வெளுத்த இரவுகள் - Page 27
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
(உங்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை...) ஆனால், நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா? உதாரணத்திற்குச் சொல்கிறேன். உங்களைக் காதலிக்க என்னால் முடிந்தால்... அதாவது- எனக்கு... ஹா... என் நண்பரே! உங்களுடைய காதலை நோக்கி கேலியாக சிரித்துக் கொண்டு நான் உங்களை வேதனைப்படுத்தியதை நினைக்கும்போது... என்னைக் காதலிக்காததற்கு நான் உங்களைப் பாராட்டியதை நினைக்கும்போது... ஹா... நான் இந்த விஷயத்தை முன்கூட்டியே ஏன் பார்க்கவில்லை? நான் என்ன ஒரு முட்டாள்தனமான பெண்ணாக இருந்திருக்கிறேன்! சரி... நான் தீர்மானித்து விட்டேன்... நான் உங்களிடம் எல்லாவற்றையும் கூறுகிறேன்.''
“வரட்டுமா, நாஸ்தென்கா. உங்களை நிம்மதியாக இருக்கும்படி விட்டுவிட்டு, நான் செல்கிறேன். நான் உங்களைத் தண்டிக்கிறேன். என்னைக் கிண்டல் பண்ணிவிட்டோமோ என்பதை நினைத்து உங்களுடைய மனசாட்சி வேதனைப்பட ஆரம்பித்திருக்கிறது. நான் அதை விரும்பவில்லை. சிறிதுகூட விரும்பவில்லை. அது இல்லாமலே, உங்களுக்குத் தேவையான அளவிற்கு கவலைகள் தாங்குவதற்கு இருக்கின்றன... என்னுடைய தவறு நாஸ்தென்கா. நான் புறப்படட்டுமா?”
“நில்லுங்கள்... நான் கூறுவதைக் கேளுங்கள்... நீங்கள் சற்று காத்திருக்க முடியுமா?''
“காத்திருக்க முடியுமா என்றா கேட்கிறீர்கள்? எதற்காக?''
“நான் அவனைக் காதலிக்கிறேன். ஆனால், அது மாறிவிடும். மாறியே ஆகவேண்டும். மாறாமல் இருக்க வழியில்லை. இப்போதே மாறிக் கொண்டிருக்கிறது. நான் அதை உணர்கிறேன். ஒருவேளை, இந்த இரவிலேயே மறைந்துபோய் விடாது என்பதை யார் கண்டது? காரணம்- நான் அவனை வெறுக்கிறேன். காரணம்- அவன் என்னிடம் மிகவும் வெறுக்கக் கூடிய வகையில் நடந்து கொண்டிருக்கிறான். நீங்களோ என்னுடன் சேர்ந்து கண்ணீர் சிந்தினீர்கள். என்னைக் காதலிக்கிறீர்கள். அதனால்தான் அவன் செய்தது மாதிரி இல்லாமல் நீங்கள் என்னைக் கைவிடாமல் இருக்கிறீர்கள். அவன் என்னை எந்தச் சமயத்திலும் காதலிக்கவில்லை. அது மட்டுமல்ல- நான் உங்களைக் காதலிக்கிறேன்.... உண்மை! நீங்கள் என்னைக் காதலிப்பதைப்போலவே நான் உங்களையும் காதலிக்கிறேன். நான் இந்த விஷயத்தை உங்களிடம் முன்பே கூறியிருக்கிறேன். கூறியிருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். நான் உங்களைக் காதலிப்பதற்குக் காரணம் நீங்கள் அவனைவிட நல்ல மனிதராக இருப்பதால்தான்... நீங்கள் மேலும் மரியாதைக்குரியவராக இருப்பதால்தான். நீங்கள்...''
பாவம் நாஸ்தென்கா! அதிகமான உணர்ச்சிகளின் உந்துதலால் அவளால் பேச்சைத் தொடர முடியவில்லை. அவள் என்னுடைய தோளிலும், பிறகு மார்பின்மீதும் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு அடக்க முடியாத துக்கத்தால் குலுங்கிக் குலுங்கி அழுதாள். நான் அவளுக்கு ஆறுதல் கூறவும் சமாதானப்படுத்தவும் முயன்றேன். ஆனால், வழிந்து கொண்டிருந்த கண்ணீர் அருவியை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. என்னுடைய கையை அழுத்திக் கொண்டே அவள் அழுகைக்கு மத்தியில் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தாள்: “ஒரு நிமிடம்... ஒரு நிமிடம்... நான் இப்போது நிறுத்தி விடுகிறேன். நான் ஒரு விஷயத்தைக் கூறட்டுமா? இந்த கண்ணீரில் எந்தவொரு விஷயமும் இல்லை. கவலை காரணமாக மட்டுமே நான் அழுகிறேன். அது இப்போது மாறிவிடும்.'' இறுதியில் அவளுடைய அழுகை நின்றது. அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். நாங்கள் நடையைத் தொடர்ந்தோம். நான் பேச முயற்சித்தபோது அவள் தடுத்தாள். நாங்கள் இருவரும் அமைதியாக இருந்தோம். இறுதியில் சமநிலையைத் திரும்ப அடைந்துகொண்டு, அவள் கூற ஆரம்பித்தாள்.
“என் அறிவு இந்த அளவிற்கு சபலம் கொண்டதாகவும் நிலையற்றதாகவும் ஆகிவிட்டதே என்று நீங்கள் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.''
அவளுடைய குரல் களைத்துப் போயும் மிகவும் மென்மையாகவும் இருந்தது. எனினும், அதில் திடீரென்று வெளிப்பட்ட விசேஷமான தொனி என் இதயத்திற்குள் ஆழமாக இறங்கி சுகமான ஒரு வேதனையை அளித்தது. “எனக்கு இவ்வளவு எளிதாகவும் வேகமாகவும் மறக்கவோ ஏமாற்றவோ முடியும் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். நான் அவனை ஒரு வருடம் முழுவதும் காதலித்தேன். நான் எந்தச் சமயத்திலும்- மனதால்கூட அவனை ஏமாற்றியதில்லை என்பதை கடவுளின்மீது சத்தியம் பண்ணி கூறுகிறேன். அவன் என்னுடைய உண்மைத் தன்மையை காலால் போட்டு மிதித்தான். என்னைக் கேலிப் பொருளாக நினைத்தான். நடக்கட்டும்! அவன் என்னை வேதனைப்படுத்தினான். என்னுடைய காதலை துச்சமாக நினைத்தான். நான்... நான் அவனைக் காதலிக்கவில்லை. மிகப் பெரிய மனதைக் கொண்டவரும் பரந்த இதயத்தை உடையவருமான ஒரு மனிதரை மட்டுமே என்னால் காதலிக்க முடியும். காரணம்- நானே அப்படிப்பட்ட ஒருத்திதான். என்னைப் பெறும் அளவிற்கு அவன் தகுதி கொண்டவன் அல்ல. சரி... அப்படியே நடக்கட்டும். அவன் திட்டம் போட்டு நடந்திருக்கிறான். அவனுடைய தனி நிறத்தைப் புரிந்துகொண்டு நான் ஏமாற்றமடைவது இதற்கும் பின்னர் என்றால், இதைவிட எவ்வளவோ மடங்கு கஷ்டமாக இருக்கும். இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், யார் பார்த்தார்கள், என் இரக்க குணம் கொண்ட நண்பரே?'' என் கை விரல்களை அழுத்திக் கொண்டே அவள் தொடர்ந்து சொன்னாள்: “என்னுடைய இந்தக் காதல், வவ்வாலாக இல்லை என்பதும், ஒரு பைத்தியக்காரத்தனமாக இல்லை என்பதும் யாருக்குத் தெரியும்? ஒருவேளை, என் பாட்டியின் கண் பார்வையிலிருந்து எந்தச் சமயத்திலும் விலகிச் செல்வதற்கு சம்மதிக்காததால் தோன்றிய குறும்புத்தனமும் முட்டாள்தனமும் இதற்கெல்லாம் ஆரம்ப காரணங்களாக இருக்க வேண்டும். ஒருவேளை, அவனை அல்ல- வேறொரு ஆளைத்தான் நான் காதலித்திருக்க வேண்டும். அவனிடமிருந்து வேறுபட்ட ஆளை... என்னிடம்... இரக்கம் காட்டுகிற ஒரு ஆளை... என்னிடம்... வேண்டாம் நாம் பேச்சை நிறுத்துவோம்.'' மனக்கவலையால் மூச்சைவிட சிரமப்பட்ட நாஸ்தென்கா திடீரென்று பேசிக் கொண்டிருந்ததை பாதியில் நிறுத்தினாள். “நான் கூற வந்தது இவ்வளவுதான். அதாவது- நான் அவனைக் காதலிக்கிறேன். (அல்ல- காதலித்தேன்). எனினும், நீங்கள் மேலும் ஒருமுறை கூறுவதாக இருந்தால்- என் இதயத்திலிருந்து அந்த காதலை அடித்து விரட்டுவது மட்டும் உங்களின் நோக்கம் என்று உங்களுக்குத் தோன்றுவதாக இருந்தால்- என்னை தனிமையில் இருப்பவளாகவும் கவலை நிறைந்தவளாகவும் ஆதரவற்றவளாகவும் என்னுடைய விதியின் மீது எறிவதற்கு உங்களுக்கு விருப்பமில்லையென்றால் இப்போது செய்வதைப்போல எப்போதும் என்னைக் காதலிக்க நீங்கள் விருப்பம் உள்ளவராக இருந்தால்- என்னுடைய நன்றியுணர்ச்சி... என் காதல் நீங்கள் கொண்டிருக்கும் காதலுக்கு இணையாக இருக்கும் என்பதை நான் சத்தியம் செய்து கூறுகிறேன். இனி நீங்கள் என்னுடைய கையைப் பற்றிக் கொள்வீர்களா?''
“நாஸ்தென்கா!'' பதைபதைப்பு நிறைந்த தடுமாறிய குரலில் நான் அழைத்தேன்: “நாஸ்தென்கா! என் நாஸ்தென்கா...''