணத்தையும்தான். இந்தப் பொண்ணுங்க ரெண்டையும் நல்ல இடங்களா பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்திட்டு மகனே, நீ கல்யாணம் பண்ணிக்கோ...”
திருமணம் செய்ய ஆட்களைப் பார்த்துவிட்டால் போதாது. தங்கமும் வரதட்சணையும் கூட சம்பாதிக்கவேண்டும்!
மஜீத் கேட்டான் : “வரதட்சணை தராம யாரும் கல்யாணம் பண்ணமாட்டாங்களா?”
“யாரு பண்ணுவாங்க மகனே? அப்படியே சரின்னு வர்றதா இருந்தா அவன் யாராவது சுமை தூக்குறவனா இருப்பான். இல்லாட்டி ஒண்ணுக்குமே உதவாதவனா இருப்பான். நாம அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணித் தரமுடியுமா? காதுலயும் கழுத்துலயும் இடுப்புலயுமாவது நாம ஏதாவது நகை போட்டத்தான் சரியா இருக்கும்!”
மஜீத்தின் சகோதரிமார்களின் நான்கு காதுகளிலும் மொத்தம் நாற்பத்தியிரண்டு துளைகள் இருக்கின்றன. அவற்றை எந்தக் காரணத்திற்காகக் குத்தினார்கள்? கழுத்திலும் இடுப்பிலும் தங்கநகை போடாவிட்டால்தான் என்ன? வரதட்சணை என்ற ஒன்று இல்லாமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
“உம்மா, காதுகுத்து அது இதுன்னு பண்ணாம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? நம்ம மதத்தைச் சேர்ந்தவங்க மட்டும் எதுக்காக இந்தப் பாழாய்ப்போன விஷயத்தைச் செய்யணும்? பாழாய்ப் போன ஆடைகளும் பாழாய்ப்போன நகைகளும்...”
மஜீத்தின் உம்மாவும் வாப்பாவும் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அதற்குப்பிறகு மஜீத்தும் எதுவும் பேசவில்லை. எதற்காக தேவையில்லாமல் அவர்களைக் குறை சொல்லவேண்டும் என்று அவன் நினைத்ததே காரணம். தங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ, அதற்கேற்றபடி அவர்கள் நடந்திருக்கிறார்கள். அது தேவையோ, தேவையில்லையோ என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கவில்லை. ஏற்கனவே பின்பற்றிக்கொண்டிருக்கும் விஷயங்களை விட்டு ஒரு துளி அளவிலாவது விலகுவது என்பதை அவர்கள் மனதில் என்றுமே நினைத்ததில்லை. அப்படி விலகிச் செயல்பட்டால், அதனால் துன்பமே வரும் என்று அவர்கள் நினைத்ததே காரணம். அப்படி மாற்றம் உண்டாவதற்கான சூழ்நிலைகள் இருக்க வேண்டும்!
இரவு நேரங்களில் மஜீத்திற்கு தூக்கமே இல்லை என்றாகி விட்டது. எந்த நேரம் பார்த்தாலும் தீவிர சிந்தனையிலேயே இருந்தான் அவன். தன் சகோதரிகளை யாருக்காவது திருமணம் செய்து தரவேண்டும் என்ற சிந்தனைதான் அவனை பலமாக ஆக்கிரமித்திருந்தது. இளமையின் உச்சத்தில் இருந்தார்கள் அவர்கள். மனதில் ஆசையும், விருப்பங்களும் இருந்தன. உடுத்த நல்ல ஆடைகள் இல்லை. உண்ண சரியான உணவு இல்லை. மனதில் விரக்தி உண்டாகும் சில நிமிடங்கள் வர வாய்ப்பு இருக்கிறது அல்லவா? அப்படிப்பட்ட நேரத்தில் நடக்கக் கூடாதது ஏதாவது நடந்து விட்டால்...?
நிம்மதியே இல்லாதவனாக ஆகிவிட்டான் மஜீத். ஏதாவது உடனடியாக செய்தால்தான் சரியாக இருக்கும் என்று அவன் நினைத்தான். வீட்டுக் கடனை அடைக்கவேண்டும், தன்னுடைய சகோதரிகளுக்குத் திருமணம் செய்து தரவேண்டும், தாயும் தந்தையும் மகிழ்ச்சியாக இருக்கும் வண்ணம் சில காரியங்களைச் செய்யவேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். மஜீத்தின் பெற்றோருக்கு வயதாகி விட்டது. மரணம் எந்த நிமிடத்தில் வரும் என்று சொல்வதற்கில்லை. அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டியது தன் தலையாய கடமை என்பதை மஜீத் உணர்ந்திருந்தான். ஸுஹ்ராவைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பிறகு... அவளுக்குச் சகோதரிகள் இருக்கிறார்கள். உம்மா இருக்கிறாள். அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும். அதற்காக என்ன செய்வது? எல்லாவற்றுக்கும் பணம் வேண்டுமே? ஏதாவதொன்றை ஆரம்பித்து விட்டால், தொடர்ந்து அதைப்பின்பற்றி செயல்பட முடியும். ஆனால், முதலில் ஒன்றை ஆரம்பிப்பதுதான் கஷ்டம். கையில் காசு எதுவும் இல்லாமல், உதவிக்கு யாரும் இல்லாமல் இந்த உலகத்தில் யாரும் எதுவும் செய்யவில்லையா என்ன? அவன் இப்படி பல விஷயங்களையும் சிந்தித்தவண்ணம் இருந்தான். என்ன செய்வது?
ஒருநாள் மஜீத்தின் உம்மா ஒரு விஷயம் சொன்னாள்.
தூரத்திலிருக்கும் நகரங்களில் இரக்க குணம் கொண்ட முஸ்லிம் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நல்ல காரியங்கைளைச் செய்கிறார்கள். அனாதையாக இருக்கும் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது, வேலை இல்லாதவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தருவது, இலவசமாக கல்வி கற்றுத் தருவதற்காக பள்ளிக்கூடங்கள் கட்டுவது, ஆதரவற்றவர்களையும் உடல் ஊனமுற்றோர்களையும் பாதுகாப்பதற்காக ஆதரவு இல்லங்கள் உண்டாக்குவது - இப்படி பல நல்ல காரியங்களை அவர்கள் செய்து கொண்டிருப்பதாக மஜீத்தின் உம்மா சொன்னாள்.
“மகனே, நம்ம விஷயத்தை அவங்க தெரிஞ்சுக்கிட்டா போதும். மீதி காரியங்களை அவங்க பார்த்துக்குவாங்க. கட்டாயம் அவங்க நமக்கு உதவுவாங்க. அந்தப் பிச்சைக்காரன்தான் எனக்கு இந்த விஷயத்தையே சொன்னான்.”
ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கும் யாரோ ஒரு முஸ்லிம் பிச்சைக்காரன் இந்த விஷயத்தை மஜீத்தின் உம்மாவிடம் கூறியிருக்கிறான். பாலைவனப் பகுதிகளில் இருக்கும் நகரங்களில் வாழும் முஸ்லிம் பணக்காரர்கள் பெரிய மனது படைத்தவர்கள் என்பதை மஜீத்தின் உம்மா முழுமையாக நம்பினாள். அந்தக்காலத்தில் அவள் எத்தனையோ பேர்களுக்கு உதவி செய்திருக்கிறாள். தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அதையும் தாண்டிக்கூட மஜீத்தின் வாப்பா உதவியிருக்கிறார். இல்லாத கஷ்டங்களையெல்லாம் சொல்லி அவர்கள் இரண்டு பேரையும் பலரும் பல சமயங்களில் ஏமாற்றியிருக்கிறார்கள். மஜீத்தின் அம்மாவிற்கு அதெல்லாம் சிறிதும் புரியவில்லை.