
கவுரியின் வாக்குமூலத்தை வாங்கும் நாளன்று வக்கீலுக்குத்தான் பதைபதைப்பாக இருந்தது. அவளுக்காக ஒரு வழக்கை அவர் உண்டாக்கிக் கொண்டு வந்தார். அது உண்மைதான் என்று அவள்தான் கூற வேண்டும். அனைத்தும் இப்போது அவளை நம்பியிருந்தன. அவளுடைய இதயம் டக்டக்கென்று அடித்துக் கொண்டிருந்தது.
வாக்குமூலம் வாங்க ஆரம்பித்தார்கள். நீதிமன்றம் கேட்டது:
"குற்றம் சாட்டிய பக்கத்தின் இரண்டாவது சாட்சியான கார்த்தியாயனி, நீங்கள் குழந்தைகளைக் கொல்ல முடிவு செய்திருப்பதாக அவளிடம் பல முறை கூறியதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கிறாள். அதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?''
ஆத்திரப்படாமல் கவுரி பதில் கூறினாள்: "அது பொய்!''
அடடா! வக்கீலுக்கு நிம்மதி வந்தது.
தொடர்ந்து அவள் ஒழுங்காக வாக்குமூலம் தந்தாள். போலீஸின் தூண்டுதலால்தான் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அவள் கூறினாள். அப்போதைய சூழ்நிலையில் ஹெட்கான்ஸ்டபிள் வேலுப்பிள்ளை அவளை அப்படிக் கூற வைத்ததாகச் சொன்னாள். எந்தவொரு இடத்திலும் குழப்பம் இல்லை. மிகவும் அருமையாக அவள் வாக்குமூலம் அளித்தாள். அந்த அளவிற்கு வக்கீல் ஆசைப்படவும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை.
மறுநாள் வழக்கு பற்றிய வாதம் நடந்தது. இரண்டு பக்கங்களைச் சேர்ந்தவர்களும் வாதம் செய்தார்கள். அவளுக்கு வாதங்கள் புரியவில்லை. அதற்கடுத்த நாளுக்கு மறுநாள் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றுதான் தீர்ப்பு!
சரியாக பதினொரு மணிக்கு நீதிமன்றம் அவளுடைய வழக்கிற்காக அழைத்தது. கவுரி கூண்டில் ஏறி நின்றாள். அவள் தன்னுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறாள். ஒரு நிமிட நேரத்தில், கடந்து சென்ற வாழ்க்கை முழுவதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். தந்தையையும் தாயையும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அவளுடைய திருமணம், முதல் கர்ப்பம், பிரசவ வேதனை, கிருஷ்ணன் வாழ்க்கையில் முதன் முதலாக நுழைந்த நாள்- இப்படி ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தாள்.
ஆனால், அந்த வாழ்க்கையின் முடிவை எழுதக் கூடிய நாளாக இது இருக்கலாம். கூப்பிய கைகளுடன் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு அவள் தயாரானாள். அந்த நிலையில் ஒரு காட்சி அவளுடைய நினைவில் மறையாமல் எஞ்சி நின்றது. லுங்கியில் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் ஒருவரோடொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் அவளுடைய குழந்தைகள் கிடக்கும் காட்சி! அலையின் நுரை அவர்களுடைய உடல்களில் பட்டு குமிழ்களாக வெடித்துக் கொண்டிருந்தன. ஓ! "அம்மா..." "அம்மா..." என்று அழைப்பதைப் போல தோன்றியது. அவளுக்கு தன்னுடைய பிள்ளைகளுடன் போய் சேர்ந்தால் போதும்!
உண்மையிலேயே அந்தக் காட்சியை இல்லாமல் செய்வதற்கு ஒரு முயற்சியே நடந்தது. அந்தப் போராட்டம் நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தது. நீதிபதி தீர்ப்பைப் படிப்பது அவளுடைய காதுகளில் விழவில்லை. அவளுடைய காதுகளுக்குள் கடற்கரையில் சீட்டி அடித்துக் கொண்டிருந்த காற்றும், குழந்தைகளின் அழுகைச் சத்தமும்
சேர்ந்து ஒலித்தன. "அம்மா..."என்று அவர்கள் அழைக்கிறார்கள். மூத்த குழந்தை "அம்மா... கொன்னுடாதீங்க..." என்றும் கூறியது.
அனைத்தும் நிசப்தம்! போலீஸ்காரர்கள் குற்றவாளிக் கூண்டின் கதவைத் திறந்தார்கள். அவள் வெளியே வந்தாள். போலீஸ்காரர்கள் அவளுடன் செல்லவில்லை. அவள் நீதிமன்றத்திற்கு வெளியே வந்தாள். அவள் விருப்பப்படும் இடத்திற்குச் செல்லலாம்.
நீதிமன்ற அறையின் வாசலை விட்டு வெளியே வந்ததும், கவுரி அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டாள். அந்த வாசலின் இரு பக்கங்களிலும் இரண்டு ஆண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் அனைத்தும் தகர்ந்து போய்விட்ட ஆண்கள்! அவள் அவர்களை யார் என்று தெரிந்து கொண்டாள். ஒருவன்- அவளுடைய கழுத்தில் தாலி கட்டிய கோவிந்தன். இன்னொருவன்- அவள் முன்பு எப்போதோ ஒருநாள் குளித்து முடித்துச் செல்லும்போது, "நான் காதலிக்கிறேன். ஆனால்..." என்று பாதையின் ஓரத்தில் நின்று கொண்டு கூறிய கிருஷ்ணன். அவர்கள் அவள்மீது பாய்ந்து விழுவதற்காக நிற்கவில்லை. அதற்கான மன தைரியமும் உடல் பலமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் நொறுங்கிப் போனவர்கள். அவள் யாரைப் பார்க்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள். இருவருமே மன்னிப்பு கேட்கும் மனநிலையுடன்தான் இருக்கிறார்கள்.
கவுரி முன்னோக்கி நடந்தாள். சாலையில் இறங்கி நடந்தாள். அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook